சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

சரண கோஷம் போடுவோம்!

ஐயப்ப மலர்கள்! வி.அரவிந்த் ஸுப்ரமண்யம், படங்கள்: கே.கார்த்திகேயன்

##~##

துர் வேதங்களும் போற்றுகின்ற ஸ்ரீமகா சாஸ்தாவின் பேரருளைப் பெறுவதற்கான எளிமையான, சுலபமான வழி... சரண கோஷம்தான்!

சரணம் சொல்லுகின்ற செயலைச் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். சாஸ்தாவை நோக்கிச் சொல்லப்படும் சரண கோஷம் தர்ம, அர்த்த, காம, மோட்சம் எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் ஒருங்கே தரவல்லது. செப்புவார் தமக்கு ஒப்பிலாத அருள் தருவது. இருசெவி கேட்போர் தமக்கும் ஐயனின் திருவருள் எனும் செல்வத்தைப் பெற்றுத் தந்து, கர்ம வினைகளை ஒழிப்பது.

ஆதித்யபுரி எனும் நாட்டில் வாழ்ந்த இரண்டு திருடர்கள், பல காலங்களாக வெகு சாமர்த்தியமாக கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். கொள்ளையடிப்பதில் கில்லாடிகளான அவர்கள், ஒருமுறை, அந்தத் தேசத்து அமைச்சர் வீட்டிலேயே திருட முற்பட்டார்கள். அப்போது அங்கிருந்த காவலாளிகள் அவர்களைப் பார்த்துவிட்டுக் குரல் எழுப்பினார்கள். பதறிப்போன திருடர்கள், அங்கிருந்து தப்பியோடினார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து ஓடி வந்தார்கள் காவலாளிகள்.

ஓர் ஊருக்குள் புகுந்த திருடர்கள், எல்லாத் தெருக்களிலும் பரபரவென ஓடினார்கள். அன்றைய தினம், உத்திர நட்சத்திர நாள். எனவே, இரவு நேரத்தில் சாஸ்தாவின் ஆலயங்களில் பக்தர்கள் கூடி, ஐயன் ஐயப்ப ஸ்வாமியின் பெருமைகளைப் பாடி, நாம சங்கீர்த்தனம் சொல்லி, சரண கோஷம் எழுப்பி, வழிபட்டார்கள். பிறகு, வழிபாடு முடிந்து தெருவில் கும்பலாக இறங்கி நடந்தார்கள். திருடர்கள் இருவரும் அந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்துகொண்டார்கள். ஐயனின் பக்தர்கள் போலவே சரண கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்களைக் கூட்டத்தில் இனம் கண்டறிந்து, மடக்கிப் பிடித்தார்கள் காவலாளிகள். அவர்களைக் கைது செய்து, அரசவையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

சரண கோஷம் போடுவோம்!

அந்த நாட்டு ராஜா ஸுதர்மன், கல்வியிலும் வீரத்திலும் தலை சிறந்து விளங்கினான். தவிர, சாஸ்தாவின் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், திவ்விய ஸித்திகள் சிலவற்றையும் பெற்றிருந்தான்.

அந்த இரண்டு திருடர்களையும் யானையைக் கொண்டு, தலையை இடறிக் கொல்லும்படி உத்தரவிட்டான். அதன்படி, மன்னனின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. உடன், சாஸ்தாவின் கணங்கள் தேவ விமானத்தில் வந்து, அந்த இரண்டு பேரின் உயிர்களையும் மரியாதையுடனும் அன்புடனும் ஏற்றி அழைத்துச் சென்றார்கள்.

இதைக் கண்டு குழம்பிப் போனான் மன்னன். ''என்ன இது..! இவர்கள் கொடிய கள்வர்களாயிற்றே! இவர்களுக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தது!'' என்று வியந்தான். வீட்டுப் பூஜையறைக்குள் சென்று சாஸ்தாவை மனதாரப் பிரார்த்தனை செய்து, தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.

மன்னனின் பக்தியை மெச்சி அவருக்குத் திருக்காட்சி தந்த சாஸ்தா, '''மன்னா! அவர்கள் இருவரும் கொடிய கள்வர்கள்தான். ஆனால், நேற்றிரவு காவலர்களிடம் இருந்து தப்ப நினைத்து, என் ஆலயத்துக்கு வந்து, பக்தர்களுடன் இரண்டறக் கலந்து, சரண கோஷம் செய்தார்கள். அந்தப் புண்ணிய பலத்தால், அவர்களின் முற்பிறவி பாவங்கள்கூட ஒழிந்து, என் லோகத்தை அடையும் பேறு பெற்றுவிட்டார்கள். சரண கோஷப் பிரியனான என்னை நோக்கிச் செய்யப்படும் சரண கோஷம் அனைத்து வினைகளையும் தீர்க்கவல்லது. வேண்டியதை அளித்து, வேண்டாதவற்றை அழிக்கவல்லது. எனவே, உன் தேசம் எங்கும் என் சரண கோஷம் எழும்படியாகச் செய்து, சுபிட்சத்துடன் வாழ்வாயாக!'' என அருளினார்.

அதைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்ட மன்னன், தன் நாட்டின் எல்லா ஊர்களிலும் பக்தர்கள் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை வணங்கவும், சரண கோஷங்கள் எழுப்பவும் வழிவகைகள் செய்தான் என்கிறது வரலாறு.

நாமத்தின் பலன்

சரண கோஷம் போடுவோம்!

தென் பாரத நாட்டை மணிபாலன் என்ற கொடுங்கோல் மன்னன் அரசாண்டு வந்தான். போர் வெறியும் பேராசையும் கொண்ட அவன், பல நாடுகளைப் போரிட்டு வென்று, அந்த நாட்டின் செல்வ வளங்களை அபகரித்து, அந்த மன்னர்களை அடிமைப்படுத்திப் பெருந்துன்பம் செய்து, அட்டூழியங்களில் ஈடுபட்டான்.

ஒருமுறை, மாளவ தேசத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் கேள்வியுற்று, அதன்மீது படையெடுத்துச் சென்றான் அவன். அப்போது மாளவ தேசத்தை ஆட்சி செய்த தர்மவானான அனந்த வர்மன், தனது சேனாதிபதியின் தலைமையில் படைகளைப் போருக்கு அனுப்பினான்.

மாளவ தேசத்தின் சேனாதிபதியாக இருந்த ஸத்யவந்தன், மஹா சாஸ்தாவின் பரம பக்தன். ஸதா ஸர்வ காலமும் ஐயனின் திருநாமத்தையே ஜபித்துக்கொண்டிருப்பான். போரில் ஈடுபடும்போதுகூட, 'மஹா சாஸ்தா’ என்று சொல்லிக்கொண்டே வாள் வீசும் அளவுக்கு,  ஐயப்ப ஸ்வாமி மீது மாசற்ற பக்தி கொண்டவன்.

அரசனின் உத்தரவைப் பெற்றதும், ஐயனை வணங்கிப் போருக்கு புறப்பட்ட ஸத்யவந்தன், மிக எளிதாக எதிரிகளை வென்றான். அவனுடைய படைகள் அளவில் சிறியதாயினும், மணிபாலனின் பெரும்படையை அது துவம்சம் செய்து அழித்தது.

ஸத்யவந்தனும் 'மஹா சாஸ்தா’, 'மஹா சாஸ்தா’ என்று ஐயனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே போர்க்களம் எங்கும் வலம் வந்து, எதிரிகளை வீழ்த்திக்கொண்டிருந்தான். அவனது வீரதீரத்தால் மணிபாலனின் பெரும் படை அழிந்து வீழ்ந்தது. மணிபாலனும் ஸத்ய வந்தனின் வாளுக்கு இரையாகிப் போனான்.

