Election bannerElection banner
Published:Updated:

மகத்தான வரங்கள் தரும் மாமரம்!

மண் மணக்கும் தரிசனம்! இ.லோகேஸ்வரி

##~##

ஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். முதலில், நீராடும்மங்கலம் என்று அழைக்கப்பட்டு, பிறகு வழக்குச்சொல்லில் நீடாமங்கலம் ஆகிவிட்ட இந்த ஊருக்கு, யமுனாம்பாள்புரம் என்றொரு பெயரும் உண்டு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், 'யமுனாம்பாபுரி நீ வசந்தம்’ என்று பாடிப்பரவுவது இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசந்தானராமரைத்தான்!

ஸ்ரீராம நாம உபதேசம்

தஞ்சைத் தரணி, மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலகட்டம் அது. மராட்டியர்களின் பிரதிநிதியாக இந்தப் பகுதியை ஆட்சிசெய்த மன்னர்கள் இங்கே அரும்பெரும் ஆலயங்கள் பலவற்றை எழுப்பியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் முதலாம் சரபோஜி மன்னர்.

ஒருமுறை, மகான் ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள் மைசூரில் இருந்து திருவிசநல்லூருக்கு விஜயம் செய்து, அங்கு தங்கியிருந்தார். அவரைத் தரிசிக்க அடிக்கடி திருவிசநல்லூருக்கு வந்துசென்றார் மன்னர். ஒருநாள், மகாராணியார் தானும் மகானைத் தரிசிக்க வருவதாகக் கூற, அவரையும் உடன் அழைத்துவந்தார் மன்னர். அன்று, மகானின் ஆசியுடன் ஸ்ரீராம நாம மந்திர உபதேசமும் கிடைத்தது மகாராணியாருக்கு.

மகத்தான வரங்கள் தரும் மாமரம்!

மாமரத்தில் ஐக்கியமான மகாராணி!

அதற்குப் பிறகு எப்போதும் ஸ்ரீராம நாம தியானத்திலும் இறை சிந்தையிலுமே லயித்திருந்தார் மகாராணியார். நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்த அவர், ஒருநாள் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் இரண்டறக் கலந்து விட்டார். இறை அனுக்கிரகத்தால் இவர் அருகில் நெருங்கியதும் இரண்டாகப் பிளந்த மாமரம், மகாராணி உள்ளே நுழைந்ததும் மீண்டும் மூடிக்கொண்டுவிட்டதாம்.

பிள்ளை வரம் தருவாள்...

மாமரத்தில் ஐக்கியமான மகாராணியை, ஒட்டுமொத்த தேசமும் தெய்வமாகவே கொண்டாடியது. அவர் ஐக்கியமான மாமரத்தை வழிபட்டவர்களுக்கு விரும்பியது கிடைத்தது; வேண்டியது பலித்தது. பிள்ளை வரம் இல்லாதவர்கள் அந்த மாமரத்தை வேண்டித் தொழுது பிள்ளை வரம் பெற்றார்கள்.

மகத்தான வரங்கள் தரும் மாமரம்!

பிற்காலத்தில் (1725-ஆம் ஆண்டு), மராட்டிய வம்சத்தில் பிறந்த பிரதாப சிம்ம மகாராஜா, மாமரத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபட்டு, புத்திர தோஷம் நீங்கப்பெற்றாராம். அதனால் மகிழ்ந்த அவர், அந்த ஊருக்கு மகாராணியாரின் பெயரைச் சூட்டியதுடன், அங்கே மகாராணியார் பெயரில் சத்திரம் ஒன்றும் நிறுவி, அனைத்து வித தர்மங்களையும் செய்ததாகச் சொல்கிறது சரித்திரம்.

ஊரும் பெயரும்

மகாராணியாரின் பெயர் யமுனாம்பாள். ஆகவே, இவ்வூருக்கு யமுனாம்பாள்புரம் என்று பெயரிட்டாராம் பிரதாபசிம்ம மகாராஜா. அத்துடன், (1761-ல்) ஸ்ரீசந்தானராமர் ஆலயத்தையும் அவர் எழுப்பியதாக விவரிக்கிறது தல வரலாறு.

மகத்தான வரங்கள் தரும் மாமரம்!

மேலும், அந்தணர்களுக்குப் பல்வேறு தானங்கள் செய்ததுடன், சர்வமானிய அக்ரஹாரம் என்ற பெயரில் குடியிருப்பு ஏற்படுத்தி, அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் விளைநிலங்களை அவர்களுக்கு சர்வமானியமாக சாசனம் செய்து கொடுத்த தகவலையும் அறியமுடிகிறது. இப்படிப் பல்வேறு தான- தர்மங்களை யமுனாம் பாள் பெயரில் செய்து வந்த மகாராஜா, மராட்டிய குலம் தழைக்க அருளும் யமுனாம்பாளையே தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வழிபடத் தொடங்கினார்.

கும்பாபிஷேக வைபவம்

1972-ம் ஆண்டு, இயற்கைச் சீற்றத்தில் அந்த மாமரம் முறிந்துவிட்டது. தற்போது, மாமரத்தின் எஞ்சிய பகுதிக்குச் செப்புக் கவசம் இட்டு ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். அத்துடன், மாமரத்துக்கு முன்பாக, கையில் படி(நாழி)யுடன் திகழும்  யமுனாம்பாள் விக்கிரகத்தை நிறுவி, சந்நிதியும் அமைத்துள்ளனர்.

வருடம்தோறும் தை மாத கடைசி வெள்ளியன்று  யமுனாம் பாளுக்குக் கோலாகலமாகத் திருவிழா நடைபெறும். மேலும், பஞ்சம் நீங்கி சகல வளங்களும் பெருகிட வளர்பிறைப் பஞ்சமிகளில் சிறப்பு வழிபாடும், பௌர்ணமி தினங்களில் விசேஷ அபிஷேகமும் அன்னதானமும் நடைபெறுகின்றன. இந்த வைபவங்களில் கலந்துகொண்டு அம்பாளைத் தரிசித்து வழிபட, திருமண பாக்கியம், தீர்க்கசுமங்கலி பாக்கியம், புத்திர பாக்கியம், கல்வி, செல்வம் எனச் சகலமும் அருள்வாள் அம்பாள் என்பது நம்பிக்கை.

இதோ... 25 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் தை மாதம் 24-ம் நாள் (பிப்ரவரி-6) யமுனாம்பாளுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.  அனைவரும் வந்து, அம்பாளின் அருள்பெற்றுச் செல்லலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு