##~##

மொத்தமாக கோயிலாகவும், தனித்தனியே பார்க்கும்போது சந்நிதிகளாகவும் அமைந்திருக்கிற கட்டமைப்பு கொண்டவைதான் ஆலயங்கள். அங்கே, ஒவ்வொரு சந்நிதியில் நிற்கும்போதும் ஒவ்வொரு விதமான உணர்வு கிடைக்கும். அந்த அதிர்வுகள் நமக்குள் ஊடுருவுவதை உணரும்போது, ஒருவித பரவச உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அந்த சாந்நித்யத்தை நாம் உணர்ந்தாலும் உணராது போனாலும், நல்ல அதிர்வுகள் கொண்ட சந்நிதியில் சற்று நேரம் நின்று வருவதே மிகப் பெரிய பலம் சேர்க்கும் நமக்கு. உன்னதமான உரமாகும், நம் வாழ்க்கைக்கு!

எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் கோயிலில் உள்ள ஒவ்வொரு சந்நிதியிலும் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் நின்று, இறைத் திருமேனியைக் கண்ணாரத் தரிசித்து நகருங்கள். உங்கள் வாழ்க்கை மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி நகரத் தொடங்குவதை உணர்வீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இங்கே ஸ்ரீதெய்வநாயகி அம்பாளோட சந்நிதிக்கு வந்து நின்னுட்டா, எனக்கு நேரம் போறதே தெரியாது. என் நிலைமையைச் சொல்லி, குடும்ப விவரங்களைச் சொல்லி, தொழிலில் உள்ள கஷ்டங்களைச் சொல்லி, என் குறைகளைச் சொல்லி அன்பா, உரிமையா, நம்பிக்கையா அவளைத் தவிர வேற யார்கிட்ட நான் முறையிட முடியும்?'' என்கிறார் சந்திரசேகர். சென்னை, குரோம்பேட்டையில் வசித்து வரும் இவர், தோல் பொருட்கள் தயாரிப்பதற்கான கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார்.

குருவருள்... திருவருள்..! - 6

''பிசினஸ் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, வியாபாரத்துல எனக்குத் தொடர்ந்து அடி மேல் அடிதான்! நான் எந்த ஆர்டர் எடுத்தாலும், அதில் நஷ்டம்தான்! எவ்வளவு தொடர்பு இருந்தாலும், எத்தனை அனுபவம் இருந்தாலும், எத்தனை சாமர்த்தியம் இருந்தாலும், தொழில்ல ஜெயிக்கிறதுக்கு இதெல்லாம் போதாது; கடவுளோட கருணையும் அருளும் வேணும்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

இதோ... எழுச்சூர் கோயிலுக்கு வந்த முதல் தடவையே ஸ்ரீதெய்வநாயகி அம்பாள் சந்நிதியும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் சந்நிதியும் என்னை ரொம்பவே ஈர்த்தது. 'தொழில்ல முன்னேற ணும். வீடு- வாசல்னு செட்டிலாகி, குடும்பத்தோட நிம்மதியா, சந்தோஷமா இருக்கணும்’னு வேண்டிக்கிட்டேன். அடுத்த ரெண்டாவது மாசத்திலேயே நஷ்டம் வந்த நிலைமை மாற ஆரம்பிச்சு, மெள்ள மெள்ள லாபம் வரத் தொடங்கிச்சு. இப்ப அம்பாள் ஆசிர்வாதத்துல, சிவபெருமானின் பேரருளால, பிசினஸ் நல்லாப் போயிக்கிட்டிருக்கு. தாம்பரம் தாண்டி சொந்த வீடு கட்டிருக்கேன். எல்லாம் சிவன் போட்ட பிச்சை!'' என்று நெக்குருகச் சொல்கிறார் சந்திரசேகர்.

குருவருள்... திருவருள்..! - 6

ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து ஸ்ரீதெய்வநாயகி அம்பாளுக்குப் புடவை சார்த்துங்கள். அரளிப் பூமாலை சார்த்துங்கள். நெய்விளக்கு தீபமேற்றி மனதார வழிபடுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையுமே நடத்திக் கொடுத்து, உங்கள் வாழ்க்கையையே மலரச் செய்துவிடுவாள் ஸ்ரீதெய்வநாயகி அம்பாள்.

சென்னை, ஒரகடத்துக்கு அருகிலும், வாலாஜாபாத்துக்கு முன்னதாகவும் இருக்கிற எழுச்சூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீநல்லிணக் கேஸ்வரர் கோயிலில் இன்னொரு அதிசயமும் உண்டு. இங்கே வில்வம், ஏர் அழிஞ்சல், பெண் பனை மற்றும் கல்லாலமரம் என நான்கு ஸ்தல விருட்சங்கள் உள்ளன. பெண் பனையில் மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கைகூடும் என்றும், ஏர் அழிஞ்சல் மரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்துக்கொண்டால், சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்றும் பெண்கள் நிறைவுடனும் நிம்மதியுடனும் தெரிவிக்கிறார்கள்.

''இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், இழந்ததைப் பெறலாம் என்பது உறுதி! நன்றாகப் போய்க்கொண்டிருந்த எனது தொழில் ஒருகட்டத்தில் நஷ்டம், கடன், இழப்பு என்று தடுமாறியது. அந்த வேளையில்தான் எழுச்சூர் கோயில் பற்றியும், இங்கே உள்ள சங்கரமடத்தின் 54-வது பீடாதிபதியின் அதிஷ்டானம் பற்றியும் சிலர் சொன்னாங்க. அங்கே போயிட்டு வந்தா

குருவருள்... திருவருள்..! - 6

நல்லதொரு மாற்றம் நிகழும்னு சொன்னாங்க. அம்பாளுக்கு அரளி, சிவலிங்கத்துக்கு வில்வம், அதிஷ்டானத்துக்குக் காய்- கனிகள்னு வாங்கிட்டுப் போய், ஆத்மார்த்தமா பிரார்த் தனை பண்ணிக்கிட்டேன். இங்கே உள்ள விபூதி பிரசாதம் ரொம்பவே விசேஷம்! அந்தப் பிரசாதத்தை தினமும் என் நெத்தியில இட்டுக்கொண்டுதான் என் தொழிலை தினமும் தொடங்கறேன். அன்னிலேருந்து இப்ப வரைக்கும் என் தொழில்ல ஏறுமுகம் தான்; குடும்பத்துல எப்பவும் நிம்மதியும் சந்தோஷமும்தான்! மனசுல சின்னதா ஒரு வேதனையோ துக்கமோ எழுந்தாலும், சட்டுன்னு கிளம்பி எழுச்சூர் கோயிலுக்கு வந்துடுவேன். சந்தோஷம்னா, நன்றி சொல்லி ஒரு வழிபாடு; துக்கம்னா, அது சீக்கிரம் போகணுமேங்கற வேண்டுதல்! அவ்வளவுதான்... நம்ம வாழ்க்கையில நல்லதே நடக்கத் துவங்கிடும். மகிமைமிக்க இந்த விபூதிப் பிரசாதப் பொட்டலம் எப்பவும் என்னோடயே இருக்கும்'' என்று பூரிப்பு மாறாமல் சொல்கிறார் சண்முகசுந்தரம்.  

இப்படி, தொழிலில் முன்னேற்றம் கண்டு, வீடு- வாசல், மனைவி, குழந்தைகள் எனச் சிறப்புற வாழ்ந்து வரும் அன்பர்கள் ஏராளம்!

குருவருள்... திருவருள்..! - 6

''உண்மைதான். இங்கு விபூதிப் பிரசாதம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. ஒருமுறை, சிவ சந்நிதியில் இருந்த விபூதித் தட்டில் இருந்து ஒரு நாகம் ஊர்ந்து சென்று மறைந்ததைப் பார்த்தோம். பிறகு, அடிக்கடி இது போன்று விபூதித் தட்டில் நாகம் வந்து அமர்ந்து செல்வது வழக்கமாகிவிட்டது. 'விபூதிப் பிரசாத மகிமை’ன்னு எல்லாரும் இதைச் சொல்றாங்க. இந்த விபூதியை தினமும் இட்டுக்கொள்வதால், தீராத வியாதியும் தீரும்; சர்ப்ப தோஷம் நீங்கும்; உடம்பு ஆரோக்கியமாவும் புத்தி தெளிவாவும் இருக்கும். இன்னும் நிறைய மகத்துவங்கள் இருக்கு, இந்த விபூதிப் பிரசாதத்துல!'' என்கிறார் கோயில் திருப்பணி மற்றும் பூஜைகளைச் செய்து வரும் ராமமூர்த்தி.

முதலில், இங்குள்ள குளமும் கோயிலும் நம்மைக் கொள்ளை கொள்ளும். அடுத்து, அழகிய நந்தியும் யாகசாலை மண்டபமும் நம்மை ஈர்க்கும். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக பிராகாரப் பகுதி நீண்டிருக்க... உள்ளே நமக்கு அருள் வழங்கக் காத்திருக்கும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரின் பிரமாண்ட லிங்கத் திருமேனி நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும்.

அந்த ஏகாந்த தரிசனம் உங்களுக்கும் கிடைக்கட்டும். ஒருமுறையேனும் வந்து பாருங்கள்; எழுச்சூர் தலத்தின் இனிமையில் திளைப்பீர்கள்.

- அருள் சுரக்கும்

எங்கே இருக்கிறது?

சென்னை, தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஒரகடம். இங்கிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், எழுச்சூர் கிராமத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு உள்ளே பயணித்தால், ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரின் அற்புத ஆலயத்தைத் தரிசிக்கலாம். பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ மற்றும் காரில் வருவது நல்லது.

குருவருள்... திருவருள்..! - 6
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism