Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 46

ஆறெழுத்தந்தாதி!பி.என்.பரசுராமன்

ஞானப் பொக்கிஷம்: 46

ஆறெழுத்தந்தாதி!பி.என்.பரசுராமன்

Published:Updated:
##~##

ன்னிரு கைப் பரமன் எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பலவற்றிலும், படி உற்சவம் விமரிசையாக நடந்துகொண்டிருக்கும் நேரமிது. இந்த நேரத்தில்... ஆறுமுக வள்ளலைத் தரிசித்து, அவரிடமிருந்து அருள் உபதேசம் பெற்ற அகத்தியர் அருளிய, 'ஆறெழுத்தந்தாதி’ எனும் ஞானப் பொக்கிஷத்தில் இருந்து, ஒரு சில தகவல்களைப் பார்க்கலாம்.

ஆறெழுத்து உண்மை, யோக சாஸ்திரம் பற்றிய அபூர்வமான தகவல்கள் என நுணுக்கமான விஷயங்கள் அடங்கிய நூல் அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூட்சுமமான உபதேச உண்மைகள் நிறைந்த அந்நூலுக்கு, 70 ஆண்டுகளுக்கு முன்னால், அரிதான ஓர் உரை எழுதப்பட்டிருக்கிறது. 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்’ என்ற முன்னோர் வாக்குக்கு இணங்க, முதலில் உடம்பைச் சொல்லித் துவங்குகிறார் அகத்தியர்.

'உடம்பே ஆலயம்; நெஞ்சமே முருகன் அமரும் தங்கமயமான பீடம்’ என்பது அகத்தியர் வாக்கு.

எவ்வளவுதான் விலை உயர்ந்த கைபேசியாக (செல்போன்) இருந்தாலும், அதற்கு உண்டான இணைப்பு (சிம் கார்டு) இருந்தால்தான், அது நமக்குப் பலனளிக்கும். அதுபோன்று, என்னதான் படிப்பு, பதவி, பணம், சொத்து, சுகம் என ஆயிரம் இருந்தாலும், அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவை வேண்டுமென்றால், அவற்றை அளிக்கக்கூடிய ஆலயங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

ஞானப் பொக்கிஷம்: 46

அப்போதும், 'நம் உடம்பே ஆலயம்; நம் மனமே இறைவன் வந்து அமரும் தங்கமயமான பீடம்; நமது ஐம்புலன்களும் இறைவன் சந்நிதியில் ஒளிவிடும் தீபங்கள்’ என்ற எண்ணம் அழுத்தமாக வேண்டும். அதற்கு உண்டான நல்லவற்றைச் செய்யவேண்டும். அப்போதுதான் இறையருள் பரிபூர்ணமாகக் கிடைக்கும்.

இதை நமக்கு உணர்த்தும் விதமாகவே, 'உடம்பே கோயில்; உள்ளமே இறைவன் அமரும் தங்கப் பீடம்; புலன்களே விளக்குகள்’ எனக் கூறுகிறார் அகத்தியர்.

நெஞ்சே பொற்பீடம் நம்தேகம் சிவாலயம் - நீள் பொறிகள்
அஞ்சே இவை பெறும் ஆதரம்
(ஆறெழுத்தந்தாதி 12-ம் பாடல்)

இவ்வாறு செயல்பட்டால், முருகன் நம் உள்ளத்தில் வந்து குடியிருப்பார். ஆடுவார். 'சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தைத் தியானம் செய்பவர்களின் பழவினைகளை எல்லாம் இருந்த இடமே தெரியாமல் நீக்குவார். நரக வாதனையைப் போக்குவார். இவ்வாறான அனுபவசாலிகளுக்கு சீலம், தெளிந்த நல்லறிவு, வைராக்கியம், நல்வாழ்வு ஆகியவை கிடைக்கும் என வழிகாட்டுகிறார் அகத்தியர்.

