மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 32

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

##~##

காகபுஜண்டரின் சிகிச்சையால் பிரம்மார்த்தன் விழித்தெழுந்தான்.

தன் சகோதரன் பிழைத்துக்கொண்டதால் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட தன்மார்த்தன் காகபுஜண்டரிடம் தனது கேள்வியை முன்வைத்தான். ''குருவே... மனித வாழ்வில் இப்படி எதிர்பாராத சம்பவங்கள் நிகழ எது காரணம்?'' என்று கேட்டான் தன்மார்த்தன்.

''ஊழ்வினைதான்... வேறென்ன?'' என்றார் காகபுஜண்டர்.

''அனைத்தும் அவன் செயல் எனும்போது, ஊழ்வினைக்குக் காரணமான செயலுக்கும் அந்த இறைவன் அல்லவா காரணம்?''

''அதிலென்ன சந்தேகம்? அவனே காரணம்!''

''அப்படி இருக்க, எப்படி தீவினைகள் பாதிப்பை ஏற்படுத்தலாம்?''

''அப்பனே, நெருப்பென்றால் சுட வேண்டும்; காற்றென்றால் நிலவ வேண்டும்; நீரென்றால் தாகம் போக்க வேண்டும்; நிலமென்றால் தாங்க வேண்டும்; ஆகாயம் என்றால் இருந்தும் இல்லாதிருக்க வேண்டும். அதுபோல, வினைக்கு ஏற்ப பதில் வினை உருவாகும். இதை உள்ளடக்கியே தர்மநீதி சாஸ்திரங்கள் உருவாக்கப்பட்டன. அந்த சாஸ்திரங்களைத் தெரிந்தும் புரிந்தும் வாழ்வதே வாழ்வாக இருக்க வேண்டும். சாஸ்திரங்கள் தெரிந்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடந்தால் தீவினைகளே புரிய மாட்டோம்; பதிலுக்கு எதிர்விளைவுகளும் உருவாகாது...''

''தர்மநீதி சாஸ்திரங்களைத் தெரிந்துகொள்ள வழியற்ற நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வது?''

சித்தம்...  சிவம்... சாகசம்! - 32

''ஓர் உயிர் மானுடப் பிறப்பு எடுக்கிறது என்றாலே, அதன் முன் வினைப்பாடுதான் காரணம். அப்படி மானுடப் பிறப்பெடுத்து விட்ட நிலையில் சுழலுக்கேற்ப மனம் உருவாகும். பின், காலத்தால் அறிவு வளரும். இயற்கையே இவ்விரண்டையும் கற்றுத்தரும். இந்த இரண்டின் போக்கில் முதலில் தர்மநீதி சாஸ்திரங்களை அறிந்து கொள்ள வழியற்ற நிலை இருந்தாலும், நிச்சயமாக ஒரு பிறப்பில் தெரிந்து கொள்ள வழி ஏற்படும். இப்போது என் மூலம் உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவருவதுபோல் அதுவும் சித்திக்கும்...''

''அதற்குப் பல பிறவிகள் தேவைப்படுமோ?''

''ஆம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலப்பிரமாணம் உள்ளது. ஒரு விதை மரமாகி, காய் கனிகளைத் தருவது முதல், ஓர் உடல் ஒவ்வொரு பருவத்தையும் கடந்து முதுமை எய்தி, உயிர் மூச்சை நிறுத்திக் கொள்வதுவரை ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு காலக் கணக்கு உள்ளது. அந்தக் கணக்கு கூடவும் கூடாது; குறையவும் குறையாது. அது மிகச் சரியானது. சற்று மாற்றி இப்படியும் கூறலாம்... அதாவது, எது மிகச் சரியானதோ அதை கணக்கு என்றும் கூறலாம்...''

''அப்படியானால், இந்த வனத்தில் நாங்கள் உங்களைச் சந்தித்ததற்குப் பின்னாலும் வினைக் கணக்கு உள்ளதோ?''

''அதிலென்ன சந்தேகம்? இந்த வனத்தில் கோடானுகோடி தாவரங்கள், உயிரினங்கள் உள்ளன. ஆனால், உங்கள் தொடர்பும் கவனமும் என் மேல் மட்டும்தானே இப்போது உள்ளது?''

''மனித வாழ்வில் இப்படி உணர்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கிறது குருவே?''

சித்தம்...  சிவம்... சாகசம்! - 32

''அதற்கு எல்லையில்லை அப்பனே! அனைத் தையும் அறிந்து வைப்பதால் பயனுண்டா என்றால், அதுவுமில்லை. கடலளவு நீர் இருக்க, நம் தாகத்துக்கு எப்படிக் கையளவு போதுமானதோ, அப்படியே மானுட வாழ்வும். எனவே, தேவைக்கு மதுரமாய் வாழ முற்படுவதே நல்வாழ்வாகும்.''

''அந்த மதுர வாழ்வுக்கு எது முதலில் தேவை?''

காகபுஜண்டருக்கும் தன்மார்த்தன், பிரம்மார்த்தன் முதலான ஐவருக்கும் இடையில் ஒரு ஞானப்பரிவர்த்தனை தொடங்கியது...

''அப்பனே... ஒரு மனிதனின் முதல் தேவை, தாகம் அடங்கிப் பசியாறுதல். இது உடல் சார்ந்தது! இந்தப் பசியும் தாகமும் இல்லை என்றால் உடல் வளராது. எனவே, இது அனிச்சையாக மனித உடலில் செயலாற்றுகிறது. அதனால்தான் பிறந்த குழந்தை பாலுக்கு அழுகிறது. மலப் பையும் மூத்திரப் பையும் நிரம்பியவுடன் உடல் அதை வெளியேற்ற வேண்டிய அவஸ்தைக்கு ஆளாகிறது. உடல் சார்ந்த இந்த அனிச்சை, மனத்துக்கு அறிவாலே உருவாகிறது. அந்த அறிவுதான் பட்டறிவு. இந்தப் பட்டறிவே சூட்டை உணர்ந்து, அதை விட்டு விலகி நிற்கச் செய்கிறது. நீரில் மூழ்கிடாது நீச்சலடிக்கக் கற்றுத் தருகிறது. கை கால்களைக் கொண்டு நடக்கவும், குதிக்கவும், படுக்கவும், மரம் மேல் ஏறி இறங்கவும் என்று ஒவ்வொன்றையும் கற்றுத் தருகிறது.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 32

ஆக, உடம்பு அனிச்சையாகவும், மனது பட்டறிவாலும் செயலாற்றுகிறது. இந்த இரண்டும் புழு பூச்சி முதல் மனிதன் வரை சகலருக்கும் பொருந்தும். இந்தச் செயல்பாடு களின் பின்னாலே ஐந்தறிவு மட்டுமே உள்ளது. ஆனால், மனிதனுக்கு ஆறாவதாக ஓர் அறிவும் உள்ளது. அதுதான் தன்னை உணர வழி காட்டுகிறது. ஒருவன் தன்னை, தன்னை மட்டும் வைத்து உணர இயலாது. பிறரை வைத்தும் ஏனைய பிறவான பலவற்றை வைத்துமே உணர முடியும்.''

காகபுஜண்டர் ஆறாம் அறிவு குறித்துச் சொன்ன செய்தியோடு அந்த ஐவரையும் ஆழமாகப் பார்த்தார்.

''குருவே! இந்த அறிவுதானே மனிதனைப் பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்தி மேன்மையாகவும் காட்டுகிறது?'' என்று கேட்டான் பிரம்மார்த்தன்.

''ஆம்... ஆனால், மேன்மையாக எனும் உன் கருத்து தவறானது. அந்தக் கருத்து அகந்தையான கருத்தாகும். மிக உயரமாக வளர முடிந்ததால் தென்னை மரம் உயர்ந்தது என்றும், ஒரு சாண் அளவே வளர முடிந்த அருகம்புல் தாழ்ந்தது என்றும் கூறுவோமா?''

''என்றால், மானிடப் பிறப்பு அரிய பிறப்பு என்று கூறப்படுவதன் காரணம்?''

''தன்னை, இந்த உலகை அறிந்துகொள்ள முடிந்த பிறப்பாக மானிடப் பிறப்பு இருப்பதால், அது அரிய பிறப்பென்று சிறப்பித்துச்

சொல்லப்படுகிறது. இந்த அரிய பிறப்பு எனும் கருத்தை பொறுப்பு உணர்வோடு அணுகவேண்டும்.

அரிய பிறப்பு வசமாகியுள்ளது. இதிலிருந்து அறிய வேண்டியதை அறிந்து, புரிய வேண்டியதைப் புரிந்து, பிறவித் தளையில் இருந்து விடுபெற முயலவேண்டும். ஒரு மலை உச்சியைப் போன்றது மானிடப் பிறப்பு. அந்த உச்சியில் இருந்து மேலே ஆகாயத்தில் ஏறிடும் விதம் செயல்பாடு இருத்தல் வேண்டுமே தவிர, உருண்டு கீழே விழுந்துவிடுவது போன்ற விதத்தில் கூடாது. எனவேதான், மனித வாழ்வை வரையறை செய்து பிறவித் தளையை வென்றிடும் விதமாக தர்ம நியாயங்கள் சாஸ்திரங்களால் சொல்லப்பட்டுள்ளன. அதை அறிந்து, அதன்படி நடந்திட வேண்டும்.''

''தர்ம நியாயங்களின்படி வாழ்வது என்பது பெரும் சவாலான விஷயம் என்று கூறப்படுகிறதே?''

''ஆம்... இந்த உலகம் மாயையால் சூழப்பட்ட ஒன்றும்கூட. தர்ம நியாயங்களோடு நடக்க முயலும்போது மாயை அதைத் தடுக்கப் பார்க்கும். தர்ம நியாயங்கள் என்பதே ஒரு பொய் என்பதுபோல எண்ண வைக்கும். ஆனால், நாம் அந்த மாயையின் வசம் சிக்கி விடாமல், அதை வென்று செயல்பட வேண்டும்.''

''ஏன் மாயை மனிதனைத் தன் வசப்படுத்த முயல்கிறது?''

''ஒரு போட்டியில் பலரும் பங்கு கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் வெற்றி கொண்டால்தானே வெற்றி பெற்றவர் ஆவோம்?''

''அதிலென்ன சந்தேகம்?''

''இங்கே மாயைதான் நம் எதிரி! அதை வெற்றி கொண்டால்தான் பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும்.''

''மாயையை வெல்ல என்ன செய்ய வேண்டும்?''

''முதலில் தன்னை நன்கு உணர வேண்டும்.''

''அதற்கு வழி?''

''உங்கள் மனத்தை அலைபாய விடாதீர்கள். மனக் குதிரையை கட்டிப் போடுங்கள்.''

''எப்படி?''

''பிராணாயாமம் செய்யுங்கள்!''

''பிராணாயாமம் பற்றித் தெளிவாகக் கூறுங்கள்.’'

''பிராண வாயு உட்சென்று பெருமளவு கலந்துவிடாதபடி தடுத்து நிறுத்தி, தேவைக்கு உட்கொள்வதே பிராணாயாமம் ஆகும்.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 32

பிராண வாயு உடலில் மிகுந்து இருக்கும்போது, மனமும் கவனத்துடன், இயக்கத்துடன் இருக்கும். மனம் அசையாதபோதே சித்தம் ஸ்திரமாகும். மனம் அசையக் காரணமான பிராண வாயுவைக் கட்டுப்படுத்தும் விதமே பிராணாயாமம் ஆகும். இது பூரகம், கும்பகம், ரேசகம் என்று மூன்று நிலை கொண்டதாகும். பூரகம் என்பது சந்திரநாடி, சூரியநாடிகளில் பிராண வாயுவை உள் இழுப்பதாகும். கும்பகம் என்பது, இழுத்த வாயுவை உள் நிறுத்திக் கொள்ளுதலாகும். ரேசகம் என்பது, நிறுத்திய பிராண வாயுவை விட்டு விடுதலாகும்.

பிராணா என்றால் காற்று; அயாமா என் றால், கட்டுப்படுத்துதல்.  இரண்டு சொல்லின் இணைப்புச் சொல் தான் பிராணாயாமம். இந்தப் பிராணாயாமத்தை தெளிந்து செய்வதில்தான் நம் உடலும் உள்ளமும்  சிறப்போடு திகழ்வது உள்ளது. இதில் உச்சம் தொட்டுவிட்டால், மரணத்தைக்கூட நாம் வென்றுவிட முடியும்!''

காக புஜண்டரின் விளக்கம் அந்த ஐவரையும் வியப்பிலாழ்த்தியது.

''நம் சுவாச கதிக்கு பின்னால், இவ்வளவு சங்கதிகள் உள்ளதா?'' என்று கேட்டான் தன்மார்த்தன்.  

''மூச்சுதான் அப்பனே எல்லாம்! பிரபஞ்சத் தொடர்பே அதன் மூலம்தான். இந்த மூச்சுக்குள்தான் கணக்கு உள்ளது. அந்தக் கணக்குகளில் தான் நாம் அடைவதும், அடையாததும் ஒளிந்துள்ளது...''

''அடைவது எதை? அடையாதது எதை?''

கேட்கவேண்டிய கேள்வியை மிகச் சரியாகவே கேட்டான் பிரம்மார்த்தன்.

- சிலிர்ப்போம்...