Published:Updated:

நாரதர் கதைகள்! - 19

நாரதர் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் கதைகள் ( எழுத்தாளர் பாலகுமாரன் )

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்

##~##

பாற்கடலைக் கடைந்தார்கள். வெள்ளை நுரை கறுப்பாயிற்று. ஆலகால விஷம் பொங்கி வந்தது. மூச்சு திணறிற்று. தேவர்களும் அசுரர்களும் பிடியை உதறிவிட்டு ஓடினார்கள். சிவன் நின்றார். பிரபஞ்சத்தையே அழித்துவிடுமே எனக் கவலைகொண்டார். விஷத்தைக் கையில் ஏந்தினார். தான் அழிந்தாலும் பரவாயில்லை என்று உள்ளே விழுங்கினார். விஷம் பார்வதியால் தொண்டையில் நிறுத்தப்பட்டது. ஓடியவர்கள் திரும்பினார்கள். மறுபடியும் கடைந்தார்கள். காமதேனு உட்பட பல்வேறு விஷயங்களும் தோன்றின. அதில் அகலிகையும் எழுந்து வந்தாள்.

பேரழகு, ஆனால் பெரும் அமைதி. மந்தகாச புன்னகை. நடையில் நிதானம். கண்ணில் கனிவு. அகலிகை வணங்கினாள். எல்லோருக்கும் பதிலுக்கு வணங்கத் தோன்றிற்று. அகலிகை நிமிர்ந்தாள். எல்லோரும் ஏக்கப் பெருமூச்சுவிட்டார்கள். அகலிகை புன்னகை செய்தாள். எல்லோரும் புன்னகை செய்தார்கள்.

இதுதான் பாற்கடலின் உன்னதமோ. இவள்தான் மகாலட்சுமியோ, கடைந்தது போதுமோ என எல்லோரும் மயங்கினார்கள்.

''இல்லை. இல்லை, அமிர்தம் வரும் வரை கடையுங்கள்.''

சகலரும் ஆவேசமாய் வேலையில் இறங்கினார்கள். இந்திரனும், கௌதம முனிவரும் வேலையிலிருந்து விலகி அகலிகையை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

நாரதர்  கதைகள்! - 19

'ஆஹா... என்ன அழகு! இவள் எனக்கு வேண்டுமே’ என்று இந்திரன் ஆசைப்பட்டான். 'போய் கேட்கலாமா? அல்லது எடுத்துக் கொண்டு ஓடிவிடலாமா? என்ன செய்தால் இவள் எனக்குச் சொந்தமாவாள். சுற்றி சுற்றி வந்தான். உள்ளுக்குள் வேகமாக திட்டங்கள் தீட்டினான். மனம் படபடத்தது.

கௌதமர் மிக வியப்போடு பார்த்தார்.

'இவள் ஓர் அற்புதம்! மனத்தை ஒருமுகப்படுத்த இவள் உதவுவாள். இல்லறத்தோடு கூடிய தவம்தான் சிறந்தது. எனவே, என் இல்லறத்துக்கு இவள் உறுதுணையாக இருப்பாள். என் தவத்தை இவள் காப்பாள். என் உயர்வுக்கு வழிகாட்டுவாள். என் வீட்டுக்குள் ஒளி விளக்காக இருப்பாள். நல்லதைக் கண்டபின் ஏன் மறுதலிக்க வேண்டும்? நன்மை தரும் என்றால் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

தவ வாழ்க்கையில் ஒருவனாய் பயணப் படுவதைவிட, இவள் அருகே வர நடப்பது எளிதல்லவா? தவ வாழ்க்கையிலும் மன வேதனைகள் உண்டே! உடல் கொதிக்கக் கூடுமே, அப்போது இந்த உத்தமி தொட்டுத் தடவினால் சூடு அடங்கும் அல்லவா? தொடர்ந்து நடக்கலாம் அல்லவா’ என ஏங்கினார்.

நேரே போய் 'நான் கௌதமன். எனக்கு மனைவியாகிறாயா?’ என்று கேட்பதா? மறுதலித்து விட்டால், மறுபடி கேட்க முடியுமா?

மருகத்தானே முடியும். இது என் வாழ்க்கையை திசை திருப்பிவிடாதா? என்ன செய்வது. எனக்கு அகலிகை வேண்டுமே. உள்ளுக்குள் அரற்றினார்.

'எதைக் கேட்டாலும் கொடுப்பவர் சிவன், கயிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமான், அவரிடம் மன்றாடுவோம். அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்வோம். எனக்கு இவள் வேண்டும். வாங்கிக் கொடுங்கள்’ என்று சிறு குழந்தை போல் கேட்போம்.

நாரதர்  கதைகள்! - 19

சிவனே என் சிவனே, நான் உனை பாடுவேன். அவர் உள்ளே பாடினார். மந்திரம் ஜபித்தார். ஆழ்ந்து மூழ்கினார். சிவ சிந்தனையையே தன் சிந்தனையாகக் கொண்டார். தன் சிந்தனை முழுவதும் சிவனை நிறைத்தார். உள்ளே கனம் தளும்பியது. சட்டென்று வெளிச்சம் மேலே அடித்தது. கண் திறந்தார்.

''என்ன வேண்டும் கௌதமரே?'' இனிமையான குரல் அவரைத் தழுவிக்கொண்டது. தலை தடவியது. எழுந்து நிற்க வைத்தது. கை கூப்ப வைத்தது. கண்ணீல் நீர் மல்கியது. வழிந்தது.

''சிவனே, எனக்கு அகலிகை வேண்டும். பாற்கடலில் உதித்த அந்த உத்தமி வேண்டும். இடையறாது சத்தியத்தில் நடந்து, அதை இந்த புவியில் ஸ்தாபிக்க எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அந்த உதவிக்கு அகலிகை இருப்பாள் என்ற நம்பிக்கை. எனவே, உங்களை யாசித்தேன், எனக்கு அகலிகை வேண்டும்.''

''அப்படியா. சரி, அதற்கு நீ ஒரு சிறு முயற்சி செய்ய வேண்டுமே.''

''நிச்சயம் செய்கிறேன். பெரும் முயற்சியை கூட செய்கிறேன்.'' அவர் ஆவேசமானார்.

சிவனுக்கு சிரிப்பு வந்தது. புன்னகை பெரிதாயிற்று.

''இரண்டு முகம் உடைய பசுக்களைப் பார்த் தால் உனக்கு அகலிகை கிடைப்பாள்.'' சிவன் சொல்லி மறைந்தார். கௌதமர் திடுக்கிட்டார்.

இரண்டு முகம் உடைய பசுவா? எங்கிருக் கிறது அது? காமதேனுகூட அந்த லட்சணத்தில் இல்லையே! அவர் தவித்தார். அவர் தவிப்புக்கு ஏற்ப நாரதர் அங்கு வந்தார்.

''என்ன கௌதமரே. ஏன் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். முகத்தில் ஒரு அவஸ்தை தெரிகிறதே, எதனால்?''.

''சிவனாரின் தரிசனம் ஏற்பட்டது.''

''அடடா, நீர் புண்ணியவான், ஞானவான். உத்தமன்.''

''அவரிடம் அகலிகையை யாசித்தேன்.''

''அட, அது அற்புதம். மிகச்சிறந்த விஷயம். நல்லதல்லவா கேட்டிருக்கிறீர். கிடைத்து விட்டதா?''

''இல்லை.''

''ஏன்?''

''ஒரு சின்ன சோதனை வைத்திருக்கிறார்.''

''உமக்கு போய் ஏது சோதனை? நீர், சகலமும் அறிந்தவர் அல்லவா.''

''இல்லை. சோதனை பெரிதாக இருக்கிறது.''

''என்ன சோதனை என்று சொல்லும்.''

''இரண்டு முகம் உள்ள பசுவைப் பார்க்க வேண்டுமாம். அப்படி எங்கு இருக்கிறதய்யா. காமதேனுகூட அப்படி காட்சி தர முடியாதே.''

''அட, இதென்ன பெரிய கஷ்டம். இரண்டு முகம் உள்ள பசு பூமியில் பல இடங்களில் இருக்கும்.''

''விளையாடாதீர்கள் நாரதரே, நான் வேதனையில் இருக்கிறேன்.''

நாரதர்  கதைகள்! - 19

''இல்லவே இல்லை. இதோ இங்குள்ள பசுக் கூட்டத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. பலது சூல் கொண்டவையாக இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று உமக்கு இரண்டு முகம் காட்டும்.''

''அப்படியா. அது எப்படி?''

''தேடுங்களேன்!''

நாரதர் அருகே இருக்க, அவர் ஒவ்வொரு பசுவாக தேடினார். ஒரு பசு கால் மாற்றித் தவித்தது. முனகியது. கொம்பால் மண்ணைக் கிளறியது. முன்னும் பின்னும் அலைந்தது. 'அம்மா’ என்று வேதனைக் குரல் கொடுத்தது. இருவரும் நின்றார்கள்.

பசுவின் யோனி திறந்தது. நீர்க் குடம் பெருகியது. கருப்பையிலிருந்து வெளியேறி யோனியின் வழியே இன்னொரு முகம் தோன்றியது.

''அடடே, பாரும் பாரும்!'' நாரதர் சுட்டிக் காட்டினார். முன்னே ஒரு முகம் தவித்திருக்க, பின்னே ஒரு முகம் மூச்சுக்கு ஏங்க, இரண்டு முகம் உள்ள பசுவை கௌதமர் கண்டார். பசு கன்றை ஈன்றது. அதைத் தடவிக் கொடுத்தார்.

''நன்றி, நன்றி, நன்றி'' என்று பசுவுக்கு வணக்கம் சொன்னார். அவருக்கு அகலிகை கிடைத்தாள். அகலிகையும், கௌதமரும் நாரதரை வணங்கினார்கள்.

''ஐயா, உம்முடைய சூட்சுமம் இங்கு எவருக்கும் வராது. மாபெரும் தபஸ்விகளும், ஞானிகளும் உங்களுடைய துணையால்தான் சிறக்கிறார்கள். நாரதரே, என்னை ஆசீர்வதியும்''

நாரதர் சிரித்தபடி அவரை ஆசீர்வதித்தார்.

இது பூமியின் சூட்சுமம். ஒரு உடம்பிலிருந்து ஒரு உடம்பு வருகிறது. எனவே, உடம்பு என்பது கூடலுக்கு மட்டுமல்ல. கூடல் இன்னொரு உடம்பை தோற்றுவிக்கிறது. அழகு, அறிவு, பண்பு எல்லாமே இன்னொன்றை தோற்றுவிப்பதற்காகத்தான் இருக்கிறது.

இதற்குப் பிறகும் ஒரு நீண்ட கதை இருக்கிறது என்று நாரதருக்குத் தெரியும். அவர் முக்காலமும் அறிந்தவர். எவர் அழைத்தாலும் உதவிக்கு வருபவர். நாரணனை அழைப்பது கடினம். நாரதரை அழைப்பது எளிது. அழைத்தால் நாரதர் வருவார்.

- தொடரும்...