சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

குறுக்குவழி தரிசனம்!

கலகல கடைசிப் பக்கம் வீயெஸ்வி, ஓவியம்: சசி

##~##

பைபாஸ் செய்வதில் பெயர்பெற்றவர் அவர். ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும் என்று நினைத்துவிடப் போகிறீர்கள். அதெல்லாம் கிடையாது. கோயில்களில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை பைபாஸ் செய்துவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து முடிப்பதில் வல்லவர்.

டூரிஸ்ட் பஸ் மாதிரி மதுரை, சிதம்பரம், திருப்பதி என்று நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குக் காரை எடுத்துக்கொண்டு புனிதப் பயணம் கிளம்பிவிடுவார் இந்த பக்திமான். போகும் வழியில் பல இடங்களில் டிராஃபிக் ஜாம் இருக்கும். சாலையில் கார்கள் ஊர்ந்து செல்லும். சில சமயம் நகரவே நகராது. நம்மவர் வேறு வழியில்லாமல் இன்ஜினை ஓடவிட்டு (ஏ.சி. ஓட வேண்டுமே!) சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் மட்டும் இந்தப் பொறுமை அவருக்கு இருக்காது. அதிகபட்சம் ஐந்து நிமிடத்துக்குள் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

குறுக்குவழி தரிசனம்!

இப்படி 'குறுக்கு வழி தரிசனம்’ ஏற்பாடு செய்து கொடுக்க, கோயில் இருக்கும் ஊர்களிலெல்லாம் அவருக்கு ஆட்கள் குடியிருக்கிறார்கள். முன்கூட்டியே அவர்களுக்குத் தகவல் சொல்லிவிடுவார். குறிப்பிட்ட இடத்தில், குறித்த நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருப்பார் ஒருவர். கர்ப்ப கிரகம் வரை 'ஐயா’வுக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்து, அழைத்துச் செல்வார். ஏற்கெனவே விஷயம் தெரிந்த குருக்களும், அர்ச்சனையையெல்லாம் கிட்டத்தட்ட முடித்து வைத்திருப்பார். நம்மவர் வந்ததும் முத்தாய்ப்பாக இரண்டு ஃபைனல் மந்திரம் சொல்லிச் சூடம் ஏற்றுவார்.

கொஞ்சம் பெரிய கோயிலாக, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இடமாக இருந்தால், துரித கதியில் தரிசனம் முடிக்க அவரிடம் வேறு டெக்னிக் உண்டு. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வார்டு கவுன்சிலரில் ஆரம்பித்து, மத்திய அமைச்சர் வரை யாரோ ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கிக்கொண்டு கார் ஏறிவிடுவார். சம்பந்தப்பட்ட கோயிலின் நிர்வாக அறங்காவலர் தனது உதவியாளரை அவருடன் அனுப்பி வைத்துப் பரிவட்டம் கட்டும் வரை பக்கத்திலேயே நிற்க வைப்பார்.

'இது மாதிரியான அவசரக்குடுக்கை பக்தர்களுக்கும் கடவுள் அருள்பாலிப்பாரா?’ என்று நான் யோசிப்பதுண்டு.

'கண்டிப்பாக அருள்பாலிப்பார். இறைவன் அப்படிப் பாரபட்சமெல்லாம் காட்டுவதில்லை. ஆனால் என்ன, தரிசனத்துக்காக க்யூவில் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்திருக்கும் மற்ற பக்தர்கள் இவர்களை மனத்துக்குள் வசைபாடிக்கொண்டும், சபித்துக்கொண்டும் இருப்பார்கள். அந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள, இவர் இன்னும் இப்படி எக்ஸ்ட்ராவாக ஏழெட்டுக் கோயில் களுக்குப் போகவேண்டுமாயிருக்கும்!’ என்று பதில் சொன்னது என் உள் மனம்.