மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 45

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

திருப்போரூர் சந்நிதி முறைபி.என்.பரசுராமன்

##~##

ண்மை, வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால், பொய், உலகையே வலம் வந்துவிடும் என்பார்கள். பொய்யைவிட வேகமானது வதந்தி. கேரளத்தில் ஒரு கோயிலில் புதையல் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி வெளியானதிலிருந்து, எல்லாக் கோயில்களிலுமே அடியில் ரகசிய அறை இருக்கும், தோண்டிப் பார்த்தால் அங்கே புதையல் கிடைக்கும் என்ற எண்ணம் பரவி, அவ்வப்போது 'அந்தக் கோயிலில் புதையல், இந்தக் கோயிலில் புதையல்’ என்றெல்லாம் வதந்திகள் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் அப்படித்தான் திருப்போரூர் கோயிலில் புதையல் என்ற தகவல் கொடி கட்டிப் பறந்தது.

அதில் எள்ளளவும் உண்மை இல்லை. திருப்போரூர் கோயிலில், ஒரு சிறிய அறை காணப்பட்டது. ஆனால், அதில் தங்கம்- வெள்ளி என்ற புதையல் ஏதும் இல்லை.

உண்மையில், அது அறையே அல்ல; அது ஒரு சுரங்கப்பாதை!

ஞானப் பொக்கிஷம்: 45

திருப்போரூர் ஸ்ரீசிதம்பர ஸ்வாமிகள் என்ற மகான் கட்டிய சுரங்கப்பாதைதான் அது. அந்தச் சுரங்கப்பாதையின் வழியாகப் போய், அவ்வப்போது முருகப்பெருமானை வழிபட்டுவிட்டு வருவார் அவர். அந்தச் சுரங்கப்பாதை, கோயிலுக்கு அருகில் கண்ணுவர்பேட்டை என்ற இடத்தில் உள்ள சிதம்பரம் ஸ்வாமிகளின் சமாதித் தலம் வரை செல்லும்.

இந்தத் தகவலை, 80 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட 'திருப்போரூர்த் தலபுராணம்- ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள் பரம்பரை’ ஆகியவற்றை விவரிக்கும் நூல் கூறுகிறது.

எனவே, அந்தச் சுரங்கம் பூமிக்கடியில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும் ஒரு சிறு வழிப் பாதையே தவிர, அங்கு புதையலாகப் பொன்னோ- பொருளோ கிடையாது.

மற்றபடி, திருப்போரூரில் வேறு விதமான மூன்று புதையல்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

1. முருகப் பெருமானே நேருக்கு நேர் காட்சி தந்து, எப்படி அமையவேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி கட்டப்பட்ட கோயிலும், அங்குள்ள முருகப்பெருமானும்.

2. கோயிலின் எதிரே உள்ள திருக்குளம்.

3. திருப்போரூர் கோயிலில் உள்ள யந்திரம்.

ஞானப் பொக்கிஷம்: 45

அபூர்வமான அந்த யந்திரத்தைப் பற்றிய விசேஷமான தகவல்கள் உண்டு. விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தேவசேனை, சிவபெருமான், உமாதேவி, சண்டீஸ்வரர், அஷ்டதிக் (எண்டிசைப்) பாலகர்கள், பைரவர் ஆகியோருக்கு உண்டான எழுத்துக்கள் அமைக்கப்பட்டு, அந்த யந்திரத்தில் அவர்கள் எழுந்தருளும்படியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

கூர்மம், அஷ்டதிக் கஜங்கள், அஷ்டநாகங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில், அந்த யந்திரம் அமைந்துள்ளது. இவ்வாறு மிகவும் அபூர்வமான அமைப்பு கொண்ட அந்த யந்திரத்துக்குத் தினந்தோறும் பூஜை உண்டு.

சிறப்பாக, சிதம்பர ஸ்வாமிகள் ஆணைப்படி, கந்த சஷ்டி ஆறு நாட்களிலும் அந்த யந்திரத்துக்கு விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா பூஜையும் செய்யப்படுகின்றன. வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அபூர்வமான யந்திரம் அது.

மேற்சொன்ன மூன்றும்தான், திருப்போரூரில் உள்ள அபூர்வமான புதையல்கள்; ஞானப் பொக்கிஷங்கள்.

இந்த மூன்றும் வெளியே தெரியும்படியாக இருப்பதால், இவற்றின் அருமை- பெருமைகளை நாம் அறிய முற்படவில்லை. பூமிக்கு அடியில், இல்லாத புதையலை இருப்பதாக எண்ணித் தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரி... இனி, மதுரை மீனாட்சி அம்பாளையும் முருகப் பெருமானையும் நேருக்கு நேராகத் தரிசித்த சிதம்பர ஸ்வாமிகள் எழுதிய 'திருப்போரூர் சந்நிதி முறை’ என்ற நூலில் இருந்து, 'சோறு சமைப்பது எப்படி?’ என்ற தகவலைப் பார்க்கலாம்.

போன தலைமுறை வரை நகரங்களிலும், இன்றைக்கும் சில கிராமங்களிலும் 'கேஸ் அடுப்பு சமையல்’ என்பது கிடையாது.

மூன்று கற்களை வைத்து, அல்லது 'ஃ’ போன்ற மூன்று குமிழ் முனைகளை வைத்து அமைக்கப்பட்ட அடுப்பில்தான் சமைப்பார்கள். அந்த அடுப்பில் விறகு வைத்து, தீ மூட்டுவார்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் உலையிட்டு, சோறு சமைத்து, உண்டு பசியாறுவார்கள்.

ஞானப் பொக்கிஷம்: 45

அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இது. இந்தச் சமையல் நிகழ்ச்சியில் வரும் அடுப்பு, விறகு, தீ, பாத்திரம், உலை, சாதம் ஆகியவற்றை வைத்து சிதம்பரம் ஸ்வாமிகள் சொல்லும் தத்துவ விளக்கம்...

மூன்று கற்களாலான அடுப்பு - அன்பு, பொறுமை, ஆசையின்மை எனும் மூன்று குணங்கள். விறகு - ஆணவம் முதலான தீய குணங்கள். தீ - ஞானக்கனல். பாத்திரம் - உயிர். உலை - அருள். சாதம் - சிவானந்தம்.

அதாவது... அன்பு, பொறுமை, ஆசையின்மை எனும் நற்குணங்களைக் கொண்டு, ஆணவம் முதலான தீயகுணங்களை நீக்கி, தெளிந்த அறிவைக் கொள்ளவேண்டும். அன்பின் முதிர்ந்த நிலையான அருள்மயமான வாழ்க்கை வாழ வேண்டும்.

அப்புறம் என்ன..? மங்களகரமான, இடையீடே இல்லாத ஆனந்தம் பொங்காதா?

இதோ... சிதம்பர ஸ்வாமிகள் சொல்லும் ஞானச்சோறு.

அடியார் நிமலத் திருவகத்துள்
அன்பு பொறுமை அவாவறுத்தல்
அடுப்பு ஆங்கு அமைத்து மலக் காட்டத்து
அதிக ஞானக் கனல் மூட்டி
மடியாது இருந்த உயிர்க்கலசம்
வழிய அருள் பேருலை வார்த்து
மாறாப் பெருமைச் சிவானந்த
மதுரச் சோறு தினம் பொங்கி
விடியாச் சீவ போத இருள்
வீய மவுனச் சுடர் விளக்கு
விளக்கி இருந்த படி இருந்து
மேலாம் சிற்றில் விளையாடும்
செடி தீரகத்தோர் புகழ்வாலை
சிறுவா! சிற்றில் சிதையேலே!
தேரூர் வீதிப் போரூரா!
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

'திருப்போரூர் சந்நிதி முறை’யில் சிதம்பர ஸ்வாமிகள் அருளியபடி 'ஞானச்சோறு’ பொங்கி உண்ண முயல்வோம். திருப்போரூர் முருகன் திருவருள் புரிவார்.

- இன்னும் அள்ளுவோம்...