Published:Updated:

கால்நடைகளின் காவல்தெய்வம்!

மண் மணக்கும் தரிசனம்!

கால்நடைகளின் காவல்தெய்வம்!

மண் மணக்கும் தரிசனம்!

Published:Updated:
##~##

 உடுமலை - சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயில்  

விவசாயக் கோயில்!

உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சோர் மலை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் பெதப்பம் பட்டி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில், அற்புதமாக அமைந்துள்ளது ஆல்கொண்ட மால் ஆலயம்! கால்நடை களுக்கென்றே காவல் தெய்வம் குடிகொண் டிருக்கும் ஆலயமாகவும் திகழ்கிறது இது.

ஹரியும் சிவனும் ஒன்று!

பண்டைய காலத்தில் 'ஆலாமரத்தூர்’ என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்துள்ளது. இங்கு விஷப்பாம்புகள் வாழும் ஓர் ஆல மரத்தின் கீழ், சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுமாடுகள் தாமாகவே அந்த இடத்துக்கு வந்து பாலைச் சொரிந்தன. அதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள  திருமாலையும், ஆலம் உண்ட சிவனாரையும் ஒரே கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினர். இன்றைக்கும் அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.

மூலவர் அமைப்பு :

கோயிலின் மூலவர் ஆல்கொண்டமால் சிலையில் திருமாலாகிய மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் உள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவை மேல் பாகத்திலும், ராமவதாரத்தின் சின்னமான ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீசீதாதேவியை மத்திய பாகத்திலும், கல்கி அவதாரமான கல்கி பகவான் குதிரை மேலே பவனி வருவதுமான திருக்காட்சியை அடிப் பாகத்திலும் காண முடிகிறது. ஆக, இந்த திருவிக்கிரகமானது மூன்று பிரிவுகளாக்கப்பட்டு, மேல் பாகத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், இரண்டு பக்கமும் சூரிய சந்திர திருவுருவங்களுமாக அமைக்கப்பட்டு உள்ளது.

கால்நடைகளின் காவல்தெய்வம்!

தமிழர் திருவிழா :

வருடாவருடம் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் கறவைப்பாலைக் கொண்டு, மூலவருக்குப் பால் அபிஷேகம் சிறப்புறச் செய்யப்படுகிறது.

திருவிழா சிறப்பு :

பொங்கல் திருநாளின்போது, பக்தர்கள் தங்களின்  வேண்டுதல் நிறைவேற மண்ணால் செய்யப்பட்ட மாட்டின் திருவுருவங்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். வீட்டில் வளர்க்கும் ஆடு- மாடுகளுக்கு ஏதேனும் நோய் தாக்கி துவண்டு போனால், உடனே இங்கு வந்து ஆல்கொண்ட மாலிடம் வேண்டிக்கொள்கின்றனர். ஆடு- மாடுகளின் நோய் குணமானதும், நேர்த்திக் கடனாக மண் உருவ பொம்மைகளைச் சேர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள். அப்போது, தேங்காயை உடைத்து, அதன் இளநீரைக் கொண்டு, மண் பொம்மைகளின் கண்களில் தேய்த்து, கண் திறக்கச் செய்யும் வழிபாடும் நடைபெறுகிறது.

கால்நடைகளின் காவல்தெய்வம்!

தீர்த்தம் விசேஷம்!

கோயிலில் பூஜை செய்து தரப்படும் தீர்த்தத்தை வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மீது தெளித்தால், எந்த நோய் நொடியும் அண்டாது, பூச்சி புழுவும் தாக்காது என்பது ஐதீகம்! தவிர, பொங்கல் நாளில் படையலிட்டு வேண்டிக்கொண்டால், அந்த முறை விவசா யம் தழைக்கும் என்கிறார்கள். பழங்களை சூரையிட்டு வேண்டுவதும், கன்று தானம் அளிப்பதும் இங்கு நடைபெறுகின்றன.

இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதண்ணாசியப்பர், ஸ்ரீமகாமுனி, ஸ்ரீரேணுகா தேவி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. கோயிலின் உற்ஸவராக திருமால் அருள் பாலிக்கிறார். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்பது போல் அமைந்த ஆலயம் இது!

- தி.ஜெயப்பிரகாஷ்  

படங்கள்: மு.சரவணக்குமார்