சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

குருவருள்... திருவருள்! - 5

குருவருள்... திருவருள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குருவருள்... திருவருள்! ( வி.ராம்ஜி )

சித்தமெல்லாம் சிவமயமே...வி.ராம்ஜி

கந்த விஷயங்கள், ஒவ்வாத காரியங்கள் என்று வகை பிரித்துதான் வாழ்க்கையை நகர்த்துகிறோம். நமது ஒவ்வொரு செயல்பாடும் நமக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த நாளில், இந்த வேளையில், இப்படியொரு பூஜையில் ஈடுபட்டால், நம் காரியம் வெற்றி அடையும் என்று நம்பிக்கையுடன், அந்த பூஜையில் ஈடுபடுகிறோம். பூஜைக்கு முன்னதாக நல்லது நடக்கவேண்டுமே என்கிற பிரார்த்தனையும், பூஜை செய்த பின்னர் நல்லது நடந்தே தீரும் என்கிற உறுதியும் மனத்தில் உதித்திருப்பதை உணர்ந்து பூரிக்கிறோம்.

''எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரின் திருக்கோயிலில் குடிகொண்டு, அழகும் அருளும் மிளிரக் காட்சி தரும் ஸ்ரீசண்முகரை, கந்தபிரானுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திர நாளிலோ, சஷ்டி திதியிலோ, செவ்வாய்க் கிழமைகளிலோ வந்து வணங்குவது நல்ல பலன்களைத் தரும் என்றாலும், எந்த நாளில் வேண்டுமானாலும் இவரை வந்து தரிசிக்கலாம்; பூஜிக்கலாம்; பிரார்த் திக்கலாம். முருகக் கடவுளுக்கும் ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானைக்கும் வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் போதும்; நாம் நினைத்ததையெல்லாம் ஈடேற்றித் தருவார் முருகப்பெருமான்!'' என்கிறார்கள் பக்தர்கள்.

குருவருள்...  திருவருள்! - 5

சென்னை- தாம்பரத்தில் இருந்து படப்பை கடந்து, ஒரகடத்தை அடுத்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது எழுச்சூர் கிராமம். இங்கே உள்ள சிவாலயம், இறை சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதத் தலம். அங்கே, ஞானிகளும் முனிவர்களும் இன்றைக்கும் தபஸ் செய்துகொண்டிருப்பதாக ஐதீகம். காஞ்சி சங்கர மடத்தின் 54-வது பீடாதிபதி ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கும் இந்தக் கோயில், குருவருளையும் திருவருளையும் ஒருங்கே தரக்கூடிய புண்ணிய திருத்தலம் எனக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.

''ஸ்ரீசண்முகருக்கு பாலபிஷேகம் செய்வது ரொம்பவே விசேஷம்! மனதில் தேவையற்ற பயம், குழப்பம், கவலை என எதுவாக இருந்தாலும், பாலபிஷேகம் செய்து, ஸ்ரீசண்முகரை மனதார வழிபட்டால், சகலமும் சரியாகிவிடும். மனசு லேசாகிவிடும். குழப்பங்கள் தொலைந்து, தெளிவு கிடைக்கும். இன்றைக்கு என் மனத்தில் எந்தவொரு தவிப்போ பயமோ இல்லை. அதற்குக் காரணம், ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரும் ஸ்ரீசண்முகரும்தான்! அதனாலேயே, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தக் கோயிலுக்கு வந்து, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இங்கே எங்கேனும் ஓரிடத்தில் அமர்ந்து, கந்த சஷ்டி கவசம் சொல்லுவேன். ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்வேன். பிறகு என்ன... முழு எனர்ஜி கிடைத்துவிட்ட திருப்தியில், பூரித்துப் போகும் மனசு!'' என்கிறார் சென்னை, விருகம் பாக்கத்தைச் சேர்ந்த பக்தர் நாராயணன்.

அதேபோல், இங்கே உள்ள உமையவளும் அருளும் பொருளும் அள்ளித் தரக்கூடிய கருணைத் தெய்வம். இங்கே இவளின் திருநாமம்- ஸ்ரீதெய்வநாயகி. நின்ற திருக்கோலத்தில் அபய முத்திரை காட்டி, கருணை ததும்பும் விழிகளோடு காட்சி தரும் அவளைப் பார்க்கும்போது, பெயருக்கேற்ப தெய்வங்களுக்கெல்லாம் நாயகியே இவள் என்பது புலனாகிறது.

ஸ்ரீதெய்வநாயகி அம்பாளிடம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும், இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறேன், எனக்கு இந்த வரம் வேண்டும் என்றெல்லாம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. குழந்தையின் பசியையும் அழுகையையும் தாய் அறிவாள் அல்லவா? அகிலத்து மக்கள் அனைவருக்கும் அன்னையாகத் திகழும் ஸ்ரீஅகிலாண்டநாயகியே ஸ்ரீதெய்வ நாயகியாக இங்கு அருள்பாலிக்கிறாள் என்பதால், அவளின் சந்நிதியில் விளக்கேற்றி, அவளுக்கு ஒரு புடவை சார்த்தி, அரளிப் பூச்சரங்கள் கொடுத்து, கண்கள் மூடி, ஐந்து நிமிடம் அமர்ந்து பிரார்த்தித்தாலே போதும்... நம்மிடம் என்னென்ன குறைகளோ அவற்றை நிவர்த்தி செய்து, நமக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றித் தருவாள் அன்னை; சகல ஐஸ்வரியங்களும் தந்து, நமது வீட்டையே நிறையச் செய்திடுவாள் தேவி எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

குருவருள்...  திருவருள்! - 5

''செவ்வாய், வெள்ளிக்கிழமைன்னா அம்பாளைத் தரிசிக்கிறதுக்காகவே மக்கள் எங்கிருந்தெல்லாமோ வர்றாங்க. இப்பெல்லாம், குறிப்பா சக்திவிகடனைப் படிச்சுட்டு, சேலம், தருமபுரிலேருந்தும், மதுரை, திருநெல்வேலிலேருந்தும் வர்ற பக்தர்கள் கூட்டம் அதிகரிச்சிருக்கு. நினைச்சது நிறைவேறிடுச்சுன்னு சொல்லி, அம்பாளுக்குப் புடவை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பூஜை பண்ணிட்டுப் போனாங்க. நம்மளோட மனக்கிலேசம் மொத்தத் தையும் அகற்றி, மனசை லேசாக்கிடுவா இந்த மகா சக்தி!'' என்கிறார்கள் எழுச்சூர் மக்கள்.

''பேரு மட்டும் போடுங்க. போட்டோல்லாம் வேணாம்'' என்றபடி, சென்னை- அண்ணா நகரில் இருந்து வந்திருந்த வசந்தி தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

''எனக்கும் கணவருக்கும் தினம் தினம் சண்டையும் பூசலும்தான்! அவருக்குச் சரியான வேலை இல்லை. அப்படியே ஏதாவது சின்னச் சின்ன வேலைக்குப் போனாலும், பெருசா வருமானம் இல்லை. வர்ற வருமானத்துல வட்டி, தவணைன்னு போய், சொற்பத் தொகைதான் கைக்கு வரும். அதை வைச்சுக்கிட்டு வீட்டு வாடகை, காலேஜ் படிக்கிற பெரிய பொண்ணுக்கான படிப்புச் செலவு, பத்தாம் வகுப்பு படிக்கிற ரெண்டாவது மகளுக்கான செலவுன்னு எல்லாத்தையும் எப்படிச் செய்ய முடியும்?

முக்கால்வாசி நகையை அடகு வைச்சு, குழந்தைங்களை காலேஜ்லயும் ஸ்கூல்லயும் சேர்த்தோம். மிச்ச சொச்சமுள்ள நகைகளையும் வித்தாச்சு. இதனாலேயே வீட்டுல எப்பப் பார்த்தாலும் சண்டையும் தகராறும்தான்! ஒருகட்டத்துல, சண்டை முத்தி, ரெண்டு பொண்ணுங்களையும் கூட்டிட்டு நான் எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

குருவருள்...  திருவருள்! - 5

அப்பத்தான் எழுச்சூர் கோயில் பத்தி எனக்குத் தெரிய வந்துது. அன்னியிலேர்ந்து ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுல அவசியம் இங்கே வந்துடுவேன். அம்பாள் சந்நிதியே கதின்னு கிடப்பேன். அம்பாளுக்கு எதிர்ல ஒரு பத்து நிமிஷம் உக்கார்ந்து, 'என்னையும் என் புருஷனையும் நீதாம்மா சேர்த்து வைக்கணும். அப்பா சிவபெருமானுக்கும் பிள்ளை முருகப்பெருமானுக்கும் நடுவே நீதானே இருந்து, அவங்களை ஒத்துமையா சேர்த்து வைக்க முயற்சி பண்ணினே! அதுமாதிரி, என்னையும் கணவரையும் சேர்த்து வை. அவருக்கு நல்ல வேலை கொடு. எங்க குடும்பத்துக்கு சுபிட்சத்தைக் கொடு. ஓஹோன்னு காசும் பணமும், நகையும் நட்டும் நான் கேக்கலை. நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான பணமும் காசும் கிடைச்சா, அதுவே போதும்!’னு மானசிகமா அழுவேன்.

என் கண்ணீர் பிரார்த்தனைக்கு ஒரே மாசத்துல செவி சாய்ச்சுட்டா அம்மா! கணவருக்கு நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சுது. பொண்ணு கேம்பஸ் இன்டர்வியூல பாஸானா. இந்த நேரத்துல நானும் 16,000 ரூபா சம்பளத்துல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். இப்ப, பழையபடி நாங்க ஒண்ணாயிட்டோம். எங்க வீட்டுல நிம்மதியும் சந்தோஷமும் நிறைஞ்சிருக்கு. இது எல்லாத்துக்கும் ஸ்ரீதெய்வநாயகியும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரும்தான் காரணம்!'' என்று கண்ணீரும் சந்தோஷமும் பொங்கச் சொன்னார் வசந்தி.

உண்மைதான். வசந்தியைப் போல எத்தனையோ பெண்களின் கண்ணீர்த் துளிகளைத் துடைத்து, அவர்களின் வாழ்வைத் துலங்கச் செய்யும் மகா சக்திதான் ஸ்ரீதெய்வநாயகி அம்பாள்.

- அருள் சுரக்கும்

படங்கள்: ரா.மூகாம்பிகை 

எங்கே இருக்கிறது?

சென்னை- தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஒரகடம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், எழுச்சூர் கிராமத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. பயணித்தால், ஸ்ரீதெய்வநாயகி சமேத ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.