##~##

ராஜாதிராஜன் என்று மக்களால் பிரியமாக அழைக்கப்பட்ட மன்னனின் பெயர் சித்ரகேது. மிகச் சிறப்பாக தன் தேசத்தை ஆண்டு வந்த சித்ரகேதுவுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. ஒரு பிள்ளை வேண்டும் என்று அவன் கடவுளை வேண்டிய படியே இருந்தான். பல பெண்களை மணந்தான். ஆனாலும், அவனுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

பல காலம் கழித்து, கடவுள் அருளால், அவனுடைய முதல் மனைவியான கிருதத்துதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையினால் கிருத்தத்துதிக்கு மதிப்பு அதிகமானது. இதனால், அரசன் தங்களைப் புறக்கணித்து, சதா காலமும் அவளோடேயே இருப்பதும், குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருப்பதும் கண்டு எரிச்சலுற்ற அரசனின் மற்ற மனைவிகள் அந்தக் குழந்தைக்கு நஞ்சு கொடுத்துக் கொன்றுவிட்டார்கள். அரசன் கதறித் தவித்தான். குழந்தையின் தாய் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள்.

''எங்கள் வாழ்க்கை இத்தனை கேவலமாகப் போயிற்றே! எங்களைக் காப்பாற்றுபவர் இல்லையா? எங்களைத் தேற்றுவார் இல்லையா? அப்பேர்ப்பட்ட பாவம் என்ன நாங்கள் செய்துவிட்டோம்?'' என்றெல்லாம் அலறினார்கள்.

நாரதரும் ஆங்கீரச மகரிஷியும் அங்கே வந்தார்கள். முனிவர் அவர்கள் இருவரிடமும் மிகப் பிரியமாகவும் ஆறுதலாகவும் பேசினார்.

நாரதர் கதைகள்! - 20

''உலகில் பிறந்தவர் இறப்பது இயற்கை. குழந்தை, வாலிபன், வயதானவன் என்ற தகுதி இல்லாமல் எப்போது  வேண்டுமானா லும் மரணம் வரும் என்பதே இந்த வாழ்வின் சிறப்பு. எதுவும் நிலையில்லை என்பதைக் காண்பிப்பதற்கே இந்த உலகத்தில் இப்படிப் பல்வேறு பருவங்களில் மரணம் நேரிடுகிறது. நிரந்தரமான ஒன்றைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி, நிரந்தரம் இல்லாத இந்த உலகத் தைக் காண்பிப்பதற்காக இந்த மரணம் நேரிடுகிறது. இந்த மரணத்தில் இருந்து புத்தி தெளிவுபட்டு, எது நிரந்தரம் என்ற கேள்வி எழுப்பி, கடவுளுடைய அருளைப் பெறுவாயாக! நிரந்தரமானவன் திருமாலே என்று தெளிவாயாக!'' என்று சொன்னார்.

ஆனால், அரசனுக்கும், அரசிக்கும் சமாதானம் ஆகவில்லை. அவர்கள் தொடர்ந்து வாய்விட்டு அழுதபடி இருந்தார்கள். அவர்களின் அழுகையைத் தாங்கமாட்டாத நாரதர், ஒரு தந்திரம் செய்தார். எதன் மீது பிரியமோ, எது இந்த அழுகைக்கெல்லாம் காரணமோ, எதன் பிரிவை இவர்களால் தாங்க முடிய வில்லையோ அந்தக் குழந்தையைச் சட்டென்று உயிர்ப்பித்தார். அவர்களோடு பேசச் சொன்னார்.

நாரதர் கதைகள்! - 20

''எதற்காக எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தீர்கள்? இன்னும் நான் பல பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கிறது. அதில் ஒரு பிறவி சீக்கிரமே முடிந்தது என்று நிம்மதியாக இருந்தேன். எதற்காக மறுபடியும் நான் இந்த மண்ணுக்கு வர வேண்டும்? இந்தப் பிறவியில் இவர்கள் எனக்குத் தாய்- தந்தை. எனக்கு ஏகப்பட்ட தாயார்களும், தந்தையர்களும் உண்டே! எதற்காக இவர்களிடம் மட்டுமே நான் இருக்க வேண்டும்? இன்னும் பல பிறவிகள்

எடுக்கவேண்டியிருக்கும்போது, நான் மீண்டும் இந்தப் பிறவியிலேயே உழல வேண்டிய அவசியம் என்ன? எனக்கு இவர்கள் முக்கியம் இல்லை. இறந்த பிறகு எனக்கு அடுத்த பிறவியைப் பற்றித்தான் சிந்தனையே தவிர, முடிந்த பிறவியைப் பற்றியோ, அந்தப் பிறவியின் தாய், தந்தை பற்றியோ எனக்கு நெல்முனையளவும் அக்கறை இல்லை. தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்'' என்று அந்தக் குழந்தை மன்றாடியது. பின்பு, மெள்ள மரணமடைந்தது.

சித்ரகேதுவும் அவன் மனைவியும் தெளிவுற்றனர். தங்களுடைய குழந்தையே தங்களை நேசிக்கவில்லை; பிறவியின் பயன் முடிந்துவிட்டது என்று சொல்லி, அடுத்த பிறவிக்குத் தயாராகின்ற புத்தியைக் கொண்டுவிட்டதைப் பார்த்து அவர்கள் வருத்தம் தீர்ந்தார்கள். நாரதருக்கு நன்றி சொன்னார்கள். உலக வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்று புரிந்துகொண்டு, தொடர்ந்து வாழ்ந்தார்கள்.

டுக் காட்டுக்குள் அந்தக் குழந்தை பாதரட்சை அணியாத கால்களோடும், கோமணத்தோடும் நடந்து வந்துகொண்டி ருந்தான். அங்க லட்சணங்கள் அவனை ஒரு அரசகுமாரன் என்று சொல்லின. ஆனால், அவன் முகம் வாடி இருந்தது. இருப்பினும், நடையில் ஓர் உறுதி தெரிந்தது. மிக வேகமாக காட்டின் அடர்ந்த இடத்துக்குப் போக வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவன் நடப்பதாக நாரதருக்குப் பட்டது. அவன் அருகில் வந்ததும், தன் சொரூபத்தை வெளிப்படுத்தினார். அவன் நிமிர்ந்து பார்த்தான்.

கருணை பொங்கும் விழிகளும், சிரிப்பும், கையில் மஹதி என்ற யாழும், உச்சிக் கொண்டையும் மெல்லிய காவி உடையும், நெற்றியில் திருமண்ணும் அணிந்து, ஒரு சங்கீத ரீங்காரத்துடன் அவர் நின்றிருப்பது தெரிந்தது. அவரைப் பார்த்துக் கை கூப்பினான். விழுந்து வணங்கி எழுந்து நின்றான். நாரதர் அவன் காது குளிர திருமாலைப் புகழ்ந்து பாடினார். அவன் தாளம் போட்டான். சிரித்தான். முகத்திலுள்ள கவலைகள் மெள்ள அகன்றன. ''மிக அருமையாகப் பாடுகிறீர்கள்'' என்று பாராட்டினான்.

''நீ யார் குழந்தாய்? இவ்வளவு அடர்ந்த கானகத்தில் தனியாக ஏன் வருகிறாய்? உன் முகம் கவலையாக இருக்கிறதே. என்ன காரணம்? உன்னைப் பற்றிச் சொல்'' என்று கேட்டார். ஆனால், நாரதருக்கு அவனைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. அவன் சாதாரணன் இல்லை என்று புரிந்திருந்தது.

அந்தக் குழந்தை அவரை நோக்கி பேசத் துவங்கினான்... ''என் பெயர் துருவன். என் தகப்பன் உத்தானபாதன். அவர் இந்தத் தேசத்தின் அரசர். என் தந்தைக்கு இரண்டு மனைவியர். என் தாயின் பெயர் சுனீதி. என் சிற்றன்னையின் பெயர் சுருசி. என் தாய் அமைதியானவள். ஈஸ்வரனை எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்பவள். அரசனுக்கு அடங்கி, மிகுந்த பிரியத்துடன் நடப்பவள்.

நாரதர் கதைகள்! - 20

ஆனால், என் சிற்றன்னையோ கொஞ்சம் ஆரவாரமானவள். என் தந்தையைத் தன்னை விட்டு அகலாதிருக்கும்படி இறுக்கமாக வைத்துக் கொண்டிருப்பவள். என் தாய் அவளைக் குறித்து வருத்தப்படுவதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன். 'எதற்கு இப்படிப் புருஷனைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்? என்னுடைய இடத்துக்கு வரவிடாமல் அவரை ஏன் தடுத்து வைத்திருக்கிறாள்?’ என்று கவலைப்படுவாளே தவிர, சிற்றன்னையை ஒருநாளும் அவள் கடிந்துகொண்டதில்லை. 'ஏதோ தெரியாமல் செய்கிறாள். ஒரு நாள் அவளுக்கே தெரிய வரும்’ என்று அமைதியாகச் சொல்லுவாள்.

ஆனால், என் சிற்றன்னையோ என் தாயைப் பற்றிப் பேசும்போது, ''அவளுக்கு ஒன்றும் சாமர்த்தியம் இல்லை. செயல்திறன் போதாது!’ என்றெல்லாம் இழித்துரைப்பாள். அரசரும் தலையாட்டுவார். நான் அதையும் கேட்டிருக்கிறேன். எனக்கு வேதனையாக இருக்கும். என் தாய்க்கு நான் எப்படி மகனோ, அதேபோல என் சிற்றன்னைக்கு உத்தமன் என்று ஒரு மகன் இருந்தான். நல்ல தம்பி. அழகானவன். நல்ல சுறுசுறுப்பு! ஒருநாள், பொன்னூஞ்சலில் அவன் தாயும் என் தந்தையும் அமர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டிருந்தபோது, நான் அருகே போனேன். தந்தையின் மடியில் உத்தமன் உட்கார்ந்திருந் தான். என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கும் உத்தமனைப்போல என் தந்தையின் மடியில் உட்கார வேண்டும் என்று ஆசை எழுந்தது. நான் அருகே போனதும், என் தந்தை ஊஞ்சலை நிறுத்தினார்.

ஆனால், சிற்றன்னையோ ஊஞ்சலை ஆட்டுவதில் குறியாக இருந்தாள். என்னை அருகே வரவிடாமல் வேகமாக ஊஞ்சல் ஆடினாள். நான் என் தந்தையின் மடியில் உட்கார வேண்டும் என்ற என் விருப்பத்தை சிற்றன்னையிடம் தெரிவித்தேன்.

'

நாரதர் கதைகள்! - 20

'உனக்கு அந்த பாக்கியம் இல்லை! என் வயிற்றில் பிறந்ததால், உத்தமன் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்திருக்கிறான். நீ வேறு யார் வயிற்றிலோ பிறந்ததால், தந்தையின் மடியில் உட்காரும் பாக்கியம் உனக்கு இல்லை. நீ உன் தந்தையின் மடியில் உட்கார வேண்டுமென்றால், என் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வா! போய் தவம் செய்’ என்று சொன்னாள்.

அவள் பேச்சு எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. நான் மெள்ள நகர்ந்து, மீண்டும் தந்தையிடம் போக, அவள் என்னைத் தடுத்து நிறுத்தினாள். கையால் என்னைப் புறம் தள்ளினாள். 'போ! போய் என் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று தவம் செய்’ என்று மறுபடியும் சொன்னாள். நான் கீழே விழுந்தேன். எழுந்து நின்றேன். என் தகப்பனோ நான் கீழே விழுந்ததைப் பார்த்துச் சிரித்தபடி நின்றார். ஆனாலும், அவர் மனத்தில் கவலை இருப்பது முகத்தில் தெரிந்தது. அதை மறைக்க இன்னும் பெரிதாய்ச் சிரித்தார்.

எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. நான் அழுதபடியே வீட்டுக்கு வந்தேன். என் தாயைப் பார்த்தவுடன் அழுகை பீறிட்டு வந்தது. எவ்வளவு நல்லவள் என் தாய்! இவளை என் தகப்பன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்று எண்ணினேன். அழுதேன். என் தாய் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்டாள். என்ன வேண்டும் என்று கேட்டாள். நடந்ததைச் சொன்னேன். என் தாய் துக்கப்பட்டாள்.

''உன் சிற்றன்னை சொல்வது சரிதான். நீ என் வயிற்றில் பிறந்ததால்தான் உனக்குக் கிடைக்கவேண்டிய மரியாதைகளும் அரவணைப்புகளும் கிடைக்காமல் போய் விட்டன. அடுத்த ஜென்மத்திலாவது நல்லவர் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று, உன் சிற்றன்னை சொன்னபடி திருமாலை நோக்கித் தவம் செய்'' என்று சொன்னாள். 'திருமால் எப்படி இருப்பார்?’ என்று கேட்டேன். அழகாக விவரித்தாள். 'எங்கு போய் தவம் செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, 'வனத்துக்குப் போய் தவம் செய்’ என்றாள். 'ஏன் வனம் போக வேண்டும்?’ என்று நான் கேட்டபோது, அதற்கும் அவள் தெளிவான காரணங்களைச் சொன்னாள்.

''மனிதக் குரலும், மனித நடமாட்டமும், மனிதர்களால் ஏற்படுத்திய சாமான்கள் செய்யும் சத்தமும் உன்னை மிகவும் கலைக்கும். வனத்தில் இத்தனைச் சத்தம் இருக்காது. விலங்குகளின் சத்தமும் மரங்களின் அசைவும் பெரிய தொந்தரவைத் தந்துவிடாது. எந்த மிருகமும் வராத ஓர் இடத்துக்குப் போய் அமைதியாக உட்கார்ந்துகொண்டு, உள்ளுக் குள்ளே எது நீ என்று தேடிப் பார்த்து, எந்த இடத்தில் நீ இருக்கிறாயோ அந்த இடத்தையே கவனித்துக்கொண்டிருக்க, அந்த இடம் முழுவ தும் இறையருள் நிரம்பும். இறை தரிசனம் கிடைக்கும்’ என்றாள். அவள் சொன்னது எனக்குப் புரிந்தது. அப்படி ஒரு நல்ல இடம் தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறேன்'' என்றான் அவன்.

நாரதர் துயருற்றார். ஒரு சிறு குழந்தைக்கு ஏன் இத்தனை வேதனை என்று மனம் நொந்தார். ''உன் தாய் உன்னைச் சரியான வழியில்தான் அனுப்பியிருக்கிறாள். வனாந்தரமே தவத்துக்கு ஏற்ற இடம். நீ சரியான வனத்துக்கு, சரியான தூரத்துக்கு வந்துவிட்டாய். நானே உனக்கு இங்கு நல்ல இடம் தேர்ந்தெடுத்துத் தருகிறேன்.'' என்று ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சுத்தப் படுத்திக் கொடுத்தார் நாரதர். துருவன் அங்கே உட்கார்ந்தான்.

''உன் தாய் சொன்னபடி, இருதயத்தின் நடுவே எங்கு நீ என்று சப்தம் இருக்கிறதோ, எங்கு நான் என்கிற ஒரு விஷயத்தை உணர்கிறாயோ, அந்த இடத்தில் இறைவனை நிறுத்தி, அழைத்து வா! உன் தவம் உக்கிரமாக ஆக, இறைவன் வந்துவிடுவான். திருமால் கனிவு மிக்கவர். உன்னைப் போன்ற குழந்தை கடுந்தவத்தில் ஈடுபடுவது கண்டு அவர் வருத்தப்பட்டு, விரைவாக உனக்குத் தரிசனம் தருவார்'' என்று சொன்னார் நாரதர்.  

நாரதர் கதைகள்! - 20

எட்டெழுத்து மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, தான் எங்கிருக்கிறோம் என்று விசாரித்து, தன் மனத்தில் போய் உள்ளே அமர்ந்து, எந்த இடத்தில் நான் என்ற எண்ணம் கிளறுகிறதோ அதை ஊன்றிக் கவனித்து, கவனித்த இடத்திலேயே தன் மனத்தைச் செலுத்தி, அந்த இருப்பை வலுப்படுத்தி, அதிலேயே மூழ்கிக் காணாமல் போனான்.

துருவனுடைய தவம் கண்டு தேவர் உலகம் வியந்தது. நாளாக நாளாக, அவனுடைய தவம் உக்கிரம் அடைவது தெரிந்து, அவனைக் கொண்டாடியது. இதற்கு மேல் விட்டால், தேவர் உலகத்துக்குக் கெடுதல் வருமே என்று பதறி, திருமாலிடம் போய் துருவனுக்கு தரிசனம் கொடுங்கள் என்று வேண்டியது.

திருமால் அவன் எதிரே தோன்றினார். மெள்ள அவன் தலையை வருடிவிட்டார். ''எழுந்திரு குழந்தாய்! என்ன வேண்டும்?'' என்று கேட்டார். குழந்தை கண் விழித்தது. திருமாலை நாரதர் போல ஸ்தோத்திரம் செய்து, பலமுறை விழுந்து வணங்கியது.

''என் தந்தையின் மடியில் நான் அமர்வ தற்கு முடியாமல் என் சிற்றன்னை தடுத்தாள். ஆனால், இப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். எனக்கு என்ன தர வேண்டுமோ, அதை நீங்கள் கொடுங்கள். உங்களிடம் இது வேண்டும் என்று கேட்பதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை'' என்று கை கூப்பிச் சொன்னான் துருவன்.

அவன் பணிவு திருமாலை சந்தோஷப் படுத்தியது. அவன் தெளிந்த மனம் திருமாலுக்குப் பிடித்திருந்தது.
''நல்லது. உன் தந்தை விரைவில் மரணம் அடைவார். அப்போது இந்த ராஜ்ஜியத்துக்கு நீ அரசனாவாய். பல நூறு வருடங்கள் இந்த ராஜ்ஜியத்தை நீ திறம்பட அரசாட்சி செய்வாய். அதற்குப் பிறகு, தந்தையினு டைய இருப்பிடம் மட்டுமல்ல, என்னுடைய இருப்பிடமான இந்தப் பிரபஞ்சத்தில், ஒரு மூலையில் நீ நிரந்தரமாக இருப்பாய். தவம் செய்வதன் மும்முரத்தை, உற்சாகத்தை, அவசியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் சுடராகத் திகழ்வாய். உனக்குத் துருவ நட்சத்திரம் என்று பெயர் கிட்டும். துருவ நட்சத்திரத்தைக் கண்கொண்டு பார்க் கிறவர் எல்லோருக்கும் உன் சரிதம் ஞாபகம் வரும். உன் சரிதம், தவம் செய்வது பற்றி அவர்களுக்கு மறைமுகமாக சொல்லிக் கொடுக்கும். தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும். தந்தையின் மடி கேட்டவனுக்குக் கடவுளின் மடியே கிடைத்திருக்கிறது என்பது புரியும். உலகத்தில் உன்னைப் போல பல நூறு துருவர்கள் வரவேண்டும் என்று நீ அங்கே உட்கார்ந்து ஆசிர்வதித்துக் கொண்டிரு!'' என்று சொன்னார்.

துருவன் மிகச் சிறந்தபடி அரசாட்சி செய்து, பிறகு நட்சத்திரமாய் மாறி, நிரந்தரமாய் பூவுலகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நாரதரின் வழிகாட்டல், அவருடைய அன்பு ஓர் அரசிளம் குமரனை நிரந்தரமாக, பிரபஞ்சத்தில் காட்சி அளிப்பவனாக மாற்றியது. நல்ல மனிதருடைய சேர்க்கை சாதாரணமானவரைக்கூட உச்சநிலைக்குக் கொண்டு வந்துவிடும் என்பதற்கு துருவன் கதை ஒரு சாட்சி.

- தொடரும்...