Published:Updated:

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்

200 வருஷங்களாச்சு...ஆலயம் தேடுவோம்! வி.ராம்ஜி, படங்கள்: ச.வெங்கடேசன்

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்

200 வருஷங்களாச்சு...ஆலயம் தேடுவோம்! வி.ராம்ஜி, படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:
##~##

கோபமும் கர்வமும் பொல்லாத குணங்கள். கோபம் ஆவேசத்தை உண்டுபண்ணும். ஆவேசம் அழிக்கிற மனோபாவத்தைத் தரும். அப்படி அழித்தொழிப்பதில் வெறி கொண்டு திரிந்தால், அங்கே அன்பையும் உறவுகளையும் தோழமைகளையும் புரிந்துகொள்ளாத நிலைதான் ஏற்படும். ஆனாலும், 'கோபம் உள்ள இடத்தில்தான் குணமிருக்கும்’ என்று சொல்கிறோம். அதாவது, கோபம் உள்ளவரை முழுவதுமாகப் புறக்கணித்துவிடாமல், 'நல்ல மனுஷன்தான்! புரிஞ்சுக்காம கோபப்படறார். இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு சரியாயிடுவார்’ என்று நம்பிக்கையுடன் அவரை ஏற்றுக்கொள்கிறோம்.

மனிதர்களில் மட்டுமல்ல, முனிவர்களிடமும் கோபம் இருப்பதைப் புராணங் கள் தெரிவிக்கின்றன. கோபக்கார முனிவர் என்றே பெயரெடுத்தவர் துர்வாச முனிவர். சிவ பக்தியில் திளைத்து, நித்தியானுஷ்டங் களைச் செய்து, மாறாத பக்தியுடன் இருப்பவர். ஆனால், மூக்குக்கு மேல் வந்துவிடுகிற கோபம்தான் இவருக்கு சத்ரு! பார்ப்பவர்களிடமெல்லாம் பொசுக் பொசுக்கென்று கோபப்பட்டு, ஆவேசமாகி, சாபமிட்டு, அதனால் தன் தவ வலிமையை அடிக்கடி இழந்துவிடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி ஒருமுறை, சிவனாரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, இழந்த தவ வலிமையை மீண்டும் பெறுவதற்காக, ஆரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்து, சிவ ஸ்தலங்களுக்குச் சென்று சிவ பூஜை செய்து வழிபட்டார்.

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்

மிகப் பெரிய வனப்பகுதியில், வன்னி மரமும் இலுப்பை மரமும் வில்வ மரமும் சூழ்ந்த இடத்தில், பர்ணசாலை அமைத்துத் தங்கினார் துர்வாசர். 'இதோ... இந்த இடத்தில் மரங்களின் வாசனையும் பூக்களின் நறுமணமும் சூழ்ந்திருக்கிறது. இங்கு பூச்சிகளின் தொந்தரவோ, மிருகங்களின் வருகையோ இருக்காது. பூமிக்கு அடியில் நீர் நிறைந்திருப்பதை உணர முடிகிறது. மேனியெங்கும் உள்ள வெப்பத்தை, மெல்லியதாக வீசும் காற்றின் குளுமை போக்கிவிடுகிறது. சிவபூஜை செய்ய இதுவே உகந்த இடம்’ என நினைத்தபடி, அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தினமும் தண்ணீரால் அபிஷேகம் செய்து, வில்வம் பறித்து அர்ச்சித்து வழிபட்டு வந்தார்.

தண்ணீரும் வில்வமும் சிவனாரை மனம் குளிரச் செய்தன. 'இன்னும் ஒரேயரு சோதனை செய்வோம். அதன் பிறகு, முனிவரின் சாபத்தைப் போக்குவோம்’ என நினைத்த சிவனார், தன் திருவிளையாடலைத் துவக்கினார்.

விளையாடுவதற்குச் சிவபெருமானுக்குச் சொல்லியா தரவேண்டும்?  மாலையில், சந்தியாகால வேளையில் சகல பூஜைகளும் குறைவறச் செய்து முடித்துவிட்டு, சிவநாமம் சொல்லியபடியே உறங்கிப் போனார் துர்வாசர். மறுநாள், விடிந்ததும் நீராடுவதற்காக, அருகில் உள்ள குளத்துக்குச் சென்றவர் அதிர்ந்து போனார். அதில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லை. முழுவதுமாக வற்றிப் போயிருந்தது குளம். 'என்னடா இது... நேற்று மாலையில் நீராடிய போதுகூட குளம் முழுவதும் தண்ணீர் இருந்ததே. இடுப்பளவுக்கு ஜலம் நிறைந்து கிடந்ததே. இப்போது சிவபூஜை செய்வதற்குக்கூட சிறிதளவு ஜலம் இல்லையே... என்னாயிற்று இந்தக் குளத்துக்கு?’ என்று தனக்குத்தானே புலம்பினார் முனிவர். அந்தப் புலம்பல், அவருக்குக் கோபத்தை மூட்டியது. அந்தக் கோபம், ஆத்திரத்தையும் அழுகையையும் ஒரே சேர அவருள் விதைத்தது. விறுவிறுவென சிவலிங்கத்துக்கு அருகில் சென்றார். 'நான் என்ன தவறு செய்தேன். எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள்?’ என சிவனாரிடம் முறையிட்டார். வருந்தினார். சிவலிங்கத்தில் தன் சிரசை வைத்து மன்றாடினார். அவர் கண்களில் இருந்து கரகரவென வழிந்தோடியது நீர்.

'உன்னை அபிஷேகிப்பதற்குக் கங்கா ஜலம் வேண்டுமென்றா கேட்டேன். இதோ, இந்தத் திருக்குளத்து தண்ணீரைத்தானே எதிர்பார்த்தேன்! அதைக்கூடத் தராமல், என்னை இப்படிச் சோதிக்கிறாயே, இது நியா யமா?’ என்று சொல்லி அழுதார் முனிவர்.

அப்போது சிவலிங்கத்துக்கு அருகில், பூமியில் இருந்து தண்ணீர் ஊற்றெனக் கிளம்பி, பீறிட்டு வந்தது. அருகில் இருந்த மரம் செடி- கொடிகள் நனைந்தன. சிவலிங்கத் திருமேனியில், தண்ணீர் விழுந்து கொண்டே இருந்தது. துர்வாசர் தெப்பமாக நனைந்தார். குளிர்ந்து போனார்.

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்

'என் சிவனே... என் சிவனே... இதோ, கங்காதேவியையே இங்கு அழைத்து வந்து விட்டாயே! என் கங்காதீஸ்வரா! என் சாபம் போக்க வந்த ஈசனே! உன்னை வணங்கு கிறேன்’ என்று சாஷ்டாங்கமாக விழுந்து சிவனாரை நமஸ்கரித்தார். அவரின் சாபம் விலகியது.

துர்வாசர் வழிபட்ட இடத்தில், அவர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கத் திருமேனியைச் சுற்றிலும் கோயில் எழுப்பப் பட்டது. மிகப்பெரிய வழிபாட்டுத் தலமாக உருவாக்கப்பட்டது.

கோயிலில் குடிகொண்டி ருக்கும் சிவ பெருமானுக்கு ஸ்ரீகங்காதீஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள், மக்கள். கோயிலைச் சுற்றிலும் வீடுகளும், கல்விச் சாலைகளும் ஏற்பட்டன. அந்த வனப்பகுதி ஓர் ஊராக உருவானது. அந்த ஊர், கங்காபுரம் என அழைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. இங்கிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமமாக உள்ளது கங்காபுரம். இங்கே ஊருக்குள் நுழையும்போதே, சுற்றிலும் உள்ள வயல்களுக்கு மத்தியில் கோயில் கொண் டிருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபங்கஜவல்லி.  

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்

இப்போது போய்ப் பார்த்தால், 'சிவலிங்கம் இருக்கிறது; சரி, கோயில் எங்கே?’ என்று கேட்பீர்கள். ஆமாம், ஒருகாலத்தில் கோயிலாக இருந்த இடம், இப்போது முழுவதுமாகச் சிதைந்து, வெறும் இடமாக மட்டுமே இருப்பதைப் பார்த்தால், மனம் தாங்காமல் விம்மி அழுதுவிடுவீர்கள். சிவனாருக்குச் சந்நிதிகூட இல்லையே என்று கலங்கித் தவிப்பீர்கள்.

ஒரு வெட்டவெளியில், சந்நிதி முழுவதும் சிதைந்த நிலையில், வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி இருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர். பலிபீடம், கொடிமரம் ஏதுமில்லை. பிள்ளையார், முருகப்பெருமான், லிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் என எந்த விக்கிரகத் திருமேனிகளும் இல்லை; சந்நிதிகளும் இடிந்தும் புதைந்தும் பாழாகிவிட, சிவனார் மட்டுமே நந்திதேவருடன் இருக்கிறார்.

''கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து எப்படியும் 200 வருஷத்துக்கு மேல இருக்கும்னு சொல்றாங்க பெரியவங்க. இப்ப, அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் டிரஸ்ட்டுன்னு ஒண்ணு அமைச்சு, திருப்பணி வேலைகளைச் செஞ்சிட்டு வரோம். சிவ சந்நிதி, அம்பாள் சந்நிதின்னு ஒவ்வொண்ணா கட்டிக்கிட்டிருக்கோம்'' என்கிறார் அறக்கட்டளை நிர்வாகி சுந்தரேசன்.

காசியம்பதியில் பாய்ந்தோடுகிற கங்கையை, துர்வாச முனிவரின் சாப விமோசனத்துக்காக, இங்கே வரவழைத்த புண்ணிய ஸ்தலம் அல்லவா இது! எனவே, இதை காசிக்கு நிகரான திருத்தலம் என்றும், இங்கே உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரரையும் ஸ்ரீநந்திதேவரையும் வணங்கினால், விளைச்சலும் அமோகமாக இருக்கும், வியாபாரமும் செழிக்கும் என்றும் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்

விளைச்சலையும் வியாபாரத்தையும் பெருக்கி நமக்கு நன்மையை விளைவிக்கிற, நம்மை சிறக்கச் செய்கிற ஸ்ரீகங்காதீஸ்வரர் இப்படி வெட்டவெளியில் இருக்கலாமா? அவருக்கு சந்நிதி அமைப்பதற்கும், ஆலயம் அழகுறத் திகழ்வதற்குமான திருப்பணியில் நம்மால் முடிந்ததைச் செய்து, சிவனருளைப் பெறுவதுதானே ஒவ்வொரு சிவனடியாருக்கும் கிடைத்த மிகப்பெரிய பேறாக இருக்கும்?

காசிக்கு நிகரான கங்காபுரம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற, அந்தத் திருப்பணியில் நாமும் பங்கு கொள்வோம். கங்கையில் நீராடிய பலனும், காசியில் சிவ தரிசனம் செய்த புண்ணியமும் பெற்று நிம்மதியும் நிறைவுமாக வாழ்வோம்!

எங்கே இருக்கிறது?

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொழப்பலூர் அஞ்சலுக்கு உட்பட்ட கிராமம் கங்காபுரம். வேலூர் மாவட்டம், ஆரணியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும், சேத்பட் எனும் ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்தக் கிராமம். இங்குதான் ஸ்ரீபங்கஜவல்லி சமேத ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். ஆரணியில் இருந்தும் சேத்பட்டில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism