Published:Updated:

ஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..!

உபன்யாசம்... உன்னதம்! உபன்யாசத்தில் பலே வாங்கும் 15 வயது மகேஷ்இ.லோகேஸ்வரி

ஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..!

உபன்யாசம்... உன்னதம்! உபன்யாசத்தில் பலே வாங்கும் 15 வயது மகேஷ்இ.லோகேஸ்வரி

Published:Updated:
##~##

''பிருகு முனிவர் போன ஜென்மத்தில் பெருமாளின் திருமார்பில் எட்டி உதைத்தார். அங்கே வாசம் செய்து கொண்டிருந்த ஸ்ரீமகாலட்சுமி அதைக் கண்டு ஆவேசமானாள். அதையடுத்து என்ன செய்தாள் தெரியுமா? பிருகு முனிவரின் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு மகளாப் பிறந்து, அவரின் மார்பில் எட்டி உதைத்து, தன் கோபத்தையெல்லாம் தீர்த்துக் கொண்டாள்...''

மேடையில் உபன்யாசகர் தகுந்த ஏற்ற இறக்கங்களோடு இந்தக் கதையைச் சுவைபடச் சொல்லிக்கொண்டு இருக்க,  பார்வையாளர்கள் அத்தனை பேரும் மெய்ம்மறந்து அதை ரசித்துக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இப்படிக் கேட்பவர் களையெல்லாம் கட்டிப்போடும்படி உபன்யாசம் செய்தது, வயதில் மூத்த பெரிய வரோ, அனுபவத்தில் முதிர்ந்தவரோ அல்ல; இளங்கன்று. 10-ம் வகுப்பு மாணவன். அந்தச் சிறுவனின் பெயர், மகேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒல்லியான தேகம், தீட்சண்யமான பார்வை யுடன் துறுதுறுவென இருக்கும் சிறுவன் மகேஷ், இன்றைய தேதியில் உபன்யாச உலகில் வளரும் நம்பிக்கை நட்சத்திரம். சைவ, வைணவப் பாகுபாடுகள்

இன்றி, புராணங்களையும் கதைகளையும் விவரிப்பதில் சூரப்புலி! செல்லும் இடங்களிலெல்லாம், அவனுக்கு பாராட்டுகளும் ஆசிர்வாதங்களும் குவிகின்றன!

சென்னை, தாம்பரம் அருகில் வசித்து வரும் மகேஷைச் சந்தித் தால், நம்பவே முடியவில்லை... இந்தச் சிறுவன்தானா அப்படிக் கற்றோரும் மற்றோரும் வியக்கும் வண்ணம் உபன்யாசம் செய்கிறான் என்று! அப்படியரு பால்மணம் மாறா முகம்!

ஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..!

''வழக்கமா எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்களோட தாத்தா பாட்டிதானே கதை சொல்லுவாங்க! அதேமாதிரி, எனக்கும் என் தாத்தா நாகராஜன்தான் கதைகள் சொல்லி, வளர்த்தார். கதையைவிட அவர் சொல்ற விதம் ரொம்பவே நல்லாருக்கும். அப்படி அவரிடம் கேட்ட ஆர்வம்தான், இன்னிக்கு நிறையப் பேர் ரசிச்சுக் கேக்கும்படி என்னைப் பேச வைச்சிருக்கு'' என்று பெரிய மனுஷன் போல் பேசுகிறார் மகேஷ்.

''அப்ப நாங்க காஞ்சிபுரத்துல இருந்தோம். எனக்கு நாலு வயசு.  ஒருமுறை, குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்துற விதமா ஒரு போட்டி நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்டு, உபன்யாசம் செய்கிற பாணியிலேயே சில கதைகளைச் சொன்னேன். எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. அம்மா, அப்பா, தாத்தா எல்லாருக்கும் அதுல ரொம்பச் சந்தோஷம்.

காஞ்சிபுரத்துல, அடிக்கடி காமாட்சி அம்பாள் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்றது எங்க வழக்கம். அப்படி அடிக்கடி போகப் போக, அது ஒரு கோயிலா தோணலை எனக்கு! ஏதோ, நெருங்கின சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வர மாதிரி ரொம்பச் சந்தோஷமா இருக்கும். இந்தப் பாசம் பின்னாடி காமாட்சி அம்பாள் மேல பெரிய பக்தியாவே மாறிடுச்சு. ஒரு பேனா காணாம போனாலும் சரி, அதிக மார்க் எடுக்கணும்னாலும் சரி... உடனே அம்பாள்கிட்டதான் வேண்டிக்குவேன். அது, இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்துட்டிருக்கு!'' என்று சொல்லி நெகிழ்ந்த மகேஷ், தன் பேச்சைத் தொடர்ந்தார்...

ஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..!

''தாத்தா இறந்தப்புறம், அம்மாவும் பாட்டியும்தான் எனக்கு எல்லாமே! என் உபன்யாசத் துக்கு ஊக்கம் கொடுத்து, வழிநடத்துறதும் அவங்கதான். இதுல, அம்மாவுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கு. காஞ்சிபுரத்துலதான் முதன்முதலா உபன்யாசம் பண்ணினேன். அதுக்கு, காமகோடி மாமாதான் காரணம். எந்தப் புத்தகம் கேட்டாலும், அது எங்கே இருந்தாலும் தேடிப் பிடிச்சு உடனே வாங்கித் தந்துடுவார்.

சென்னைக்கு வந்ததும், குரோம்பேட்டை ராதாநகர்ல உபன்யாசம் செய்யும் வாய்ப்பு கிடைச்சுது. 'காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு’ன்னு பாரதியார் சொல்லியிருக்காரே... அதுபோல, காலைல படிப்பு, மாலை முழுதும் ஸ்லோகம், உபன்யாசம், புராணக் கதைகள்னு போயிட்டிருக்கு எனக்கு. தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும், நிறைய புராணக் கதைகளைப் படிச்சும் கேட்டும் தெரிஞ்சுப்பேன்!'' என்று உற்சாகமாகச் சொல்லும் மகேஷ், படிப்பிலும் கெட்டி!

''சி.ஏ. படிக்கணுங்கறதுதான் என் ஆசை, லட்சியம் எல்லாமே! நீங்க வேணா பாருங்க, இன்னும் பத்து வருஷத்துல சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட் துறையில மிகப் பெரிய ஆளா வருவேன்!'' என்று உறுதியோடு சொல்லிப் புன்னகைக்கிறார் மகேஷ்.  

ஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..!

ஸ்ரீநாராயணீயம், ஸ்ரீசௌந்தர்யலஹரி என்று எதை விவரிக்கச் சொன்னாலும் சட்டென்று விளக்குகிறார் மகேஷ். அம்பாளைப் பற்றிய உபன்யாசம் என்றால் இன்னும் லயிப்புடன் விவரிப்பார் என்று அவரின் அம்மா விஜயலட்சுமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். உபன்யாசத்துக்கு நடுவே, அதாவது கதை சொல்லும்போதே, சட்டென்று அந்தக் கதைக்குப் பொருத்த மான ஸ்லோகத்தை கணீர்க் குரலில் பாடுவது மகேஷின் ஸ்டைல்!

''அதற்கு, சசிரேகா டீச்சர்தான் காரணம். அவங்களால, இப்ப பாட்டுலயும் எனக்குப் பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. 2011-ல சிங்க பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவம். அங்கே நான் உபன்யாசம் பண்ணினது முழு நிறைவைத் தந்தது. இந்த மூணு வருஷத்துல, முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள்ல உபன்யாசம் பண்ணிருக்கேன். எனக்குப் பெருமாளையும் அம்பாளையும் ரொம்பவே பிடிக்கும். அதனால அவங்களைப் பத்தின உபன்யாச நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் அதிகமாவே பண்றேன். ஸ்கூல்ல, நானே சில புராண நாடகங்களை எழுதி, இயக்கியிருக்கேன். நானும் நடிப்பேன். தேவியின் திருவிளையாடல், ஸ்ரீஅபிராமி அம்பாள் பத்தின நாடகம் இரண்டுக்கும் நல்ல வரவேற்பு. இரண்டிலும் அபிராமிபட்டர் நான்தான்!'' என்று சொல்லும் மகேஷ்,  புத்தகம் படிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்.

''நான் உபன்யாசம் செய்வதைப் பார்த்து, என்னை உற்சாகப்படுத்திப் பாராட்டிய பெரியவர்கள் நிறையப் பேர். அவர்களில் முக்கியமானவர்கள் கீரனூர் ராமமூர்த்தி அவர்களும், திருச்சி கல்யாணராமன் அவர்களும்! தென்காசி ஆய்குடி அமர்சேவா சங்கத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக நான் செய்த உபன்யாசம்தான் எனக்கு மிகப் பிடித்தது; மனநிறைவைத் தந்தது!'' என்று நெகிழ்வுடன் சொல்கிறார் மகேஷ்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உபன்யாசம் செய்தபோது கிடைத்த ராதே கிருஷ்ண விக்கிரகத்தைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார் மகேஷ். ''என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் இந்தக் கிருஷ்ணாதான். எனக்கு ஏதாவது வருத்தமோ சோகமோ இருந்தா, உடனே இவர்கிட்ட சொல்லிடுவேன். சட்டுன்னு அதைச் சரி பண்ணிடுவார்....'' எனத் தன் சின்னச் சின்ன வேண்டுதல்களை ஸ்ரீகிருஷ்ணர் நிறைவேற்றித் தந்ததையும், சொல்லச் சொல்ல... அங்கே ஆரம்பமானது அடுத்ததொரு இனிய உபன்யாசம்!

இந்தத் துறையில் மேன்மேலும் ஜொலிக்க வாழ்த்துகள் மகேஷ்!

படங்கள்: எஸ்.வி.ஜெர்ரி ரெனால்ட் விமல்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism