சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

சக்தி சங்கமம்...

##~##

மகாபெரியவா சொன்ன நகைச்சுவை, தாத்தா- பாட்டியிடம் கேட்ட அல்லி ராஜ்ஜியம் அர்ஜுனன் கதை, தாம் எழுதிய ஆன்மிக நூல்கள், கட்டுரைகள்... என சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் தொடர்கிறது, எழுத்தாளர் ராஜேஷ்குமாருடனான கலந்துரையாடல்...

''எல்லாப் பூக்களுமே இறைவனுக்கு ஏற்றவையே! அப்படியிருக்க, விநாயகருக்குச் சமர்ப்பிக்க அருகம் புல்லும், எருக்கம்பூ மாலையும்தான் விசேஷமானது என்று சொல்லப்படுவது ஏன்?'' என்று கேட்டார் வாசகர் ஜெயராமன்.

''இறைவனுக்குப் புல்லும் ஒன்றுதான்; பொன் னாலான புஷ்பமும் ஒன்றுதான். இறைவனுக்கு எதன் பேரிலும், யார் பேரிலும் விருப்போ வெறுப்போ கிடையாது. ஆனால், இந்த அருகம்புல், எருக்கம்பூ இவற்றுக்குப் பின்னால் ஒரு நுட்பமான செய்தி ஒளிந்துகொண்டு இருப்பது பலருக்குத் தெரியாது.

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

பக்தர்களுக்கு எளிதில் வசப்படுபவர் விநாயகர். பெரிய ஆலயங்களிலதான் இவர் வீற்றிருப்பார் என்பதில்லை; தெருவோரங் களிலும், ஆற்றங்கரை- அரச மரத்தடியிலும்கூட அமர்ந்திருப்பார். அங்கே அவரை வழிபட வரும் ஏழை- எளியவர்கள் விநாயகருக்கு அர்ச்சித்து மகிழ, பூக்கள் கிடைக்கவில்லையே என வருந்தவேண்டியதில்லை. ஆற்றோரமாய் வளர்ந்திருக்கும் எருக்கம் செடிகளில் இருந்து பூக்களைப் பறித்து, மாலையாகக் கட்டி விநாயகருக்கு அணிவிக்கலாம். அந்த எருக்கம் பூக்களும் பூக்காத காலமா? அங்கே வளர்ந் திருக்கும் அருகம்புல்லைப் பறித்து, மாலையாகக் கட்டி விநாயகருக்கு அணிவித்து வணங்கலாம்.

ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் விநாயகரின் கழுத்தில் எருக்கம்பூ மாலையும், அருகம்புல் மாலையும் இருந்த காரணத்தால், இவை மட்டும்தான் விநாயகருக்குப் பிடிக்கும் என்ற எண்ணம், பக்தர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. மற்றபடி, பிள்ளை யாருக்கு எல்லாப் பூக்களும் உகந்தவையே!''

''நாட்களில் நல்ல நாள், கெட்ட நாள் என்று உண்டா, சார்? அஷ்டமி, நவமி, எமகண்டம், ராகு காலம் போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'' - இது சந்தோஷ்குமாரின் கேள்வி.

இந்தக் கேள்விக்குச் சற்று கண்களை மூடி ஆழமாக யோசித்துவிட்டுப் பின்பு பதிலளிக்கத் தொடங்கினார் ராஜேஷ்குமார்.

''சந்தோஷ்குமார்! நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அஷ்டமி, நவமி, ராகு காலம், எமகண்டம் எல்லாம் ஸ்பீட் ப்ரேக்கர்கள் போன்றவை.

இன்னும் தெளிவாகவே சொல்கிறேன். சொந்தக் காரியமாக ஒரு வி.ஐ.பி-யைச் சந்திக்கச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் எப்போது நல்ல மூடில் இருப்பார், எப்போது போனால் காரியம் ஆகும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் தெரிந்துகொண்டு அப்போது தானே சென்று அவரைப் பார்ப்பீர்கள்!

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

சரி... உங்களுக்கு ஒரு விஷயம் கோபத்தை உண்டாக்குகிறதுஎன்று வைத்துக்கொள்வோம். அந்தக் கோபத்துக்குக் காரணமான நண்ப ரையோ, உறவினரையோ சந்தித்துச் சூடாக நாலு வார்த்தை கேட்கலாம் என்று வீட்டை விட்டுக் கிளம்புகிறீர்கள். அப்போது வீட்டில் இருக்கும் பெரியவர்கள், 'கொஞ்சம் பொறு! உன்னுடைய கோபம் நியாயமானதுதான். ஆனாலும், இன்னிக்கு அஷ்டமி. அதுவும் இல்லாம இப்போ ராகு காலம். எதைப் பேசறதா இருந்தாலும், ரெண்டு நாள் கழிச்சுப் பேசிக்கலாம். இன்னிக்குப் பேசினால் பிரச்னை பெரிசாகிடும்’ என்று சொல்லி, உங்கள் வேகத்துக்கும் கோபத்துக்கும் தடை போடுவார்கள். நீங்களும், 'சரி! நாளைக் கழிச்சு மறுநாள் அவனைப் பார்த்துப் பேசிக்கறேன்!’ என்று உறுமிவிட்டு, உள்ளே போய்விடுவீர்கள். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் உங்கள் கோபம் வெகுவாகத் தணிந்து போயிருக்கும். 'நாம் கோபப்படுவது சரியா?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். யோசிக்க ஆரம்பித்து விட்டாலே, ஒரு நிதானத்துக்கு வந்துவிடுவீர்கள். இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைக்கும். பிறகு சண்டை ஏது, சச்சரவு ஏது? உங்களுக்குக் காரியம் ஜெயம்தான்.

நாம் எப்போதும் அவசரப்படுகிறவர்களாகவே இருக்கிறோம். நம்முடைய அவசரமும் கோபமும்தான் பல பிரச்னைகளுக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்ட நம் மூதாதையர் அஷ்டமி, நவமி, ராகுகாலம், எமகண்டம் என்கிற ஸ்பீடு ப்ரேக்கர்களைப் போட்டு வைத்துள்ளார்கள். அவற்றை அனுசரிப்பதால் நமக்கு லாபம்தான்!''

''பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. எனவே, அது தொடர்பாக ஒரு கேள்வி. மாட்டுக்குப் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதைச் சிலர் கேலி பேசு கிறார்களே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார் வாசகி பத்மா.

''மேலோட்டமாகப் பார்த்தால் அது சரியோ என்று தோன்றும். ஆனால், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு கட்டுரையில் எழுதி யிருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பசுவும் நம் குடும்பத்தில் ஓர் அங்கம் மாதிரிதான். கிராமத்தில் இருப்பவர்களுக்குத் தான் பசுவின் அருமை தெரியும். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நம்முடைய குழந்தைப் பருவ வளர்ச்சியில் முக்கியமான இடம் பசும்பாலுக்கு இருக்கிறது. பிறந்தபோது மட்டுமல்ல, இறந்த போதும் வாயில் பால் ஊற்றுவது ஒரு சடங்கு. எனவே, பால்தான் நாம் இறந்த பிறகும் கூடவே வருகிறது என்று வினோபாஜி சொல்வார்.

நமக்கு எது எது வேண்டாமோ, அதெல்லாம் மாட்டுக்கு உணவாகிறது. நெல் நமக்கு, வைக்கோல் மாட்டுக்கு; அரிசி நமக்கு, அதன் உமி மாட்டுக்கு; அரிசியைக் களைந்து ஆக்கிய சோறு நமக்கு, கழுநீர் மாட்டுக்கு; இலை போட்டுச் சாப்பிடுகிறோம். உணவு நமக்கு, நாம் சாப்பிட்ட எச்சில் இலை, மாட்டுக்கு. இப்படி நமக்கு வேண்டாத கழிவுகளை உணவாக உட்கொள்கிற மாடு, தனது ரத்தத்திலிருந்து உருவான பாலைக் கொடுத்து, அந்தப் பாலின் மூலம் தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று வாரி வழங்குகிறது. பசு இப்படி நமக்கு உதவி செய்தால், காளை மாடு விவசாயத்திலிருந்து பொதி சுமப்பது, வண்டி இழுப்பது எனத் தனக்கான பணிகளைச் செய்கிறது. இப்போது சொல்லுங்கள்... பசுவுக்கும் காளை மாட்டுக்கும் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது கேலிக்குரியதா, என்ன?''

''காஞ்சிப் பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்றது உண்டா?'' - வாசகர் மூர்த்தி இந்தக் கேள்வியைக் கேட்டதும் நெகிழ்ந்துபோனார் ராஜேஷ்குமார்.

''அந்தப் பேறு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய அருள்மொழிகளைப் படித்து, அசந்து போயிருக்கிறேன். ஒரு பாமரனுக்கும் தாம் சொன்னது புரியவேண்டும் என்பதற்காக மிக எளிமையாகவும் நகைச்சுவையாகவும் சில விஷயங்களைச் சொல்வார். அதில் ஒரு விஷயம், காலண்டரைப் பற்றியது.

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

காலண்டரில் நாம் ஒவ்வொரு நாளும் தேதித் தாளைக் கிழிக்கும்போது நம் வாழ்நாளில் ஒரு நாள் குறைகிறது. 'காலன் (அதாவது எமன்) நம் வாழ்நாளை 'டர்... டர்...’ என்று கிழித்துக் குறைப்பதால்தான் அதற்கு காலண்டர் என்று பெயர் வந்திருக்குமோ?’ என்கிறார் பெரியவர். இதைப் படிக்கும்போது நமக்குச் சிரிப்பு வருகிறதல்லவா... கூடவே, மனித வாழ்வின் நிலையாமை குறித்து அவர் சொல்ல வந்த விஷயமும் மனத்தில் அழுத்தமாகப் பதியும்.''

''நீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி? சிறு வயதில் தாத்தா- பாட்டி மடியில் உட்கார்ந்து, அவர்கள் கதை சொல்லிக் கேட்டதுண்டா நீங்கள்?'' என்று கேட்டார் வாசகி சரோஜா.

- இந்தக் கேள்விக்கு ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பதில் வருகிறது ராஜேஷ் குமாரிடமிருந்து.

''உண்டு... உண்டு! நான் பிறந்தது ஒரு பழங்காலத் திண்ணை வீட்டில். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சிவப்பு சிமென்ட் பூச்சில் பளபளக்கும் அந்தத் திண்ணையில் தாத்தா- பாட்டி மடிகளில் நானும் என் தம்பியும் தங்கையும் உட்கார்ந்து, எத்தனையோ இரவுகள் விக்கிரமாதித்தன் கதை, பால நாகம்மா, கடோத்கஜன், அர்ஜுனன் அல்லி ராஜ்யம் முதலான கதைகளைக் கேட்டு மகிழ்ந்திருக் கிறோம். அத்தனையும் எனக்கு மனப்பாடம். அதுதான் பின்னாளில் என்னை எழுத்துத் துறைக்கு அழைத்து வந்தது எனலாம்.

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம், மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி அருவி உற்பத்தியாகிக் கொட்டுகிறது. ஆனால், இன்றைய தலைமுறையை நினைக்கும்போது, மனம் ஒரு பாலைவனமாக மாறிவிடுகிறது. இப்போதுள்ள தாத்தாப் பாட்டிகளுக்கும், பேரன்- பேத்திகளுக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியே ஏற்பட்டு இருக்கிறது. பெற்ற மகன்களால் இன்றைய தாத்தா- பாட்டிகள் புறக்கணிக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்கிறார்கள். பேரன்- பேத்திகளோ டி.வி பெட்டிகளின் முன்னால் உட்கார்ந்தும், லேப்டாப், ஐ-போன்களில் 'வீடியோ கேம்’கள் விளையாடியும் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது. இன்றைய தலைமுறையிலும் எல்லோ ராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழி ஒன்றே ஒன்றுதான். அது, ஓல்ட் ஈஸ் கோல்ட்!

''ஏராளமான கிரைம் நாவல்களை எழுதியுள்ள நீங்கள், ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு இத்தனைத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் பதில் அளிப்பீர்கள் என நான் நினைக்கவே இல்லை. நீங்கள் ஆன்மிக நூல்கள் எழுதினால் என்ன?'' என்று கேட்டார் வாசகி அபர்ணா.

''என்னை நீங்கள் சரியாக ஃபாலோ செய்ய வில்லை என்று நினைக்கிறேன். ராஜேஷ்குமார் என்றால் கிரைம் கதைகள் என உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆனால், நான் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே ஆன்மிகம் தொடர்பான விஷயங்களைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆன்மிகம் சம்பந்தப் பட்ட வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் என்னுடைய பக்திக் கட்டுரைகள் பல வெளிவந்து, அவை வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், 'தாயே! எல்லாம் நீயே!’, 'நஞ்சுண்டேஸ்வரா’, 'என்னை ஈர்த்த ஸ்ரீ அரவிந்த அன்னை’, 'உண்டென்றால் அது உண்டு!’, 'சித்தர்கள் பித்தர்களா?’ ஆகிய ஆன்மிகக் கட்டுரைகளைச் சொல்லலாம்.

ஆன்மிகம் ஒரு கடல். அதிலிருந்து நான் எடுத்த நீர் ஒரு குவளையின் அளவு மட்டுமே! இறைவனின் அருள் இருந்தால், இன்னமும் எழுதுவேன்'' என்றார் ராஜேஷ்குமார்.

''இறையருள் நிச்சயம் கைகூடும் சார். ஆன்மிகத்திலும் உங்களின் எழுத்துப் பணி இன்னும் ஆழமாய் முத்திரை பதிக்கும்!'' - வாழ்த்தும் பிரார்த்தனையுமாக வாசகி அபர்ணா சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதித்து கரவொலி எழுப்ப, இனிதே நிறைவடைந்தது கலந்துரையாடல்.

படங்கள்: தி.விஜய்

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

''கடவுளை உணர்ந்த சிலிர்ப்பான அனுபவம் ஏதாவது உங்களுக்கு நேர்ந்தது உண்டா?''

- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை.

''பலமுறை அந்த உணர்வை அனுபவித்திருக்கிறேன். இப்போதும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். முதல் முறையாக எனக்கு நேர்ந்த ஓர் அற்புதமான அனுபவத்தை மட்டும் இப்போது சொல்கிறேன்.

1984-ல் மே மாதத்தின் ஒரு மாலை நேரத்தில், ஆசிரியர் திரு.சாவி அவர்களைச் சந்திக்க, அண்ணா நகரில் இருந்த அவருடைய இல்லத்துக்குப் போனேன். ஆசிரியர் சாவியும் அவருடைய மனைவியும் அப்போதுதான் ஒரு வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருந்தார்கள். ஹாலின் ஓரத்தில் திறந்த நிலையில் சூட்கேஸ்கள். பிரயாணக் களைப்பும் அசதியும் அப்பட்டமாகத் தெரிந்தாலும், சாவி அவர்கள் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார். தான் ஜப்பான் நாட்டுக்குப் போய் வந்ததாகச் சொன்னவர், அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு அந்த நாட்டைப் பற்றிய தனது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். நான் ஒரு அரை மணி நேரம் அவரோடு உரையாடிவிட்டு விடைபெறும்போது, டோக்கியோவில் வாங்கி வந்ததாகச் சொல்லி, ஒரு போட்டோ ஃபிரேமை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்த ஃபிரேம் சட்டம் அரிதான மரத்திலிருந்து செய்யப்பட்டது. நான் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு கோவை திரும்பியதும், என் மனைவியிடம் பெருமையாகக் காட்டினேன்.

''இது அன்சைஸ் ஃபிரேமா இருக்கே. இதுக்குள்ளே எந்த போட்டோவையும் ஃபிக்ஸ் பண்ண முடியாது போலிருக்கே!'' என்றாள் என் மனைவி.

''ட்ரை பண்ணிப் பார்க்கலாமே?'' என்றேன்.

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

எங்களின் திருமண போட்டோ, குழந்தைகளின் போட்டோ என எல்லாவற்றையும் ஃபிரேமுக்குள் நுழைத்துப் பார்த்தோம். முடியவில்லை. அந்த ஃபிரேமை எடுத்துத் தனியாக வைத்துவிட்டோம். மதிய உணவு முடிந்ததும், நான் மட்டும் தனியாக உட்கார்ந்து, ஆசிரியர் சாவி கொடுத்த ஃபிரேமை எப்படியாவது பயன்படுத்திவிடுவது என்கிற தீவிரத்தோடு, என் மேஜையின் இழுப்பறைக்குள் இருந்த கடவுள் உருவப் படங்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ஃபிரேமுக்குள் திணிக்கப் பார்த்தேன். அப்போதும் முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராட்டம்.

அப்போது வாசலில் குரல்... 'ஸார், போஸ்ட்!’

எழுந்து வாசலுக்குப் போனேன். வழக்கமான தபால்காரர், என் கையில் கற்றையாய் அன்றைய தபால்களை ஒரு புன்னகையோடு திணித்துவிட்டு நகர்ந்தார். நான் உள்ளே வந்து சோபாவில் சாய்ந்துகொண்டு, ஒவ்வொரு தபாலாய் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு தபால் என் பார்வையை இடறியது. அதை முதலில் பிரித்தேன். அது ஒரு வாசகரின் கடிதம். படித்தேன்.

'என் அபிமான எழுத்தாளர் ராஜேஷ்குமார் சார் அவர்களுக்கு, வணக்கம். நான் உங்கள் தீவிர வாசகன். என் பெயர் பாலசுப்ரமணியன். நான் கூத்தனூரில் வசிக்கிறேன். நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதக் காரணம் ஒன்று உண்டு. பொதுவாக, கல்விக்கும் கலைகளுக்கும் உரிய தெய்வம் ஸ்ரீசரஸ்வதி. என்னுடைய ஊரான கூத்தனூரில் புகழ்பெற்ற ஸ்ரீசரஸ்வதி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இது ஒன்றுதான் ஸ்ரீசரஸ்வதிக்கான கோயில். உங்களிடம் இருக்கும் எழுத்துத் திறமைக்குக் காரணம் அந்தத் தெய்வம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, நீங்கள் ஒரு முறையாவது கூத்தனூர் வந்து ஸ்ரீசரஸ்வதி அன்னையைத் தரிசித்துச் செல்லவேண்டும் என்பது இந்த வாசகனின் ஆசை. நீங்கள் எப்போது வரப் பிரியப்பட்டாலும் எனக்குத் தகவல் கொடுங்கள். நான் உங்களை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன். உடனடியாக உங்களால் புறப்பட்டு வர முடியாது என்பது எனக்குத் தெரியும். அதுவரையிலும் நான் இத்துடன் அனுப்பியுள்ள ஸ்ரீசரஸ்வதியின் திருவுருவப் படத்தை உங்கள் மேஜையின்மீது வைத்து வழிபட்டு வரவும் (இது கர்ப்பகிருகத்தில் இருக்கும் அன்னையின் திருவுருவம்). ஸ்ரீசரஸ்வதி அன்னையின் அருளால் உங்களுடைய எழுத்துப்பணி எல்லோரும் போற்றும்படி அமையும். இப்படிக்கு உங்களின் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் உங்களின் அன்பு வாசகன், பாலசுப்ரமணியன்.’

நான் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு, கடிதக் கவரின் உள்ளே இருந்த சரஸ்வதி படத்தை எடுத்துப் பார்த்தேன். வெண்ணிற ஆடையில், கையில் வீணையோடு அன்னை சரஸ்வதியின் புன்னகை பூத்த திருவுருவம். ஏதோ உணர்வு தட்ட, அந்தப் படத்தை சாவி அவர்கள் கொடுத்த ஃபிரேமுக்குள் பொருத்தி னேன். என்ன ஆச்சரியம்! ஒரு நூலிழை அளவுகூட வேறுபாடு இல்லாமல் அந்த ஃபிரேமில் கனகச்சிதமாகப் பொருந்தியது அந்தப் படம்! நானும் என் மனைவியும் சிலிர்த்துப் போய், சில விநாடிகளுக்குப் பேசக்கூட முடியாமல் திணறிப் போனோம். இறைவனின் கருணையை நான் உணர்ந்து மெய்சிலிர்த்த அனுபவங்கள் இப்படி எத்தனையோ உள்ளன.''

''கடவுள் ஒருவரே எனும்போது, எதற்காக இத்தனைக் கோயில்கள்... இத்தனை தெய்வங்கள்? உண்மையிலேயே கடவுள் என்பவர் யார்?'' - வெங்கடகிருஷ்ணன், சென்னை.

''கடவுள் என்கிற வார்த்தைக்கு சாதாரண மக்கள் செய்துகொள்கிற அர்த்தம் வேறு; நம் ஆன்மிகப் பெரியவர்கள் சொல்கிற அர்த்தம் வேறு. நாம் கடவுள், இறைவன், தெய்வம், ஆண்டவன் என்று எந்த ஒரு வார்த்தையை நினைத்துக்கொண்டாலும் சரி, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவரவர் மனங்களில் தோன்றுவது அந்தந்த மதங்களுக்குரிய கடவுள்களின் உருவங்கள்தான். ஆனால், நம் ஆன்மிக முன்னோர்களின் பார்வையில் கடவுள் என்பவர் வடிவம், நிறம், குணம் இவை எதுவும் இல்லாத, முதலும் முடிவும் அற்ற ஒரு பரம்பொருள். தேட வேண்டிய ஒரு பொருள் அல்ல இறைவன். இறைவன் ஒவ்வொரு மனிதனிடமும் அவரவர் மனத்துக்குள் இருக்கிறான். இறைவன் வெளியே எங்கோ இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கிற மனிதர்களுக்கு அவன் ஒருக்காலும் புலப்படவே மாட்டான். பின் எதற்காக இத்தனைக் கோயில்கள், இத்தனை தெய்வங்கள் என்று கேட்கிறீர்களா? பாமர மக்களுக்குக் கடவுள் தத்துவம் புரியாது. அதைப் புரிய வைக்க வேண்டுமென்றால் அவர்களை ஓரிடத்துக்கு வரவழைக்க வேண்டும். கடவுளுக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இவர்தான் கடவுள் என்று சொன்னால் மட்டுமே பாமர மக்கள் நம்புவார்கள். 'ஓம்’ என்ற எழுத்துக்கு ஒரு வடிவம்

'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்!’

கொடுக்கப் போய்த்தான் விநாயகர் உருவானார். தண்ணீர் ஒன்றுதான்! அது விதவிதமான பாத்திரங்களில் ஊற்றப்படும்போது அதன் வடிவம் மாறுவதுபோல், இறைவனும் மக்களின் மனங்களில் விதவிதமாய் வடிவெடுத்தான். எது எப்படியோ... இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற உணர்வு இருந்தால் மட்டுமே ஒருவன் நல்லவனாக இருக்கமுடிவதுடன், ஒழுக்கமான வாழ்க்கையையும் வாழ முயற்சி செய்வான். கடவுள் என்பதை அவன் உருவமாகப் பார்த்தாலும் சரி, அருவமாகப் பார்த்தாலும் சரி!''

அடுத்த இதழில்...

கர்னாடக இசைப்பாடகர் 'சிவன் இசைச் செல்வர்’ நெய்வேலி சந்தானகோபாலனுடன் சக்தி விகடன் வாசகர்கள் கலந்துரையாடுகிறார்கள்.