Published:Updated:

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

சக்தி சங்கமம்படங்கள்: கிளிக் ரவி

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

சக்தி சங்கமம்படங்கள்: கிளிக் ரவி

Published:Updated:
##~##

கர்னாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலனுடன் வாசகர்கள் கலந்துரையாடல்

சிலரது இல்லங்களில் நுழைந்த துமே இனம் புரியாத நிம்மதி நம் மனத்துள் படரும். சிலரிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தால் நம் மனத்தில் அமைதி நிறைந்துவிடும். சில நிகழ்வுகள் நம்மைக் குதூகலப்படுத்தி, உற்சாகத்தில் ஆழ்த்திவிடும். இந்த மூன்று விஷயங்களும் ஒரே நாளில், ஒரே நபரிடமிருந்து கிடைத்தால் அது எத்தனை பெரிய பாக்கியம்! அந்த பாக்கியம், நமக்கும் நம் வாசகர்களுக்கும் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்... சிவனிசைச் செல்வர் நெய்வேலி சந்தானகோபாலன்!

நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத் துக்கு நமது வாசகர்களோடு சென்றபோது, வாசலுக்கே வந்து, அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்துப் போனார் சந்தானகோபாலன். உள்ளே நுழைந்ததும், எங்கு திரும்பினாலும் காஞ்சி மகா பெரியவாளின் திருவுருவப் படங்கள். கருணை ததும்பும் பார்வையும், கைதூக்கியபடி ஆசீர்வாதமுமாக, வீடு முழுவதும் நிறைந்திருக்கிறார் காஞ்சி மகான். திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் திருவுருவப்படமும், வீணையும் தம்புராவும், சந்தானகோபாலனின் இசை வாழ்க்கையை நமக்கு உணர்த்தின.

சக்திவிகடனின் வாசகர்களான சேஷாத்ரி, கிருஷ்ணசாமி, பாலகிருஷ்ணன், அனுராதா, நிஷ்களா, ராஜலக்ஷ்மி, கௌரி சர்மா ஆகியோர் அந்தச் சூழலுக்குள் ஒன்றிப் போய்விட்டார்கள்.

உரையாடல் தொடங்கியது.

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

''நுழையும்போதே கவனிச்சோம்... உங்கள் வீட்டுக்குப் 'பெரியவா பிச்சை’ன்னு பேர் வெச்சிருக்கீங்க. காஞ்சிப் பெரியவர் மீது உங்களுக்கு எத்தனை பக்தின்னு புரிஞ்சுக்க முடியுது. பெரியவரைப் பலப்பல முறை தரிசனம் செய்திருப்பீங்க. அப்படித் தரிசனம் செய்தபோது தங்களுக்கு ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவங்களைச் சொல்லுங்களேன்!'' என்று முதல் கேள்வியைக் கேட்டார் ராஜலக்ஷ்மி.

''இன்னிக்கு நான் நல்லா இருக்கேன்னா அதற்குக் காரணம் காஞ்சி மகான்தான்! அவர்தான் என் ஆதர்ச குருநாதர், கடவுள் எல்லாமே! 'குரு பக்தியுடன் இருந்தால், குறைவற வாழலாம்’கிறதை தெய்வ வாக்கா எடுத்துக்கிட்டு, நிம்மதியா, நிறைவா வாழ்ந்துக்கிட்டிருக்கேன்'' என்று கண்மூடி மென்மையான குரலில் சொன்ன நெய்வேலி சந்தானகோபாலன், தொடர்ந்தார்...

''என் இசைக்கு குருநாதர் டி.என். சேஷ கோபாலன் அவர்கள்தான்! அவரிடம் குருகுல வாசத்தில் இருந்தபோது, ஒருமுறை மதுரையிலிருந்து பெரியவாளை தரிசனம் செய்வதற்காக அவரோடு காஞ்சிபுரம் சென்றேன். அப்போது பெரியவா 'ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ என்ற கீர்த்தனையைப் பாடச் சொன்னார்.

