Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

னித இனத்தில் உருவ அமைப்பில் ஒற்றுமை இருக்கும்; இயல்பில் வேற்றுமை இருக்கும்.  ஒழுக்கம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனநிலை ஆகியவை கணவன்-மனைவி இருவரிடமும் இருந்தால், அவர்களுடைய இயல்பில் இருக்கும் வேற்றுமைகள் செயலற்றுப்போய், சிறப்பான தாம்பத்தியம் வாய்க்கும். ஆக, இருவரது சிந்தனை ஓட்டத்தையும் தெரிந்துகொண்டு முடிவுக்கு வரவேண்டும்.

இயல்பு உள்ளம் சார்ந்தது; எண்ணங்கள் உதிப்பது மனத்தில். மனம், எண்ணங்கள் ஆகியவை பற்றிய முழு அறிவு இருக்கவேண்டும். மாறுபட்ட பெற்றோர், மாறுபட்ட குடும்பச் சூழல், மாறுபட்ட எண்ணங்கள், மாறுபட்ட அனுபவங்கள், மாறுபட்ட இலக்குகள், சிறு வயதில் ஆழப்பதிந்த மாறுபட்ட தகவல்கள் ஆகியன, அவர்கள் இருவரது தனி இயல்புகளின் அடையாளங்களாக மாறிவிடும். இருவருடைய பங்கின் இணைப்பில் அவர்கள் முழுமையை பெறுவதற்கான முதல் அடி- நுழைவாயில் திருமணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருவரது இயல்பிலும் தென்படும் தகவல்கள், அவர்களுடைய  இருவருடைய மனமும் ஒன்றாக இணைவதற்கு ஏற்ப பொருந்தியுள்ளன என்பதை 'பொருத்தம்’ என்கிறது ஜோதிடம். மன ஒற்றுமையின் இறுக்கத்துக்கு ஆக்கம் தருவன மட்டுமே பொருத்தமாக ஏற்கப்படும்.

ஜாதகம் என்பது காலத்தின் அட்டவணை. அவர்கள் பிறக்கும் வேளை யோடு இந்த அட்டவணை இணைந்து இருப்பதால், அது அவர்களது ஜாதகமாக மாறிவிடுகிறது. காலத்தைப் பரிணாமம் என்கிறது ஆயுர்வேதம். பரிணாமம் என்றால் மாறிக்கொண்டிருக்கும் இயல்பு. வெளியுலக காலத்தின் மாறுபாடு மனித மனத்தில் ஊடுருவி, சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். பவர் ஹவுஸில் (Power House) ஏற்படும் மாற்றமானது, வீட்டிலிருக்கும் மின்விளக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மூளை செல்களில் ஏற்படும் மாற்றம், உடலையும் பாதிப்பது உண்டு. வெளியே ஏற்படும் ஆச்சரியம், அதிர்ச்சி மனத்தைப் பாதிப்பது உண்டு. அதேபோன்று, கிரகங் களுடன் இணைந்த காலம், நாம் பிறந்த காலம் வாயிலாக மனத்தைத் தொட்டுவிடும். மன நிலையை தெரிந்துகொள்ள வெளித் தாக்கம் ஒத்துழைக்கும். வெளித் தாக்கத்தின் இயல்பைக் கண்டறியப் பயன்படும் தடயங்களே ஜாதகத் தகவல்கள் ஆகும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

முனிவர்களது சிந்தனைகளின் துணையுடன் ஜாதகத் தகவல்களை இணைத்து, அலசி ஆராய்ந்து, சான்றுகளுடன் மன ஓட்டத்தை வரையறுக்கும் தகுதி ஜோதிடரிடம் இருக்கவேண்டும். ஜாதக ஆராய்ச்சி என்பது விளையாட்டுத்திடல் அல்ல; போர்க்களம் போன்றது; வருடம், மாதம், தேதி, நாள், நேரம் ஆகியவை காதில் விழுந்ததும், ஜாதகரின் நட்சத்திரம், தற்போது அவருக்கு நிகழும் தசை ஆகிய தகவல்களை நொடிப்பொழுதில் கூறிவிடும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மடிக் கணினி ஒத்துழைக்கிறது. கணினி, சொன்னதை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்று செயல்படும். அதற்கு ஆறாவது அறிவு இல்லை. ஜாதகத் தகவல்களை சேமித்துவைக்கும் கிடங்கு. அவ்வளவுதான்!

'நீயும் நானும் ஆகாயம் - பூமி போன்று அகண்ட இடைவெளியில் இருந்தோம். பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, இயல்பு, தேசம், இனம், மொழி, வேளை ஆகியவற்றில் நாம் இருவரும் மாறுபட்டவர்கள். நாம் இருவரும் புதுமுகங்கள். இப்போது விதையும் விளைநிலமும் போன்று, நமது அகண்ட இடைவெளி சுருங்கிவிட்டது.

விதை முழுமை பெற விளைநிலம் வேண்டும். விளைநிலத்துக்கும் விதை வேண்டும். விதை கட்டாந்தரையில் விழுந்தால் பயிராக மாறாது. விதையைப் பெறாத விளைநிலமும் தகுதியில் நிறைவு பெறாது. நாம், நமது பங்கை இணைக்கும்போது முழுமை பெறுகிறோம். நம்மில் இருக்கும் இடைவெளி முற்றிலும் அகன்றுவிட்டது. நான் நினைப்பதை நீ வெளியிட வேண்டும். மனம் நினைப்பதை அதன் ஏவலாளான வாக்குதான் வெளியிட இயலும். நான் நினைப்பதை நீ வெளியிடும்போது, இரு மனமும் ஒன்றானதை வரையறுத்து விடலாம். அதுபோல் நீ நினைப்பதை நான் வெளியிட இயலும்.

சாஹித்யத்துடன் இணைந்துதான் சங்கீதம் உருப்பெறும். பாட்டுக்கு சாஹித்யம் நீ; பாடுபவன் நான். உன் மனம் நினைத்த சாஹித்யத்தை நான் பாடலாக ஆலாபனம் செய்கிறேன். இப்போது, என் மனமும் உன் மனத்தோடு கலந்துவிட்டது என்பது புலனாகிறது. ரிக் வேத சாஹித்யத்தை வைத்து ஸாம வேதம் பாடும்.  அங்கு, இரு வேதங்களின் இறுக்கம் புலப்படும். அந்த வேதங்கள் போன்று நம் மனத்தால் ஒன்றாகிவிட்டோம் என்ற விரிவுரை வாயிலாக, கைத்தலம் பற்றிய மனைவிக்கு மனம் ஒன்றுபட்டதை கணவன் விளக்குவான். திருமணத்தின் நிறைவுப் பகுதி இது. மந்திரத்தின் இணைப்பில் மன இறுக்கம் வலுப்பெற்றது (த்யௌநணம் ப்ருதிவீத்வம்...).

ஆகாயத்தில் மறைந்திருக்கும் மறையை (வேதத்தை) மனம் வாயிலாக வாங்கி வெளியிட்டவர்கள் ரிஷிகள். அவர்களுக்கு, மந்திரத்தைக் கண்டவர்கள் அதாவது 'மந்திரத்ரஷ்டா’ என்று பெயர். அவர்களது சிந்தனைகளை உள்வாங்கி, அதன் அடிப்படையில் இரு மனங்களின் இறுக்கத்தை நிறைவு செய்ய வேண்டும். ஜோதிடத்தை அறிமுகம் செய்தவர்களுடைய சிந்தனையே நம்பிக்கைக்கு உகந்தது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

வழக்கமாகப் பயணிக்கும் பாதையானது பயணம் செய்ய இயலாத நிலையில் இருக்கும்போது, மாற்று வழியை ஏற்போம். அதுபோன்ற அவல நிலை ஜோதிடத்துக்கு என்றும் வராது. மழை, வெயில், பனி, புயல், பெருவெள்ளம், எரிமலை ஆகியவை குறித்து, வானிலை ஆய்வில் உருப்பெற்ற தகவல்களை வைத்து வெளியிடப்படுகின்றன. வக்கீல்களின் வாதத்தை ஆராய்ந்து, சட்ட நுணுக்கத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் அமையும். அதுபோலவே, ஜோதிடத்தை உருவாக்கியவர்களின் பரிந்துரைகளும் இறுதி முடிவை எட்டுவதற்கு தேவைப்படும்.

சிக்கலான பல தீர்ப்புக்களின் தொகுப்பு இருப்பதுபோல் ஜோதிடத்தில் தென்படாது. கடந்த காலமானது நிகழ் காலமாகவோ, வருங்காலமாகவோ மாறாது. நாம் சந்திக்கும் வேளையின் காலத்தை, அந்தச் சூழலை ஆராய்ந்து சொல்லும் திறமை இருக்கவேண்டும். முனிவர்களது சிந்தனைகள் என்றென்றைக்கும் பொலிவு இழக்காதவை. லாஹிரி, சைத்ரபஷ அயனாம்சம், ராமன் அயனாம்சம், த்ருக்ஸித்தம், கிருஷ்ணமூர்த்தி பத்ததி, வாக்கியம் ஆகியவை மனித சிந்தனைகளில் உருவானவை. இவையெல்லாம் பொலிவை இழந்துவிடும்.

சொல்வளத்தால் அவரவர் சிந்தனையை மிகைப்படுத்தி வெளியிட்டு, மக்கள் தனித் தனிக் குழுவாக தனிமனித வழி பாட்டை ஏற்பவர்களாக மாறியிருப்பதைக் காண்கிறோம்.நான்கு வேதங்களுக்கு மாறாக புது வேதத்தை உருவாக்க முயற்சி செய்தவர்கள், தோல்வியைத் தழுவியதுண்டு. ஜோதிட தத்துவங் களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் பொருத்தம் அமைந்தால், அது விடுபடாமல் நிலைத்து நிற்கும்.

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு யுக்மராசி என்று பெயருண்டு. யுக்மம் என்றால் இரட்டை, இரண்டு என்று பொருள். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஓஜோ ராசி என்று பெயர்.  'ஓஜோ’ என்றால் ஒற்றை, ஒன்று என்று பொருள்.

சந்திரன் யுக்ம ராசியில் இருக்க, பிறக்கும் வேளையும்... அதாவது யுக்ம ராசியில் லக்னமும் அமைந்து, அவ்விருவரின் அம்சகமும் யுக்ம ராசியில் தென்பட்டால், அதில் பிறந்த பெண் பெண்மையின் முழுமையைப் பெற்றிருப்பாள். லக்னத்துக்கும் சந்திரனுக்கும் சுபக் கிரகச் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஒழுக்கம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனநிலை ஆகியவை அவளது இயல்பாக இருக்கும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

அவள் இயல்பை இறுதி செய்வதற்கு சந்திரனின் இணைப்பும் தேவைப்படும். மனத்துக்குக் காரகனான சந்திரன் அவள் மனத்தில் தென்படும் நல்ல எண்ணங் களுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறான். சந்திரனில் சூரியனின் வெப்பம் ஊடுருவியிருக்கும். அந்த சந்திரனுடன் தட்பக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை... பெண்மை, அதன் இயல்பு ஆகியவற்றை உறுதி செய்து இறுதியாக்கும்.

சந்திரன் ஓஜோ ராசியில் (ஒற்றைப்படை) இருக்கும் வேளையில், ஓஜோ ராசியும் லக்னமாக (பிறந்த வேளை) அமைந்து இருவரின் அம்சகமும் ஓஜோ ராசியில் தென்படும் நேரத்தில் தோன்றியவள் ஆண்மையின் இயல்போடு இருப்பாள். சௌர்யம், வீரம், சாகஸம், உற்சாகம் போன்றவை அவள் மனத்தில் இருக்கும்.

சந்திரனுக்கும் லக்னத்துக்கும் பாப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஒழுக்கமின்மை, கெட்ட நடத்தை, வெட்கமின்மை, பெண்மைக்குப் பொருந்தாத கெட்ட குணங்கள் ஆகியன அவளுடைய இயல்பாக மாறிவிடும். சுப - பாப என்ற சொற்கள் க்ரூர- ஸெளம்ய என்ற சொல்லின் பொருளான வெட்பதட்பங்களைத் தாங்கி நிற்கும். அதன் சேர்க்கை விபரீத விளைவுகளுக்கு வித்தாக மாறும். இயல்பின் மாற்றத்துக்கு வெட்ப தட்பம்தான் காரணம். ஐம்பெரும் பூதங்களின் அம்சங்கள் தோற்றத்துக்கும் மாற்றத்துக்கும் காரணம் ஆவது உண்டு. மனத்தில் எண்ணத்தைக் குடியிருத்துவதற்கு, வெட்பதட்ப கிரகங்களின் தாக்க மானது சந்திரனிலும் லக்னத்திலும் பரவி ஒத்துழைக்கிறது. ஸெளம்ய கிரஹங்களின் சேர்க்கை, பார்வையானது நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும். க்ரூர கிரகங்களின் சேர்க்கை, பார்வையானது விபரீத எண்ணமாக மாறக் காரணமாகிறது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

எந்தப் பொருளிலும் குறிப்பிட்ட மாறுதலைத் தோற்றுவிக்க நீர்-நெருப்பு ஆகியவற்றின் இணைப்பு தேவைப்படும். ஐம்பெரும் பூதங்களின் இணைப்பில் உருவானது ஜோதிடம். ஆன்மாவில் இருந்து ஆகாயம், ஆகாயத்தில் இருந்து வாயு, வாயுவில் இருந்து அக்னி, அக்னியில் இருந்து நீர், நீரில் இருந்து நிலம், நிலத்தில் இருந்து பயிர்கள், பயிர்களில் இருந்து மனிதன் என்ற படைப்பு வரிசையை வேதம் எடுத்துரைக்கும். ஐம்பெரும் பூதங்கள்தான் விசித்திரமான உலகை தோற்றுவிக்கின்றன. உலகில் நிகழும் உத்பாதங்களுக்கும் அதாவது கொந்தளிப்புக்கும், அமைதிக்கும் அந்த ஐம்பெரும் பூதங்களின் மாறுபட்ட கலவைகள் காரணமாகிவிடும்.

ராசிகளின் அமைப்பும், படைப்பின் அமைப்பைப் பார்த்து உருவானது. நீர் நிரம்பிய மீன ராசியானது பிரளய காலச் சூழலை ஞாபகப்படுத்தும். எங்கும் நிறைந்த பரம்பொருளில் இருந்து (ஆன்மா) ஆகாயம் தோன்றியது. குரு அதிபதியாக இருந்து சுட்டிக் காட்டுகிறது. அதற்கடுத்து கீழே இருக்கும் கும்பம், மகரம் ராசிகளில் வாயுவை சனி அடையாளம் காட்டும். விருச்சிகத்தில் இருக்கும் செவ்வாய் அக்னியை ஞாபகப்படுத்தும். துலாத்தில் இருக்கும் சுக்கிரன் நீரை அடையாளம் காட்டும். கன்னியில் இருக்கும் புதன் நிலத்தை ஞாபகப்படுத்தும். அதில், விளையும் பயிர், உண்ணும் உணவு எல்லாம் இணைந்துவிடும். சிம்மத்தில் இருக்கும் சூரியன் மனிதனைச் சுட்டிக்காட்டும்.

வேதம் சொன்ன படைப்பு வரிசையை மீனத்தில் இருந்து அப்ரதக்ஷிணமாக அமைந்த ராசிகள் சுட்டிக்காட்டும் என்கிறார் வராஹமிஹிரர் (ஸ்ருஷ்டிக்ரம: வ்யுந்த்ர மேணகதித:). ஐம்பெரும் பூதங்களில் பிரம்மாண்டம் உருப்பெற்றது. மனித உடலும் ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருப்பெற்றது. பிரம்மாண்டத்திலிருந்து பிண்டாண்டம் (மனித உடல்) உருவானது என்று சொல்லும். ராசி புருஷனிலும் பிரம்மாண்டத் தின் இணைப்பை உறுதி செய்வதற்காக, படைப்பு வரிசையில் ஐம்பூதங்கள் இணைந் திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.

இயற்கையில் உருப்பெற்ற ஜோதிடத்துக்கு அழிவு இல்லை. ப்ரளய காலத்தில் மறைவுதான் இருக்கும். ஐம்பெரும் பூதங்களில் வெட்ப தட்பம், அதோடு இணைந்த வாயு ஆகிய மூன்றும் செயல்பட்டு செழிப்புறக் காரணமாகின்றன. பஞ்ச பூதங்களின் அடையாளமான குரு, சனி, செவ்வாய், சுக்கிரன், புதன், அதோடு ஆன்மா-சூரியன், மனம்-சந்திரன் என்கிற இரண்டின் இணைப்பில் உருப்பெற்ற ராசி மண்டலமானது, மனித உடல் போன்று பிண்டாண்டமாகச் செயல்படுகிறது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஆன்மா (சைதன்யம்), மனம் (உள்ளம்) இவற்றின் இணைப்பு உயிரோட்டமுள்ள ராசி புருஷனாக விளங்குகிறது. இரட்டை ராசிகளில் பெரும்பாலும் ராசியின் அதிபதி அல்லது அடையாளம்... இவற்றில், ஸெளம்ய கிரகங்களின் தாக்கம் அதாவது பெண்மை யின் குணங்கள் தூக்கலாக இருப்பதை உணரலாம். அதுபோல் ஓஜோ ராசிகளில் (ஒற்றைப்படை) க்ரூர க்ரகங்கள்- வெட்ப கிரகங்கள்- ஆண்மை தூக்கலாக இருக்கும்.

ஆண்மையும் பெண்மையும் எல்லா ஜீவராசிகளிலும் தென்படும். தூக்கலாக இருக்கும் இயல்பை வைத்து முடிவுக்கு வருவோம். பெண்மையிலும் ஆண்மை கலந்திருக்கும் என்கிறது வேதம் (ஸ்திரய:ஸதீ: தாஉமேபும்ஸ ஆஹு:). அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை எடுத்துரைத்து அதை உறுதி செய்கிறது புராணம்.

ஆணின் இயல்பு பெண்ணிலும் பெண்ணின் இயல்பு ஆணிலும் தென்படுவதைப் பார்க்கிறோம். புதிய விஞ்ஞானம் உருவத்திலும் நடையுடை பாவனையிலும் ஆணாகவும் பெண்ணாக வும் மாற்றி அமைக்க முற்படுகிறது. ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் என்பது இயல்பு மாற்றத்தின் வெளிப்பாடு. பெண் யோனி, ஆண் யோனி என்கிற யோனிப் பொருத்தம் இதன் அடிப்படையில் உருவானது. காகவத்யா, கதளீவத்யா, மலடு போன்றன உருவாவதற்கு இந்த இயல்பு மாற்றம் காரணமாவது உண்டு.

சுபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஆன்மாவிலும் மனத்திலும் இணையும் வேளையில் பெண்மை, ஒழுக்கம் மலருகிறது. பாபக் கிரகங்களுடைய சேர்க்கை, பார்வை இரண்டிலும் இணையும்போது ஆண்மை, ஒழுக்கமின்மை வெளிப்படுகிறது.

எடுப்பார் கைப்பிள்ளை போல் உருமாறி உயிரோட்டம் இல்லாத சினைமுட்டை போல் பயனற்றுப் போகவிடக் கூடாது. விழிப்பு உணர்வு ஏற்பட்டு மக்களின் சேவைக்கு ஜோதிடம் பயன்பட வேண்டும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism