மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

த்தியம் செய்வதற்கும் அந்தச் சத்தியத்தின்படி செயல்படுவதற்கும் மிகப் பெரிய மன உறுதி வேண்டும். அந்த உறுதியுடன், அன்பும் கருணையும் மிக அதிகமாக இருக்கவேண்டும். அப்படியான பெருங்கருணையுடன் திகழ்ந்தவன் ஸ்ரீகண்ணன். கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றியவன்; சத்தியத்தின்படி வாழ்ந்து காட்டியவன்; சத்தியமாகவே காட்சி தந்தவன், அவன்!

''நான் மூன்று முறை பிறக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாய். அதன்படி, பிரிஸ்னி- சுதபாவுக்குப் பிறந்தேன். அதையடுத்து அதிதி- காஷ்யபருக்கு வாமன மூர்த்தியாகப் பிறந்தேன்.

##~##
இப்போது, உனக்கும் வசுதேவருக்கும் பிள்ளையாகப் பிறந்துவிட்டேன். ஆக, நீ கேட்டுக் கொண்டதன்படி, நான் மனதுக்குள் சங்கல்பம் செய்துகொண்டபடி, மூன்று முறை பிறந்துவிட்டேன். எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன்'' என்று தேவகியிடம் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அதுமட்டுமா? வசுதேவரின் மைந்தன் வாசுதேவன் எனத் திருநாமம் கொண்டு, அவர்களுக்குக் கூடுதல் மதிப்பையும் மரியாதையையும் வழங்கியருளினார்.

ராவணனின் மகன் ராவணீ; தசரதரின் மகன் தாசரதீ; துரோணரின் மகன் துரோணீ. அதுபோல், வசுதேவரின் மகன் வாசுதேவன்! இவற்றுக்கெல்லாம் விதை... ஸ்ரீமந் நாராயணன். பரமபத நாதனாக இருந்தவர், க்ஷீராப்தி நாதனாக திருப்பாற்கடலில் சயனித்திருந்தவர், எழுந்து மதுராபுரிக்கு வந்துவிட்டார். அவருக்கு முன்பாகவே அவருடைய படுக்கையும் வந்துவிட்டது. அதாவது, ஆதிசேஷன்... பலராமனாக முன்பே வந்துவிட்டான்.

வீட்டில், எவ்வளவு விருந்தாளிகள் வந்தாலும், நமக்கான படுக்கையை மட்டும் விட்டுக்கொடுக்கமாட்டோம், அல்லவா?! அதேபோல், தனக்கான படுக்கையின்றி ஸ்ரீமந் நாராயணன் இருந்ததே இல்லை.

'ஸ்ரீலட்சுமணனைவிட்டு ஒருபோதும் பிரியமாட்டேன்’ என்பது ஸ்ரீராம வாக்கியம். இங்கே... கிருஷ்ணாவதாரத்தில், பலராமனாக அவதரித்த ஸ்ரீஆதிசேஷன், அங்கே... ஸ்ரீராமாவதாரத்தில் ஸ்ரீலட்சுமண னாகப் பிறப்பெடுத்தார் அல்லவா!

பட்டாபிஷேகம் முடிந்து, புஷ்பக விமானத்தில் ஏறிச் செல்ல யத்தனித்தார் ஸ்ரீராமபிரான். அப்போது விபீஷணன் அவரிடம், ''ஸ்ரீராமா, பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் இருந்தாய். போதாக்குறைக்கு ஸ்ரீசீதாபிராட்டியாரை பத்து மாதங்கள் வரை பிரிந்திருந்தாய். உனக்குத்தான் எத்தனைக் கஷ்டங்கள்; எத்தனைத் துக்கங்கள். இந்த ஊர், கோலாகலங்கள் நிறைந்த ஊர். கொண் டாட்டங்களுக்குப் பஞ்சமில்லாத நகரம். இங்கே, ஆட்டபாட்டங்களுக்குக் குறைவே இல்லை. சந்தோஷங் களுக்கும் மகிழ்ச்சிக்கும் இம்மியளவும் குறைவிருக்காது. மனம் முழுவதும் சோகமும் அயர்ச்சியுமாக இருந்தவன் நீ. சில நாட்கள் இங்கே தங்கி, அத்தனை குதூகலங்களையும் கண்ணாரக் கண்டால், உன் மனம் லேசாகும். எனவே, ஒரு நான்கு நாட்களுக்கு இங்கே தங்கிச் செல்லேன் ராமா!'' என்றாராம்.

அனைத்தையும் கேட்ட ஸ்ரீராமர், ''என்னுடைய அடுத்த வேளைக் குளியல், பரதனுடன்தான்!'' என்றாராம். ஏன் அப்படிச் சொன்னார்? ஸ்ரீலட்சுமணர் ஆதிசேஷன் என்றால், ஸ்ரீபரதன் பாஞ்சஜன்யம்.

லட்சுமணர் இன்றிப் படுக்கையில்லை; சங்கு இல்லா மல் தீர்த்தமாடுதல் இல்லை.

ஆக, அவதாரமும் நோக்கமும் திருநாமமும்தான் வெவ்வேறு! இங்கிருப்பவரே அங்கிருக்கிறார்; அங்கிருப்பவரே இங்கிருக்கிறார்.

அரங்கனைத் தவிர வேறு எந்தப் பெருமாளையும் பாடாதவர் திருப்பாணாழ்வார். அவர், ஸ்ரீரங்கம் திவ்விய தேசத்துக்கு வந்து ஸ்ரீஅரங்கனைக் கண் குளிரத் தரிசித்துப் பாடினார். தனது பாசுரத்தில், திருவேங்கடநாதனாக நின்றவன், இங்கே திருவரங் கத்தில் சயனித்திருக்கிறான் என்று பாடுகிறார்.

நம் வீட்டுக்கு எவரேனும் வந்தால், 'எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்போம்தானே?! திருப்பா ணாழ்வாரே தனக்குள் கேட்டுக்கொண்டு, தானே பதில் சொல்லியிருக்கிறார். இந்த அரங்கன் என்பவன் எங்கிருந்து வந்தவனாம்? திருவேங்கடத்தில் இருந்து வந்தவன். அங்கே எப்படியிருந்தானாம்? அங்கு நின்ற கோலத்தில் இருப்பவன், இங்கு சயனித்தபடி இருக்கிறான்!

பழசை மறக்காமல் இருப்பது ஆழ்வார் மட்டும் தானா? நம் கிருஷ்ணபரமாத்மாவும் பழசை மறக்காமல், தந்தையை எப்போதும் நினைத்தபடி, வசுதேவர் மீது அளப்பரிய அன்பைக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு 'வசுமனஹா’ என்று திருநாமம் உண்டானது. அதாவது, தந்தையான வசுதேவரை மனத்தில் வைத்திருப்பவன் என்று அர்த்தம்!

இதையெல்லாம் அறிந்த பராசரபட்டர், சற்றே கேலியும் கிண்டலுமாகச் சில விஷயங்களைப் பார்க்கிறார்.

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

மாமனார் வீட்டுக்குச் சென்றிருக்கிற மாப்பிள்ளை கள் சுகவாசிகள். தலைதீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குச் செல்லும் மாப்பிள்ளை குறித்த ஜோக்கு கள் அள்ள அள்ளக் குறையாமல், படிக்கப் படிக்கத் திகட்டாமல் இன்றைக்கும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன.

மாமனார் வீட்டுக்கும் மாப்பிள்ளைக்கும் உண்டான உறவும் நெருக்கமும் ஏதோ இன்றைக்கு நேற்றைக்கான விஷயம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். திருப்பாற்கடல் என்பது ஸ்ரீதேவித் தாயாரின் ஜென்ம பூமி. அதாவது திருமாலின் மாமனார் வீடு. அங்கே... எவ்வளவு ஒய்யாரமாக, உல்லாசமாக, சயனித்திருக்கிறார் பரந்தாமன்!

இந்தப் பரந்தாமன் மட்டுமா... பரமேஸ்வரன் குடிகொண்டிருக்கிற ஹிமாச்சலமும் உமையவளின் தந்தை, அதாவது சிவனாரின் மாமனார் வீடாயிற்றே?!

பூமியில், ஸ்ரீவில்லிப்புத்தூரைப் பாருங்கள். பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள், அந்த அரங்கனையே மனதுள் வரித்துக் காதலித்தாள்; அவனே எனக்கு மணாளன் எனப் பூரித்தாள். அதற்காக, மாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்துக்குச் சென்றாளா என்ன? ஆண்டாள் இருந்த இடத்துக்கே, அதாவது பெரியாழ்வாரின் வீட்டுக்கே வந்துவிட்டாரே ரங்கமன்னாராக!  

இன்றைக்கும், அந்தத் தலத்தில் ஸ்ரீவடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள்- ஸ்ரீரங்கமன்னார் ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன. அவற்றில் ஸ்ரீரங்கமன்னாரின் சந்நிதியைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள். அந்தச் சந்நிதியின் சாளரமும் அமைப் பும் மற்ற கோயிலைப் போலவோ, சந்நிதியைப் போலவே இருக்காது; வீடுகளில் இருப்பது போலவே காட்சி தரும். ஏனென்றால், அது பெரியாழ்வாரின் வீடு; ஸ்ரீஆண்டாள் தவழ்ந்து விளையாடிய இல்லம். அதாவது, ஸ்ரீரங்கமன்னாருடைய மாமனார் வீடு!

பெரியாழ்வாரை மாமனாராகப் பெற்றுப் பெருமை கொண்டார் திருமால். அதேபோல், மாப்பிள்ளையாகி, பெரியாழ்வாருக்கும் பெரும்பேறு தந்தருளினார்.

மாமனார் வீட்டை விடுங்கள்; பெற்றோரையே அதாவது வசுதேவரையே மனதுள் நினைத்துக் கொண்டிருக்கிற ஸ்ரீகண்ணனைப் பார்ப்போம்.

பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென சாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தான். உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமென இரண்டும் கலந்த உணர்வில், மூன்று பேரும் இருந்தார்கள்.

இந்தப் பத்து வருடங்களில், எத்தனை முறை சிரித்திருப்பாய்? எத்தனைப் பேரை உன்னுடைய குறும்புகளால் சிரிக்க வைத்தி ருப்பாய்? உன்னையும் உன் அழகையும் பார்த்ததில், எத்தனை பேரின் துக்கங்கள் பறந்தோடி யிருக்கும்? ஆனால், வெளியில் சிரித்துக்கொண்டு, குறும்புகள் செய்து வலம் வந்தாலும், நீ உள்ளுக்குள் அழுதாய் அல்லவா! பெற்றோரைப் பிரிந்திருக்கிற வேதனையில் கதறினாய்தானே?! உள்ளுக்குள் நீ அழுத அழுகையை எவர் அறிவார்? கீதையில், அர்ஜுனனிடம்... ''என்னுடைய ஆதங்கமெல்லாம், என்ன பிறந்து என்ன... என்னை எவரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையே என்பதுதான்! 700 ஸ்லோகங்கள் கேட்ட நீயே என்னைப் புரிந்துகொள்ளாதபோது, மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?'' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

சாரதியாக, தூதனாக, கையாளாக என்று எத்தனை இறங்கி வந்து பணி செய்திருக்கிறான் ஸ்ரீகண்ணன்! அவனைப் புரிந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தால்... நமக்காகவும் வருவான் ஸ்ரீகண்ணன். அழகுக் கண்ணனை ஆராதியுங்கள்; தூதனாக, கையாளாக, சாரதியாக உங்கள் வீட்டுக்கும் வருவான் ஸ்ரீகண்ணன்!

- இன்னும் கேட்போம்