ஞானப் பொக்கிஷம்: 46

கூடுவை அன்பர் உள் ஆலயமாம்
எனக் கூடியிருந்து
ஆடுவை நீ முருகோன்
ஆறு எழுத்தினை யாரொருவர்
நாடுவை நீ அவர் கன்மம்
தொடைத்து நரகு அரித்துப்
பாடுவை நீ என்று கண்டோர்
அடைவர் நற்புத்தி ஈதே     (ஆறெழுத்தந்தாதி 19-ம் பாடல்)

இந்தப் பாடலில், ஆலயம் என்ற சொல்லை அகத்தியர் உபயோகப்படுத்தி யிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஆலயம் வேறு; கோயில் வேறு. சுற்றுச் சுவர்கள், தீர்த்தக் கிணறு, பிராகாரங்கள், கொடி மரம் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆலயம். இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறையே கோயில்! நம் உடம்பு ஆலயம், உள்ளம் கோயில் எனக் கூறுகிறார் அகத்தியர். அற்புதமான இந்தப் பாடலுக்கு, அரிதான உரை வரையப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல்களில் சில...

உடம்பு ஆலயம் என்று சொல்லி யாயிற்று. அப்படியென்றால், ஆலயத்தில் பலவிதமான அமைப்புகள் இருக்கின்றன. அவையெல்லாம் (நம்) உடம்பில் உள்ளனவா?

'ஆம்! ஆலயத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் மனித தேகத்தில் உள்ளன’ என விவரிக்கிறது இந்நூல்.

ஆலயத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஸ்நான மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என ஆறு பகுதிகள் அமைந்துள்ளன. அந்த ஆறும் நம் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களையும் குறிக்கின்றன.

சரி... ஆலயத்தில் உள்ள பிராகாரங்கள் நம் உடம்பில் எப்படி, எங்கு இருக்கின்றன?

முதலாம் ஆவரணம் (பிராகாரம்) அன்னமய கோசம். 2-ம் ஆவரணம்- கர்மேந்திரியங்களும் பிராணனும் சேர்ந்திருப்பதான பிராணமய கோசம். 3-ம் ஆவரணம்- ஞானேந்திரியங்களும் மனமும் சேர்ந்த மனோமய கோசம். 4-ம் ஆவரணம்- ஞானேந்திரியங்களும் புத்தியும் சேர்ந்த விஞ்ஞானமய கோசம். 5-ம் ஆவரணம்- அந்தக்கரண விருத்தியும் ஆனந்தமும் கூடிய ஆனந்தமய கோசம்.

ஐந்து (பஞ்ச) கோசங்கள் எனும் இத்தகவல்களைப் பார்த்துவிட்டுக் குழம்ப வேண்டாம். இந்த ஐந்தையும் இணைத்துச் சுருக்கமாகப் பார்த்தால், சோற்றால் அடித்த பிண்டமான இந்த உடம்பும் உயிரும் இணைந்து உள்ளன. இந்த இரண்டில், உயிர் இல்லாமல் உடம்பு தனியாக இயங்க முடியாது; உடம்பு இல்லாமல் உயிரும் தனியாக இயங்க முடியாது.

இந்த இரண்டும் இணைந்து இருந்தாலும், கை- கால்கள் நன்றாக இருக்க வேண்டும். உடம்பின் அங்கங்கள் நன்றாக இருந்தாலும், நல்ல மனதும் நற்புத்தியும் இருந்தால்தான் ஆனந்தம் விளையும் ('பஞ்ச கோசம்’ எனச் சொல்லப்படுவதன் அடிப்படை உண்மை இதுவே!).

ஞானப் பொக்கிஷம்: 46

இவ்வாறான ஆனந்தத்தை அருளக் கூடியவர், ஆறுபடை வீடுகளில் எழுந்தருளியிருக்கிறார். அந்த ஆறு திருத்தலங்களையும் குறிக்கிறார் அகத்தியர்.

கந்தன் பரங்கிரி சீரலை
ஏரகம் காண் பல குன்று
அத்தன் தென்சோலை மலை
ஆவினன் குடி ஆறும் என்பர்
சித்தென் பதாய் என்னுள்
ஆதாரம் ஆறுவெவ்வேறு உருவாம்
பித்தனும் சருவ குருவாம்
சடாக்கரப் பேரொளிக்கே

(ஆறெழுத்தந்தாதி 36-ம் பாடல்)

தனிப்பெரும் தலைவரான முருகப் பெருமான் திருப்பரங்குன்றம், சீரலைவாய் எனும் திருச்செந்தூர், திருவேரகம் என்னும் சுவாமிமலை, குன்றுதோறாடல்என்ற பலகுடி எனும் ஆறு திருத்தலங்களிலும் எழுந்தருளி இருக்கிறார்.

