சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வையத்துள் வாழ்வாங்கு...

வையத்துள் வாழ்வாங்கு...

##~##

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஒளவையின் வாக்கு. பிறவிகளிலேயே உயரிய பிறவி மனிதப் பிறவிதான். எனவேதான், பலரும் தங்கள் பிறந்தநாளை இயன்ற அளவு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

குறிப்பாக, 60-வது வருடம் முடிந்ததும் சஷ்டியப்த பூர்த்தி என்றும், 70-வது வயதில் பீமரத சாந்தி என்றும், 80-வது வயது நிறைவு பெற்றதும் சதாபிஷேகமும், 90 வயதை நிறைவு செய்தவருக்குக் கனகாபிஷேகமும்,  நூறை எட்டிய நிலையில் பூர்ணாபிஷேகமும் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, இறைவனுக்குச் செய்யப்படும் புனித நீராட்டு தான் அபிஷேகம் எனப்படும். ஆனால், 80 வயதைக் கடந்த நிலையில் மனிதர்களுக்குச் செய்யப்படும் புனித நீராட்டும் அபிஷேகம் என்று போற்றப் படுவது சரிதானா?

வள்ளுவர் கூறுகின்றார்...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

அதாவது, மனிதராகப் பிறந்தவர் தனக்கான சுயதர்மங்களைத் தவறாமல் செய்து, சாஸ்திரங்கள் கூறும் நெறிமுறைகளின்படி வாழ்ந்தால், தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவர் என்கிறார். எனவேதான், 80 வயதைக் கடந்து, கிரகஸ்தா சிரமத்தில் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிய ஒருவருக்கு, அவருடைய சந்ததியினர் சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் என்று கொண்டாடுகிறார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு...

சமீபத்தில், சென்னை சேத்துப்பட்டு ஸ்ரீசங்கராலயத்தில் ஸ்ரீ ஆர்.ராமச்சந்திர ஐயர் - ஸ்ரீமதி ஆர்.பட்டம்மாள் தம்பதி யின் கனகாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது,

வையத்துள் வாழ்வாங்கு...

'கனகாபிஷேக தாத்பர்யம்’ குறித்து சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், ''நான்கு ஆசிரம தர்மங்களில் உயர்வானது கிரகஸ்தாசிரமம் தான். இல்லற தர்மத்தை ஏற்றவன்தான் மற்ற மூன்று பிரிவினருக்கும் ஆதாரமாகத் திகழ்கிறான். அப்படி, தன்னை இல்லறத்தில் ஈடுபடுத்திக்கொண்டு, தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்து நிறைவாழ்வு வாழ்ந்துவரும் ஒருவருக்குக் கனகாபிஷேகம் நடைபெறும்போது, தேவர்கள் அனைவரும் அங்கே மறைமுகமாகத் தோன்றி, அவரைப் பூரணமாக ஆசீர்வதிப்பதோடு, அவர் மேலும் நூறு வருடம் வாழ்ந்திட அனுக்கிரகம் செய்வார்கள்'' என்றார்.

அந்த தெய்வானுக்கிரகம் கனகாபிஷேகம் காணும் தம்பதிக்கு  மட்டுமல்ல; அவர்களின் ஆசீர்வாதம் மூலம் நமக்கும் கிடைக்கும் என்பதுதான், இந்த வைபவத்தின் சிறப்பம்சமும்கூட!

- எஸ்.கண்ணன் கோபாலன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்