இதே கீர்த்தனையை முன்பு அரியக்குடி ராமானுஜய்யங்கார் அவர்களைப் பாடச் சொல்லி, காஞ்சிப்  பெரியவர் அதற்கு அர்த்தம் சொல்லியிருக்கிறார்.  நாங்கள் போனபோது, எங்கள் குருநாதரைப் பாடச் சொல்லிக் கேட்டதோடு, அபூர்வமான விளக்கங்களையெல்லாம் சொன் னார். அப்போது உடன் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

இன்னொரு முறை, மடத்திலேயே இருக்கும் தியாகு என்பவர் அவரது மிருதங்க அரங்கேற்றத்தைப் பெரியவா முன்னிலையில் நடத்தினார். அப்போது பாடக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த, ஸ்ரீசியாமா சாஸ்திரியின் 'மரிவேறே திக்கெவரம்மா’ என்ற கீர்த்தனையைப் பாடும்போது, பெரியவா கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தார். அது என் பூர்வ ஜென்மத்துக் கொடுப்பினை! அப்போது நான் அடைந்த சந்தோஷமும், மன நிறைவும் எல்லையற்றது. அதன்பின்பும் பல தடவை பெரியவாளைத் தரிசனம் செய்திருக்கிறேன்.

ஒரு முறை, பெரியவா என் கனவில் வந்து, 'திருப்புகழைப் பிடிச்சுக்கோ!’ என்றார். அது சாட்க்ஷ£த் தெய்வத்தின் குரல் அல்லவா! அதன்படியே திருப்புகழை நான் பிடித்துக்கொண்டேன். இப்போது அதற்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டது.  திருப்புகழ் இல்லாமல் கச்சேரியை நிறைவு செய்யமாட்டேன். நமக்கு இந்த உடம்பைக் கொடுத்து, இசையைக் கொடுத்து, ரசிகர்களைக் கொடுத்து,  இப்படி எல்லாம் அருளியது பெரியவாளின் கருணையும் அருளும்தான் என்பதில் மாறாத நம்பிக்கை உண்டு, எனக்கு!

'தெய்வத்தின் குரல்’ ஏழு வால்யூம்களையும் பல முறை படித்திருக்கிறேன். தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறேன். வேதம் படிக்காத குறை இப்போது தீர்ந்துவிட்டது. எனக்குள் அந்தத் தத்துவங்களும், கருத்துக்களும் அப்படியே பதிந்துவிட்டன.

ஒருவன் தான் கற்றுக்கொண்ட கலையைப் பத்து பேருக்காவது கற்றுக்கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு, கலையையும் கற்றுத் தந்து அனுப்புபவர்களை 'குலபதி’ என்று அழைப்பார்களாம். என்னால் அந்த அளவுக்கு முடியவில்லையென்றாலும், முடிந்தவரை பெரியவா சொன்னதைப் பின்பற்றுகிறேன்.  ஒரு கலையைக் கற்கும், கற்றுத் தரும் சூட்சுமத்தை தெய்வத்தின் குரல் வழியே கற்றுக்கொண்டேன் என்று சொன்னால், அது மிகையல்ல! எனக்குக் கிடைத்த நல்லவை எல்லாமே மகா பெரியவர் போட்ட பிச்சை என்பதால்தான் வீட்டின் பெயரையும் 'பெரியவா பிச்சை’ என்றே வைத்திருக்கிறேன்!'' என்று நெஞ்சில் கைவைத்துச் சொன்னபோது சந்தானகோபாலன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

• ''சிறு வயதில் உங்களுக்கு இசையின் மீது ஆர்வம் எழுந்தது எப்படி?'' - வாசகர் சேஷாத்ரியின் கேள்வி இது.

''நடுத்தரக் குடும்பம்தான் எங்களுடையது. இசையைத் தொழிலாகக் கொள்ளும் எண்ணமெல்லாம் சின்ன வயதில் எனக்குக் இருந்ததில்லை. ஆனாலும், இசை மீது ஒரு காதல் மட்டும் இருந்தது. எனவே, கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், 'எமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று மகாகவி பாரதி சொன்னதைப்போல எனக்குத் தொழில் இசைதான் என்று முடிவு செய்தேன். அதற்கு இறைவனும் இசைந்தான். இமைப்பொழுதும் சோராமல் இசை என்னை அணைத்துக்கொண்டது!

இந்த வீட்டைக் கட்டும்போது, ஓர் இசை அன்பர் வெளிநாட்டிலிருந்து நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக எனக்கு ஒரு பெரிய தொகையைச் 'செக்’காக அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு நாள் போனில் பேசிய அவர், 'நீ சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை யாராவது ஒருவருக்கு நல்ல விதத்தில் பயன்படுவது மாதிரி அனுப்பி வை’ என்று தன் தந்தை அவருடைய இறுதிக் காலத்தில் சொன்னதால், அதன்படியே எனக்கு அனுப்புவதாகச் சொன்னார். ஆனால் நான், 'உங்கள் நல்ல மனத்துக்கு எப்படி நான் நன்றி செலுத்தப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று  சொல்லி, எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து ஒரு காசோலையை அவருக்கு அனுப்பிவைத்தேன். ஆனால், அதை அவர் வங்கியில் போடவே இல்லை. இசைதானே எனக்கு இவ்வளவு நல்ல உள்ளங்களின் நட்பைக் கொடுத்தது! இது எவ்வளவு பெரிய அற்புதம். எல்லாமே பெரியவாளின் அருள்தான்!''  

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

• ''உங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்பு பற்றிச் சொல்லுங்களேன்?'' என்று கேட்டார் வாசகி கௌரிசர்மா.

''பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.ஆனால், அந்தக் காலகட்டத்தில் இசையின்மீது எனக்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டதால், படிப்பில் கவனம் குறைந்து, ப்ளஸ் டூ-வில் மார்க் ரொம்பவே குறைந்துவிட்டது. ஆனாலும், கல்லூரியில் சேரும் ஆசையில், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தேன்.

அப்போது அங்கே, பி.எஸ்.வெங்கடேஸ்வரன் என்பவர் கல்லூரி முதல்வராக இருந்தார். இன்டர்வியூவில், அவர் என் மார்க்கைப் பார்த்துவிட்டு,  'வேற என்ன செய்யறே?’ என்று கேட்டார். இசை குறித்தும், இசை ஆர்வம் குறித்தும் சொன் னேன். உடனே அவர், ஒரு கீர்த்தனையைப் பாடச் சொன்னார். நான் பாட ஆரம்பித்ததும், இன்டர்வியூ கமிட்டியில் இருந்த அத்தனை பேரும் தலையை ஆட்டி, தாளம் போட்டு ரசித்தனர். 'பேஷ்! உனக்கு என்ன குரூப் வேணுமோ, தர்றோம்’ என்று அட்மிஷன் கொடுத்துவிட்டார்கள். சங்கீதம் எனக்கு வழங்கிய அங்கீகாரம் அது என்றே நினைக்கிறேன்.

ராமசுப்ரமணியன், சைல நாதன், கே.எல்.ராமச்சந்திரன் உள்ளிட்ட புரொஃபசர்கள் எல்லாரும் வகுப்பு முடிந்ததும், 'சந்தானம், எங்க ரூமுக்கு வந்து பாடணுமே’ என்று கூப்பிடுவார்கள். நானும் போய்ப் பாடுவேன். எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் மகன் சடகோபன் அங்கே சரித்திரப் பேராசிரியராக இருந்தார்.

அவர் ஒருநாள் என்னிடம், 'சந்தானம்! உனக்கு இங்கே என்ன வேலை? நீ ஏன் காலேஜ் பக்கம் வந்தே? நேரே சேஷகோபாலன் கிட்டே போ! அவர் வீடுதான் நீ இருக்கவேண்டிய இடம்’ என்று சொன்னார். அதன்படியே, பின்னர் நான் சேஷகோபாலன் அவர்களிடம் அத்யந்த சிஷ்யனாகச் சேர்ந்துவிட்டேன்!''

• ''நீங்கள் மிகுந்த ஆசார, அனுஷ்டானங் களைக் கடைப்பிடிப்பவர் என்று கேள்விப் பட்டுள்ளோம். வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும் பூஜை புனஸ்காரங்கள், ஆசார அனுஷ் டானங்களைக் கடைப்பிடிக்க உங்களால் முடிகிறதா?'' - கேட்டவர் வாசகர் கிருஷ்ணசாமி.

''அர்த்தமுள்ள, ஆழமான கேள்வி! ஆரம்பத்தில், எங்கே சென்றாலும், எனது பூஜைப் பெட்டிகளையும் சுவாமி விக்கிரகங்களையும் எடுத்துக்கொண்டே செல்வேன். தவிர, நான் ஸ்ரீவித்யா உபாசகரும்கூட! புஷ்பங்களை நானே வாங்கி வந்து, நைவேத்தியத்துக்கு சமையல் செய்து, இறைவனுக்குச் சமர்ப்பித்த பிறகே சாப்பிடுவேன். அதாவது, நானே சாதமும் பண்ணுவேன்; சாதகமும் பண்ணுவேன்.

இந்தியாவில் எங்கே போனாலும் கூடவே சமையலுக்குத் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் சமைச்சிருக்கேன். ஆனால் அப்படிப் பண்ணுவதால், சீக்கிரமே களைப்பாயிடுவேன். கச்சேரி பண்ணப் போன இடத்தில் அடுப்படியே கதி என்று இருந்தால் நன்றாகவா இருக்கும்! பொதுவாக, எல்லோருக்குமே கொஞ்சம் ஓய்வு தேவை. குறிப்பாக, கலைஞர்களுக்கு ஓய்வு அவசியம். பரபரப்பின்றி, உள்ளுக்குள்

அமைதியாகச் சிறிது நேரம் இருக்க முடிந்தால், அது போன்ற சுகானுபவம் வேறில்லை. அந்த அனுபவம்தான் நல்லதொரு பணியாக, நல்லதொரு கலையாக, நல்லதொரு இசையாக நம்மில் இருந்து வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட இதுவும் ஒருவகையில் தியானம் தான்! பகவானின் நாமாவை உச்சரித்தபடியே இருக்க... என்னுள் இன்னும் இன்னும் ஆழ்ந்து போகமுடிகிறது.

வெளிநாடுகளில், நண்பர்கள் வீட்டில் தங்கும்போது, அங்கே அசௌகரியங்களும் ஆசாரக் குறைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், அங்கெல்லாம் அக்கறையான கவனிப்புக்கும் அன்புக்கும் பஞ்சமிருக்காது! அவர்கள் இயற்கை உணவுகளைச் சாப்பிடு கிறார்கள். எனவே, நாமும் அதற்குப் பழகிக்கொள்ள வேண்டியதுதான். தவிர, அமெரிக்கா முதலான பல நாடுகளில் வசிக்கும் நிறைய தமிழர்களும் இந்தியர்களும் நம் ஆசாரப்படியும் கலாசாரத்தின்படியும் சைவ உணவை உட்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு மன நெகிழ் வுடன் கூடிய இசையைத் தான் என்னால் பிரதியாக வழங்க முடிகிறது!''

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

• ''இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் எனத் தமிழை மூன்று வகைப்படுத்தியிருக் கிறார்கள். அதில், இசைத் தமிழும் ஆன்மிகமும் சங்கமிப்பது அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?''- வாசகி அனுராதாவின் இந்தக் கேள்விக்கு ஆர்வமுடன் பதில் சொன்னார் சந்தானகோபாலன்...

'''ஓம்’காரத்திலிருந்து பிறந்ததுதான் இசை! ஓம்காரத்திலிருந்து பிறந்தவையே ஏழு ஸ்வரங்களும்!  இதைத் தியாகராஜ சுவாமிகள் சொல்லியிருக்கிறார். சிருஷ்டிக்கே மூலகாரணமாக இருப்ப தும் அதுதான்! இதை ஒரு பதிலாகப் பெற்று அறியமுடியாது. ஆனால், உணரமுடியும். முக்கியமாக, இசையின் மூலமாக எளிதாக உணரலாம். இறைவனை அடைவதற்கான எளிய வழி, இசையே! எங்களில் பல பேர் உபாசகர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இசையே எங்களுக் குப் பிரதானம்! நெருப்பை  நெருப்பென்று தெரியாமல் ஒரு குழந்தை தொட்டாலும் சுடும் அல்லவா? அது போல, இசையைத் தொடும்போது நம் நாடி நரம்புகளையெல்லாம் அது ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு செல்கிறது. நமது எண்ணங்களையெல்லாம் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. 'ஆன்மிகம், பக்தி ஆகியவற்றில் உள்ள நிஜத்தையும் பொய்யையும் சங்கீதம் வழியாகவே தெரிந்து கொண்டேன்’ என்று தியாகராஜ சுவாமிகளே அருளியிருக்கிறார்.

மனத்தை அது போகிற போக்கிலேயே செலுத்தி, பிறகு ஒரு 'யு டர்ன்’ அடிக்கச் செய்து, இறைவனின் பக்கம் திருப்பி, ஆன்மிகத்தை நோக்கி அடியெடுத்து வைக்க, இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. பாடுபவர், அவர் பாடுவதைக் காதாரக் கேட்பவர் என இரண்டு தரப்புக்குமே ஒரே விதமான சுகானுபவத்தை, இறையனுபவத்தைக் கொடுக்கவல்லது இசை மட்டுமே! அதனால்தான் இதனை 'நாத யோகம்’ என்கிறோம். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், 'ஏழிசையாய் இசைப் பயனாய்’ என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். அந்த இசைப்பயன் என்பதுதான், இறையனுபவம்!'' என்று சந்தானகோபாலன் இசையின் பயன்களையும், ஆன்மிகத்துக்கும் இசைக்கும் உள்ள உறவையும் விவரிக்க... மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள் வாசகர்கள்.

பிறகு, சந்தானகோபாலனே தொடர்ந்தார்... ''சில பேர் சொல்வார்கள்... 'எனக்கு இசை ஞானமெல்லாம் கிடையாது; ஆனால், பாட்டு கேட்டால், பரவச நிலைக்குப் போய்விடுவேன்’ என்று. எனக்குள்ளே, உனக்குள்ளே, உங்களுக்குள்ளே இறைவன் இருக்கிறான். அவரவருக்குள்ளே இருக்கிற இறைவனுக்கு அந்தப் பரவசமே உகந்ததாக இருக்கிறது. அவ்வளவு தான்! அதுமட்டுமா? 'பசு, சிசு, பாம்பு எல்லாவற்றுக்குமே இசை உகந்ததாக இருக்கிறது’ என்றும் சுவாமிகள் அருளியிருக்கிறார். ஐந்தறிவு ஜந்துக்களுக்கும் கூட, அவற்றில் உள்ள இறைவனுக்குக்கூட இசை என்பது  பிடித்தமானதாக இருக்கிறது.

கண்ணன் குழலூதும்போது ஆநிரைகளெல்லாம் லயித்துக் கேட்டன என்பார்கள். இசையின் சக்தி அளப்பரியது. இசையை ஆராய்வதைவிட, அப்படியே உள்ளுக்குள் உணர்வதே மேலானது. அந்த சுகானுபவம் கடைசி வரை இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு இசைக்கலைஞனின் பிரார்த்தனையாக இருக்கமுடியும். எது நிகழ்ந்தாலும், அனுபவம் என்பது மிக மிக முக்கியம்!'' என்று கிட்டத்தட்ட வாழ்க்கைக்கான பாடத்தையே எளிமையாக போதித்தார் சந்தானகோபாலன்.

•  மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இவர்களில் குரு குறித்து உங்கள் கருத்து?  

• உங்கள் மகளும் இசைத்துறையில் ஜொலிக்கிறாரே.. அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்?

• 'ஸ்கைப்’ முறையில் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் இசை கற்றுத் தருகிறீர்களாமே, அந்த அனுபவம் பற்றி..?

இது போன்று இன்னும் பல கேள்விகளுக்கும் அருமையான பதில்களைத் தந்து வாசகர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறார் நெய்வேலி சந்தானகோபாலன்.

“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை!”

அவை, அடுத்த இதழில்...

அடுத்த சங்கமம்

வாசகர்களே... அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களோடு கலந்துரையாடுகிறார் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நீங்களும் பங்குபெற விருப்பமா?

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 14.1.14-க்குள் அனுப்பி வையுங்கள். உங்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு சக்தி சங்கமம் கலந்துரையாடலில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுவர்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: 'சக்தி சங்கமம்’ சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism