மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 89

தசாவதார திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தசாவதார திருத்தலங்கள்! ( தசாவதார திருத்தலங்கள்! )

தசாவதார திருத்தலங்கள்! தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

ஸ்ரீமத் பகவத் கீதை உபதேசிப்பது எதை? பக்தியையா, ஞானத்தையா, தியானத்தையா, கர்மத்தையா? பகவான் கிருஷ்ணனின் உபதேசம் ஒட்டுமொத்த மனித தர்மத்தையும் போதிக்கிறது என்பார்கள் பெரியோர்கள்.

'தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ எனத் துவங்கும் கீதோபதேசம், 'த்ருவா நீதிர் மதிர் மம:’ என நிறைவுறுகிறது. ஈற்றடியின் கடைசிச் சொல்லையும், முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் இணைத்தால் வருவது 'மம தர்ம’. அப்படியென்றால்?! 'உனது உண்மையான தர்மம்’ என்று பொருள். இதை விளக்கவே இறை, மனிதனாக அவதரித்து வந்து மனித தர்மத்தைச் செயல்படுத்திக் காட்டியது!

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் இப்படிப் பூர்த்தியான பிறகு இந்தப் பூவுலகு எப்படி இருந்தது என்பதையும், கலியுகத்தின் தோஷங்களையும் சுகமுனிவரின் வாக்காக நமக்கு விவரிக்கும் ஸ்ரீமத் பாகவதம், கலியில் ஒரு நன்மை உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆமாம்! கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதா யுகத்தில் கர்மானுஷ்டானங்களாலும், துவாபர  யுகத்தில் பகவத் சேவையாலும் உண்டாகும் நன்மைகள், கலியுகத்தில் இறை நாமத்தை உச்சரிப்பதால் பெறலாம் என்று அறிவுறுத்துகிறது.

தசாவதார திருத்தலங்கள்! - 89

அதுமட்டுமா? 'எவனொருவன் எனது அவதாரங்களின் மேன்மையை அறிகிறானோ, அவன் மீண்டும் பிறப்பதில்லை. அதாவது, முக்தி அடைவது உறுதி!’ என்கிறது கீதை. இப்படியான மேன்மையைப் பெற, இறை நாம சங்கீர்த்தனம் உதவும்.

இறைவனுடனான தொடர்பால், முக்தி தரும் வல்லமை சில தலங்களுக்கும் உண்டு. அவ்வகையில் மிக மேன்மை பெற்றது துவாரகை.

மோட்ச தலங்களில் ஒன்று. பகவான் கண்ணன், ஆட்சி செய்த தலம். 'அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ எனக் கண்ணனாலேயே கொண்டாடப்பட்ட திருத்தலம்! துவாரகையின் பிரபாவத்தால் புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள் கூட, முக்தி அடையுமாம். எனில், அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு முக்தி உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அதுமட்டுமா? துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும்கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்க ளிலிருந்து விடுபட்டு, சொர்க்கத்தை அடையும். இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவிகளுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம்.

துவாரகை என்றால், கோமதி துவாரகையை யும், பேட் துவாரகையையும் குறிக்கும். பஞ்ச துவாரகை தரிசனம் என்பது பண்டைய காலத்தில் வழக்கத்தில் இல்லை.  ஸ்ரீகிருஷ்ண தரிசனத்தின் மகிமையை உணர்ந்து, துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட இன்னும் சில தலங்களையும் சேர்த்து 'பஞ்ச துவாரகைகள்’ என்று சிறப்பித்துள்ளார்கள் பெரியோர்கள்.

அவை கோமதி துவாரகா, பேட் துவாரகா, டாகோர் துவாரகா, ஸ்ரீநாத துவாரகா மற்றும் காங்க்ரொலி துவாரகா. இவற்றில் முதல் மூன்று தலங்கள் குஜராத்திலும், மற்றவை ராஜஸ்தான் மாநிலத்திலும் அமைந்துள்ளன.

தமிழகத்தில் இருந்து பஞ்ச துவாரகை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், குஜராத்  மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் துவக்குவது எளிதாக இருக்கும்.

தசாவதார திருத்தலங்கள்! - 89

அகமதாபாத்தில் இருந்து பரோடா செல்லும் வழியில், நடியாத் எனும் ஊருக்கு முன்னதாக அமைந்துள்ளது, டாகோர் நகரம். இங்கு அருள்புரியும் இறைவனின் திருநாமம் ரணசோட் ராய். இந்தத் திருப்பெயருக்கு, 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்’ என்று அர்த்தம்.

இங்கு அருள்புரிவது துவாரகாபுரி கிருஷ்ணன் என்பார்கள். அங்குள்ள மூல மூர்த்தியை பக்தர் ஒருவர் எடுத்து வந்து ஸ்தாபித்ததாக தலபுராணம் சொல்கிறது.

எனில், துவாரகையில் இப்போது அருளும் அர்ச்சாவதார மூர்த்தி அங்கு குடியேறியது எப்படி? அவரை அங்கு பிரதிஷ்டை செய்தது யார்? வாருங்கள்... அதுபற்றி முதலில் தெரிந்து கொண்டு, பிறகு டாகோர் கோயில் கதையைத் தெரிந்துகொள்ளலாம்.

கோமதி துவாரகையும், பேட் துவாரகையும் சேர்ந்து துவாரகாபுரி எனப்படும். இரண்டுக்கும் நடுவே இன்றைக்கும் கடல் அமைந்துள்ளது. கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 30 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!

பக்தியில் சிறந்த அடியவர் ஒருவரால் கோமதி துவாரகையின் மூல மூர்த்தி, டாகோருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, ருக்மிணிதேவி பூஜித்த மூர்த்தமானது, லாட்வா கிராமத்தின் குளத்தில் கிடைத்தது. அதையே திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார்களாம்.

ஒருமுறை துர்வாச முனிவர் துவாரகைக்கு வந்தபோது, காரணமே இல்லாமல், 'கண்ண னைப் பிரிவாய்’ என ருக்மிணிக்குச் சாபம் கொடுத்தாராம்.

தசாவதார திருத்தலங்கள்! - 89

இதனால் வருந்திய ருக்மிணிதேவியிடம், 'இந்த மூர்த்தத்தில் நான் உறைந்துள்ளேன். இதனை அனுதினமும் பூஜித்து வா’ என மூர்த்தம் ஒன்றைக் கொடுத்தாராம் ஸ்ரீகிருஷ்ணர்.

அந்த மூர்த்தமே, திருக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனை, துவாரகையில் இன்றைக்கும் தரிசிக்கலாம்!

இந்த ஆலயத்தை, கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபன் அமைத்ததாகச் சொல்வர். துர்வாசரின் சாபம் காரணமாக, துவாரகையில் இருந்து ஓகா செல்லும் வழியில், தனிக்கோயிலில் காட்சி தருகிறாள் ஸ்ரீருக்மிணிதேவி. துவாரகைக் கோயிலின் துவஜஸ்தம்பம் (கொடிமரம்), உலகில் மிகப் பெரியது. ஒருகாலத்தில், 'குசஸ் தலீ’ என அழைக்கப்பட்ட இந்த ஊர், கண்ணனின் பேரருளால் மோட்ச துவாரமாகச் சொல்லப் பட்டு, பிறகு துவாரகை என்றானதாகச் சொல்வார்கள்.

இனி, டாகோர் கிருஷ்ணனின் திருக்கதையை அறிவோம்.

ண்ணன் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில், அந்த நகரின் மீது 18 முறை படை யெடுத்தான் ஜராசந்தன். ஒவ்வொரு முறையும் இவன் தனது படைகளை இழந்ததுதான் மிச்சம்!

கடைசி யுத்தத்துக்கு முந்தைய காலகட்டத்தில், வேறொரு பிரச்னையும் காலயவனன் எனும் தீயவன் வடிவில் வந்தது. யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான் கால யவனன். உடனே, பலராமனுடன் ஆலோசித்த கண்ணன், கடலின் நடுவே 12 யோசனை அளவுள்ள அரணையும், துவாரகை நகரையும் நிர்மாணித்தார். பிறகு, தமது வல்லமையால், மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார்.

பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராம ருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட்டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனன், ஸ்ரீகிருஷ்ணரைப் பின் தொடர்ந்தான்.

வெகுதூரம் சென்ற கண்ணன், இறுதியில் ஒரு மலைக் குகைக்குள் சென்று மறைந்தார். அவரைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த கால யவனன், அங்கே படுத்திருந்த நபரைக் கண்ணன் என்று கருதி, கோபத்துடன் உதைத்தான். அந்த நபர் விழித்தெழுந்து பார்த்ததும், கால யவனன் எரிந்து சாம்பலானான். அந்த நபர்... முசுகுந்தன்; இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன். போர் ஒன்றில் தேவர்களுக்கு உதவியதால், அவர்களிடமிருந்து ஒரு வரம் பெற்றிருந்தார் முசுகுந்தன்.

வெகுகாலம் உறங்காமல் இருந்த முசுகுந்தன், நன்கு உறங்குவதற்கு ஏற்றவாறு ஆள் அரவமற்ற ஓர் இடத்தைக் காட்டும்படி வேண்டினார். தேவர்களும் இந்தக் குகையைக் காட்டி, ''நீங்கள் இங்கே படுத்துக்கொள்ளலாம். உங்களை எவரேனும் எழுப்பினால், நீங்கள் எழுந்து பார்த்ததும், அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள்!'' என வரமளித்தனர். முசுகுந்தன் பெற்ற அந்த வரத்தை, கால யவனனை அழிக்கப் பயன் படுத்திக்கொண்டார் பகவான். ஆக, கால யவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்ததாம்.

கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, டாகோர் துவாரகையில் அருள்கிறார் என்றும், அதற்குக் காரணம் பக்தர் ஒருவர் என்றும் பார்த்தோம் அல்லவா? அவர் யார் தெரியுமா?

(அடுத்த இதழில் நிறைவுறும்)