Published:Updated:

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

சரணம் ஐயப்பா! இ.லோகேஸ்வரி

##~##

வாய்பேச முடியாத சிறுவன் ஒருவன், ஐயன் ஐயப்பன் அருளால் பேசும் வல்லமை பெற்ற அந்தச் சிலிர்ப்பான சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன்.

''எல்லோராலும் பெரியசாமி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் கம்பங்குடி ஸ்ரீ நாராயண ஐயர். ஹரிஹரபுத்ர பஜன சமாஜத்தைத் தோற்றுவித்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவர் குடும்பத்தோடு பம்பாய்க்கு (இப்போது மும்பை) குடிபெயர்ந்தார். ஒருமுறை, வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனை, அவனுடைய தகப்பனார் இவரிடம் கூட்டி வந்தார். எப்படியாவது தன் மகனைப் பேச வைக்குமாறு கண்ணீருடன் கேட்டுக் கொண்டார். 'நம்பிக்கையுடன் மலையேறுங்கள். நெய் அபிஷேகத்துக்குள் இவன் பேசுவான்’ என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் ஸ்ரீ நாராயண ஐயர். என்ன அதிசயம்! நீலிமலை கடந்து 18-ம் படியேறி பகவானைக் கண்டதுமே,  அந்தப் பிள்ளையின் வாயிலிருந்து சரணகோஷம் மழையாகப் பொழியத் தொடங்கியது.

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

அதேபோல், கம்பங்குடி வம்சத்தில் வந்த இன்னொருவர் கம்பங்குடி ஸ்ரீ ஹரிஹர ஐயர். இவர் சபரிமலைக்குச் சென்றது சில வருடங்கள்தான் என்றாலும், ஐயப்பனிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர். ஒருமுறை, மகரஜோதி யாத்திரையின்போது இவர் 18-ம் படி அருகே நின்றுகொண்டிருந்தார். மாளிகைப்புரம் சந்நிதியிலிருந்து பூஜை முடிந்து புறப்பட்ட வெளிச்சப்பாடு உக்கிரமாகத் துள்ளிக்கொண்டு அவ்விடம் வந்தடைந்தார். அங்கிருந்த அத்தனைப் பேரையும் விட்டுவிட்டு, ஓரமாக நின்றிருந்த ஹரிஹர ஐயரிடம் வந்தார். அம்பிகையின் வாளை அவர் கையில் கொடுத்து, அவரது காலில் விழுந்து வணங்கி, விபூதி பெற்றார். இதைப் பார்த்த அனைவரும் அதிசயித்துப் போனார்கள்.

கம்பங்குடி வம்சத்தினரை முன்னிறுத்தி, ஐயன் ஐயப்பன் இதுபோல பல அற்புதங்களை நிகழ்த்தி யுள்ளான். எனக்கும் ஐயப்பனின் பரிபூரண அருள் இருப்பதால்தான், இந்த ஜென்மத்தில் நான் கம்பங்குடி வம்சத்தில் பிறந்தேன் என்று எண்ணுகிறேன். ஐயப்பன் எங்கள் வம்சத்தினருக்கு அருள்புரிந்த இடமான கரந்தையார்பாளையத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பூஜையை கரந்தையார்பாளையம் சாஸ்தா சங்கத்தினர் மூலம் செய்து, ஐயப்பனை வழிபட்டு வருகிறோம். ஐயப்பன்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறார். ஒவ்வொரு வருஷமும் ஐயப்பனுக்கு மாலையிட்டு, சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதே என் பிறவிப் பயன்.

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

ஒருமுறை, நாங்கள் அனைவரும் யாத்திரை சென்று திரும்பும் வழியில் திருவேற்காடு சென்று, அங்கிருந்து காஞ்சிபுரம் சென்றோம். அங்கே மகா பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்றோம். பின்பு, கடலூர் தாண்டி நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் பயணித்த கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, முழுவதும் நசுங்கி, உருக்குலைந்து போனது. எனினும், நல்லவேளையாக, காருக்குள் இருந்த நாங்கள்  அனைவரும் லேசான காயங்களுடன் தப்பிவிட்டோம். காரில் டாஷ்போர்டில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஃப்ரேமிட்ட, புலியின் மேல் அமர்ந்திருக்கும் ஐயப்பனின் படம் மட்டும் சின்ன விரிசல்கூட இல்லாமல் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் பிழைத்ததே எங்கள் ஐயப்பனின் அருள்தான். இது அவன் தந்த உயிர்!' என்று கண்ணீருடன் ஐயப்பனைக் கைதொழும் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணனின் நினைவிலும் கனவிலும் அந்த சபரிகிரிவாசனைத் தவிர வேறு யாரும் இல்லை.

மணிகண்ட பிரபுவின் மீது மாறாத அன்பும், நம்பிக்கையும் வைத்தால், அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்பதற்கு இதைவிட வேறென்ன நிரூபணம் வேண்டும்?

ஆத்ம ஸ்வரூபியே சரணம் சரணம்
ஆனந்த ஜோதியே சரணம் சரணம்
கம்பங்குடிக்கு உடைய நாதனே சரணம் சரணம்
கருணா சமுத்திரமே சரணம் சரணம்

சுவாமியே சரணம் ஐயப்பா...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு