கேள்வி-பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
##~## |
? நிமிடத்துக்கு நிமிடம் மாற்றத்தைச் சந்திக்கும் இன்றைய நவீன யுகத்துக்கு, ஜோதிடம் - புராணங்கள் எல்லாம் பொருந்தாதவை. அவை, நமது முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுத்தும்; நம்மைப் பல வருடங்களுக்கு பின்தங்கச் செய்துவிடும் என்கிறார்கள் நண்பர்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அதேநேரம்... ஜோதிடம் முதலான நமது ஞானப் பொக்கிஷங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக தகுந்த பதிலளிக்கவும் இயலவில்லை. நீங்கள் சொல்லுங்கள்... தற்காலத்துக்கு, ஜோதிடம் முதலானவை அவசியம்தானா?
- கே. அருணாசலம், நாமக்கல்
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல், நெருப்பு ஆகிய அத்தனையும் ஒளிப்பிழம்பை உமிழும் தன்மை உடையன. ஒளி வடிவான பரம்பொருளில் இருந்து, இவை ஒளி பெற்று மிளிர்கின்றன. சூரிய- சந்திரர்களிடம் இருந்து மற்ற கிரகங்கள் ஒளி பெற்று, தங்களது செயல்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றன. எங்கு ஓளி இருந்தாலும் அது பரம்பொருளின் அம்சம்தான்.
ஒரு கோணத்தில் ஆராய்ந்தால், பரம்பொருள், கிரகங்களைக் கருவியாகக் கையாண்டு அடக்கவும் அணைக்கவும் செய்கிறார் என்று சொல்லலாம். ஆன்மா பரம்பொருள். ஆனாலும், இயங்கும் உடலானது தாய்-தந்தையிடம் இருந்து உருப்பெற்றவை. கர்மவினைக்கு உகந்த பலனை பாங்காக அளிக்க, கிரகத்தின் இணைப்பை பயன்படுத்துகிறார். பலனை நிறைவேற்றத் துடிக்கும் கர்மவினையானது அறவே அகன்றால், கிரகங்களால் தண்டிக்க இயலாது.
? எனில், கிரக வழிபாடுகள் எல்லாம் எதற்காக?
கிரகங்களுடன் இணைந்த காலம், கர்மவினையை அனுபவிக்க வைக்கும். கிரகங்களோ, காலமோ தன்னிச்சையாகச் செயல்படாது. கர்மவினையின் தரத்துக்கு உகந்தவாறு, பலனை ஆன்மாவுடன் இணைந்த மனத்தில் இணைப்பதே அவற்றின் வேலை. காலம் அல்லது கிரகங்களை அடிபணிந்து மன்றாடினாலும், அவை கர்மவினையை மாற்றியமைக்காது. கர்மவினையானது நமது சேமிப்பு. நாம்தான் அதை அனுபவித்துக் கரைக்க வேண்டும்.

கர்மவினையின் தூண்டுதலில் சிந்தனை தடைப்பட்ட மனமானது, துயரம் தாங்க முடியாமல் வழிபாட்டில் இணைந்துவிடுகிறது. வழிபாட்டில் மூழ்கிய மனம், துயரம் இருந்தாலும் அதை உணராது. அப்போது, கர்மவினை முயற்சி செய்தும் பலிக்காமல் முடங்கிவிடும். வழிபாடு முனைப்புடன் தொடரும்போது, கர்மவினை சக்தி இழந்து கரைந்துவிடும். இப்படி, மனம் துயரத்தை மறந்து வழிபாட்டில் லயிக்கும் வேளையில் கர்மவினை கரைந்துவிடுவதை, கிரகத்தின் அருளால் கிடைத்த பலன் என்று சொல்வோம்.
முடங்கிய சிந்தனையை உசுப்பிவிட்டு, ஒருநிலைப்படுத்தி துயரத்தின் தொடர்பை அறுபடச் செய்தது, கிரக வழிபாடு. மனத்தின் தொடர்பற்ற எந்த வழிபாடும் பலனளிக்காது. ஏனெனில், கர்மவினையின் துயரத்தில் இருந்து மனம்தான் விடுபட வேண்டும். மனத்தை கிரகங்களுடன் லயிக்கவைத்தால் மட்டுமே விடு படும். வழிபாட்டில் இறங்காமலேயே மனத்தை கிரகங்களோடு இணைக்கும் தகுதி இருந்தால், கர்மவினையின் துயரம் அறுபட்டுவிடும்.
? ஜோதிடத்தை ஏற்றால் முற்பிறவி, கர்மவினை போன்ற தத்துவங்களையும் ஏற்கவேண்டும். பெரும் பாலானோர் அதை ஏற்றுக்கொள்வது இல்லையே?
கர்மவினை என்ற தத்துவம் ஏற்கப்படா விட்டால், ஜோதிடத்துக்கு வேலை இல்லை. மறுபிறவி இல்லை என்று ஒரு வாதத்துக்காக ஏற்றாலும், மனத்தில் உதயமாகும் விபரீத சிந்தனைக்குச் சான்று சொல்லவேண்டிய பொறுப்பு உண்டு. அத்தனை தர்சனங்களும் மறுபிறவியை மறுக்கவில்லை. அத்தனை தர்சனக்காரர்களும் உயர்ந்த சிந்தனையாளர்கள். காரணம் தெரியாத துயரத்துக்குக் கர்மவினை காரணமாவது பொருந்தும். இதை, அறிவியல் நிபுணர்களும் நிர்பந்தமாக ஏற்கவேண்டி வரும். ஏற்காவிட்டால் அறிவியல் தகுதி இழந்துவிடும். வலுவில்லாத காரணத்தை ஒட்டவைத்து வெற்றியடைய முற்பட்டால், அறிவியல் மூட நம்பிக்கையாக மாறிவிடும்.
? ஆனால், ஜோதிடத்தை மட்டுமின்றி கடவுள் தத்துவத்தையே மூடநம்பிக்கை என விளிக்கும் விமர்சனங்களுக்கு பதில் என்ன?
புலப்படும் பொருட்கள் அத்தனையும் மறையும் இயல்பை உடையன. கண்ணுக்குப் புலப்படாத பொருள் ஒன்று இருக்கிறது. அது மறையாமல் நிரந்தரமாக இருக்கும். அதைப் பரம்பொருள், கடவுள் என்று சொல்லிச் சுட்டிக்காட்டுவோம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். அந்த மெய்ப்பொருளை வேத ஒலிகளால் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.

ஹிரண்யசசிபு ஓர் அறிவியல்வாதி. புலப்படும் பொருளை மட்டும் இருப்பதாக ஏற்பவன். புலப்படாத பொருளை 'இல்லை’ என்று சொல்பவன். 'ஹிரண்யகசிபு இருக்கிறான், புலப்படுகிறான். ஆகையால், 'ஹிரண்யாய நம;’ எனச் சொல்’ என்று மகனைப் பணித்தான். பிரகலாதனுக்குப் புலப்படும் பொருள் மறைந்துவிடும். மறையாத பொருள்- மறையில் மிளிருபவன்; ஹரி. அவன் புலப்படாதவன். அவன்தான் உண்மை; இருப்பவன். அவனைத்தான் வணங்க வேண்டும் என்று நாராயணன் நாமத்தை எடுத்துரைத்தான். மூட நம்பிக்கையில் மூழ்கிய ஹிரண்யகசிபு, 'மறையில் மறைந்த பொருளைக் காட்டு’ என்றான். அழியாப் பொருள் தோன்றியதும் அழியும் பொருள் அகன்றது. ஹிரண்யகசிபு மறைந்தான்.
கண்கள் எதையும் பார்ப்பதில்லை. மனம்தான் பார்க்கும். மனம் புலப்படாதவனைப் பார்க்கும். புலன்கள் பார்க்கும் பொருளை, ஆராயாமல் உண்மை என்று ஏற்பவன், மனத்தெளிவை இழந்தவன் ஆவான். அவனால் ஒருநாளும் கடவுளை உணர இயலாது. அவனது நோக்கில், 'இறைவன் இல்லை’ என்றுதான் சொல்ல இயலும். அவனிடம் அனுதாபம் ஏற்படவேண்டுமே தவிர, ஆத்திரம் ஏற்படக்கூடாது.
? ஏன் அப்படி?
பாலை சூடாக்கி ஆறிய பிறகு உறை குத்தினால், தயிராக மாறும். தயிரைக் கடைந்து சூடாக்கினால் வெண்ணெய் உருவாகும். வெண்ணெயைக் காய்ச்சினால் நெய்யாக உருவாகும். அதையும் காய்ச்சினால் 'கசண்டு’ மிஞ்சும். அதை நாம் ஏற்பது இல்லை. முறத்தில் தானியத்தைப் புடைத்தால், சாரமில்லாதது வெளியேறிவிடும். சல்லடையில் சலித்தால் சாரமாக இருப்பது வெளியேறும். உபயோகம் இல்லாத மிச்சத்தை உபயோகப்படும் பொருளோடு இணைப்பது இல்லை; ஒதுக்கிவிடுவோம். அவை வீணாவதைப் பார்த்து கவலைப்படுவது இல்லை.
புலப்படாதவற்றையும் அறிந்துகொள்ளவே ஆறாவது அறிவை படைப்பில் சேர்த்து வைத்திருக்கிறது இயற்கை. அதைப் பயன் படுத்தாதவர்களைப் பார்த்து நாம் கவலைப்படக் கூடாது. பயிரில் பதரும் உண்டு. சிலவற்றை அறவே ஒதுக்க இயலாது. பதரைப் பார்த்து பயிரை அடையாளம் காணலாம். அறிவியல்வாதிகளைப் பார்த்து ஆன்மிகவாதிகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்!
'எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்’ என்கிறது ஸனாதனம். அவர்களும் கடவுள் அருள் பெற்று இன்புற்று இருக்கவேண்டும் என்று மெய்ஞ்ஞானிகள் அவர்களை தங்களோடு அழைத்துச் செல்வார்கள். பகை இருக்காது; பரிவு இருக்கும். அறிவியல்வாதிகளின் பாசாங்கு, சிந்தனையாளர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஒருநாள் மயக்கத்தில் இருந்து தெளிவுபெற்று, தங்களின் கர்ம வினையைக் கரைக்க ஜோதிடத்துடன் ஒன்றிவிடுவார்கள். அவர்களில் முடங்கிக் கிடந்த ஆறாவது அறிவும் விழித்தெழுந்து செயல்பட்டுவிடும்.
? இப்படியான ஜோதிட மறுப்பு கருத்துக்கள் அதிகரிக்க என்ன காரணம்?
வலுவான சிந்தனையைப் பெறாதவர்கள், மூளைச்சலவையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வாய்ப்பு உண்டு. உடல் வளர்ச்சியோடு இணைந்த உள்ள வளர்ச்சியை பாங்காகப் பெற்றவர்கள் மட்டுமே எது சரி, எது தவறு என்ற விவேகத்தைப் பெறுவார்கள். அவர்கள் மனத்தில் ஜோதிடத்தின் ஒளி வீசும். ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான தேஜஸ்ஸில் இருந்து உருப்பெற்றது ஜோதிடம். ஒளி இருட்டை விரட்டிவிடும்.
இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட முடியாது. உலகளாவிய மனித சிந்தனையின் எழுச்சியானது விஞ்ஞானத் தகவல்களின் துணையோடு புதிய உலகைப் படைத்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. 'எதிலும் பற்றற்ற மனம் இறைவனோடு ஒன்றினால் ஆனந்தத்தில் மூழ்கிவிடும்’ என்ற வாதத்தை முறியடித்துவிட்டது இன்றைய விஞ்ஞானம். பற்றோடு மகிழ்ச்சியை உணர்கிறோம்.
? அப்படியென்ன மகிழ்ச்சியைத் தந்துவிட்டன, இந்த நவீன யுகமும் விஞ்ஞானமும்?
இன்றையச் சூழலில் ஜோதிட சிந்தனைகள் யாவும் மனச்சுமையை ஏற்றி ஆயாசத்தையே அளிக்கின்றன. செவ்வாய் தோஷத்தைப் பார்த்து எவரும் நடுங்கத் தேவையில்லை. கணவன்- மனைவி இருவரில் ஒருவர் மறைந்தால், புதுத் திருமணத்தில் இணையலாம். குழந்தைகள் இருந்தாலும் சுமையாக இருக்காது. மூன்றரை வயதுக்குப் பிறகு அவர்களின் பாதுகாப்பை பள்ளிகள் ஏற்றுக்கொள்ளும். பெற்றோரை முதியோர் இல்லங்கள் பராமரிக்கும். உடம்புக்கு ஏதேனும் வந்தால், மருத்துவமனை வரவேற்கும். குழந்தை இல்லையே என்று ஏங்கவேண்டாம். விந்து வங்கியை அணுகி மழலையைப் பெற்று விடலாம். நாற்றுப் பாவுவது ஓரிடம், பறித்து நடுவது வேறிடம் என்று முன்னரே உண்டு. இக்கட்டான சூழலில் நாற்றங்காலை விலைக்கு வாங்குவதும் உண்டு!
அதுமட்டுமா? வீடு வாய்க்குமா என்ற கவலையும் வேண்டாம். பொருளாதாரத்துக்கு உகந்த வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் எந்த நேரத்திலும் கிடைக்கும். மரண பயம் இல்லை. புது மருத்துவம் ஆயுளை நீட்டித் தரும். பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழிலை மனிதன் ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அரக்கர்கள் மூன்று உலகங்களையும் தன் வசம் ஆக்கினார்கள் என்று ஏட்டில் பார்த்தோம். ஆனால், மனித சிந்தனை மூவுலகையும் தன்னில் அடக்கி ஆள்வதைப் பார்க்கப்போகிறோம்.
? அது சாத்தியம் ஆகுமா என்ன?
சாத்தியம்தான்! கலப்புத் திருமணத்தை வரவேற்கும் நமக்கு, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பஞ்சம் இல்லை. குரு பலம் வந்துள்ளதா என்ற கவலை வேண்டாம். ஜாதகப்பரிவர்த்தனை கேந்திரங்கள் (திருமண மையங்கள்) திருமணத்தை தடங்கலின்றி முடித்துவைக்கும். விருப்பமான காய்- கனிகளைப் பார்த்துப் பார்த்து வாங்கும் வசதி படைத்த அங்காடிகள் போன்று, ஆண்- பெண் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து உதவும் ஸ்தாபனங்களும் ஏராளம்.
பொருளாதாரம் செழிக்குமா என்ற கவலை வேண்டாம். சமுதாயம் லாட்டரிச் சீட்டு நடத்துகிறது. பல கூப்பன்கள் வாங்கினால் பரிசு விழும். தேர்தலில் இரண்டு தொகுதியில் நின்றால் ஒன்றில் வெற்றி இருக்கும். வங்கிகள் கடன் வழங்குவதில் தாராளமாக இருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் கடன் வாங்கித்தான் முன்னேறுகின்றன. கூப்பிட்டுக் கூப்பிட்டு கடன் தரும் வங்கிகளும் உண்டு. வீடுகட்ட கடன், வீட்டை விரிவாக்கக் கடன், திருமணக் கடன், மருத்துவக் கடன், ஆயுள் பாதுகாப்புத் திட்டம், விபத்தில் சிக்கினாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். வண்டி விபத்தில் சிக்கினாலும் காப்பீட்டுத் தொகையில் புது வண்டி கிடைக்கும்.

புதுப்புது ஆடை- ஆபரணங்கள் சேருமா என்றும் கேள்வி எழுப்பத் தேவையில்லை. ஆடை- ஆபரணங்களை மலிவு விலையில் அளிக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஈமச்சடங்குக்கு பையன் ஒத்துழைப்பானா என்று வினா எழுப்பவேண்டாம். கடைசிக் கடமையை நிறைவேற்றுவதற்கு, கடைசி பயண வண்டியுடன் சேவை செய்வதற்கு பல அற நிறுவனங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
தனக்குப் பிறகு முன்னோர் வழிபாட்டில் மகன் ஈடுபடுவானா என்று கவலை வேண்டாம். திலதர்ப்பணபுரியில் தஞ்சம் புகுந்தால் விருப்பம் ஈடேறிவிடும். தகப்பனின் சொத்து கிடைக்குமா என்று கேட்க வேண்டாம். தாங்கள் வாழும் சூழலிலேயே அப்பனின் சொத்து கைக்காசாக மாறி வந்துசேரும். உலகமே வியாபாரமயமான நிலையில், ஏதாவது ஒரு தொழில் உருவாகிவிடும்.
இப்படியிருக்க... சரித்திரம், பூகோளம், ரசாயனம், மருத்துவம், கணினி, பொறியியல், மனவியல், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், ஆன்மிகம் ஆகியவற்றில் திறமை வாய்ந்த சிந்தனையாளர்களும், வானில் வளைய வரும் கிரகங்களை கட்டத்தில் அடைத்து, அதைப் பார்த்துப் பலன் சொல்லும் ஜோதிடரை அணுகி தங்களது வருங்காலத்தை அறிய முற்படுவது விசித்திரமாக இருக்கிறது. ஆக, சிந்தனை வளம் குன்றியவர்களை தன் வலையில் சிக்கவைக்கிறது ஜோதிடம் என்றே சொல்ல வேண்டும். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டால் வினை தீர்ந்துவிடும்.
எல்லா சூழலும் வசதி வாய்ப்புகளுடன் நமக்கு ஏதுவாக இருக்கிறது என்பதற்காக, ஜோதிடம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இயற்கையோடு போராடும் எவரும் வெற்றி கண்டது இல்லை.
? ஆனால், சமீபத்திய இயற்கைச் சீற்றங்களில் எல்லாம் வெகு சீக்கிரம் பாதிப்புகளில் இருந்து விடுபட்டிருக்கிறோமே! இது விஞ்ஞானத்தின் சாதனைதானே?
அப்படிச் சொல்ல முடியாது. இயற்கைச் சீற்றங்கள் அரங்கேறிய பிறகு அதன் பாதிப்புக்கு முதலுதவி அளிக்கிறோமே தவிர, அதை எதிர்த்துப் போராடி முழுமையான வெற்றி காண இயலவில்லையே!
எரிபொருளில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனை, விறகிலிருந்து கரி, எண்ணெய், கியாஸ், மின்சாரம் - இப்படிப் படிப்படியாக மாறி, ஒவ்வொன்றையும் அழித்தாகிவிட்டது. இப்போது, விஞ்ஞானம் தந்த கியாஸ், மின்சாரம் ஆகியன தட்டுப்பாட்டை சந்திக்கும்போது வாழ்க்கை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண இயலவில்லையே!
இப்படித்தான் மனித படைப்புகள் ஒவ்வொன் றும் கடைசியில் அழிவைச் சந்தித்து, வெற்றிடத்தை உருவாக்கி, துயரத்தில் ஆழ்த்தும். விஞ்ஞானம் என்பது இயற்கையில் மறைந்திருக்கும் பொருளை வெளிக்கொண்டு வரும். அவ்வளவுதான். எதையும் புதிதாக உருவாக்காது!
? எனில், இயற்கை சக்திதான் நிரந்தரம் என்கிறீர்களா?
ஆமாம்! சிந்தனைகள் மாற மாற நடைமுறை களும் அதற்கு உகந்தவகையில் மாற்றத்தை அடையும். அது நிரந்தரமல்ல. ஆனால் இயற்கை நிரந்தரம்; அதன் தத்துவம் நிரந்தரம். இயற்கை யோடு இணைந்த வாழ்க்கை முறை பலனளிக்கும். ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்பும்; உணவளித்து முறையாகப் பாதுகாப்பவனை நம்பாது. இப்படித்தான் அனைத்து ஜீவராசிகளும் இயற்கையை நம்பி வாழும் நிலையில், புதிய சிந்தனையானது செயற்கையில் இணைந்து, இயற்கையை எதிர்க்கிறது.
இயற்கையான ஜோதிடத்தின் அறிவுரையை விலக்கி, மாற்று வழியில் விருப்பத்தை நிறை வேற்றும் முயற்சி நிலையான பலனைத் தராது. மின்னல் போல் தோன்றி மறையும் சிந்தனைகளை நம்பிச் செயல்பட்டால் இரண்டும் பறிபோய் விடும். அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிடும்.
இந்திரனோடு மோதிய விஸ்வாமித்திரர், புதிய படைப்பில் ஈடுபட்டார். ஆனால், தோல்வியுற்று இயற்கை தத்துவத்தைச் சரண் அடைந்தார். பண்டைய அரக்கர் குலம் இயற்கையுடன் மோதி நாசமானதை புராணம் விவரிக்கும். அரக்கர்களின் சிந்தனை மனித சிந்தனையில் புகுந்து, விஞ்ஞானப் போர்வையில் இயற்கையை எதிர்க்கும் எண்ணங்களை வளர விட்டு, தன் கையாலேயே தன் கண்ணைக் குத்தவைத்து வேடிக்கைப் பார்க்கிறது. ஆசையை வளர விட்டு, உழைப்பை அழித்து, நுகர்பொருளில் ஈடுபாட்டை வளர்த்து, விட்டில்பூச்சி போல் அழிவைச் சந்திக்க வைக்கிறது.
? சரி... ஜோதிடத்தால் மட்டும் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது?
மனிதன் வாழப் பிறந்தவன்; சாகப் பிறந்தவன் அல்ல. மாறாத சாகாவரம் பெற வேண்டியவன். அவனது பயணம், இயற்கைக்கு மாறாக ஒன்றைப் பிடித்துக்கொண்டு சாவை நோக்கியதாக இருக்கக் கூடாது. அணு கண்டுபிடிப்புகளால் அழிவு பயத்தில் நடுங்கி வாழ்கிறது மனித இனம். புராண கதாபாத்திரங்களின் நடைமுறையை அலசி ஆராய்ந்தால், இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்; செயற்கை ஆபத்தைச் சந்திக்கவைக்கும் என்பது புலனாகும். தூய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும் வேண்டும். அவற்றை விஞ்ஞானம் தராது; ஜோதிடம் தரும்.
உடலை உருவாக்கி படிப்படியாக வளர்த்தது ஐம்பெரும் பூதங்கள். அதில் ஒளி பூதம் (தேஜஸ்) ஜோதிடம். உடம்போடு இணைந்து நல்வழியைக் காட்டும். ஜோதிடத்தைப் படிக்காமலும், தெரிந்து கொள்ளாமலும் விட்டுவிட்டு, சிந்தனையாளர்கள் போன்று விமர்சிப்பதும், ரெவ்யூ செய்வதும் சிறுபிள்ளைத்தனம் ஆகும். பிரளயம் முடித்து படைப்பை ஆரம்பித்த பிரம்மன் நீருக்குப் பிறகு ஜோதிடத்தின் ஆதாரமான சூரியனையும் சந்திரனையும் படைத்தார் என்கிறது வேதம் (சூர்யாசந்திரமஸெளதாதா யதாபூர்வமகல்பயத்) ஜோதிடம் வாழ்க்கையின் கலங்கரை விளக்கம். அது என்றென்றும் நிரந்தரமானது.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
இன்று மனித சிந்தனையில் வெளிவரும் அத்தனைத் தகவல்களும், புராணங்களில் ஆராயப்பட்டு, அந்த தகவல்களுக்கு மனித இனத்துக்கு நன்மை விளைவிக்கும் தகுதி இல்லை என்பதை உணர்ந்து, 18 வித்யாஸ்தானங்களை ஏற்படுத்தி, மனித குலத்துக்கு நிரந்தர பாதுகாப்பு அளித்தார்கள் முனிவர்கள். அதில் ஒன்றுதான் ஜோதிடம் (அங்காளி வேதா:சத்வார:...). ஆறு அங்கங்களில் ஜோதிடம் ஒன்று (சிக்ஷா, வ்யாகரணம், சந்த:நிருக்தம் ஜோதிஷம் ததா). ஆக, முன்னேற்றத்துக்கு உகந்த ஜோதிடத்தை விலக்கி ஏமாறக்கூடாது.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.