சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

சாந்தாகாரம் புஜகசயநம்...தி.தெய்வநாயகம், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

மைதியான சொரூபம் கொண்டவர் திருமால். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அவருடைய நாபியில் தாமரை பூத்திருக்க... தேவர்களுக்கு  தலைவராகவும், உலகங்களுக்கு ஆதாரமாகவும், ஆகாயத்தைப் போன்று எங்கெங்கும் பரந்து இருப்பவருமாகத் திகழ்கிறார் அவர்.

மேகம் போன்று கருநீலம் கொண்டவரும், மங்கலத் திருமேனியரும், மகாலட்சுமியின் நாயகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவரும், யோகியரின் சிந்தையில் உறைபவரும், பிறப்பு- இறப்பு பற்றிய அச்சத்தை போக்குபவரும், எல்லா உலகங்களுக்கும் தனிப்பெரும் தலைவருமான ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

- குருக்ஷேத்ர களத்தில் அம்புப் படுக்கையில் கிடந்த நிலையில், பீஷ்மர் தருமருக்கு அருளிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில்- 'தியான’ பகுதியில் வரும் ஸ்லோகம் இது; மிக உசத்தியானது.

தசாவதார திருத்தலங்கள்!

'மாதங்களில் நான் மார்கழி’ என்கிறார் கண்ணன். நடப்பது மார்கழி. அடுத்து தொடர்வது, தை. உத்தராயன புண்ணியக் காலத்தின் துவக்கம் அது. விரும்பும் வேளையில் உயிர்துறக்கும் வரம் பெற்றிருந்த பீஷ்மர் இந்த புண்ணிய காலத்துக்காகக் காத்திருந்து, உத்தராயனம் துவங்கியதும் முக்தி பெற்றதாகச் சொல்கிறது பாரதம். இதையட்டி அனுஷ்டிக்கப்படுவதே பீஷ்மாஷ்டமி (7.2.14).

ஆக... ஸ்ரீவிஷ்ணுவுக்கு உகந்த 'மார்கழி’, பீஷ்மர் போற்றிய 'தை’ ஆகிய இந்த மாதங்களில் காலையில் நீராடி, துளசி சமர்ப்பித்து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து... இயலாதவர்கள், மேற்கண்ட ஒரு ஸ்லோகத்தையாவது சொல்லி, ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடுவது, மகத்தான பலன்களைப் பெற்றுத் தரும். நாமும் இந்த அத்தியாயத்தை விஷ்ணு சகஸ்ரநாமத்தை வைத்தே துவங்குவோம்.

தசாவதார திருத்தலங்கள்!

'ஓம் விச்வம் விஷ்ணுர்’ எனத் துவங்குகிறது விஷ்ணு சகஸ்ரநாமம்.

'விஷ்ணு’ என்ற பதத்துக்குப் பொருள் என்ன? அசையும் பொருள், அசையாத பொருள்கள் மற்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் வியாபித் திருப்பவர் என்று பொருள். இதையே,. 'தூணிலும் உளன் சதகூறிட்ட கோனிலும் உளன்’ என்று பிரகலாத ஆழ்வாரின் வாக்காக கம்பர் அழகாக விவரிக்கிறார். வேதங்களோ, 'எள்ளில் எண்ணெயும், தயிரில் வெண்ணெயும், பூமிக்கு அடியில் நீரும், விறகுக்குள் நெருப்பும் இருப்பது போன்று எங்கும் எதிலும் வியாபித்திருப்பவர் இறைவன்’ என்கிறது.

இப்படி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தமது அவதாரங்கள் வாயிலாக நம்மிடையே வாழ்ந்தும் காட்டினான். அதிலும் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் 'தர்மம் வெல்லும்’ என்பதை உறுதிப்படுத்த நிகழ்ந்தது.சிறையில் அவதாரம், யதுகுலத்தில்  வாழ்க்கை, மதுராவில் அரசாட்சி, குருக்ஷேத்திரத்தில் உலகுக்கான உபதேசம்... என நமக்கான வாழ்க்கைப் பாடமாகப் பரிணமித்த ஸ்ரீகிருஷ்ணாவதாரம் நமக்குப் போதிக்கும் சாராம்சம்... 'என்னையே சரணடை! உன்னையே காப்பன் யான்!’

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் நிறைவுக்கு வந்துவிட்டோம். அது குறித்து, ஸ்ரீமத் பாகவதம் விவரிப்பதைப் பார்ப்போமா?

குருக்ஷேத்திர போர் முடிந்து வெகுநாட்கள் கழிந்தன. விதிவசத்தால் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு யதுகுலம் அழிந்துபோக, தொடந்து, ஸ்ரீபலராமரும் யோகத்தினால் தன்னை பகவத் ஸ்வரூபத்தில் லயிக்கச்செய்து, மானிட உலகை விட்டுச் சென்றார்.

தசாவதார திருத்தலங்கள்!

அதன் பிறகு, ஓர் அரசமரத்தடியில் சென்று சாய்ந்து அமர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர். மேக சியாமள வண்ணத் திருமேனியில் பட்டு வஸ்திரங்களும், மார்பில் ஸ்ரீவத்ஸ மருவும், கௌஸ்துப மணியும் துலங்க, தாமரைக் கண்களும், புன்முறுவலுமாக திவ்யமங்கல மூர்த்தியாய் அமர்ந்திருந்தார். அப்போது, ஜரன் என்றொரு வேடன் அங்கு வந்தான். பகவானின் பாதகமலத்தை மானின் முகமென்று நினைத்தவன், அம்பினால் குறி வைத்து அடித்தான். பிறகு, மான் வீழ்ந்ததென்று அருகில் வந்தவன் திகைத்தான். தவறிழைத்துவிட்டதை எண்ணி மருகினான். தன்னை மன்னிக்கும்படி பகவானை வேண்டி மன்றாடினான். ''வேடனே! வருந்தாதே.

எல்லாம் எமது சித்தப்படியே நடந்தது. நீ புண்ய லோகம் செல்வாயாக'' என்று அருளினார் ஸ்ரீகிருஷ்ணர். ஜரனும் அக்கணமே புண்ணிய லோகம் அடைந்தான். அதைத் தொடர்ந்து ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

கருடக் கொடியுடன் குதிரைகள் பூட்டிய ரதமும், அதைப் பின்பற்றி பகவானின் திவ்ய ஆயுதங்களும் விண்ணேகின. அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணனின் தேர்ச்சாரதியான தாருகன் அதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். அவனிடம்,

''நடந்தது யாவும் எனது யோக மாயையின் செயலே. இதை எமது உறவுகளுக்குச் சொல். நீங்கள் எல்லோரும் அர்ஜுனன் உதவியுடன் இந்திரபிரஸ்தம் சென்றுவிடுங்கள்'' என்று பணித்தார் கிருஷ்ணர்.

தசாவதார திருத்தலங்கள்!

தாருகன் சென்றதும் பிரம்மனும், பார்வதி- பரமேஸ்வரரும், இந்திராதி தேவர்களும் மகரிஷிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். தேவர்கள் மலர்மாரிப் பொழிய, கந்தர்வ- கின்னரர்கள் பகவானின் மகிமையை கானம் செய்ய, வைகுண்டத்துக்கு எழுந்தருளினார் எம்பெருமான்.

எம்பெருமான் வைகுண்டம் எழுந்தருளிய அந்த புண்ணிய க்ஷேத்திரம் எங்கு உள்ளது தெரியுமா?

அதைப்பற்றி அறிந்துகொள்ளுமுன்... சென்ற இதழின் தொடர்ச்சியாக, கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே டகோர் நகருக்கு வந்த கதையைப் பார்ப்போம்.

துவாரகா கண்ணனிடம் அதீத பக்தி கொண்டவர் 'போடானா’. தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்குச் சென்று, கண்ணனைத் தரிசிப்பது அவர் வழக்கம். ஆனால் வயதாக வயதாக தள்ளாமை வாட்டியது.வருங்காலங்களில் துவாரகைக்கு வர முடியுமோ  முடியாதோ என்று மருகினார் போடானா. அவருக்கு அருள்புரியத் தீர்மானித்த கண்ணன், 'போடானா’ ஊருக்குத் திரும்பும்போது, எருதுகள் பூட்டப்பட்ட அவரது வண்டியிலேயே தானும் அமர்ந்து வந்தாராம். வழியில், 'போடானா’ களைப்பு அடைந்தபோது, கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம்.

இன்றைக்கும் டாகோர் சாலையில் ஒரு வேப்ப மரத்தை  தெய்வமாகக் கருதி வழிபடுகிறார்கள் பக்தர்கள். போடானா வுடன் வந்தபோது, இளைப்பாறும் பொருட்டு கண்ணன் இந்த மரக் கிளையில் சற்று சாய்ந்து நின்றதாகச் சொல்கிறார்கள். இதன் இலைகளில் கசப்பு இல்லை என்பது இறையற்புதம்தான்!

துவாரகைக் கண்ணன் இவரோடு புறப்பட்டுவிட, அங்கே மூலவரைக் காணாமல் மக்கள் பதைபதைத்தனர். உடனே கண்ணன், கோமதி நதிக்கரையில், தனது விக்கிரகத்தை ஒளித்து வைக்கும்படி, போடானாவைப் பணித்தார். ஆனாலும் 'போடானா’ சமாதானம் ஆகவில்லை. எப்படியும் பின்தொடர்ந்து வந்து கண் ணனைத் தன்னிடம் இருந்து பிரித்து விடு வார்கள் என்று அரற்றினார். 'என்னைத் தேடி வருபவர்களிடம், என் விக்கிரகத்தின் எடைக்குச் சமமாகப் பொன் தருவதாகச் சொன்னால், அதை வாங்கிக்கொண்டு திரும்பிவிடுவார்கள்’ என்றார் இறைவன். ஆனால், அவ்வளவு பொன்னுக்கு 'போடானா’ எங்கே போவார்?!

தசாவதார திருத்தலங்கள்!

இந்த தருணத்தில் அவருடைய மனைவி தனது பக்தியை  மெய்ப்பித்தாள். ஸ்ரீகிருஷ்ண விக்கிரகத்தைத் தேடி வந்தவர்களுக்கு முன்பாக, தராசுத் தட்டுகளில் ஒன்றில் கிருஷ்ண விக்கிரகத்தையும் மற்றொன்றில் தனது மூக்குத்தியையும் வைத்தாள். தராசுத் தட்டுகள் சமமாயின. அப்புறம் என்ன?! வந்தவர்கள் பதில் பேசாது திரும்பிச் சென்றார்கள். ஸ்ரீகிருஷ்ண பக்தியின் மேன்மையைச் சொல்லும் மிக அற்புதமான கதைதான் இது!

துவாரகை மற்றும் டாகோர் தலம் குறித்த மகிமைகளை அறிந்தோம். இவற்றுடன் பேட் துவாரகை, ஸ்ரீநாத துவாரகை மற்றும் காங்க்ரோலி துவாரகை ஆகிய தலங்களைச் சேர்த்து பஞ்ச துவாரகை யாத்திரையாக தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள் (இந்தத் தலங்கள் குறித்த விரிவான தகவல்களைக் காண க்ளிக் செய்யவும்).

இந்தத் தலங்களுடன் அவசியம் தரிசிக்க வேண்டிய தீர்த்தங்களும் உண்டு. அதில் முக்கியமானது பால(கா) தீர்த்தம். வேராவல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், பாலுபூர் எனும் கிராமத்தில் உள்ளது பாலகா தீர்த்தம். ஸ்ரீகிருஷ்ணாவதாரம் நிறைவுற்றதும், எம்பெருமான் மீண்டும் வைகுந்தம் எழுந்தருளியது, இங்கிருந்துதான்.

இங்கு பால குண்டம் எனும் குளமும், அருகில் பத்மகுண்டமும், அடுத்து அரச மரமும் அமைந்துள்ளன. இதனை 'மோட்ச பீபல்’ என்கின்றனர். இங்கே, வைகுண்டம் செல்லக் காத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

கல்கி அவதாரம்!

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் நிறைவுற்றபிறகு பூவுலகின் நிலையைக் குறித்தும், கலி தோஷம் குறித்தும் பரீட்சித்து மன்னனுக்கு சுகபிரம்ம மகரிஷி கூறுவதாக விவரிக்கிறது ஸ்ரீமத் பாகவதம். பூமியில் கலியுகம் ஆரம்பமானது. கலியுகத்தில் தர்மம், சத்தியம், பொறுமை, தயை, ஆயுள், சரீர பலம், ஞாபக சக்தி ஆகியன யாவும் குறைந்துபோகும். செல்வம் படைத்தவனையே குணசாலியாகவும், உயர்ந்தவனாகவும் கொண்டாடுவர். பலவான் அரசனாவான் .தேசத்தில் மழையின்றி பஞ்சம் மிகும். கீர்த்திக்காகவே தர்மம் செய்வார்கள்...

இப்படி கலிதோஷத்தை விவரித்த சுக முனிவரிடம், ''பிரம்ம ரிஷியே, கலியுக தோஷங்களுக்கு நிவர்த்தி கிடையாதா?'' என்று கேட்டார் பரிட்சீத்து. அவனுக்குப் பதிலளித்த சுகபிரம்மம், ''மன்னா, இவ்வாறு கலி தோஷங்கள் அதிகமாகும்போது மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட... ஸ்ரீமகாவிஷ்ணு சம்பளம் எனும் கிராமத்தில், விஷ்ணுயசஸ் என்ற அந்தணரது இல்லத்தில் 'கல்கி’ எனும் திருநாமத்துடன் அவதரிப்பார். வேகமாகச் செல்லும் குதிரையின் மீதேறி, பூவுலகம் முழுவதும் சஞ்சரித்து துஷ்டர்களை வதம் செய்வார். அப்போது மீண்டும் தர்மம் தழைக்கும்'' என்று விளக்கினார்.

தசாவதார திருத்தலங்கள்!

ஸ்ரீமத் பாகவதம் கல்கி அவதாரத்தை இவ்வாறு விவரிக்க, தாமிரபரணி மகாத்மியம் கல்கி அவதாரத்துடன் தொடர்புடைய தலம் ஒன்றின் கதையைச் சொல்கிறது. சித்தபுருஷரான இடைக்காடர் ஆரம்ப காலத்தில் ஆடு-மாடுகளை மேய்த்து வந்தார். வழக்கமான தனது பணிகளுடன், பொதிகை மலைச் சாரலில் தவமியற்றும் சித்த புருஷர்களுக்கும் பணிவிடைகள் செய்து வந்தார். இந்த நிலையில் இடைக் காடரின் மனமும் ஆன்மிகத்தில் லயித்தது. அவரும் தவமியற்ற விரும்பினார். அதற்கான இடம் தேடி அலைந்தவர், ஓரிடத்தில் பாம்பும் கருடனும் நட்புடன் பழகுவதைக் கண்டு அதிசயித்தார். அதுவே உகந்த இடம் எனக் கருதி, ஆதிநாராயணரை தியானித்து தவத்தில் ஆழ்ந்தார். நெடும் தவத்தின் பலனாக மாலவனின் தரிசனம் கிடைத்தது.அற்புதமான அந்த தரிசனத்தைக் காண வானுலகே கீழிறங்கி வந்ததாம்.

''வேண்டும் வரம் என்ன?'' என்று பரம் பொருள் கேட்க. ''தாங்கள் இதே கோலத்தில் இந்த தலத்தில் எழுந்தருள வேண்டும். இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களின் துன்பங்களை நீக்கி அருளல் வேண்டும்'' என்று பிரார்த்தித்தார் இடைக்காடர். அத்துடன், ''தங்களது கடைசி அவதாரம் இந்தத் தலத்திலேயே நிகழ வேண்டும்'' என்றும் வேண்டிக்கொள்ள, அப்படியே வரம் தந்தது பரம்பொருள். அகமகிழ்ந்தார் இடைக்காடர். தாமிரபரணிக் கரையில் உள்ள அந்தத் தலத்தில் மண்ணை எடுத்துக் குழைத்து, தான் தரிசித்த கோலத்திலேயே திருமாலுக்கு விக்கிரகம் சமைத்தார். அழகான அந்தப் பெருமாளுக்கு அழகிய மன்னார் என்றே திருப்பெயர் சூட்டப் பட்டது.

இடைக்காடருக்கு அருள் கிடைத்த அந்தத் தலம் சுத்தமல்லி. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை சந்திப்பு, பேட்டை வழியாக சேரன்மாதேவி, முக்கூடல் ஆகிய ஊர் களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி, சுத்தமல்லி விலக்கு என்ற இடத்தில் இறங்கினால், அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.

தசாவதார திருத்தலங்கள்!

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்; ஏக தள விமானத்துடன் திகழ்கிறது. மூலவர் ஸ்ரீஅழகியமன்னார் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, சதுர்புஜங்களுடன் காட்சி அளிக்கிறார். திருக்கரங்களில் சங்கு-சக்கரம். உற்ஸவர் திருநாமம் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள்; நீளாதேவி, பூமா தேவியுடன் அருள்கிறார். அனுமன், கருடன் ஆகியோரையும் தரிசிக்க முடிகிறது. ஆலயம் எளிமையாய்க் காட்சி தருகிறது. அதேநேரம், உள்ளே கருப் பொருளாய் வீற்றிருக்கும் பரம்பொருளின் சாந்நித்தியம் முழுக்க நிரம்பப் பெற்றிருப்பதை உணர முடிகிறது.

கலிதோஷத்தைப் போக்கக்கூடியது இறைவனைக் குறித்த தியானமே ஆகும் என்று அறிவுறுத்துகிறது ஸ்ரீமத்பாகவதம்.

ஆமாம்! சிரவணம்- இறைவனின் மகிமைகளை செவியால் கேட்டு மகிழ்வது, நாம சங்கீர்த்தனம்- எப்போதும் அவன் திரு நாமத்தை உச்சரிப்பது, தியானம்- அவனையே சிந்தித்திருப்பது... இந்த  வழி முறைகளால் ஸ்ரீமந் நாராயணனை நம் மனக்கமலத்தில் குடியேற்ற முடியும். அப்போது நம் சித்தம் சுத்தமாகும். வாழ்வு வளம் பெறும்.

அதற்கு, மாலவனின் மகிமையைச் சொல்லும் தசாவதாரக் கதைகளும், அவன் அருளாடல்களை எடுத்துக்காட்டும் தலங்கள் குறித்த தகவல்களும் மிகப்பெரிதாக உதவிசெய்யும்.

ஓம் நமோ நாராயணாய!

(நிறைவுற்றது)