Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 5

சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஉடல்-மனம்- அறிவு- ஆன்மாஓவியங்கள்: அரஸ்

##~##

மானிட உடலை நான்கு விதமாகப் பார்க்கலாம். 1. எலும்பு, சதை, நரம்பு, ரத்தம், நிணநீர் ஆகியவற்றாலான மனித உடல். இதில் மெய், வாய், கண், மூக்கு, செவி என பஞ்சேந்திரியங்கள் அடங்குகின்றன. இந்திரியங்களின் ஆற்றலால் தொடு உணர்வு, ருசித்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் போன்ற செயல்கள் நிகழ்கின்றன. மனித உடலின் மிக முக்கிய பாகங்களாகச் செயலாற்றும் மூளை, இதயம் ஆகிய உறுப்புகளின் செயல் திறனால் இந்திரியங்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் சிந்தனை மற்றும் உணர்ச்சிகளை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் மூளையும், இதயமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மூளையை அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் சிந்தனைக் கேந்திரமாகக் கொள்ளலாம். அன்பு, காதல், பாசம், மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்குக் காரணமாக நாம் பொதுவாக இதயத்தைத்தான் குறிப்பிடுவோம். பிரியமான ஒருவரை 'இதயத்தில் வைத்திருக்கிறேன்’

விதைக்குள் விருட்சம் - 5

என்றுதான் சொல்வோம்; 'மூளையில் வைத்திருக்கிறேன்’ என்று சொல்ல மாட்டோம் ஆனால், விஞ்ஞானரீதியாகப் பார்த்தால், மூளைதான் நமது ஆசை, பாசம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆதார கேந்திரமாக விளங்குகிறது. நமக்குப் பிடித்த ஓர் இனிமையான பாடலைக் கேட்கிறோம். பாடல் வரிகள் நமக்குத் தெரிந்திருந்தால், கூடவே இணைந்து பாடுகிறோம். பாடலில் அமைந்துள்ள பின்னணி இசையைக்கூட நம்மால் நினைவுகூர முடிகிறது. இதனால் மனமகிழ்ச்சி ஏற்படுவதை உணர்கிறோம். இந்தச் செயலுக்குப் பின்னே ஆதாரமாக நிற்பது நமது மூளையா? இதயமா? அல்லது காது, வாய் போன்ற புலன்களா? யோசியுங்கள்.

விதைக்குள் விருட்சம் - 5

மூளையின் செயலாற்றும் திறனை அறிவு அல்லது ஆற்றல் என்று கூறினால், மனம் என்பது எது? அது உடலில் எந்தப் பாகத்தின் இயக்கத்தால் செயல்படுகிறது? மனமும் அறிவும் ஒன்றுதானா, அல்லது வெவ்வேறா? புலன்களை இயக்கிச் செயல்படும்போது, மனம் சில சமயங்களில் ஒத்துழைக்கிறது. வேறு பல சமயங்களில் புலன்களின் இயக்கத்துக்கு மாறாக மனம் செயல்படுகிறது. விருப்பு, வெறுப்பு, பற்று, பாசம், உணர்ச்சி, கோபம், ஆவேசம் போன்ற மனித செயல்களுக்கு மூல கேந்திரம் மனமா? அறிவா? மனிதன் தனக்கென ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டு ஒரு வரையறைக்குள் வாழ நினைக்கும்போது, அவன் கட்டுப்படுத்த வேண்டியது புலன்களை ஆதாரமாகக் கொண்ட உடலையா? மனத்தையா? அல்லது சிந்தனைகளைச் செயல்படுத்தும் அறிவையா? இப்படியான கேள்விகள் காலம் காலமாக கேட்கப்பட்டு வருகின்றன. சமய நூல்களும், தத்துவ சாஸ்திரங்களும் இதற்கான பதில்களை பல்வேறு விதமாகத் தந்துள்ளன.

மனம் என்பதை மனிதனின் 'பண்பாட்டுக் கேந்திரம்’ என்று சொல்லலாம். அது அவனுடைய உணர்ச்சிகளின் பிறப்பிடம். இந்திரியங்கள் செயல்படும்போது, நேரடியாக அதனை உணர்வது மனம்தான். மனம் ஒரு பொருளை அல்லது அனுபவத்தை விரும்பும்போது, இந்திரியங்கள் அவற்றை அடைய ஒத்துழைக்கின்றன.

இந்திரியங்கள் மனத்துக்கு அடிமை. சில நேரங்களில் மனமும் இந்திரியங்களுக்கு அடிமை. அறிவு அல்லது விவேகத்தைக் கொண்டு, ஒரு திட நிச்சயத்துடன் வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டால், மனத்தை முதலில் கட்டுப்படுத்தலாம். பின்பு இந்திரியங்கள் தாமாகக் கட்டுப்படும். அப்போது நிம்மதியும் அமைதியும் உண்டாகும்.

- விருட்சம் வளரும்...

சுமந்து வந்தது யார்?

குருவும் சீடனும், ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்தனர். கரையோரத்தில் ஓர் அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் காலில் காயம் பட்டு, நடக்க முடியாமல் இருந்தாள்.

''ஸ்வாமி! என்னைத் தூக்கிக்கொண்டு போய் அக்கரையில் விட்டுவிடுகிறீர்களா?'' என்று அந்தப் பெண், குருவிடம் கேட்டாள். அவரும் மறுவார்த்தை சொல்லாமல், அவளைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரையில் விட்டார். சீடனுக்கு அதிர்ச்சி!

விதைக்குள் விருட்சம் - 5

'சன்னியாசியான தன் குரு ஓர் இளம் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாமா? அது தர்மமா?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தான். கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும், மெதுவாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குருவை அணுகி, ''குருவே! அந்த அழகான பெண்ணைத் தொட்டுத் தூக்கினீர்களே! தாங்கள் இப்படிச் செய்யலாமா? இது தர்மமா? நியாயமா?'' என்று கேட்டான்.

''அடே! நான் அவளை அப்போதே இறக்கி விட்டுவிட்டேன். நீதான் இன்னமும் அவளைத் தூக்கிக்கொண்டு வருகிறாய். இனியாவது இறக்கிவிடு!'' என்றார் குரு.

பெண்ணை அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதை ஒரு ஆத்மா, மற்றொரு ஆத்மாவுக்குச் செய்யும் தொண்டாகவே குரு கருதியதால், அவர் மனத்தில் சஞ்சலம் இல்லை. உடல் உறுப்புகளைவிட, மனமே சீடனின் உணர்ச்சிகளை ஆட்டிப்படைத்ததால், அவன்  கலக்கமுற்றான்.