மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?

கேள்வி பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

? மக்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் தற்காலத்தில், தத்துக் கொடுப்பதும் அதை முறிப்பதும் சாதாரண நடைமுறையாகி விட்டது. சாஸ்திரம் மற்றும் அறத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் தத்து, பிற்காலத்தில் ஏற்படும் சொத்துப் பிரச்னை, பாகப் பிரிவினை முதலான சூழல்கள் காரணமாக சட்டரீதியில் முறிந்துவிடுகின்றன.  இது சரியா? இதுகுறித்து விளக்குங்களேன்.

- ஆர். ஸ்ரீநிவாஸன், சென்னை

குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றால், ஓர் ஆண்குழந்தையைத் 'தத்து’ எடுப்பதுண்டு. வம்ச பரம்பரையைப் பாதுகாக்க தத்து எடுப்பார்கள். ஆண் குழந்தைக்குத் 'தத்து’ உண்டு. பெண் குழந்தைகளைத் தத்து எடுப்பதில்லை. பெண்ணை மணம் முடித்து வைப்பதால், அவள் வேறொரு குடும்பத்தில் இணைவதால் வம்ச பரம்பரையை அவள் வளர்க்க இயலாது. ஆகவே, பழைய அற நூல்கள் ஆண் குழந்தையைத் தத்து எடுக்கச் சொல்கின்றன; பெண் குழந்தைக்கு அது பொருந்தாது என்று சொல்லும்.

? தத்துக் கொடுப்பது குறித்து அறநூல்கள் காட்டும் நியதிகள், விளக்கங்கள் என்னென்ன?

ரத்த பந்தம் இருக்கும் குழந்தைகளுக்குத் தத்துக்கு முன்னுரிமை உண்டு. ரத்த பந்தம் இல்லையானாலும், தத்து உண்டு. 'தத்துக்குப் பத்து கைகள்’ என்ற சொல்வழக்கு உண்டு. குழந்தையை ஈன்றெடுத்த தாய்- தந்தையின் நான்கு கைகள், தத்தை ஏற்கும் பெற்றோரின் நான்கு கைகள், குழந்தையின் இரண்டு கைகள் எனப் பத்து கைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். குழந்தையின் தாய்- தந்தை இருக்க வேண்டும். தத்து பெறுபவர்களும் தாய்- தந்தையாக வாங்க வேண்டும். இரண்டு பெற்றோரும் மனமொத்து, அற நூல்கள் சொல்லும் சடங்கை நிறைவேற்றி, தத்தை உறுதி செய்யவேண்டும்.

தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?

? தத்து கொடுக்கப்பட்ட பிறகு, அந்தக் குழந்தையின் கோத்திரம், ரத்த பந்தம் என எல்லாமே மாறுமா? பெண் குழந்தைகளையும் தத்து எடுக்கிறார்களே..?

பெற்றோர், தங்களுடைய முதல் குழந்தையைத் தத்து கொடுக்கக் கூடாது. சடங்கு முடிந்ததும், குழந்தை தனது கோத்திரத்தைத் துறந்து, தத்து ஏற்பவரின் கோத்திரத்துடன் இணைந்துவிடுவான். அதில் ஒலிக்கும் வேத மந்திரமானது, ரத்த பந்தம் இல்லாவிட்டாலும் அந்த பந்தத்தை ஏற்படுத்தி, தத்து ஏற்கும் குடும்பத்துடன் இணைத்துவிடும். பெற்றெடுத்த பெற்றோர் தொடர்பான ரத்தபந்தம் இருந்தாலும், அது அறவே அறுபட்டுவிடும்.

குழந்தைக்கு வாய்ப்பில்லாத குடும்பங்கள், தங்களது வம்சம் இடையிலேயே அறுபட்டுப் போவதைத் தடுக்க, தத்து மூலம் வழி வகுத்துத் தந்திருக்கின்றன அறநூல்கள். ஆனால், இதை நெருக்கடி நிலையில் மட்டும்தான் செயல்படுத்த இயலும். ஆண் குழந்தை இருந்தும் ஆசைக்காக தத்து இல்லை; அறத்துக்காக தத்து. சட்டம் வழிவகுத்தாலும், அது அறத்தோடு இணையாது; ஆசைக்கானதாகவே இருக்கும். ஆக, பெண்ணைத் தத்தெடுப்பதையும் ஏற்கும்.

? தத்து என்பதை நிறைவு செய்வது எது? வேதங்கள் காட்டும் வழியில் முறைப்படி செயல்பட்டால்தான் 'தத்து’ பூர்த்தியாகுமா?

'தத்து’ அறம் சார்ந்த விஷயம். அறத்தின் தொகுப்பு வேதம். அது ஒலி வடிவில் தோன்றும். அதில் ஒளி இணைந்திருக்கும். அத்தனை தேவதைகளும் ஒளி வடிவில் வேத ஒலியில் ஒன்றி இருப்பார்கள்.

'ஒட்டுமொத்த தேவதைகளையும் ஒருங்கே வணங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், வேதம் குடிகொண்டிருக் கும் தூய்மையான மனம் படைத்தவனை வணங்கு’ என்கிறது வேதம் (வேத வித்ப்யோதிவேதிவே நமஸ்குர்யாத்). ஒலியும், ஒளியும் தூய்மையான ஆகாசத்தில் பரவியிருக்கும். நாம் எழுப்பும் தூசுகள் ஆகாசத்தில் படியாது. வெட்பதட்பமும்கூட ஆகாசத்தில் மாறுதலை ஏற்படுத்தாது. அப்படி ஏற்படும் வெளித்தாக்கமானது வேத ஒலியின் தொடர்பில் தூய்மை பெற்றுவிடும். பிற நதிகள் கங்கையில் இணைந்தாலும், கங்கையின் தூய்மை கெட்டுவிடாது. மனிதர்கள் வெளியிடும் அத்தனை மாசுக்களையும் சூரியனின் ஒளி தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறது. 'வேத ஒலி, ஒளி வடிவில் (சூர்ய வடிவில்) ஆகாசத்தில் பவனி வருகிறது’ என்கிறது வேதம் (வேதை: அசூன்ய: த்ரிபிரேதிசூர்ய:). தத்து நடைமுறைப்படுத்தும் வேளையில் வேத ஒலி முழங்கும். அதில் வெளிப்படும் ஒளி (தேவதைகள்) தத்து என்பதை நிறைவு செய்கிறது.

தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?

? இருதரப்புப் பெற்றோர்களும் சம்மதித்தால், தத்து முறிக்கப்படுவதில் தவறேதும் இல்லையே?

இரண்டு பெற்றோர்களும் சடங்கில் செயல்படுகிறார்களே ஒழிய தத்தை முடித்து வைப்பது தேவதைகள். அவர்களது உத்தரவில் இணைந்த தத்தை, நாம் தன்னிச்சையாக விடுவித்துக்கொள்ள இயலாது. நமக்கு அதில் அதிகாரம் இல்லை. தேவதைகள்தான் விடுவிக்கவேண்டும். தேவதைகள் விடுவிக்காது. ஏனென்றால், வேதத்தைக் காப்பாற்ற, அதன் வழியில் அறத்தை நிலைநாட்ட, ஒரு பரம்பரை உருவாவதற்கு மூலமாக தத்து இருப்பதால், தேவதைகள் அதை முறிக்க முயற்சிக்கமாட்டார்கள்.

ஒரு வேலையில் இணைவதற்கும் விடுபடுவதற்கும் நமக்கு உரிமை இருக்கும். வேலையில் அமர்த்துவதற்கும், விரட்டு வதற்கும் அரசுக்கு உரிமை இருக்கும்.ஆனால், அதுபோன்றது அல்ல இது. இது தேவதைகளின் விருப்பம். நமது விருப்பம் எடுபடாது. ஆகையால், தன்னிச்சையாக தத்தில் இணைந்த பிறகு, அதிலிருந்து விடுபட்டுத் திரும்புவது அதர்மம்; பாவம். அறத்தை நிலைநாட்டும் பரம்பரையைத் தானாகவே முறித்து, அறத்துக்கு முறிவை ஏற்படுத்தும் செயலால், தேவதைகள் அவன் வாழ்க்கையையே மறைமுகமாகப் பாதித்து தண்டனையை ஏற்க வைக்கும்.

உங்களின் கருத்தை ஏற்க முடியாது!

முடியரசு, அறநெறிகளைப் பின்பற்றும் சடங்குகளில் தலையிடாமல் இருந்திருக்கலாம். அந்த அரசுக்கு அறநெறிகளில் பற்று இருந்திருக்கலாம். தேவையில்லாத பகையைத் தோற்றுவிக்க வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கலாம். அது முடிந்து போன விஷயம். தற்போது குடியரசில் இணைந்திருக் கிறோம். குடிமகனின் விருப்பத்துக்குக் குந்தகமாக சட்டங்கள் இருக்கக்கூடாது.

? எனில், தத்துக் கொடுப்பதால் ஒருவனது தனிப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்படுகின்றன, என்கிறீர்களா?

ஆமாம்! தத்தில் இணைந்தான் ஒருவன். ஆனால், புதிய குடும்பத்தின் சூழல் அவனை விருப்பப்படி வாழ அனுமதிக்கவில்லை. பிறருக்கு உதவுவதற்காகத் தத்தை ஏற்றவன், தனது வாழ்க்கை சூனியமாவதை அறிந்தால், அதிலிருந்து அவன் வெளிவர உரிமை இருக்கவேண்டும். தத்து தனக்கே பகையாக மாறுவதையும் ஏற்றுக்கொண்டு, பிறருக்கு உதவி செய்வது என்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.

? தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்தினால், அற விஷயங்கள் அற்றுப்போய்விடுமே? திருமணம், வழிபாடுகளில் எல்லாம் சுய விருப்பு- வெறுப்பை உட்புகுத்தினால் என்னாவது?

வேத ஒலியின் வாயிலாக தேவதைகளின் அருளில் திருமணம் ஈடேறுகிறது. திருமண இணைப்பு கசப்பான அனுபவத்தை ஈட்டித் தருமானால், அவனை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். குடியரசு வேதத்தின் கட்டளையை முறியடித்து, விவாகரத்தை ஏற்படுத்தி, திருமணத்தை முறித்தது; புதிய திருமணத்தில் இணைய அனுமதி அளித்தது. விருப்பத்துக்கு ஏற்ப பலதடவை விவாகரத்தை சந்திக்கவும் வழி வகுத்தது.

விவாகரத்துக்கு எல்லையை நிர்ணயிக்க வில்லை. வேதமந்திரங்கள் ஓதாமலேயே பதிவுத் திருமணத்துக்கும் முன்னுரிமை அளித்துள்ளது. இன்னும் ஒருபடி மேலே போய், வேத மந்திரமும் ஓதாமல், பதிவுத் திருமணத்தையும் ஏற்காமல், விருப்பத்தில் தன்னிச்சைப்படி இணைந்து குழந்தைச் செல்வத்தை ஈன்றிருந்தாலும், அதற்கும் திருமண இணைப்புக்கான அந்தஸ்தை அளிக்கிறது குடியரசு. குடிமகனின் விருப்பம் சட்டமாக மாற வேண்டும். ஒருவன் தனது சுதந்திரம் பறிபோகாமல், தனது விருப்பப்படி இன்பத்தைச் சுவைக்க குடியரசு வழிவகுத்திருக்கிறது.

தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?

கோயில்களிலும் வேத ஒலி வாயிலாக, தேவதைகள் அருளில் இறையுருவத்தில் இறைவன் இணைந்திருக்கிறான். அதில், ஆகம கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, குடியரசுதான் அதன் பராமரிப்பை ஏற்று நடத்துகிறது. சேவை செய்யும் அர்ச்சகர்கள் குடியரசின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுச் \ செயல்படுகிறார்கள்.

தேவதைகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, 'விரும்பியவர்கள் சேவை செய்ய இணையலாம்’ என்ற மக்களது விருப்பம் அரங்கேறியிருக்கிறது.  

திருமணம், கோயில்கள் ஆகியவற்றில் ஏற்படும் கசப்பான அனுபவங்களில் சிக்கியவர்களை நீதிமன்றங்கள் காப்பாற்றி, வாழ்வளிக்கின்றன. ஆக, அறநெறிகளைச் சுட்டிக்காட்டி குடிமகனின் சுதந்திரத்தைப் பறிப்பது குடியரசில் நிகழக்கூடாது.

? அப்படியானால், மக்களின் விருப்பு- வெறுப்புக்கு ஏற்ற சட்ட திட்டங்களே சரி என்கிறீர்களா? ஏன் அப்படி?

இன்றையச் சூழலில் அறநெறிக்கு இடம் இல்லை. கலப்புத் திருமணம், ஓரினச் சேர்க்கை ஆகியவற்றையெல்லாம் ஏற்கிறோம். 'எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்’ என்ற கோட்பாடு குடியரசில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே, 'தத்து’ விஷயத்திலும் அதில் இணைந்தபிறகு, மீண்டும் அதிலிருந்து விடுபடுவது அவனது பிறப்புரிமை. எந்தத் தேவதைகள் அதை நடைமுறைப்படுத்தினாலும், பலனானது மக்களை வந்தடைவதால், மக்களின் விருப்பு- வெறுப்புகளே முடிவுக்குக் காரணமாக வேண்டும்.

மாறி வரும் விஞ்ஞான உலகுக்கு ஏற்றவாறு நம்மை இணைத்துக் கொள்ளும் பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆகையால், இணைந்ததில் இருந்து விடுபட, அவனுக்கு உரிமை இருக்க வேண்டும்.

உங்களுடையது, சுயநலத்தில் விளைந்த கருத்துக்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது!

பல நூற்றாண்டுகளாகக் கடைப் பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள், நன்மையை ஈட்டித்தரும் தரமான நடைமுறை கள், ஆழ்ந்த நம்பிக்கையில் வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள், நல்ல மரபுகள், மக்களின் விருப்பத்தைவிட அவர்களின் முன்னேற் றத்துக்கு உகந்த செயல்பாடுகள் அத்தனை யையும், 'ப்ராக்டீஸ்’ என்ற கோணத்தில், சட்டத்தின் விதிவிலக்காக ஏற்றுக் கொண்டிருக்கிறது குடியரசு.

? எனில் 'தத்து’ கொடுப்பதில் உள்ள பாதகங்களை புறந்தள்ளச் சொல்கிறீர்களா?

'தத்து’ என்பது பல்லாண்டு காலமாக சமுதாய முன்னேற்றத்தைக் கருதிக் கடைப் பிடிக்கப்படும் நடைமுறை. எந்தச் சட்டத்திலும் ஏதெனும் ஒரு சாராருக்கு பாதகமான அம்சம் இருக்கத்தான் செய்யும். எல்லோரையும் திருப்திப்படுத்தும் சட்டம் இருக்காது.

விவாகரத்திலும் இருவரில் ஒருவருக்கு பாதகமாக அமைவது உண்டு. விவாகரத் தானது ஏதுமறியா குழந்தைகளை அனாதை களாக்குவது உண்டு. அந்தக் குழந்தைகளின் பிறப்புரிமையை எவரும் கண்டுகொள்வது இல்லையே!

மந்திரம் வாயிலாக, தேவதைகளின் அருளில் இணையும் திருமணத்தை முறிப்பது, தேவதைகளை அலட்சியப் படுத்துவது ஆகும். அதேபோன்று, தத்தில் இணைந்த தேவதைகளை, அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் அவர்களை அதிலிருந்து கழற்றிவிடுவது, குடியரசு சட்டதிட்டத்துக்கு உட்பட்டது அல்ல. வேதக் கோட்பாடுகள், அறநெறிகள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தும் சட்டங்கள் ஏட்டில்தான் இருக்கும்; நடைமுறையில் இருக்காது. தேவதைகள் சட்டத்துக்கு பயந்து ஒதுங்கிவிட மாட்டார்கள்.

திருமணத்தை முறிக்கும் சட்டங்களை குடியரசு ஏற்குமே தவிர, அறம் ஏற்காது. அது அந்தத் திருமணத்தை முறியாததாகவே பார்க்கும். அவர்களில் ஏற்பட்ட ரத்த பந்தம், இயல்பு, பந்த பாசங்கள் ஆகியவற்றை சட்டத்தால் அழிக்க இயலாது.

தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?

? ஆக, தத்துக் கொடுத்துவிட்டு சட்டப்படி அதை முறித்துக் கொண்டாலும், அது முறிந்தது ஆகாது எனச் சொல்ல வருகிறீர்கள்?!

மிகச் சரியாகப் புரிந்துகொண்டீர்கள்! வேத ஒலி வாயிலாக வந்த இறையுரு வத்தை செயற்கையான சட்டதிட்டத்தால் மறைக்க முடியாது. ஆகம விதி மீறப் பட்டால், இறையுருவத்தில் இருந்து தேவதை வெளியேறிவிடும். நம்பிக்கையில் இறையுருவத்தில் இறையருள் இருப்பதாக நினைக்கலாமே தவிர, உண்மையில் அங்கு தேவதா சாந்நித்தியம் இருக்காது. இறைவன் இருப்பதாகப் பாசாங்கு வேண்டுமானால் செய்யலாம்!

தினமும் வேத ஒலி எழுப்பி வழிபாடு நிகழும். உத்ஸவர் வீதி உலா வரும்போது, வேத ஒலி முழங்கும். கோயில் வளாகத்தில் வேத பாராயணம் நிகழும். இப்படி வேத ஒலியோடு இணைந்துதான் எல்லா நடைமுறைகளும் ஈடேறும்.

வீதி உலா வரும் வேளையில் விருப்பம் இல்லாத காட்சிகளால், விருப்பம் இல்லாத நடைமுறைகளால் சாந்நித்தியத்துக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், உத்ஸவம் முடிந்த பிறகு, வெளியேறிய தேவதையைக் குடியிருத்த 'ஸம்ப்ரோக்ஷணம்’ நடைபெறுவது உண்டு. இன்றைக்கு ஆகமங்கள் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில், பல கோயில்களில் இறையுருவம் உண்டு; ஆனால், சைதன்யம் இல்லை.

சட்டத்தால் சைதன்யத்தை வரவழைக்க இயலாது. வேதம் சொன்ன காரியத்தை வேதம்தான் வரையறுக்க வேண்டும். இப்போது, நடப்பதெல்லாம் நாடகம். திருமணத்தை முறித்துவிட்டோம் என்று பாசாங்குதான் செய்ய இயலும். அதுபோன்றுதான் 'தத்து’ விஷயத்திலும்! சட்டப்படி தத்து முறிந்தது என்று பாசாங்கு செய்யலாம். அறத்தின் அடிப்படையில் தத்து முறிவு ஆகாது.

தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

சட்டத்துக்கு ஒரு வரம்பு உண்டு. பண்புக்கும் நாட்டின் பெருமைக்கும் ஆதாரமான அறநெறி நடைமுறைகளைச் சட்டத்தால் மாற்றியமைப்பது பண்பல்ல. பண்பு அகன்றால் எல்லாம் போய்விடும். சட்டங்கள் அழிப்பதற்காக இருக்கக்கூடாது; ஆக்கம் அளிப்பவையாக இருக்கவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

 வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.