Published:Updated:

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் ஶ்ரீராமபிரான் நிகழ்த்திய அற்புதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுவாமி விவேகானந்தர் வாழ்வில் ஶ்ரீராமபிரான் நிகழ்த்திய அற்புதம்!
சுவாமி விவேகானந்தர் வாழ்வில் ஶ்ரீராமபிரான் நிகழ்த்திய அற்புதம்!

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் ஶ்ரீராமபிரான் நிகழ்த்திய அற்புதம்!

ந்துமதத்தை மதம் சார்ந்ததாக இல்லாமல் ஆன்மிக வாழ்நெறியாகவும், பாரத தேசத்தை புண்ணிய பூமியாகவும் மாற்றிய ஆளுமைமிக்க ஆன்றோர்கள் பலரும் அவதரித்த பூமி இது. இவர்களில் சுவாமி விவேகானந்தருக்கு தனித்துவமான இடம் உண்டு. சுவாமி விவேகானந்தர் துறவறம் மேற்கொண்ட பிறகு கையில் பணமோ உடைமைகளோ எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆன்மிக அன்பர்கள் தரும் அன்போடுதரும் உணவுகள், செய்து தரும் ஏற்பாட்டில் மட்டுமே தன் வாழ்நாளைக் கழித்தவர். ஒருமுறை அவர் உத்தரபிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் இருந்த பெட்டியில் பெரும் செல்வந்தரான வியாபாரி ஒருவரும் பயணித்தார்.

இந்த தனவானுக்கோ சந்நியாசிகளை சாதுக்களை அறவே பிடிக்காது. உழைக்காமல் சோம்பித்திரிபவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர். அதனால், தொடக்கத்திலேயே விவேகானந்தரை ஏதோ பார்க்கக்கூடாததை பார்ப்பது போல் அலட்சியப் பார்வையை வீசினார்.

சுவாமிஜிக்கு தண்ணீர் தாகமாக இருந்தது. நேரமோ சென்று கொண்டிருந்தது. ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்போது தண்ணீர் கொண்டுவந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். தனவானோ தேவையான அளவு தண்ணீரை வாங்கிப் பருகிக்கொண்டே, ‘பார்த்தீர்களா? சுவாமிஜி! பச்ச தண்ணீர்கூட வாங்க வழியில்லாமல் பூமிக்கு பாரமாக நீங்களெல்லாம் ஏன் இருக்கிறீர்கள்?’ என்று சுவாமிஜியை கேலி செய்தார். சுவாமி விவேகானந்தர் எதையும் கண்டுகொள்ளவில்லை. 

ரயில் இவர்கள் இறங்க வேண்டிய ஊரான தாரிகாட் என்னுமிடத்தை வந்து அடைந்தது. சுவாமிஜியும் தனவானும் இறங்கினார்கள்.சுவாமி விவேகானந்தரோ அங்கிருந்த பயணிகள் தங்கும் அறைக்குப் போனார். அங்கும் அவரைக் கேவலமாகப் பேசி விரட்டினர். 
தனவானோ அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பூரி, லட்டு என தின்பண்டங்களை வெளுத்துக்கட்ட தொடங்கினார். விவேகானந்தரைப் பார்த்து பார்த்தீரா? இனியாவது போய் எங்காவது உழைத்து சாப்பிடு என்று பரிகாசம் செய்தார்.

அப்போதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ  ஒரு ஆசாமி சாப்பாடு, தண்ணீர் மற்றும் படுக்கை விரிப்புடன் அங்கு வந்தார். அங்கிருந்த மரநிழலில் விரிப்பை விரித்து, அன்போடு சுவாமிஜியை அழைத்து வந்து அமரச் செய்து உணவு பரிமாறினார்.
சுவாமிகள் அந்த அன்பரை விசாரிக்க அவரோ தூங்கிக்கொண்டிருந்த ஶ்ரீராமன் தன் கனவில் வந்து தங்களை உபசரிக்கும்படி கூறினார். 'நானோ கனவுதானே' என்று இருந்தேன். அவர் மறுமுறையும் கனவில் வரவே புறப்பட்டு வந்தேன் எனக் கூறவே சுவாமிஜி ஶ்ரீ ராமன் நிகழ்த்திய அற்புதத்தை எண்ணி வியந்தார். அவர் மட்டுமா? அங்கு கூடி இருந்தவர்கள் அனைவருமே வியந்தனர். அதில் முதல் ஆளாக ஆச்சர்யப்பட்டு வியந்து போனவர் அந்த தனவான்தான்.

சுவாமிஜியின் பெருமையை உணர்த்துவதற்காகவே பகவான் ஶ்ரீராமன் நிகழ்த்திய அற்புதம் அல்லவா? உடனே அவர் சுவாமிஜியின் காலில் விழுந்து வணங்கி அவரது தவ வலிமைக்கு வந்தனம் செய்தார். 

கடவுள் அநேக வேளைகளில் நம்மைத் தேடிக் கொண்டு வருகிறார். ஆனால், நாம்தான் வீட்டைப்பூட்டிவிட்டு வெளியில் போய் விடுகின்றோம். மகான்கள் ஒவ்வொரு நிமிடமும் இறை பக்தியிலும் அவர் மீதான நம்பிக்கையிலும் துளியும் சந்தேகம் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களைப் போல் நாமும் இருந்தால் நிச்சயம் நம்முடைய வாழ்விலும் மறைபொருளாக வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு