Published:Updated:

தேரோடும் வீதியிலே...!

வி.ராம்ஜி

தேரோடும் வீதியிலே...!

வி.ராம்ஜி

Published:Updated:
தேரோடும் வீதியிலே...!
##~##

'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்!’ கம்யூனிஸத்தின் மிகப் பெரிய சித்தாந்தமாகவும், ஒற்றுமையைச் சொல்லுகிற அறைகூவலாகவும் இருந்த வரிகள் இவை! ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே, அப்படியரு சத்திய வாசகத்தை, தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லியிருக்கிறது. நூற்றாண்டுகள் கடந்தும் பலப் பல தலைமுறைகள் உருவாகியும் அந்த வார்த்தை மாறவில்லை; மறக்கவில்லை. இன்னமும் எல்லோராலும் சொல்லப்பட்டு வருகிற அந்தச் சத்திய வார்த்தை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஊர் கூடித் தேர் இழுப்போம்!’

'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார்கள் முன்னோர்கள். சாந்நித்தியம் மிகுந்திருக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கே கோயில்களை நிர்மாணித்து, சுற்றிலும் குடியிருப்புகளை உருவாக்கி, நகரம், கிராமம் என்றெல்லாம் அமைத்துத் தந்தார்கள் மன்னர் பெருமக்கள்.

கோயிலை அடையாளம் காட்ட, கோபுரம் எழுப்பினார்கள்; மிகப் பெரிய மதில் சுவரைக் கட்டினார்கள். 'கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்’ என்று சிலிர்த்தார்கள்.

''கோயில் இருக்கிற ஊர்லதான் குடியிருக்கோம். ஆனா, வீட்டு வாசல்லேருந்து கோபுரம் தெரியலையே? கோயிலுக்குப் போனாத்தான் கோடிப் புண்ணியம்; கோபுரத்தைப் பார்த்தால்தான் கோடிப் புண்ணியம். ஆனால், படுத்த படுக்கையா இருக்கிற என்னால கோயிலுக்குப் போய் சாமி தரிசனம் பண்ண உடம்புல தெம்பு இல்லியே...'' என்று ஏங்குகிறவர்கள் பலர் உண்டு. ஓர் எட்டுக்கூட வெளியில் எடுத்து வைக்க இயலாத முதியவர்கள் உண்டு.

அவர்களும் கோடிப் புண்ணியம் பெறுவதுதானே நியாயம்?

தேரோடும் வீதியிலே...!

அதற்குக் கோயிலே நகர்ந்து வந்து வாசலில் தரிசனம் கொடுத்தால்தான் உண்டு. கோயில் நகருமா? தரிசனம் கொடுக்குமா? கொடுக்கும்; கொடுக்க வேண்டும்.

அதற்கொரு வழிமுறையைக் கண்டுபிடித்தனர் நம் முன்னோர்கள்.இளைஞர், முதியோர், உடல் நலிவுற்றவர் என எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் கோடிப் புண்ணியம் பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் அவர்கள் உருவாக்கிய ஓர் அமைப்புதான் 'தேர்’. கடல், மலை, யானை, ரயில் போல தேரும் எத்தனை முறை பார்த்தாலும் பிரமாண்டம்தான். அதிசயம்தான்!

அலுக்கவே அலுக்காத, சிலிர்க்கச் செய்கிற, பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுகிற ஒரு வைபவம் தேரோட்டம்!

தேர் என்பது ஒரு வாகனம் மட்டுமே அல்ல; கோயிலில் குடிகொண் டிருக்கும் உத்ஸவ மூர்த்தியை அழைத்துக்கொண்டு வீதியுலா வருகிற பிரமாண்ட வண்டி மட்டுமே அல்ல! ஆகமங்கள், அதை 'நகரும் கோயில்’ என்றுதான் வர்ணிக்கின்றன.

தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத் தலத்தில், 1118 முதல் 1136 வரை ஆட்சி செய்த விக்கிரம சோழன், கோயில் திருப்பணியின்போது, 'நகரும் கோயில்’ என்றே குறிப்பிடுகிறான்.  'அம்பலம் நிறைந்த சிவனார்க்கு, செம்பொன் வேய்ந்தது’ என்று குறிப்பிட்டுள்ளான்.

'அதீக்ஷிதானாம் தூர்தானாம்
பக்ஷிணாம் ம்ருகதாருகம்
பக்தானாம் தீக்ஷிதானாஞ்ச
ஸர்வேஷாம் ஸம்ஹ்ருதிப்ரதம்’
என்கிறது உத்தர காரண ஆகமம்.

தேரோடும் வீதியிலே...!

அதாவது, கோயில் என்பது, அசைவற்றி ருப்பது. தேர் என்பது அதற்கு மாறாக, நகரும் கோயிலாகத் திகழ்வது. தீட்சை பெற்றவர்கள், தீட்சை பெறாதவர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள்... ஏன், நாத்திகர்கள் உள்பட உலகின் எல்லா உயிர்களும் கோயிலைத் தரிசிக்க வேண்டும், கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பார்வை அவர்கள் அனைவரின் மீதும் விழவேண்டும், அனைவரும் அவனருளைப் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்கிற பாரபட்சமற்ற நோக்கத்திலேயே தேரோட்டம் நடத்தப்படுகிறது.

தேரோட்டம், தேர்த்திருவிழா, ரதோத்ஸவம் என்றெல்லாம் இதைச் சிறப்பித்துச் சொல்வார்கள்.

தேரைச் செலுத்துவதற்கு ஒரு சாரதி தேவை. ஜீவாத்மாவாகிய நம்மைச் சாரதியாக இருந்து, பரமாத்மா வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரு கடும் தபஸ் என்னவெல்லாம் தருமோ, மிகப் பெரிதான உபாஸனை எதையெல்லாம் நமக்கு வழங்குமோ, அவை அனைத்தும் தேரோட்டத்தின்போது தேரினையும், அதில் உலா வரும் இறைவனையும் தரிசித்தால் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தேரோடும் வீதியிலே...!

உத்ஸவம் என்பதற்கு சிருஷ்டி என்று அர்த்தம். ஸவம் என்றால் வெளிவருதல் என்று பொருள் (குழந்தை உள்ளிருந்து உலகுக்கு வெளிவருவதால் பிரசவம் என்கிறோம்). கோயிலும் கோயிலுக்குள் இருக்கிற சைதன்யமும் (சக்தி) நம்மை சிருஷ்டித்த இறை சக்தியின் குறியீடுகள். இறைவன், கருணாமூர்த்தி அல்லவா! கருவறையில், அவன் வீட்டில், மிகுந்த சாந்நித்தியம் பொங்கக் காட்சி தருகிறான். அங்கே இறைத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன; பூஜைகள் நடைபெறுகின்றன; அலங்காரங்கள் செய்யப்பட்டு, நறுமணப் பொருட்களால் தீப- தூப ஆராதனைகள் அனைத்தும் குறைவற நடைபெறுகின்றன. அந்தச் சக்தியின் அதிர்வலைகளை உள்வாங்கிக்கொண்டு, அனைத்து உயிர்களும் உய்யவேண்டும் என்பதற்காகவே ரதோத்ஸவம் எனும் வைபவம் சிறப்புற நடத்தப்படுகிறது.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்கிரஹம் என ஐந்து விஷயங்கள் உண்டு. நம் கர்மவினையைப் போக்குவதற்குச் சரீரம் தேவை. அந்த சரீரத்தைக் கொண்டுதான், இந்த ஜென்மத்தில் பயணிக்கிறோம். ஸ்திதி என்பது நிலை; சம்ஹாரம் என்பது போக்குதல்; திரோபாவம் என்பது மறைத்தல். அதாவது, நம்மை இந்த உலகுக்குக் கொடுத்த இறைவன், பிறகு அவனே திரும்ப எடுத்துக் கொள்கிறான். அனுக்கிரஹம் என்பது பலாபலன்கள். நம் சரீரத்தைக் கொண்டு, நம் கர்மவினைகளையெல்லாம் போக்கி ஒரு நிலைக்கு வந்த பிறகு, திரும்பவும் நம்மைத் தன்னிடம் அழைத்துக்கொண்டு, நமக்கு மோட்சத்தைத் தருகிறான் இறைவன். ரதோத்ஸவம் என்கிற வைபவத்தை எவர் ஒருவர் தரிசிக்கிறாரோ, அவரின் கர்மவினைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்கின்றன ஞானநூல்கள். காரணம், தேரில் மேலே சொன்ன இந்த ஐந்து அம்சங்களும் உள்ளன.

தேரோடும் வீதியிலே...!

''முதல் அடுக்கு, நடாசனம், விஸ்தார மட்டம், தேவாசனம், சிம்மாசனம் என ஐந்து கட்டமைப்புகளைக் கொண்டது ஒரு தேர். கால் தேர், அரைத் தேர், முக்கால் தேர், முழுத் தேர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் சொல்வார்கள். முழுத் தேர் என்பதில், விஸ்தார மட்டம் என்கிற பகுதி மட்டுமே இருபத்தேழரை அடி உயரம் கொண்டதாக இருக்கும். திரிபுரத்தை எரிப்பதற்காகச் சிவனார் ஒரு தேரில்தான் கிளம்பினார். திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு ஆவேசத்துடன் திரும்பியவர், அந்தத் தேரினையும் எரித்து அழித்துவிட்டார் என்கிறது புராணம். அந்தத் தேர் மட்டும்தான் முழுத்தேர். ஆகவே, தமிழகத்தில் முழுத்தேர் என்பதே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். திருவாரூர் தேரினை, ஆழித்தேர் என்பார்கள். ஆனால், அந்தத் தேரின் விஸ்தார மட்டமானது இருபத்து ஆறேகால் அடி வரை மட்டுமே இருக்கிறது. ஆனாலும், ஆரூர்த் தேரின் பிரமாண்டம் இன்றைக்கும் வியக்க வைக்கும்'' என்கிறார் ஸ்தபதி வரதராஜன். பெரம்பலூர், அரும்பாவூரில் சிற்பக்கூடம் வைத்துள்ளார் இவர்.

''விஸ்தார மட்டத்தில் வாத்தியக்காரர்கள், பூஜை செய்வோர் என அமர்ந்திருப்பார்கள். தேவாசனம் என்பது தேவர்களுக் கானது. சிம்மாசனம் எனப்படும் பகுதியில், இறைவனின் உத்ஸவத் திருமேனி அலங்கரிக்கும். சிவாலயத்துக்கான தேர்கள் சைவ ஆகமத்துக்கு உட்பட்டும், பெருமாள் கோயில்களில் வைணவ ஆகமங்களுக்கு உட்பட்டும் செய்யப்படும்'' என்கிறார் வரதராஜன்.

'பிறந்தால் முக்தி’ என்று போற்றப்படுவது திருவாரூர் திருத்தலம். ஆழித்தேர் கொண்டிருக்கிற அற்புதமான க்ஷேத்திரம் இது. ''இந்தத் தலத்துக்கு வந்து மெய்யுருகிப் போன அப்பர் சுவாமிகள், 'ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று பாடுகிறார்'' என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். அதாவது, ஆழித்தேரில் இருந்தபடி சிவனார், அப்பர் பெருமானுக்குத் திருக்காட்சி கொடுத்தாராம்.

தமிழகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களில் தேர்கள் உள்ளன. அவற்றில் பல கோயில்களில், தேர்கள் இருந்தும் இல்லாத நிலை. சக்கரங்கள் ஒடிந்து போய், தேர்ப் பாகங்கள் கழன்று, மரங்கள் எல்லாம் விட்டுப் போய், பரிதாபமாகக் காட்சி தருகின்றன.

தேரோடும் வீதியிலே...!

திருநெல்வேலியில் உள்ள செப்பரைக் கோயிலில், சுமார் 30, 40 வருடங்களுக்கு முன்பு தேர் எரிந்துவிட, பல காலமாக அந்தத் தேர் புதுப்பிக்கப்படாமலேயே இருந்தது. செப்பரைத் தேரோட்டம் நெல்லை மாவட்டத்தில் சிறப்புற நடைபெறும் ஆலயங்களில் ஒன்று. நல்லவேளையாக, தேர் செப்பனிடப்பட்டு, கடந்த சில வருடங்களாக அங்கே தேரோட்டம் நடைபெறுகிறது.

அவ்வளவு ஏன்... ஆரூர் எனப் புகழப்படும் திருவாரூரில்  ரொம்பக் காலம் தேரோட்டம் நடை பெறாமலே இருந்தது. தேர் செப்பனிடும் பணிகள் நடக்காமல் முடங்கியே கிடந்தன. கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, தேர்ப்பணிக்காக நிதி ஒதுக்கிக் கொடுத்தார். அதையடுத்து தேர்ப் பணிகள் மளமளவென நடந்து, இன்றளவும் திருவாரூரின் நான்குமாட வீதிகளில் அசைந்து அசைந்து கம்பீரமாக வீதியுலா வந்துகொண்டிருக்கிறது ஆழித் தேர்.

ஆயிரம் வருடங்கள் கடந்தும் அனைவரும் அதிசயிக்கிற விதமாக, அத்தனை பிரமாண்டமாக, அவ்வளவு நேர்த்தியாகத் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறானே ராஜராஜ சோழன்... அப்படியெனில், அந்தக் கோயிலுக்கான தேர் எத்தனை பிரமாண்டமாக இருந்திருக்கும்?

''ஆமாம். பிரமாண்டமான தேர் ஒன்று தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்தது உண்மைதான். கோயிலிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள தேர்முட்டி, தேர் இருந்ததை உறுதி செய்கிறது. ஆனால், 250 முதல் 300 வருடங்களாகவே பெரிய கோயிலில் தேர் இல்லை என்கிறது வரலாறு'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவிக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சைப் பெரிய கோயில் திருத்தேர்ப் பணிக்காக 60 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது.

''என் வாழ்நாளில், இதுவரை 31 கோயில்களுக்குத் தேர் செய்திருக்கிறேன். திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலுக்காக முதல் தேர் செய்தேன். அதையடுத்து ஆவுடையார்கோவில் முதலான பல ஊர்கள், பல கோயில்கள், பல தேர்கள். இதோ... ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு தேர் செய்யும் பணி எனக்குக் கிடைத்துள்ளது. இது என் பூர்வ ஜென்மப் புண்ணியம்!'' என்று சொல்லி நெகிழ்கிறார் ஸ்தபதி வரதராஜன்.

1,150 கன அடி கொண்ட இலுப்பை மரம், ஒண்ணே முக்கால் டன் எடை கொண்ட இரும்பு, 231 முக்கியச் சிற்பங்கள், போதியல்கள் எனப்படும் 225 சிற்பங்கள்... ஆக மொத்தம் 450-க்கும் மேற்பட்ட சிற்பங்கள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பெருவுடையார், ரிஷபம், உமாமகேஸ்வரர், ஏகபாதர், கண்ணப்ப நாயனார், நால்வர், கருவூரார், சித்தர்கள் என தஞ்சைப் பெரியகோயிலைக் குறிப்பிடுகிற சிற்பங்களுமாக, மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது பெரிய கோயில் தேர்.

தேரோடும் வீதியிலே...!

''சக்கரத்தின் உயரம் ஆறரை அடி; அச்சின் நீளம் பதினாலரை அடி. சக்கரமும் அச்சும் சேர்ந்து, சுமார் நாலரை முதல் ஐந்து டன் எடை இருக்கும். சக்கரத்தை, திருவாரூர் தேர்ச் சக்கரத்தைச் செய்து கொடுத்த திருச்சி பெல் நிறுவனம் செய்து வருகிறது. கடந்த ஆறேழு மாதங்களாக சுமார் 17 முதல் 20 பேரைக் கொண்டு தேர்ப் பணிகள் நடந்து வருகின்றன. அநேகமாக, வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்ப் பணிகள் முழுமை அடைந்துவிடும்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் வரதராஜன்.

பொதுவாக, இலுப்பை மரத்தில்தான் பெருமளவு தேர்கள் செய்யப்படுகின்றன. காரணம், இந்த மரத்துக்கு எண்ணெய்ப் பசைத் தன்மை உண்டு. வேங்கை, சந்தனம் ஆகிய மரங்களுக்கும் இந்தத் தன்மை உள்ளது. இந்த மூன்று மரங்கள் வெடித்தாலும், விரிசல் விட்டாலும், சில நாளில் கூடுகிற தன்மை கொண்டவை. அதாவது, ஓரிடத்தில் விரிசல் ஏற்பட்டால், சில நாளிலேயே அந்த இடம் மீண்டும் இணைந்து ஒட்டிக்கொள்ளுமாம்! இதன் உறுதித் தன்மையும் குறையவே குறையாது; காலம் கடந்தும்கூட அப்படியே நிற்கும் என்கின்றனர்.

''தமிழகத்தில் பல கோயில்களில் இலுப்பை மரத்தால் ஆன தேர்களே உள்ளன. திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி ஆகிய தலங்களில் உள்ள தேர்கள் மிகப் பிரமாண்டமானவை. இதேபோல திருவாரூர்த் தேருக்கும் திருச்சி லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோயிலில் உள்ள தேருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு.

அதாவது, ஒரு கோயில் என்றால், முதலில் கோபுரம், அடுத்து பலிபீடம், கொடிமரம், நந்தி... அதையடுத்து முன்மண்டபம், மகா மண்டபம், கருவறை என்றெல்லாம் இருக்குமல்லவா? தேர் என்பது நகரும் கோயில் என்று பார்த்தோம். ஆகவே, அதற்கேற்ப ஒரு கோயிலின் அமைப்பு முழுவதும் திருவாரூர்த் தேரிலும், லால்குடி தேரிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன'' என்கிறார் ஸ்தபதி வரதராஜன்.

தேரோடும் வீதியிலே...!

முசுகுந்தச் சக்கரவர்த்தியை ஏமாற்று வதற்காக, தியாகராஜரின் உத்ஸவத் திருமேனி போல ஆறு திருமேனிகள் செய்து, ஒன்றாக வைத்தான் இந்திரன். ஆனால் முசுகுந்தச் சக்கரவர்த்தி, ஏழில் உண்மையான திருமேனியை மிகச் சரியாக அடையாளம் காட்டினார். 'அடடா..!  சிறந்த சிவபக்தன் நீ. இந்த ஏழும் உன்னிடமே இருக்கட்டும்’ என அந்த ஏழு திருமேனிகளையும் அவரிடமே கொடுத்தான் இந்திரன். அந்த ஏழு திருமேனிகளையும் ஏழு தலங்களில் வைத்து வணங்கினார் சக்கரவர்த்தி. அவற்றைத்தான் இன்றைக்கு 'சப்த விடங்க தலங்கள்’ எனப் போற்றி வணங்குகிறோம். முன்னதாக, ஏழு திருமேனிகளையும் ஆகாயத்தில் இருந்து எடுத்துக் கொண்டு, தேரில்தான் பறந்து வந்தாராம் மன்னர்.  திருவாரூர் கோயில் விதானத்தில் அந்தத் தேர், மன்னர், ஸப்த தியாகராஜர்கள் என அனைத்தும் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளதை இன்றைக்கும் பார்த்து ரசிக்கலாம். அப்படியே, கோயிலுக்கு அருகில் உள்ள மனுநீதிச் சோழன் தேர்க்கால் மண்டபத்தையும் பாருங்கள்.

திருவாரூர்க் கோயிலைக் கற்றளியாக, கருங்கல் கோயிலாக மாற்றினான் ராஜேந்திர சோழன். அதற்குக் காரணமாகவும், அந்தப் பணிகள் சிறப்புற நடப்பதற்குப் பேருதவி யாகவும் இருந்தவர் பரவை நாச்சியார். அவளின் விருப்பப்படி, அதைப் பின்னர் பொற்கோயிலாகவே அமைத்தானாம் மன்னன். கோயில் கும்பாபிஷேகத்தின் போது, பரவைநங்கையாரைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து, அவளைப் பெருமைப்படுத்தினானாம் ராஜேந்திர சோழன்.

தேரோடும் வீதியிலே...!

''திருவாரூர் ஆழித்தேர் அசைந்து வருகிறபோது, பாரிநாகஸ்வரம் எனும் வாத்தியக் கருவியை வாசிப்பார்கள். ரொம்ப உயரம் அது. மிகவும் தம் பிடித்து வாசிக்கவேண்டும். அதை வாசித்தால், மொத்த திருவாரூருக்குமே கேட்குமாம் நாகஸ்வர இசை! அதேபோல், 'கொருகொட்டி’ எனும் தாள வாத்தியம், சின்ன சட்டி மாதிரி இருக்கும். அதன் வாய்ப்பகுதியில் தோல் கட்டப் பட்டிருக்கும்.  இதை இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு தேரில் அமர்ந்தபடியே வாத்தியக்காரர்கள் வாசிக்கும்போது, கேட்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும்'' என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

ஆரூர் என்றதும் தியாகேசரும் திருத்தேரும் நினைவுக்கு வருவது போல, சுந்தரரும் சட்டென்று கண் முன்னே வந்து நிற்பார்! அந்தக் காலம் துவங்கி, இன்றளவும் நான்கு வீதிகளிலும் ஆழித் தேர் வரும் போது, சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் மட்டுமே பாடப்படும் என்பது சுந்தரருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தனிப் பெருமை! மரபு மாறாமல் இன்றைக்கும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

''தேர் என்பது, நகரும் கோயில்! ஆனால், கோயிலையே தேர் போல பாவித்துக் கட்டியிருக் கிறார்கள் மன்னர்கள். இதை 'கரக்கோயில்’ என்பார்கள். அதாவது, தேர்ச்சக்கரங் கள் அமைக்கப்பட்டு, அதன் மேலே கோயில் சந்நிதிகள் கட்டப்பட்டிருக்கும். பார்த்தால் அவற்றின் அழகில் சொக்கிப் போய்விடுவோம். சிதம்பரம் அருகே மேலக்கடம்பூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில், கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயில், தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில், பழையாறை கோயில் ஆகியவை இப்படித் தேர் உருவில் கரக்கோயில்களாக அமைத்துள்ளன. கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீநடராஜர் குடிகொண்டிருக்கும் மண்டபம், ஆகாசத் தேர் வடிவில் உள்ளது. இரண்டு சக்கரங்களும், இரண்டு குதிரைகளும் பூமியில் கால் படாமல், ஆகாயத்தில் பறந்து வருவதை உணர்த்துகிற சிற்பம் கொள்ளை அழகு!'' என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

தேரோடும் வீதியிலே...!

மதுரை, நெல்லையப்பர் கோயில், காஞ்சி வரதர், ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், தேனி வீரபாண்டி எனப் பல ஊர்களிலும் கோலாகலமாக நடைபெறுகிறது தேரோட்ட வைபவம். காளையார்கோவில் ரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருவண்ணாமலையில் உள்ள தேரும் வெகு அற்புதம்!

தேவகோட்டைக்கு அருகில் உள்ள கண்டதேவி கோயிலின் தேர், ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக்கொண்டு, கடைசியில் ஓடவே ஓடாது! பாகுபாடுகள், அதனால் ஏற்பட்ட வாக்குவாதங்கள், அந்த வாக்குவாதத்தில், 'தேரே ஓட வேணாம், போ’ என எப்போதும் பரபரப்பும் பதற்றமுமாக இருக்கும் கண்டதேவி கிராமத்தில் தேரோட்டம் நடைபெறவேண்டும், அதைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று இன்றைக்கும் மனம் உருகிப் பிரார்த்திக்கிறார்கள், ஆலயத்தில்! 'ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்பதை வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல், உண்மையாகவே சாதி வித்தியாசமின்றி, ஆண்- பெண் பாகுபாடின்றி, ஆண்டவனின் முன்னே அனைவரும் சமம் என அனைவரும் பக்தர்கள் என்ற கோட்டில் நின்று, வடம் பிடித்து இழுத்தால்... தேரோட்டம் அங்கேயும் மிகச் சிறப்பாக நடைபெறும்!

தேரோடும் வீதியிலே...!

'முத்தைத் தரு பத்தித் திருநகை...’ எனத் திருப்புகழ்ப் பாடலைத் தொடங்கிய அருணகிரிநாதர், 'பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே!’ என்று பாடுகிறார்.

அதாவது, நம் உடல்தான் தேர்; தேருக்குள் இருக்கிற ஆன்மா இறைவனை நோக்கிப் பயணிக்கிறது; இறைவனும் அந்த ஆன்மாவை, தன் திருவடியில் சேர்த்துக் கொள்கிறான். அதுதான் மோட்ச கதி!

'ராத்ரி சூர்ண ஸமாயுக்தம் ரதாரோஹணமேவ ச:’ என்கிறது அகோர சிவாச்சார்யர் - க்ரியா க்ரம த்யோதிகா எனும் நூல். உத்ஸவங்கள், குறிப்பாக ரதோத்ஸவங்கள் அவற்றுக்கு உரிய க்ரியையின்படி, ஆகம விதிகளின்படி நடைபெற வேண்டும். அப்படித் தேரோட்டம் நடந்தால், அந்த ஊர் சிறக்கும். காடு- கரையெல்லாம் நிறைந்திருக்கும். அங்கே, பூமியில் போட்டதெல்லாம் பொன்னாகும்.

அந்த ஊரில் ரதோத்ஸவத்தைத் தரிசிக்க வரும் அத்தனை பேரின் இல்லங்களிலும் சுபிட்சமும் சாந்தமும் குடிகொள்ளும். இறை எனும் சக்தி, எல்லா வீடுகளுக்குள்ளேயும் வியாபித்திருக்கும்.

எந்தக் கோயிலில் தேரோட்டம் நடந்தாலும், தரிசிக்கப் பாருங்கள். தேரோட்டம் எங்கெல்லாம் நடக்காமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் தேர் ஓடுவதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமோ, அதை அவசியம் செய்யுங்கள்!

தேரோடும் வீதியிலே...!

கோயில்களும் அவற்றில் உள்ள சிற்பங்களும் எப்படி நம் கலாசாரப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றனவோ, அதற்குச் சற்றும் குறையாத பெருமை கொண்டவை தேர்கள். அவை புனிதம் நிறைந்தவை. அவற்றின் மீது கரிக்கட்டையால் கிறுக்குவது, கத்தியால் சுரண்டுவது போன்று தகாத காரியங்களைச் செய்யாமல், அவற்றை நம் கண்ணெனப் பாதுகாப்பது நம் கடமை!

ஊர் கூடி ஒற்றுமையாய் தேர் இழுப்போம், வாருங்கள்!

படங்கள்: கே.குணசீலன், எல்.ராஜேந்திரன், பா.கந்தகுமார், முத்துராஜ், செ.சிவபாலன், பா.காளிமுத்து, சக்தி அருணகிரி, ரங்கராஜன், எஸ்.சாய் தர்மராஜ், ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism