சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 33

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

##~##

'ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே.’

- திருமந்திரம்

பிராணாயாமம் என்னும் சுவாசப் பயிற்சிதான் மனிதனைக் கடைத்தேற்றும் அற்புதம். அதைத் தெளிவாகப் புரிந்தும் உணர்ந்தும் செய்வதில்தான், அடைவது அடையாதது எனப் பல உள்ளது என்று காகபுஜண்டர் கூறிட... அடைவது எதை, அடையாதது எதை என்று அதையட்டி ஒரு கேள்வி கேட்டான் பிரம்மார்த்தன்.

யுகங்களைக் கடந்து வாழ்ந்திடும் அந்த மகா சித்தனும் அதற்கான பதிலைச் சொல்லத் தொடங்கினார். அது பிரம்மார்த்தனுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; பிரம்மார்த்த னுக்குச் சொல்வதுபோல் மனிதகுலம் முழுமைக்கும் சொல்லப்பட்ட பதிலாகும். பதில் என்றால், ஏதோ ஓரிரு வரிகளில், சொற்ப வார்த்தைகளில் அமைந்த பதில் அல்ல. அது ஒரு நெடிய விளக்கம். பிரம்மார்த்தனும் சரி, அவனோடு இருந்த மற்ற நால்வரும் சரி... அதை ஏடுகளில் எழுதிக்கொள்ளவும் செய்தனர். அந்த ஏடுகள் அழியாது பலர் கைகளில் தவழ்ந்து, அந்தந்தக் கைகளுக்கு உரியவர் எல்லாரும் காகபுஜண்டரின் உபதேச மொழிகளை அறிந்துகொண்டனர். பின்பு, அவர்களால் அது உலகம் முழுக்கப் பரவத் தொடங்கியது.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 33

உலகம் முழுக்கப் பரவியது என்றால், உலகில் வாழ்ந்து வரும் அத்தனை மாந்தர் களும் இதை அறிந்து கொண்டார்கள் என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. எவருக்கெல்லாம் மானுட வாழ்வில் கடைத்தேறும் விதிப்பாடு இருந்ததோ, அவர்களை எல்லாம் புஜண்டரின் உபதேச மொழிகள் சென்றடைந்து, அவர்களின் அகக் கண்களைத் திறந்துவிட்டன. அது என்ன விதிப்பாடு என்று ஒரு கேள்வி இங்கே எழலாம்.

இன்று உலக அளவில் ஆன்மிகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு தவறான நிலைப்பாடு, ஆன்மிகத்தில் நாட்டமும் நம்பிக்கையும் உடையவர்களிடமேகூட காணப்படுகிறது. ஆன்மிகத்தைத் தெளிவாகவும், முழுமை யாகவும் தெரிந்துகொள்ளாமலும், புரிந்துகொள்ளாமலும், தாங்கள் அறிந்த அளவுக்குண்டான தெரிதல் புரிதலோடு தான் நூற்றுக்குத் தொண்ணூறு ஆன்மிகவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இவர்களிடம் நாத்திகம் பேசுகின்றவர்கள் சில கேள்விகளை எழுப்பும்போது, அவர்களுக்குச் சரியான பதிலைக் கூற முடியாதவர்களாக இவர்கள் உள்ளனர். அடுத்து, இது தவறு என்று தெரிந்தும், பல தவறுகளைச் செய்துவிடுகின்றனர். இதனால் கர்மவினைப்பாடு உருவாகி, அது அழியும்வரை அந்த வினைக்கு ஏற்பப் பிறவிகள் எடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் உருவாகிவிடுகிறது. இந்த வினைப்பாடுகளே விதியாக வடிவெடுத்து, வழிநடத்துகின்றன.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 33

வினைப்பாடுகளில் நல்வினைப் பாடுகளும் உண்டு. பள்ளி ஆசிரியராக, ஊதியத்துக்காகக் கடமைக்குப் பணியாற்று பவராக இல்லாமல், ஊதியத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், ஆயிரக் கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலம் ஒன்றை மட்டுமே கருதி, அவர்களுக்கு ஏற்ப பாடம் புகட்டும் ஆசிரியப்பணி ஆற்றுபவரே ஒரு நல்ல குரு ஆவார். அவரது தன்னலமற்ற வினைப் பாடு, வாழ்வியல் கல்வி புகட்டிய அவரை, ஞானக்கல்வியை அறிந்துணரும் நிலைக்கு இட்டுச்செல்லும்.  

காகபுஜண்டர் போதித்தது ஞானக் கல்வியை..! அந்தக் கல்விக்குள் இருந்தது உடல் மற்றும் உள்ளம் குறித்த ரகசியங்கள் ஆகும். இன்று 700 கோடி பேரைக் கடந்து இந்த உலகின் மக்கள் தொகை சென்று விட்டது. இதில் தமிழறிந்தவர்கள் சுமார் 10 கோடிப் பேர்தான் இருப்பார் கள். இவர்களில் கல்வி ஞானம் உடையவர்கள் முக்கால் பங்கு இருப்பர். இவர் களிலும் இறை நம்பிக்கையாளர் குறைவாகவே இருப்பர். அந்த நம்பிக்கை உடையவர்களிலும், ஆன்மிகத்தில் நல்ல புரிதலும் தெளிதலும் உடையவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். இந்தத் தெளிதலும் புரிதலும் உடையவர்களே பெரும் தேடுதல் வேட்கை கொன்டிருப்பர். அவர்களின் தேடுதல் என்பது, இந்தப் பிறவித் தளையில் இருந்து விடுபடுவதற்கான வழியாகவே பெரும்பாலும் இருக்கும்.

மானுடப் பிறப்பென்பதே அரிய பிறப்பு! இந்த மானுடப் பிறவிக்கே தன்னை அறிந்துகொண்டு, பின்பு தான் சார்ந்த சகலத்தையும் அறிந்திடும் ஆற்றல் உண்டு. ஆயினும், இந்த ஆற்றலைப் பயன்படுத்தத் தெரியாமல் உலக மாயையில் சிக்கி, மீண்டும் பிறவிகளை எடுப்பவர்களாகவே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் உள்ளனர். பத்து பேர்தான் கடைத்தேறிடும் வழியைக் கண்டு, மீண்டும் 'பிறவாமை’ எனும் நற்கதியையும் அடைகிறார்கள்.

அரிய பிறப்பு இந்த மானிடப் பிறப்பு என்று கூறிவிட்டு, தொடர்ந்து அதில் பிறவிகள் எடுப்பதை ஏன் ஒரு பாரமாகக் கருதவேண்டும் என்று சிலர் கேட்கலாம். அநேகமாக, அவர்கள் வாழ்வின் இளைய பிராயத்தில் இருக்கும்போதுதான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கக்கூடும். முதுமை அடைந்து முடி நரைத்து, கண்ணில் திரை விழுந்து, தள்ளாமைக்கு ஆளாகி, பிறர் துணையின்றி வாழ இயலாத ஒரு நிலை வரும்போதுதான் ஆகச் சிறப்பான மானுடப் பிறப்பே பெரும் பாரமாகத் தெரியும். இவ்வேளையில் தவறான வாழ்க்கைப்பாடு காரணமாகவும், வினைப்பாடு காரணமா கவும், நோய் நொடிகள் உடம்பில் தஞ்சம் புகுந்துவிட்டால், முதுமை என்பது முதிர்ந்த நிலை என்பது போய், சகலமும் தகர்ந்த நிலை என்றாகிவிடும்.

இவர்களிடம் சென்று மீண்டும் மனிதப் பிறப்பெடுக்க விருப்பமா என்று கேட்டால், இதுவரை பட்டதே போதும் என்றே கூறுவர். முதுமையிலும் இளமைக்குரிய சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் எவரிடம் உள்ளதோ, அவரே மிகச் சிறந்த வினைப்பாட்டுக்கு உரியவர்.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 33

இந்த வினைப்பாட்டுக்கு உரியவரால்தான் காகபுஜண்டரின் உபதேசங்களையும் பின்பற்றிக் கடைத்தேற முடியும். மற்றவர்கள் பின்பற்றாவிட்டாலும், அறிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லை. அதேநேரம், இதை அறிந்துகொள்ளக்கூட நல்வினைப்பாடு வேண்டும் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.

இனி, பிராணாயாமம் குறித்தும், உடல் வலிமையின் பொருட்டு காயகற்பங்கள் குறித்தும் காக புஜண்டர் கூறியதைச் சிந்திப்போம்.

தன்மார்த்தன், பிரம்மார்த்தன் மற்றும் அவர்களின் மனைவியரும் காகபுஜண்டரின் கூற்றைக் கவனமாகக் குறித்துக் கொண்டனர்.

பிராணாயாமம் புரிய, தேகம் முக்கியம். ஏனென்றால், பிராணா யாமம் என்பது காற்றைச் சுவாசிப்பதால் புரியப்படும் ஒரு செயல்பாடு.

எனவே, இது மனம் சார்ந்தது மட்டுமல்ல; உடல் சார்ந்ததும்கூட! ஆனால், இந்தப் பிராணாயாமம் உடம்பில் ஓர் உன்னத நிலைப் பாட்டை அடையும் தருணத்தில், இதன் காரணமாக மனம் எனும் சித்தப் பகுதியும் மிக மிகச் சீராகும்.

அந்த வேளையில், இந்தச் சித்தம் பிறர் கூறாமலே, தானாகவே நுட்பமான பல விஷயங்களை உணர்ந்துகொள்ளும். அந்த உணர்வு காரணமாக, மனத்தில் ஓர் ஒளி தோன்றி, அது அவர் முகத்தில் தேஜஸ் எனும் அம்சமாக ஒளிரும்.

பிராணாயாமம் புரிய அடிப்படைத் தேவையான உடல் குறித்து முதலில் சற்றுச் சிந்திப்போம். ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் புலன்களுக்குத் தெரிவதால்தான் இருப்பதை உணர்கிறோம். தெரியக் காரணமானது தேகமே! இந்தத் தேகமானது தாய் தந்தையரால் உருவானது. ஓர் உடலில், ஏழு தாய் தந்தையர்களின் பதிவுகள் மட்டுமே இருக்கும். மற்றதைக் காலம் அழித்துவிடும்.

அதாவது, உங்கள் எதிரில் இப்போது ஒருவர் இருக்கிறார்; அதாவது, அவரின் தேகம் இருக்கிறது எனில், அதில் அவர், அவரின் தாய், தந்தை, பாட்டன், பாட்டிமார்களின் அணுக்கூறுகளைக் காணமுடியும். அவர்களின் அணுக்கூறுகள் மட்டுமல்ல, வினைக் கூறுகளும் உள்ளன.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 33

அணுக்கூறுகள்தான் உடம்பின் நிறம், உயரம், ஒல்லி, குண்டு, பித்தம், வாதம், சிலேத்துமம், ஊனமுள்ள மற்றும் ஊனமற்ற அமைப்பு என்று சகலமாய் உள்ளது. வினைக்கூறுதான் சித்தமாய் உள்ளது.

இந்த அணுக்கூறோடும் வினைக்கூறோடும் முற்பிறப்பில் அவரை வழிநடத்திய ஆன்மாவானது வந்து கலந்து, அதுவே இயக்க சக்தியாக மாறி, அணு மற்றும் வினை இயங்கத் தொடங்குகிறது. அந்த இயக்கமானது, அவர் தன் தாயின் கருப்பைக்குள் கருப்பிண்டமாக உருவான நிலையில், ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து அதைக் கைப்பற்றி இயங்கத் தொடங்குகிறது. இந்த இயக்க சக்தி காரண மாகவே சுவாசச் செயல்பாடு தொடங்கி, உடம்பும் வளரத் தொடங்குகிறது. பின்பு பிறப்பு நிகழ்ந்து, சுற்றுச் சூழலால் சித்தம் விழிக்கத் தொடங்குகிறது.

இந்தச் சித்தத்துக்குத் தாய் தந்தையர் பேசும் மொழி தாய்மொழி ஆகிறது. அவர்கள் வந்த வழிமுறைகளே இதன் வழிமுறையாகவும் அமைகின்றன. பிறந்த இடம் பிறப்பிடமாகிறது. இடத்துக்கு உரிய ஊர், ஊருக்கு உரிய நாடு, நாட்டுக்கு உரிய இனம் எனப் பிரத்யேக அடையாளங்கள் உருவாகின்றன.

ஒரு கோணத்தில், இவை எதுவுமே நம் கைகளில் இல்லாதவை போல் தோன்றும். குறிப்பாக, நாம் அறிய வருவதைக் கொண்டு வளர்வதே அறிவாகும். அந்த அறிவுதான், இவை எதுவுமே நம் கையில் இல்லை என்று கூறும்.

ஆனால் உண்மையில், வாழ்நாளில் நாம் புரியும் வினைப்பாடே ஆன்மாவில் பதிவாகி, முடிவான முக்திக்கு உரியவராகவும், முடிவற்ற பிறப்புக்கு உரியவராகவும் நம்மை ஆக்குகிறது. இதை அறிவதே ஞானம்.

இந்த ஞானமோ, எடுத்த பிறப்பை அதன் அடையாளங்களை முன் வினைப்பாட்டுக்கு ஏற்ப அடைந்ததாகவே கருதும். இதன்படி பார்த்தால், ஒவ்வொருவரும் அவரவர் தலையெழுத்தை அவரவர்களே எழுதிக்கொள்கின்றனர். ஆனால், ஞான விழிப்பு ஏற்படாத நிலையில், கடவுள் தன் தலையில் எழுதிவிட்டான் என்கின்றனர். ஒருநாள், ஞான விழிப்பு ஏற்படும்போது, நம் செயல்களே நம் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கின்றன என்பது புரியும்.

இந்தச் சிந்தனை நாத்திகவாதிகளிடமும் உண்டு. இதே கருத்தையுடைய நாத்திக வாதிக்கும் ஆத்திக ஞானிக்கும் இடையே ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. நாத்திகம் பேசுவனிடம் 'நான்’ எனும் அகந்தை இருக்கும். ஆத்திக ஞானியிடம் அது இருக்காது. நாத்திகம் பேசுபவன் 'நான்’ என்று உடம்பை முதலாக வைத்துச் சிந்திப்பான். ஆத்திகவாதியோ ஆன்மாவை முதலாக வைத்துச் சிந்திப்பான்.

கண்களுக்குப் புலனாகும் இந்த உடம்புக் குப் பின்னால் இப்படிச் சிந்திக்க நிறைய சங்கதிகள் உள்ளன. இப்படிப்பட்ட உடம்புக் குள் ஏழு பிறப்பாளர்களின் அணுக்கூறுகள் பதிந்துகிடந்து, அவை வளர்ந்து, அவற்றின் தன்மைக்கு ஏற்ப செயலாற்றி, முதுமை அடைந்து, பின் மரணமெய்தி மண் ணாகவோ சாம்பலாகவோ ஆகின்றன. நம் முன்வினைக் கூறு விதியாகி வழி நடத்துகிறது. இந்த அணு மற்றும் வினைக் கூற்றை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளவும் விதியில் இடமிருக்கவேண்டும். தெரிந்து கொண்டாலே பின்னர் புரிந்து கொள்ள முடியும். புரிந்துகொண்டாலே நாம் நமக்கு அமைந்த உடம்பை அதற்கேற்பப் பாதுகாக்க முடியும்.

சித்தம்...  சிவம்... சாகசம்! - 33

பாதுகாக்கும் ஒரு பிரதான முன்செயல் பாடுதான் உடம்பை காயகல்பங் களால் வஜ்ரம் போலாக்குவது. பின்பு, பிராணாயாமம் புரிந்து உடல் மற்றும் சித்தமாகிய மனம் என்ற இரண்டையும் மிகுந்த வலிமையுடையதாக ஆக்கிக்கொண்டு, வாழ்வை ஆரோக்கிய மாகத் தொடர்வது.

உடல் வலிமைக்கு காயகற்பங்களை எடுத்துக் கொள்வதற்கு முன், அதை அறு சுவைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். அறுசுவையும் அதன் கிளைச் சுவைகளும்தான் நவமெனும் ரசமாகின்றன. இந்த நவரசம் மாயை சார்ந்தது. அனுபவிக்க அனுபவிக்க அலுப்பூட்டும். நித்ய இன்பம் தராது. எனவே உப்பு, புளி, காரம் என்கிற சுவைகளைத் தவிர்த்து, உடம்பைப் பத்தியத்துக்கு ஆட்படுத்தி, கூடுதல் கொழுப்பு துளியும் இல்லாத உடம்பை முதலில் திடமான எண்ணத்தால், அதன் முனைப்பில் உருவாக்க வேண் டும். அதற்குத் துணை புரிவதே தவமாகும்.

உடம்பு அறுசுவையில் இருந்து விடுபடும் போது, ஆட்டிப் படைக்கும் கோள்களின் பிடியில் இருந்தும் விடுபடும். கோள்களின் பிடியில் இருந்து விடுபடுவதே விடுதலையின் தொடக்கம். இந்த நிலையில்தான் காயகல்பம் உடலில் தன் செயல்பாட்டால் உடம்பை வஜ்ரம் போலாக்கும். வஜ்ர உடம்புக்கு வாழை இலையில் போஜனம் தேவையில்லை. ஒரு துளசி இலை, ஒரு வில்வ இலையேகூட போஜனம்தான்! தாகமும் எடுக்காது; எனவே, தண்ணீர் தேவையில்லை. வாயுவே போஜனம். வாயு போஜன உடம்புக்கு வியர்வை, மூத்திரம், மலநாற்றம் எதுவும் கிடையாது. கபாலத்தின் உச்சியில் சஹஸ்ராரத்தில் சுரக்கும் அமிர்த நீர் அப்படியே உச்சியில் இருந்து கீழே நாவண்ணங்களில் விழுந்து, அந்த அமிர்த நீரே எச்சிலாகத் திகழும். பின்பு, அதுவே வயிற்றை அடைந்து, பசி தாகக் காரணியான அக்னியை அடக்கும்.

எனவே, காயகற்பங்களால் உடம்பைப் பேணுங்கள். இந்த காயகற்பங்களுக்குத் தேவையான மூலிகைகளே முண்டகம், அழுகண்ணி, தொழுகண்ணி போன்றவை. இதைப் பறிப்பதற்கு கால நேரமுண்டு; உண்பதற்கும் கால நேரமுண்டு.

பூச நட்சத்திர நாளில் இதை உண்ணத் தொடங்குவது நலம் தரும். ஒரு மண்டல காலம் பக்குவம் அறிந்து உண்ண வேண்டும். இதனால் நரைதிரை நீங்கி, உடம்பின் மேல் நம் மனதானது ஆதிக்கம் புரியத் தொடங்கிவிடும். உடம்பின் மேல் மனது ஆதிக்கம் புரியத் தொடங்கும்போதுதான் அஷ்டமாசித்திகள் நம் வசப்படும்.

அஷ்டமாசித்திகள் பற்றி இனி கூறுவேன்.

காகபுஜண்டரின் உபதேசம் தொடர்கிறது.

- சிலிர்ப்போம்...