காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
##~## |
ஐம்பெரும் பூதங்களின் திவலைகளால் ஆன கூட்டமைப்பு உடல். பூதங்களின் அம்சத்தில் உருவானவை புலன்கள். அண்டத்தில் பரவியிருக்கும் காற்றானது தன்னிச்சையாக உட்புகுந்தும், வெளிவந்தும் கொண்டிருப்பது, உடலின் தொடர் இயக்கத்துக்குக் காரணமாகிறது.
உடல், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவை உடற்கூறில் அடங்கும். அதில் 'நான்’ என்பது யார்? எங்கிருந்து வந்து நுழைந்தான்? உடலின் இயக்கத்தில் அவனுடைய பங்கு இல்லை. அவனுக்கு எப்படி முதலிடம் கிடைத்தது? அவனது ஊடுருவல் அழிவுக்கு வழிகோலும். உட்புகுந்த எதிரிக்கு ஊக்கம் அளித்தது யார்? இயற்கை தந்த உடலானது, அதன் (இயற்கையின்) ஒத்துழைப்பில் வளர்ச்சி பெறுகிறது; நிறைவை எட்டுகிறது. கடைசியில் இயற்கையிலேயே ஒன்றிவிடுகிறது. உடல் மறைந்ததும், குடிபுகுந்த 'நான்’ என்பதும் மறைந்துவிடுகிறது. அவன் உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
அவன் செய்யும் அட்டகாசத்தில் வாழ்க்கையில் கொந்தளிப்பை உணர்கிறோம். கர்மவினையின் வாசனையோடு உடலில் உட்புகுந்தும் மனத்தில் இடம் பிடித்தும்விட்டான். தூய்மையான மனத்தில் நாம் செய்த கர்ம வினையானது, தன்னுடைய உதவியாளனாக 'நான்’-ஐ குடியமர்த்திவிட்டது என்றும் சொல்லலாம். வாழும்போதே அவனை விரட்ட வேண்டும். வாழ்வில் சந்திக்கும் நெருடலுக்கு, 'நான்’ என்பவனே காரணம். விபரீத விளைவுகளை அவனே அரங்கேற்றுகிறான்.
பண்டைய முனிவர்களின் சிந்தனைகள், பல மாறுபட்ட வடிவங்களில் தர்சனங்களாக உயிர்பெற்று, 'நான்’ என்ற விருந்தாளியை அடையாளம் கண்டு வெளியேற்றும் வழியைப் பரிந்துரைத்திருக்கின்றன. கிளிஞ்சலைப் பார்த்தான் ஒருவன். அதன் பளபளப்பு வெள்ளியை ஞாபகப்படுத்தியது. அவனுடைய மனம் அதை வெள்ளியாகப் பார்த்தது. அக்கம்பக்கம் பார்த்தான். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை. அதைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். கிடைத்த பொக்கிஷத்தை வெளிச்சத்தில் ஆராய்ந்தான். உண்மை விளங்கியது, இது வெள்ளி இல்லை, கிளிஞ்சல்தான் என்று தூக்கி எறிந்துவிட்டான்.

இங்கே வெள்ளி உதயமாகவும் இல்லை. மறையவும் இல்லை. மனம்தான் உதயமானதாகவும் மறைந்ததாகவும் எண்ணுகிறது. ஆனால், இல்லாத ஒரு வெள்ளி அவனை செயல்பட வைத்து அலைக்கழித்தது. 'நான்’ என்பதும் வரவும் இல்லை; போகவும் இல்லை. மனம்தான் அதைத் தோற்றுவித்தது. மனம் உடலின் ஓர் உறுப்பு. அதன் அளவு அணுவின் வடிவம். அதன் ஆழமும் அகலமும் சிந்தனைக்கு எட்டாது. சிந்தனைகளின் ஊற்று அது. அதன் அதிசயத்தை வரையறுக்க இயலாது.
உள்ளதை பொய்யாகப் பார்க்கும் மனம், பொய்யை உண்மையாகப் பார்க்கும். உயிரினங்களை இயக்கும் சக்தியை இல்லாததாகப் பார்க்கும். பொய்யான 'நான்’-ஐ உண்மையாகப் பார்க்கும். இந்த அறியாமை எங்கிருந்து வந்தது, அதை எப்படி உணர்வது என்பதை விளக்குகின்றன தர்சனங்கள். சிந்தனையாளர்களுக்கு மட்டுமே அதன் பயன்பாடு வெற்றியளிக்கிறது. அப்படியான சிந்தனை வளம் பெறாதவர்களையும் உணரவைப்பது ஜோதிடம்.
அறமும் வேண்டாம், வீடுபேறும் வேண்டாம்; ஆசைகளும் வேண்டும், அதை நிறைவேற்ற பொருளும் வேண்டும். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில்... பாமரர்களுக்கு தர்மமும், மோக்ஷமும் புரியாத புதிராகவே தோன்றும். இடையில் இருக்கும் இரண்டு மட்டுமே அவர்களது இலக்கு. அவற்றைப் பெற்று இடையூறு இல்லாமல் சுவைத்து மகிழ அறிவுரைகளை உதிர்க்கும் ஜோதிடம்.
லோகாயத வாழ்க்கைக்குத் தேவையான அர்த்தமும் காமமும் கைக்கு எட்டிய பிறகு வாய்க்கு எட்டாமல் செய்வது, 'நான்’ என்ற எண்ணம். அதற்கு யார் ஊக்கம் அளித்தார்கள்? நாம் செய்த கர்ம வினை! மனம் எண்ணத்தை முன்வைக்கும். மனத்தில் ஒட்டிக்கொண்ட கர்ம வினையின் சேர்க்கையில், புத்தி ஆராயும். ஆராய்ச்சியின் முடிவு கர்மவினைக்கு உகந்தவாறு இருக்கும். அது அகங்காரத்தைத் தோற்றுவிக்கும். அகங்காரமானது மிதப்புடன் செயல்படவைத்து துயரத்தில் ஆழ்த்தும். கர்ம வினையின் தாக்கம் துயரத்தில் முற்றுப்பெறும். அது அறுபட்டால் மகிழ்ச்சி பொங்கும். தண்டனை அளிக்கும் பொருட்டு, கர்மவினையானது 'நான்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, தண்டனையை நிறைவேற்றுகிறது.
கண்ணுக்குப் புலப்படும் விஞ்ஞான முடிவுகளை மட்டும் உண்மையாகப் பார்க்கும் இன்றைய 'அறிவியல்’ சிந்தனைகளே, 'நான்’ என்ற பொய்யனுக்கு ஊட்டச்சத்து ஊட்டிவிடுபவை யாகும். சிந்தனை வளம் பெறாத பாமரர்களை, பயிரை களையாகவும் களையை பயிராகவும் பார்க்க வைப்பார்கள். லோகாயத வாழ்வுக்குத் தேவையானவற்றை அள்ளி அளித்து, மகிழ்ச்சியில் மயங்க வைத்து... பாமரர்களது சிந்தனையானது உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும் ஏழைப் பங்காளர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்!
ஒருபுறம் கர்ம வினையானது, 'நான்’ என்ற எண்ணத்தை வளர்த்து, துயரத்தை சந்திக்க வைக்கிறது. மறுபுறம் பாமரர் களின் சிந்தனையை முடக்கி தூங்கவைத்து, முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடம் முளைக்காமல் செய்துவிடுகிறது. இப்படி, கிடுக்கிப்பிடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு விடுதலை அளிக்கும் ஜோதிடம்.
கர்ம வினையின் விஷாம்சத்தை அகற்றினால், 'நான்’ அகன்று ஏழைப்பங்காளர் களிடம் மாட்டிக்கொள்ளாமல் வெளிவருவான்.
கர்மவினையின் நஞ்சு பரவாத புத்தியானது நேர்வழியில் ஆராயும். உழைக்காமல் ஊதியம் பெறும் எண்ணத்தை உள் வாங்காது. அப்போது, அந்த ஏழைப்பங்காளர்கள் அண்ட மாட்டார்கள். ஜோதிடத்தின் அறிவுரைகள், விவேகத்தை வளர்த்து, நேரடி சிந்தனைகளை ஓடவிட்டு, இலக்கை எட்ட ஒத்துழைக்கும்
உலகம் உய்ய வேள்விக்கு வேளையைச் சொல்லி வெற்றி அடையச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது ஜோதிடம். உலக இயக்கத்துக்கு அதன் பங்கு உண்டு. அரசர்களுக்கு அன்றைய நாளில் எதிரியை வீழ்த்துவதற்கான வேளையைச் சொல்லும். பிறந்த மனிதனின் நடப்பு வாழ்க்கையின் தரத்தை விளக்குவதுடன், முற்பிறவியையும் வருங்காலப் பிறவியையும் விளக்கிக்கூறும். முக்காலத்திலும் காலத்தின் தொடர்பு தொடர்வதால், அது சாத்தியமாயிற்று. நாம் செய்யும் நல்லது- கெட்டதின் பலனை நம்மில் இணைக்க அது வேண்டும். எந்த அறநூல்களும் செய்யாத காரியத்தை அது நிறைவேற்றுவதால், அத்தனை தர்சனங்களும் அதன் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும். வேதம், வெளி உலகைப் பார்க்க அதை (ஜோதிடத்தை) கண்ணாகப் பயன்படுத்துகிறது (வேதஸ்யசக்ஷ§; கிலசாஸ்திரமேதத்).

புராணமானது ஜோதிடத்தின் அடிப்படை தத்துவமான சூரிய- சந்திரர்களை, பரம்பொருளின் கண்களாக சித்திரிக்கும் (சந்திர சூர்யௌ ச நேத்ரே). நமது இயக்கத் துக்கு கண்கள் முக்கியம். கண்களால் பார்வையைத் தொலைதூரம் செலுத்தி, வழியை கண்ணுற்ற பிறகே நாம் பயணத்தை மேற்கொள்ள இயலும். பயணம் தொடரத் தொடர பார்வையும் பயணப் பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு முன்னே செல்லும். நம்மை முன்னேற வைப்பது கண்கள். வாழ்வில் முன்னேறும் பாதையைக் காட்டிக்கொண்டே போவது ஜோதிடம். இரவிலும் பகலிலும் வெளிச்சம் போட்டு நமக்கு உதவு பவர்கள் சூரியனும் சந்திரனும்.
மனத்தில் பல சிந்தனைகள் உருவானாலும், அதன் இயல்பானது குறிப்பான நான்கில் அடங்கிவிடும்.
1. மனத்தில் தாழ்வுமனப்பான்மை இடம்பெறுவது உண்டு.
எங்கெல்லாம் உயர்வைப் பார்க்கிறதோ, அதெல்லாம் தன்னிடம் இல்லாததால், உயர்வை எட்டியவர்களில் பகை முளைக்கும். அல்லது, உயர்வை தன்னால் எட்டமுடியாது என்ற எண்ணம் மேலோங்கி, உயர்ந்தவர்களிடம் இருந்து மறைந்து வாழ நினைக்கும். தாழ்வுமனப்பான்மை உச்சகட்டத்தை எட்டினால், உயர்ந்தவர்களை அழித்து தன்னை உயர்ந்தவனாகப் பிரகடனப்படுத்தும். சமுதாயத்துடன் இணைந்து வாழ விரும்பாது.
2. எப்பாடு பட்டாவது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தென்படுவது உண்டு.
தனக்குத் தகுதி இருக்காது; எனினும், அதில் ஆர்வம் மேலோங்கி இருக்கும். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படுவான். ஒருவன் பெண்ணொருத்தியை விரும்பினான். அவள் மறுத்தாள். தனக்குக் கிடைக்காத பெண், வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது என்று அந்தப் பெண்ணை மாய்த்துவிட்டான்.
3. காழ்ப்பு உணர்ச்சி இருப்பவனுக்கு, சூழல் மறந்துபோகும். தவறான வழியிலும் விருப்பத்தை அடைய முயற்சிப்பான்.
நதியில் தாழ்வான ஒரு பகுதியில் நீர் அருந்திக்கொண்டிருந்தது ஓர் ஆட்டுக்குட்டி. அப்போது அங்கே நீர் அருந்த வந்த செந்நாய் ஒன்று, அந்த ஆட்டுக்குட்டியை ஆகாரமாக்கிக்கொள்ள விரும் பியது. 'நான் குடிக்க இருந்த நீரை கலக்கி நீ அசுத்தமாக்கி விட் டாய். நீ தண்டிக்கப்பட வேண்டியவன்’ என்றது செந்நாய். 'நான் இருப்பது தாழ்வான பகுதி. நான் நீர் அருந்துவதால் இங்குதான் நீர் கலங்கும். நீ இருக்கும் மேடான பகுதியில் நீர் கெடுவதற்கு வழியில்லை'' என்றது ஆட்டுக்குட்டி.
அப்போதும் செந்நாய் விடுவதாக இல்லை. ''நீ சொல்வதுபோல் இப்போது நீ அபராதி இல்லை என்றாலும், ஏற்கெனவே உனது தந்தை இந்தத் தவற்றைச் செய்திருக்கிறான். அதனால் அவன் மகன் தண்டனையை அனுபவிக்கவேண்டும்'' என்றபடி அந்த ஆட்டுக் குட்டியை அடித்துத் தின்றது.

4. மனத்தில் இனம் தெரியாத பயம் உறைந்திருப்பது உண்டு.
பயத்தால் எந்த முடிவுக்கும் வராமல், பிறர் பேச்சைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நிலையை மனம் எட்டிவிடும். அப்போது எடுப்பார் கைப்பிள்ளையாக மாறும். பாதுகாப்பின்மை மனத்தில் ஒன்றியிருக்கும்.
சரியான முடிவை எட்டினாலும், பாதுகாப்பின்மை சுய நலத்தில் இணங்கவைத்து, விருப்பம் இல்லாவிட்டாலும் பிறரது விருப்பத்துக்கு இணங்கிவிடும்.
பொறுப்புடன் செயல்பட வேண்டிய மனம், இந்த நான்கில் ஏதாவது ஒன்றைத் தழுவினால், பொறுப்பு தானாகவே அகன்று, துயரம் ஆட்கொள்ளும்.
ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 5-ம் வீடு, 9-ம் வீடு - அப்படியே சந்திரனில் இருந்து 5-ம் வீடு, 9-ம் வீடு ஆகியவற்றை முறைப்படி கவனமாக ஆராய்ந்தால், அடையாளம் கண்டு கொள்ள இயலும். அவர்களது பேச்சில் மனத்தின் இயல்பு வெளிப்படும். நேர்காணலில் கேள்விக்கு கிடைக்கும் பதிலை ஆராய்ந்தால் அவருடைய மன இயல்பு தெரிந்துவிடும். சான்றோடு தேர்வு செய்யலாம்.
பிறக்கும்போது நட்சத்திரத்துடன் இணைந்த தசாவரிசைகள், அவனது கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வருகின்றன. இன்பமும் துன்பமும் மாறி மாறித் தோன்றி அதன்
பலனை முழுமையாக உணரவைப்பதற்கான கர்மவினையின் கருவி இந்த தசாவரிசைகள். முழு ஆயுளை எட்டும் வரையிலும் தசா பலன்கள் தொடரும். அல்பாயுளில் அவன் இறைந்தாலும், தசா பலன்கள் வேறு வழியின்றி முடிவுறுமே தவிர, அவற்றின் செயல்பாடு முற்றுப்பெறாது.
நிச்சயமாக நடந்தேற வேண்டிய பலனை தசா பலன் எடுத்துரைக்கும். அதை 'த்ருட பலன்’ என்று ஜோதிடம் குறிப்பிடும். அஷ்ட வர்க்கம். சந்திரசாரம் ஆகியவை நிச்சயம் இல்லாத பலனைச் சுட்டிக்காட்டும். அதை 'அத்ருட பலன்’ என்று சொல்லும். கிரகங்களின் அமைப்பின் தகுதியில் உருவாகும் பலன்களை 'த்ருடா த்ருடம்’ என்று சொல் லும். தருணம் வாய்த்தால் நடைமுறைக்கு வரலாம். தருணம் இல்லை என்றால் வராமலும் போகலாம். ஒரு ஜாதகத்தில், 'நீசபங்க ராஜ யோகம்’ தென் படுகிறது. தருணம் வாய்க்காமல் இருந்தால் அது நடைமுறைக்கு வராமலும் இருக்கும் (தாசபலேன விசிந்தயேத் த்ருடம்...).
தசைகள், அஷ்டவர்க்கம், சந்திர சாரம், யோகங்கள்- இவற்றின் பாகுபாட்டை உணர்ந்து செயல்படும்போது, துல்லியமான பலன் உருவாகும்.
கர்மவினையானது சிந்தனை மாற்றத்தில் வெளிப்படும். அதை, தசாகாலங்கள் வாயிலாக அனுபவிக்க வைக்கும். முளைவிட்ட கர்ம வினைதான் சிந்தனை மாற்றம். அதைப் பயிராக்கி ஊட்டுவது தசாகாலங்கள்.

கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்... அதாவது லக்னம், ஐந்து, ஒன்பது, சந்திர லக்னம், ஐந்து, ஒன்பது ஆகியவற்றில் வீற்றிருக்கும் கிரகங்கள், மற்ற வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்களுடன் இணைந்து, கர்ம வினையின் உருவத்தை சிந்தனை வடிவில் வெளியிடும்.
கிரகங்களின் வாயிலாக மன ஓட்டத்தை உணர்ந்து, பலனை வெளியிடும் பொறுப்பு ஜோதிடரிடம் இருக்கவேண்டும். அஷ்ட வர்க்கம், சந்திர சாரம், யோகம் ஆகியவற்றை நம்பி, தசைகளையும் அதன் தாக்கத்தில் விளையும் சிந்தனை மாற்றத்தையும் ஒதுக்கி பலன் சொல்ல முயற்சிப்பது தவறு.
இருவரில் ஒருவர் சரணடையும் தம்பதிகளில் விவாகரத்து தலை தூக்காது. தாழ்வு மனப் பான்மை, அளவுகடந்த ஆசை, இனம் தெரியாத பயம், பாதுகாப்பின்மை ஆகியவை குடி கொண்டிருக்கும் மனம் படைத்தவர்களில், விவாகரத்து எண்ணம் தென்பட வாய்ப்பு உண்டு.
அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, ஈவு, இரக்கம் போன்றவை மனத்தில் இடம்பிடித்து இருந்தால், அங்கு மகிழ்ச்சியான தாம்பத்தியம் இருக்கும்.
ஆக, கிரக அமைப்பின் வாயிலாக மன ஓட்டத்தை எடைபோட்டு பொருத்தம் நிர்ணயம் செய்வது பலனளிக்கும். தற்போது நடைமுறையில் கடைப்பிடிக்கும் பொருத்தப் பகுதியானது ஜோதிட சாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லாத ஒன்று.
ஜோதிடம், தனித்தனியாக ஆண் - பெண் மன இயல்புகளையும், அவர்கள் சந்திக்கும் இன்ப-துன்பங்களையும் கிரகங்கள் வாயிலாக அறிவதற்குப் பரிந்துரைக்கும்.
கணவனைப் பறிகொடுக்கும் ஜாதகத்தை யும், மனைவியைப் பறிகொடுக்கும் ஜாதகத்தையும் இணைத்து இருவருக்கும் வாழ்வளிக்க இயலாது.
ஆண் - பெண் இருவரின் தனித்தனி இயல்புகள் இணையும்போது, போற்றும் படியான இயல்பாக மாறும் என்பதற்குச் சான்று இல்லை. அவர்களது கர்மவினையே, இயல்பின் வல்லமையில் இணைப்பு நீடிக்கும் என்பதற்குச் சான்று ஆகும்.
- சிந்திப்போம்...