மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 20

ஒரு கதை... ஒரு தீர்வு! அருண் சரண்யா, ஓவியம்: சசி

##~##

ப்போதும் உற்சாகத்துடன் கலகலப்பாகப் பேசும் நண்பனின் முகம் அன்று வாடிப்போய் இருந்தது. ''சுரேஷ் விஷயமாக உன்னிடம் பேசணும்'' என்றான் சுரத்தில்லாமல்.

சுரேஷ் அவனுடைய மகன். எட்டாம் வகுப்பு படிக்கிறான்.

''என்ன பிரச்னை?'' என்றேன்.

''எந்த அப்பாவுக்கும் தன் பிள்ளை வருங்காலத்தில் இப்படித்தான் வரணும்னு ஆசை, கனவு இருக்கும் இல்லையா?'' என்று கேட்டான்.

இதற்குப் பொதுவாக ஒரு பதிலைச் சொன்னால் சங்கடப்படுவான் என்பதால், தொடர்ந்து அவனே பேசட்டும் என்று நான் மௌனம் காத்தேன்.

''கணக்கு, சயின்ஸுன்னு எத்தனை நல்ல சப்ஜெக்ட்ஸ் இருக்கு! அதையெல்லாம் விட்டுட்டு சுரேஷ§க்குப் போயும் போயும் சரித்திரத்துலதான் இன்ட்ரஸ்ட் இருக்கு. பி.ஏ. ஹிஸ்டரின்னா எவனாவது மதிப்பானாடா? வேறு எந்தப் பாடத்திலேயும் இடம் கிடைக்காதவன்தான் அதைத் தேர்ந்தெடுப்பான்'' என்றவன், ஒரு சிறு இடைவெளிவிட்டு, மீண்டும் தொடர்ந்தான்.

''சுரேஷ் மனசை எப்படி மாத்துவது என்று தெரியவில்லை. அதற்காகத்தான் உன்னை வரச் சொன்னேன். நீதான் அவனுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி, அவன் மனசை மாத்தணும்'' என்றான்.

விடை சொல்லும் வேதங்கள்: 20

சில நொடிகள் அமைதியாகக் கழிந்தன. நான் எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்து, ''என்னடா பேசாமல் இருக்கே? அவன் மனசை உன்னால மாத்திட முடியும்தானே? இன்னும் சிறிது நேரத்தில் சுரேஷ் வந்துடுவான். அவனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிக்கப் போறே?''

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்... ''உன்னிடம்தான் ஆரம்பிக்கப் போறேன். அதுவும், துரியோதனனின் கடைசி நாளில் இருந்து!''  

காபாரதப் போர் தொடங்கி 17 நாட்கள் ஆகிவிட்டன. துரியோதனனின் சேனையில் குறிப்பிடத்தக்கவர்களாக அவனும், அஸ்வத்தாமன், கிருபர், கிருபரின் மகன் கிருதவர்மா ஆகியோரும் மட்டுமே மிஞ்சியிருந்தனர். மனம் வெறுத்துப்போன துரியோதனன், ஓர் ஏரிக்குள் மறைந்திருந்து தியானம் செய்துகொண்டிருந்தான்.

அவனை திசையெங்கும் தேடிப் பார்த்துவிட்டு, கடைசியில் அந்த ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள் பாண்டவர்கள். ஏரியின் மையத்தில் நீர்ப்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் நீர்க்குமிழ்களைக் கண்டு, துரியோதனன் அங்கு மறைந்திருப் பதைத் தெரிந்துகொண்டார்கள். அர்ஜுனனும் பீமனும் கரையில் நின்றுகொண்டு, துரியோதனனின் கோழைத் தனத்தைப் பரிகாசம் செய்தார்கள்.

பொறுக்கமாட்டாத துரியோதனன் வெளியே வந்தான். தருமரைப் பார்த்து, ''அஸ்தினாபுரத்தை உங்களுக்கு அளிக்கத் தயார். நான் வனத்துக்குச் சென்று, என் மீதி நாட்களைக் கழிக்கப் போகிறேன்'' என்றான்.

தருமர் இதை ஏற்கவில்லை. 'தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய ஒன்றை ஏன் தானமாகப் பெற வேண்டும்?’ என்பது அவர் எண்ணம். தவிர, போரில் வெற்றி முகத்தில் இருக்கும்போது இந்த ஏற்பாடு அவசியம் இல்லையே!

விடை சொல்லும் வேதங்கள்: 20

எனினும், துரியோதனனுக்கு ஏதோ ஒருவிதத்தில் வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று தருமருக்குப் பட்டது.

''இன்று போர் துவங்கி 18-வது நாள். எங்கள் ஐவரில் யாராவது ஒருவனை நீ ​தேர்ந்தெடு. அவன் உன்னுடன் ஒற்றையாளாக கதாயுதம் கொண்டு போரிடுவான். யார் வெற்றி பெறுகிறாரோ, அவர் தரப்பே ஒட்டுமொத்த யுத்தத்திலும் வெற்றி பெற்றது என்று வைத்துக்கொள்ளலாம்'' என்றார் தருமர்.

இது தருமருக்கே உரிய நேரிய சிந்தனை. விற்போர் என்று சொல்லாமல், கதாயுதப் பயிற்சியில் வல்லவனாகிய துரியோதனனுக்கு அந்த ஆயுதத்தைக் கொண்டே போர் புரிய வாய்ப்பளித்த அவரின் பெருந் தன்மையும் இதில் வெளிப்பட்டது.

துரியோதனனும் பாண்டவர்கள் ஐவரில் வேறு யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவன் தேர்ந்தெடுத்தது பீமனை. அதாவது, கதாயுதப் போரில் தனக்குச் சரிசமமான ஆற்றல் கொண்டவனை! அவ்வளவு தன்னம்பிக்கை துரியோதனனுக்கு.

இந்த யுத்தத்துக்கு நடுவராக தருமரையே இருக்குமாறு இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டனர். பரசுராமரால் உருவாக்கப்பட்ட 'சமந்த பஞ்சகம்’ என்ற இடத்தில் இந்த யுத்தம் நடைபெற்றது. அங்கு பலராமனும் வந்துசேர்ந்தார். பீமன், துரியோதனன் ஆகிய இருவருமே பலராமரிடம் கதாயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள். இருவரும் குருவுக்கு வணக்கம் கூறினர். கந்தர்வர்களும், ​ரிஷிகளும் இந்த யுத்தத்தைக் காண்பதற்காக அங்கே திரண்டனர்.

யுத்தம் தொடங்கியது. சற்று நேரத்திலேயே அது மிகக் கடுமையாக மாறியது. இருவருமே மாறிமாறி எதிரியின் கைகள் மற்றும் தோள்களைத் தாக்கத் தொடங்கினர். கடும் வலியையும் பொருட்படுத்தாமல் ஆக்ரோஷத்துடன் பறந்து பறந்து சண்டையிட்டனர்.  

சில நாழிகைகளில், பீமன் சற்றே தளர்வடைந்தது போலத் தோன்றியது. தன் சக்தியைத் திரட்டிக் கொண்டு, அவன் துரியோதனனின் தோளில் கதாயுதத்தால் மிக வலுவாக அடித்தான். துரியோதனன் இறந்துவிடுவான் என்றே அனைவரும் நினைத்திருக்க, அவன் சிறிது நேரம் கீழே விழுந்துகிடந்துவிட்டுப் பின்னர் துடிப்போடு எழுந்துவிட்டான்.

இந்த நிலையில், கண்ணன் அர்ஜுனனிடம், ''பீமன் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கக் காரணம், அவன் ஒரு மாயாவி போல மறைந்து மறைந்து தோன்றுவதுதான்! பீமனும் அவனைப் போலவே யுத்த விதிகளை மீறினால்தான் அவனை வெல்ல முடியும்'' என்றார். அப்போது, துரியோதனனின் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் கண்ணன் நினைவுகூர்ந்தார்.  

துரியோதனன் பிறந்தபோதே பல தீய சகுனங்கள் தோன்றின. ''குலத்தையே நிர்மூலமாக்கக் கூடியவன் துரியோதனன். எனவே, அவனைக் கொன்று விடுங்கள்'' என்று தன் தம்பி விதுரன் கூறியதை, திருதராஷ்டிரன் ஏற்கமறுத்து விட்டான்.

ஆனாலும், விதுரன் வருங் காலத்தைக் கச்சிதமாகக் கணிக்கக்கூடியவன் என்ற நம்பிக்கை திருதராஷ்டிரனுக்கு இருந்ததால், அவன் கவலைப்படத் தொடங் கினான். வியாசரை அழைத்து, குழந்தையை ஆசிர்வதிக்கச் சொன்னான்.

வியாசரும் தன் கைகளால் குழந்தையின் உடல் முழுவதும் தடவி, அசைக்கமுடியாத சக்தி அவனுக்குக் கிடைக்குமாறு செய்தார். ஆனால், தற்செயலாக (அல்லது விதிப்படி) அவரது கை துரியோதனனின் தொடைகளின்மீது படவில்லை. இதன் காரணமாக, அவனது தொடை உரிய பலத்தைப் பெறவில்லை (இதே தகவல் துரியோதனின் தாய் காந்தாரியைத் தொடர்புபடுத்தி மற்றொரு விதமாகவும் கூறப்படும்).

இந்த விஷயத்தை எண்ணிப் பார்த்த ஸ்ரீகிருஷ்ணர், சமிக்ஞையால் தன் தொடையை கைகளால் தட்டிக் காண்பித்தார். யுத்தத்தின் நடுவே இதைக் கவனித்த பீமனுக்கு, தனது சபதம் நினைவுக்கு வந்தது.

முன்பு, துரியோதனன் தன் தொடையைத் தட்டி, திரௌபதியை அங்கே வந்து உட்காருமாறு ஏளனமாக அழைக்க, அதனால் ஆக்ரோஷம் அடைந்த பீமன், துரியோதனனின் தொடையைப் பிளந்து ரத்தம் குடிப்பேன் என்று சபதம் செய்திருந்தான்.

இப்போது ஸ்ரீகிருஷ்ணரின் சமிக்ஞையும் அதை ஞாபகப்படுத்தியது. புரிந்துகொண்ட பீமன், தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் தாக்கி, அவனை வீழ்த்தினான்.

விடை சொல்லும் வேதங்கள்: 20

ந்தக் கதையைக் கூறி முடித்ததும், ''எல்லாம் சரி! இந்தக் கதையின் மூலம் நீ எனக்குச் சொல்லும் நீதி என்ன?'' என்பது போல் குழப்பத்துடன் பார்த்த நண்பனுக்கு  தெளிவாக விளக்கினேன்.

''இரண்டு விஷயங்களை இந்தக் கதையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பகைவனே ஆனாலும் துரியோதனனுக்கும் ஒரு வாய்ப்பு தந்தார் தருமர். அதுவும் எப்படி? கதாயுதப் பிரயோகத்தில் ஆர்வமும் வல்லமையும் பெற்றிருந்த அவனை கதாயுதத்தால் போர் செய்யவே பணித்தார்.

நீயோ உன் மகன் விஷயத்தில்கூட, அவனுக்கு ஆர்வமான பாடத்தைப் பயில வாய்ப்பு தராமல் வீம்பு செய்கிறாய்.

அடுத்து, ஸ்ரீகிருஷ்ணரின் சமயோசிதத்தை எண்ணிப் பார்.

பல தருணங்களில் அவர் மாற்றி யோசித்ததால்தான் பாண்டவர்களின் வெற்றி சாத்தியமானது.

நேருக்கு நேர், வழக்கமான முறையில் போரிட்டபோது, பீமனால் ஜெயிக்க முடியவில்லை. மாற்றிச் செயல்பட்ட போதுதான்

அவனால் வெல்ல முடிந்தது. செயல் அவனுடையதுதான் என்றாலும், மாற்றி யோசித்தது ஸ்ரீகிருஷ்ணரே.

நீயும் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார். சுரேஷை உன் வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஏன் நினைக் கிறாய்? நீ ஏன் அவன் வழிக்கு மாறக்கூடாது?

சரித்திரப் பாடம் படித்தால் பிரபலம் அடைய முடியாது என்று யார் சொன்னது? பி.ஏ. ஹிஸ்டரி மட்டும்தானா? ஏன்...ஆர்க்கியாலஜி படித்து, அவனுக்குப் பிடித்த துறையில் சுலபமாக அவன் புகழ் பெற முடியுமே?  

உலகின் பல முன்னேற்றங்கள் எல்லாம், மாறுபட்ட கோணத்தில் பார்த்ததன் விளைவு தான்! ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர் யாரும் இல்லாதபோது அதிக எடை கொண்ட பெட்டியைத் ​தூக்கிச் சிரமப்பட்ட ஒருவரின் மனத்தில்தான், சக்கரம் வைத்த சூட்கேஸுக்கான ஐடியா தோன்றியிருக்கக் கூடும். கண்ணாடியால் ஆன ஐஸ்கிரீம் 'கப்’கள் அதிக அளவில் உடைந்து நஷ்டத்தைச் சந்தித்த அனுபவம்தான், கோன் ஐஸ்கிரீம் பற்றிய சிந்தனையை ஒருவருக்குத் தந்திருக்கும்.

நீ ஏன் சராசரி அப்பாவாக இருக்க வேண் டும்?  அதைத் தாண்டி யோசிக்கலாமே?''

புரிந்துகொண்டதற்கான தெளிவு என் நண்பனின் முகத்தில் ஒரு புன்னகையைத் தோற்றுவித்தது.

- தீர்வுகள் தொடரும்..