சரண கோஷம் போடுவோம்!

சில நாட்கள் கழித்து, மாளவ மன்னன் உறக்கத்தில் ஒரு கனவு கண்டான். அதில், போர்க்களக் காட்சிகள் தோன்றின. தென் பாரத வீரர்களும் மாளவ வீரர்களும் மோதிக் கொள்வதும், சேனாபதி ஸத்யவந்தன் போரில் தலைமை தாங்குவதும் தெரிந்தது. அவன், சாஸ்தாவின் நாமத்தை கூறிக்கொண்டே எதிரிகளை வெட்டி வீழ்த்துவதும், அப்போது இறந்தவர்களின் உயிர்களை தேவ கணங்கள் அங்கிருந்த ஓர் தேவ விமானத்தில் ஏற்றி அழைத்துச் செல்வதும் தெரிந்தது.

மேலும், மாளவ மன்னன் அதிர்ச்சியுறும் வண்ணம், கொடுங்கோல் மன்னனான மணி பாலனும் ஸத்யவந்தனின் கையால் தன் உயிரை இழந்து வீழ்ந்தபோது, அவனும் அந்தத் தேவ விமானத்தில் ஏறிச் செல்லும் காட்சியைக் கனவில் கண்டான். விழித்தெழுந்த மன்னன், தான் கண்ட கனவின் பொருள் புரியாமல் குழம்பியிருந்தான்.

அதையடுத்து ஒருநாள், நாரத மாமுனிவர் அவனுடைய அரண்மனைக்கு விஜயம் செய்தார். தவமுனிவரை வரவேற்று உபசரித்த மன்னன், தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.

நாரதரும், ''வேந்தே! உன் கனவொன்றும் அதிசயமானதோ குழப்பமானதோ அல்ல! உன் சேனாபதியான ஸத்யவந்தன், ஆதி முதல்வனும் பரம்பொருளுமான ஸ்ரீமஹா சாஸ்தாவின் திருநாமத்தை உச்சரித்தபடி,  எதிரி சேனைகளை அழித்தான். உயிர் பிரியும் தருணத்தில் அந்தப் பரமாத்மாவான மஹாசாஸ்தாவின் பெயரைக் கேட்டபடி உயிர் பிரிந்ததால், மணிபாலன் செய்திருந்த ஸகல பாவ வினைகளும் நீங்கி பரிசுத்தன் ஆகிவிட்டான். அந்தப் புண்ணிய பலமே அவனை சாஸ்தா லோகத்தை அடையும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறது'' என்று விளக்கினார்.

நாம பாராயண ப்ரீதன் ஸ்ரீசபரிகிரி சாஸ்தா. அவனின் திருநாமத்தை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வணங்குவோம்.

பிரசாத பலன்

ஆண்டவனின் பிரசாத மகிமையும் அளவிட முடியாதது. அவரது அருட்சக்தி நிறைந்த பிரசாதம், நம்புபவர்க்கு மட்டுமல்லாமல், நம்பாதவர்க்கும்கூட எண்ணிப் பார்க்கவும் இயலாத அளவுக்கு நன்மைகளத் தரவல்லது!

வித்யாமூர்த்தி என்ற பெயருடன், பெருமணம் என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ளார் சாஸ்தா. இந்த க்ஷேத்திரத்துக்கு திருவல்லக்காவு என்றும் பெயர் உண்டு. சாஸ்தாவின் அவதாரம் ஆனதும், குழந்தையைத் தன் வலக்கையில் எடுத்தார் ஈசன். அதன் நினைவாக இந்தத் தலம் 'திருவலம் கைகாவு’ என்றாகி, காலப்போக்கில் திருவல்லக்காவு என்றாகிவிட்டது.

சரண கோஷம் போடுவோம்!

இங்கு ஐயன் ஐயப்ப ஸ்வாமி, வேத பண்டிதர்களின் மத்தியில், வேதங்களின் அதிதேவதையாக, வேதகோஷப் பிரியனாக, வேத மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.

ஐயனின் ஆலயத்தில் பூஜை செய்து வந்த பட்டத்திரி வம்சத்தில், வாசுதேவன் என்றொரு சிறுவன் இருந்தான். சாஸ்தாவையே அனுதின மும் உள்ளார்ந்த பக்தியுடன் தொழுது வந்த பட்டத்திரியின் வம்சத்தில் பிறந்த அனைவரும் ஐயனின் அருளால் பரம்பரை பரம்பரையாகப் பேரறிவாளர்களாகவும், ஞான முதிர்ச்சி கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். ஆனால், எல்லோரும் ஏமாற்றம் அடையும் வகையில், வாசுதேவன் மட்டும் அறிவுக் கூர்மையற்றவனாகவே இருந்தான்.

ஆலயத்தில் பூஜை முறைகளைக் கற்றறிந்து, அதனைச் சரிவரச் செய்வதென்பது ஒரு அறிவாளியாலேயே முடியும். வேதநாயகனான சாஸ்தாவை ஆராதிக்க, வேத நெறி ஒரு முக்கியமான முறையாகும். என்ன முயன்றும் வாசுவின் கல்விக்கண் திறக்கவேயில்லை. ஆலய பூஜா முறைகளையெல்லாம் அவனால் படிக்க முடியவில்லை.

வாசுதேவனுக்கு வாக்கும் தெளிவாக அமையவில்லை. கிட்டத்தட்ட வாய் பேச முடியாதவனாகவே விளங்கிய அவன், தன் பெயரான வாசு என்பதைக்கூட 'வாது’ என்று கூறும் அளவுக்கே திறன் பெற்றிருந்தான். அனைவருமே அவனை 'வாது’ என்று கேலியா கக் கூப்பிட ஆரம்பித்தார்கள்.  

ஒருநாள், பாடசாலையிலிருந்தும் அவனைத் திருப்பியனுப்பிவிடவே, மனமொடிந்துபோன அவன் தாய், இனி எந்த மருத்துவராலும் அவனைக் குணப்படுத்த முடியாது என்று உணர்ந்தாள். இறுதியில் மஹா வைத்தியரான ஒருவர் மட்டுமே பாக்கி இருந்தார். அவள், அந்த வைத்தியரான சாஸ்தாவையே சரண் புகுந்தாள். ஞான ஸ்வரூபனான பகவான் ஒருவரால்தான் தன் மகனுக்கு நல்லறிவு தர முடியும் என்று மனமார நம்பியவள், அனுதினமும் அவனை ஆலயத்துக்கு அனுப்பி, ஐயனை வேண்டச் சொன்னாள். அப்படி அவன் தினமும் ஆலயத்துக்குச் சென்று சாஸ்தாவை வேண்டி வந்தால்தான் உணவு உட்கொள்ளலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். சாப்பாட்டில் மிகுந்த ஆசை கொண்ட வாசுதேவனும், அதற்காகவே அதிகாலையில் ஆலயத்துக்கு ஓடி விடுவான். தன் குறையைத் தீர்த்து வைக்குமாறு சாஸ்தாவைப் பிரார்த்திக்கவும் செய்தான்.

வருடங்கள் செல்லச் செல்ல, வாசு வளர்ந்து வந்தான். உணவுக்காக ஆலயத்துக்குப் போன வாசுவுக்கு அங்கிருந்த ஆண்டவனை ரொம்ப பிடித்துப் போனது. இவரைப் பார்க்க வந்தால், ஆலயத்தில் நிறையப் பிரசாதம் கிடைக்கிறது; இவரைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனால், அம்மாவும் நிறைய உணவு தருகிறாள் என்று சாஸ்தாவின் மேல் மிகுந்த அன்பு கொள்ளலானான்!

பக்தி என்பதும் அன்புதானே? அது எந்த வடிவில் இருந்தாலும் ஆண்டவன் ஏற்கத்தானே செய்வான்? பக்தி என்னதான் செய்யாது? அவ்யாஜ கருணாமூர்த்தியான சாஸ்தாவும் அவனுக்கு அருளத் திருவுளம் கொண்டார்.

ஒருநாள், வாசுவின் மூடத்தனத்தைச் சுட்டிக் காட்டி நண்பர்கள் எல்லோரும் அவனை கேலி செய்ய, வருந்திய அவன் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் ஓடினான். ஆனால், அவன் கால்கள் அவனை ஐயனின் ஆலயத்துக்கே கொண்டு வந்து விட்டிருந்தன.

அதிசயமாக அந்த நேரத்திலும் ஆலயம் திறந்திருந்தது. வாசுவுக்கு அனுக்ரஹம் செய்யத் திருவுளம் கொண்ட சாஸ்தா, அவனுக்குத் தன் பிரசாதமான வாழைப்பழத்தைக் கொடுத்துச் சாப்பிடும்படி அருளினார்.

வாசுதேவன் எந்த பூஜையும் செய்ததில்லை; தவமும் புரிந்ததில்லை; மந்திரமும் ஜபித்த தில்லை. ஆனால், ஆண்டவனின் ஓர் எளிய பிரசாதம் அந்த நிமிஷத்தில், அவனை மாபெரும் பண்டிதனாக்கியது.  அனைத்தையும் ஓதாமலே உணர்ந்தான் வாசு.

சரண கோஷம் போடுவோம்!

'வாது’ என்று வாய் குழறக் கூறியவன், வாசுதேவ பட்டத்திரியாக நின்று, வாழ்வளித்த வேத மூர்த்தியான சாஸ்தாவை வேத கோஷத் துடன் துதிக்கத் தொடங்கினான். அனைவரும் அதிசயித்து, ஸ்தம்பித்து நின்றார்கள். ஐயனின் பெருமையை உணர்ந்து  போற்றினார்கள். காசியிலுள்ள பண்டிதர்களும் அரசர்களும் பாராட்டும்படியாக பெரும் ஞானியாக விளங்கி, யுதிஷ்டிர காவியம் என்ற ஒரு காவியத்தையும் இயற்றினார் வாசுதேவ பட்டத்திரி. தன் வம்சாவளியினரையும் ஐயனின் சேவைக்கே பணித்தார்.

ஆண்டவனின் பிரசாத மகிமையை யாரால் அறுதியிட்டுக் கூற முடியும்? சாஸ்தாவின் ஓர் எளிய வாழைப்பழ பிரசாதம் மூடனான வாசுவை மட்டும் ஞானியாக்கவில்லை; வாசுதேவன் அந்தப் பழத்தைத் தின்னும் முன்பு, அதன் தோலை உரித்துக் கீழே போட்டான். அந்த

ஆலயத்தில் ஆண்டவனின் பூஜைப் பணிகளைச் செய்து வந்த வரசியார் என்கிற கோயில் பணிப் பெண் இதைக் கண்டு, அந்தத் தோலை எடுத்து உண்டாள். பகவானின் பிரசாதப் பழத்தின் தோலைத் தின்ற எழுத்தறிவில்லாத அந்தக் கோயில் பணிப்பெண் 'ஸ்ரீராமோதந்தம்’ எனும் ராமாயணத்தை இயற்றினாள்.

ஐயன் ஞான ஸ்வரூபனாக நின்று, அஞ்ஞானத்தை நீக்கி, அடியவர்க்கு மெய்யறிவு தந்தருள்கிறார்!

நீங்களும் ஐயனின் பதம் பணிந்து சரண கோஷம் எழுப்புங்கள். அவனது திருநாமத்தை அனுதினமும் சொல்லுங்கள். அமிர்தத்துக்கு நிகரான அவனது அருள்பிரசாதத்தை ஏற்று மேன்மை அடையுங்கள்.

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!