இப்படி விரிவாக விவரிக்கும் இப்பாடலில், ஆறெழுத்துக் கடவுளான ஆறுமுகப் பெருமான் நம் உடலில் இருக்கும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங் களிலும் ஆறு விதமான வடிவங்களில் எழுந்தருளி இருக்கிறார் என்று யோக சாஸ்திர நூல்கள் கூறும் ஆழ்ந்த கருத்தையும் அகத்தியர் விவரிக்கிறார்.

மூலாதாரத்தில் விநாயகர்;
சுவாதிஷ்டானத்தில் பிரம்மன்;
மணிபூரகத்தில் திருமால்;
அனாகதத்தில் ருத்ரன்;
விசுத்தியில் சதாசிவன்;
ஆக்ஞையில் மகேஸ்வரன்.

இப்படி, ஆறு இடங்களிலும் ஆறு விதமான வடிவங்களில் முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கிறார் என்பதை 'ஆதாரம் ஆறு வெவ்வேறு உருவம்’ என்று குறிக்கிறார் அகத்தியர். யோக சாதனையைப் பற்றி இவ்வாறு தொடங்கிய அகத்தியர், யோக சம்பந்தமான பல தகவல்களை விரிவாகவே கூறுகிறார். யோகக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள், குறைந்தபட்சம் யோகா வகுப்பு நடத்தும் ஆசிரியர்களாவது கண்டிப்பாகப் படித்து உணர வேண்டிய தகவல்கள் அவை.

ஞானப் பொக்கிஷம்: 46

அதைத் தொடர்ந்து... அம்பிகையின் திருநாமங்கள் வரிசையாகப் பல பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தத் திருநாமங்களை அப்படியே வரிசையாக உச்சரித்து (மென்மையாகச் சொல்லி) மலர்களைத் தூவி, வழிபாடு செய்யலாம்.

பெண் கொடி மேய பரமாயி சிவாயி பிரணவத்தி
நண் கொடியே முருகாயி குகாயி நலமுடைய
பண் கொடியே என் உளமே இரவும் பகலும் விடா
தண் கொடி ஆதிசடாக்கரி ஈஸ்வரி அம்பிகையே
அம்பிகை ஐம்பத்தோர் அக்கரி உச்சரி அன்பர் தமை
தம்பிகை வெவ்வினைச் சங்கரி சூலி சரம் அசரம்
தும்பிகை ஐந்துடையான் தொழில்வாசி சுகந்தன் எனது
கும்பிகை அம்பரவல்லி சடாக்கரி குண்டலியே
குண்டலி பாரதி லக்குமி பார்வதி கோமளைப்பூ
மண்டலி சாம்பவி தேவி மநோன்மணி வாகினி ப்ர
சண்டலி காரிய காரி உகாரி சடாக்கரிமா
விண்டலி ஆண் பெண் இரண்டு உருவாய் நின்ற மின் ஒளியே
பராசத்தி உத்தமி பாசாங் குசத்தி பரஞ்சும்மா
நிராசத்தி நீறணி பூரணி காரணி நின்மலியாம்
வராசத்தி ஆதி வடுகாயி அட்ட வயிரவி நம்
தராசத்தி ருத்ரி சடாக்கரி நிட்களத் தாண்டவியே

(ஆறெழுத்தந்தாதி 55, 56, 57, 59-ம் பாடல்கள்)

அம்பிகையைப் பற்றி இவ்வாறெல்லாம் விவரித்த அகத்தியர், அம்பிகையின் அபூர்வமான பீஜாக்ஷர மந்திரங்கள், மூல மந்திரங்கள் ஆகியவற்றையும், இந்நூலில் பதித்து வைத்துள்ளார்.

101 பாடல்கள் கொண்ட அகத்தியரின் 'ஆறெழுத்தந்தாதி’ எனும் இந்த நூலுக்கு 1941-ல், விருத்தி உரை எனும் பெயரில் விரிவான விளக்க உரை வந்துள்ளது.

ஆறுமுகன் அடியார்கள் மட்டுமல்லாது, யோகா கலையில் ஆர்வமுள்ளவர்கள், மந்திர உபதேசம் பெற விரும்புபவர்கள், ஆறெழுத்துண்மையை அறிய விரும்புபவர்கள் என அனைவரும் படித்துணர வேண்டிய நூல் இது.

- இன்னும் அள்ளுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism