Published:Updated:

சனி கிரக பாதிப்புகள் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்?

சனி கிரக பாதிப்புகள் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்?
சனி கிரக பாதிப்புகள் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்?

சனி கிரக பாதிப்புகள் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்?

வகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான்தான். சனி பகவானுக்கு மந்தன், ரவிபுத்ரன், ஜடாதரன், ஆயுள்காரகன் என்று பல பெயர்கள் உண்டு. சனீஸ்வரர் நீதிதேவன் ஆவார். தர்மவானும்கூட. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், அவரவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர்.

சனியின் தசாபுக்தி காலத்திலும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி போன்ற கோசார காலங்களிலும் சனிபகவான் அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருவார்.

இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து தப்பமுடியாது. ஒருமுறை இந்திரனை பிடிக்கவேண்டி இருந்தது. தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்பதால், முன்கூட்டியே தான் இந்திரனைப் பிடிக்கப்போவதாகக் கூறினார்.

இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன் சனிபகவானிடம்,

" உலகமே போற்றிப் புகழும் தேவர்களின் அரசன் நான், என்னைப் பிடிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது" என்றார். சனிபகவானோ " மனிதரோ, தேவரோ எனக்கு அனைவரும் சமமே, இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் யாரும் இல்லை. என் பார்வையில் இருந்து விலக யாருக்கும் விலக்கு இல்லை'' என்றார்.

''சரி அத்தனை வல்லமை பொருந்திய நீ, என்னைப் பிடிக்கும் நேரத்தையாவது சொல்'' என்றார் இந்திரன். சனிபகவானும் அந்த நேரத்தைச் சொல்லி அனுப்பினார்.

சரியாக அந்த நேரத்தில் பெருச்சாளியாக மாறி, ஒரு சாக்கடையில் போய் ஒளிந்து கொண்டார் தேவேந்திரன். அந்த நேரத்தைக் கடந்து சாக்கடையில் இருந்து வெளிவந்த இந்திரன் மகிழ்ச்சியோடு சனிபகவானிடம் சென்று " உன் பார்வையில் இருந்து எப்படி தப்பினேன் பார்த்தாயா " என்று கர்வத்தோடு சொன்னார்.

அதற்கு சனிபகவான், " தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக புகழுடன் விளங்கும் நீங்கள், வீற்றிருக்கும் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றது கூட என்னுடைய பார்வையால்தான்" என்றார்.

அப்போதுதான் சனியின் வல்லமையை உணர்ந்தார் தேவேந்திரர்.

சனீஸ்வர பகவான் தர்மவான் என்பதால், எப்போதுமே நன்மையே அருள்வார். ஆனால், நாம் பாவங்கள் செய்திருந்தால் சனிபகவான் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

தன்னலம் இல்லாமல் மக்கள் நலனுக்காக வாழ்பவர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் தப்பாமல் தருவார் சனீஸ்வர பகவான்.

அப்படி ஒருமுறை தசரத மன்னருக்கு சனீஸ்வர பகவான் வரம் தந்த சம்பவம்...

ரகுவம்ச மன்னரான தசரத மன்னர் அயோத்தியை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். அப்போது சனி கிரகமானது ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து செல்ல இருந்தது.

அப்படி சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்துகொண்டு சென்றால், அதன் விளைவாக நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லாமல், கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்படுவார்கள் என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறினார்கள்.

தன் மக்களுக்கு சனியினால் எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற எண்ணத்தில், தசரதர் தன்னுடைய பறக்கும் தேரில் ஏறி, சனீஸ்வர பகவானுடன் போருக்குச் சென்றார்.

அதைக் கண்டு, 'ஈஸ்வரப் பட்டம் பெற்ற தன்னையே எதிர்த்துப் போருக்கு வரத் துணிந்தானே தசரதன்' என்று திகைத்தார். நேரில் வந்த தசரதனின் துணிச்சலைப் பாராட்டிய சனீஸ்வரர், தான் ரோகிணியை பிளந்து செல்வது தவிர்க்கமுடியாது என்று கூறியதுடன், வேறு ஏதேனும் வரம் கேட்டால் தருவதாகக் கூறினார்.

தசரதரும், ''அப்படியானால், நீங்கள் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்துகொண்டு செல்வதால், நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் ஏற்பட இருக்கும் பஞ்சத்தை வராமல் தடுக்கவேண்டும். எப்போதும் என் நாட்டு மக்கள் செழிப்புடன் வாழவேண்டும்'' என்று வரம் கேட்டார். அப்படியே சனீஸ்வர பகவானும் வரம் தந்தார். வரம் தந்த சனீஸ்வர பகவானைப் போற்றி தசரத மன்னர் ஸ்லோகங்கள் இயற்றி வழிபட்டார்.

நாம் மற்றவர்களின் நலனுக்காகப் பாடுபட்டால், சனீஸ்வர பகவான் எப்போதும் நமக்குத் துணையாக இருந்து அருள் புரிவார் என்பது உறுதி.

சனீஸ்வர தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்:

சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

அந்த நாள்களில் சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சாலச்சிறந்தது.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.

சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும்.

எள்ளுச் சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்குச் செய்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைத்துவிட்டுச் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.

திருநள்ளாறு சென்று, சனீஸ்வரரை வழிபடத் தோஷங்கள் நீங்கும்.

நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்கு தானம் செய்யலாம்.

சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.

உழைப்பாளிகளுக்கு உதவி செய்தால், சனீஸ்வரனின் அனுகூலம் கிட்டும். அதேபோல ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவினாலும் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்; நம் சங்கடங்களைப் போக்குவார்.

'நீலாஞ்ஜன ஸமா பாஸம்

ரவிபுத்ரம் யமாக் ரஜம்'

'சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி ஸனைச்சரம் '

என்னும் சனிபகவானைப் போற்றும் மந்திரத்தை தினமும் உச்சரித்து சனிபகவானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அடுத்த கட்டுரைக்கு