மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! 20

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

ஆலயம் ஆயிரம்! முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

 திருப்பைஞ்ஞீலி

'ஞீலி’ என்ற தமிழ்ச் சொல், வாழையின் ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிப்பதாகும். ஞீலி வாழை உண்பதற்கு ஏற்றதன்று. இவ்வகை வாழை இனத்தையே தல விருட்சமாகக் கொண்டதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலும், ஊரும்

திருப்பைஞ்ஞீலி என்றே அழைக்கப்பெறுகின்றன. திருவரங்கத்துக்கு வடக்காக மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை என்ற ஊர்களுக்கு அருகில் இவ்வூர் விளங்குகின்றது.

திருப்பைஞ்ஞீலியில் கோயில்கொண்டுள்ள ஈசனை நீலகண் டேஸ்வரர், ஞீலிவன நாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் ஆகிய பெயர்களில் குறிப்பர். கல்ஹாரத்துடன் அழகிய துவாரபாலகர் சிற்பங்கள் திருவாயிலை அலங்கரிக்க, இவ்வாலயத்து மொட்டைக் கோபுரம் திகழ்கிறது. 2-ம் கோபுரமும் கலை நயம் வாய்ந்ததாகும். மூலவர் சிவலிங்கம், சிறிய பாணத்துடன் காணப்பெறுகிறது. உமாதேவியோ திருக்கரத்தில் சுவடி ஏந்திய நிலையில், ஞான முத்திரை காட்டியவாறு அருள்பாலிக்கின்றார்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 20

திருச்சுற்றில் காணப்பெறும் பைரவர் சிற்பமும், சூரியனின் திருவுருவமும் சோழர் கால கலைநயத்தோடு விளங்குகின்றன. பின்புறத்தில் நாய் நிற்க, நின்ற கோலத்தில் சூலம், கபாலம், டமருகம், பாசம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் கொண்டவராக, எரிதழல் நிரம்பிய மகுடத்துடன் பைரவரின் திருமேனி காட்சி தருகின்றது. சூரியனோ தன் இரு கரங்களிலும் கமலங்களை ஏந்தியவாறு காணப்பெறுகின்றார்.

நடராஜரின் திருவுருவம் உமையம்மையுடன் சுவரில் வண்ண ஓவியமாகத் திகழ, அவர் முன்பு ஸ்ரீபாதபீடம் உள்ளது. இங்கு காணப்பெறும் கல்லாலான பலகணி (ஜன்னல்) சிறந்த வேலைப் பாடுடையதாகும்.

திருவாரூரில் எவ்வாறு தியாகராஜப் பெருமான் (சோமாஸ்கந்தர்) வீதிவிடங்கர் என அழைக்கப் பெறுகின்றாரோ, அதுபோல இந்த ஆலயத்தில் குடபோக மாகக் (குடைவறை) காணப்பெறும் கருவறையின் சுவரில் சிவபெருமான், உமாதேவி, குழந்தை முருகன் (ஸ்கந்தன்) ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் காணப் பெறுகின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வாலயத்து தேவாரப் பதிகத்தில் 'ஆரணீய விடங்கரே’ என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளது, இச்சிற்பத் திருவடிவத்தையே!

சேதி சொல்லும் சிற்பங்கள்! 20

சுகாசன கோலத்தில் ஈசனார் மான், மழு ஆகியவற்றை ஏந்தியவாறு நான்கு திருக்கரங்களுடன் அமர்ந் திருக்க, அம்மையோ பக்கவாட்டில் திரும்பியவாறு, ஒருகாலைத் தொங்கவிட்டவாறும் மறுகாலைக் குத்திட்டவாறும் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். இருவர் இடையே உள்ள முருகப்பெருமானைத் திருக்கரங்களால் பற்றியவாறு உமாதேவி காணப் பெறுகின்றார்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 20

தமிழகத்தில் உள்ள சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பங்கள் வரிசையில் இது தனித்தன்மையுடையது ஆகும். கலையமைதியை ஆராயும்போது, இந்தப் படைப்பு கிபி 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த முத்தரையர்களின் கலைவண்ணமே என்பதை உணரலாம். ஈசனின் காலடி யில் கிடக்கும் முயலகனை யமன் என இத்தலத்தார் தவறாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.

இத்தலத்தின் மிகுசிறப்பினை, கோயிலுக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலையன்றும் அதன் கரையில் காணப்பெறும் சுதைச் சிற்பக் காட்சியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இச்சிற்பக் காட்சியில் அந்தணர் வடிவில் சிவபெருமான் சோற்று மூட்டை (பொதிச்சோறு) ஒன்றினை ஏந்தி நிற்க, எதிரே உழவாரம் ஏந்திய திருநாவுக்கரசர் நின்றுகொண்டிருக்கிறார். இது, ஈசனார் அப்பரடிகளுக்கு பொதிச்சோறு அளித்த நிகழ்வைக் குறிப்பதாகும்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 20
சேதி சொல்லும் சிற்பங்கள்! 20

காவிரிக்கரைத் திருத்தலங்களை வழிபாடு செய்து திருப் பதிகங்கள் பாடிச் சென்ற திருநாவுக்கரசர், பழையாறையி லிருந்து பல தலங்களைக் கண்டு, திருப்பராய்த்துறை சென்றடைந்தார். பராய்த்துறை ஈசனைப் பாடிப் பரவிய பிறகு, திருபைஞ்ஞீலிக்குச் சென்று வழிபட வேண்டும் எனும் பெருவிருப்பால், கடுங் கோடையையும் பொருட்படுத்தாது வடதிசை நோக்கி தொடர்ந்து நடந்தார்.

பசி மிகுதியால் வாட்டமுற்ற அடியாரின் துயர் நீக்க விரும்பிய பைஞ்ஞீலி ஈசன், முதிய அந்தணர் வடிவில் வந்தார். அப்பரின் எதிரில் தோன்றி, கையில் எடுத்து வந்த சோற்றுப் பொதியை அவரிடம் தந்து, அங்கு அவரே தோற்றுவித்த குளத்தில் நீர் பருகவும் வேண்டினார்.

சோறு உண்டு நீர் பருகிய அப்பரடிகள், முதியவரோடு பைஞ்ஞீலியை அடைந்தார். கோயில் நெருங்கியதும் முதியவர் மறைந்தருள, ஈசனாரின் கருணைத்திறம் உணர்ந்த நாவுக்கரசர் அப்பதியில் தேவாரம் பாடித் திளைத்தார். இந்நிகழ்வைக் காட்டுபவையே அங்கு காணப்பெறும் சுதைச் சிற்பங்களும், நீர் நிலையும் ஆவன.

- புரட்டுவோம்