Published:Updated:

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

மண் மணக்கும் தரிசனம்... பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஜே.வி.நாதன், படங்கள்: உ.பாண்டி

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

மண் மணக்கும் தரிசனம்... பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஜே.வி.நாதன், படங்கள்: உ.பாண்டி

Published:Updated:
##~##

பரமக்குடி மேவும் பண் முத்தாலம்மன்
வரமலர்த் தாள்பணிந்தோர் மன்னும் - அரதனங்கள்
எல்லாம் மிகப்பெற்று இன்புற்று வாழ்வார்கள்
எல்லாரும் போற்ற இனிது.

                                 - திருமுருக கிருபானந்தவாரியார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரின் மத்தியில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்பாள். 'ஊருக்கே காவல் தெய்வம் எங்கள் முத்தாலபரமேஸ்வரி’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் பரமக்குடி பக்தர்கள், அம்பாள் இங்கே கோயில் கொண்ட வரலாறும் உன்னத மானது எனச் சிலாகிக்கிறார்கள்.

பரமக்குடி ஆயிர வைசிய, மஞ்சப்புத்தூர் சைவ வைணவ செட்டியார் சமூகத்துக்குப் புராதன பாத்தியப்பட்ட இந்தக் கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆயிர வைசியர்கள் பூர்வீகமாக, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர் கள். வணிகத்தில் சிறந்த இந்த ஊர், ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்தது. அப்போது சோழ மன்னன் ஒருவனுக்கு அபூர்வமான ரத்தின, முத்து மணிகள் கிடைத்தன. அவற்றைக் கோத்து மாலையாக்கி அணிய ஆசைப்பட்டான் மன்னன். எனவே, நகருக்குள் நகை வியாபாரம் செய்து வந்த ஆயிர வைசியர்களின் தலைவரை அழைத்து, அவரிடம் அந்த அபூர்வ மணிகளைக் கொடுத்து மாலையாக்கித் தருமாறு ஆணையிட்டான்.

மணிகளை வாங்கி வந்தவருக்குச் சவால் ஒன்று காத்திருந்தது. அவை முடக்கு மணிகள்; அவற்றில் துளையிடுவது கடினம். பிறகு, எப்படி மாலையாகக் கோக்க முடியும்? வியாபாரி கவலை கொண்டார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள்; மிகவும் புத்திசாலி. தந்தையின் நிலைமையை அறிந்தவள், தான் உதவி செய்வதாகக் கூறினாள். வியாபாரியோ பூரண நம்பிக்கை இல்லாமல், மணிகளை அவளிடம் ஒப்படைத்தார்.

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

அன்று இரவு அந்தப் பெண், மணிகளை சிறு சிறு இடைவெளிவிட்டு வரிசையாக்கி வைத்தாள். இடைவெளிகளில் இனிப்பைப் போட்டுவைத்தாள் (அதாவது ஒவ்வொரு மணிக்கும் முன்னும் பின்னுமாக). இனிப்பைத் தேடி வரும் எறும்புகள் வேறெங்கும் கலைந்து சென்று விடாதவாறு மாற்று வழிகளை அடைத்துவிட்டாள். மறுநாள் காலையில் பார்த்தபோது, மணிகள் அனைத்தும் எறும்புகளால் துளைக்கப்பட்டிருந்தன. பிறகென்ன... அவள் மணிகளைக் கோத்து மாலையாக்கித் தர, வியாபாரி மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்று, மன்னனிடம் கொடுத்தார்.

மாலையை அணிந்து பெருமிதப்பட்ட மன்னன், ''இது எவ்வாறு சாத்தியமாயிற்று? முடக்கு மணிகளில் துளையிடமுடியாதே?'' என்று கேட்டான். வியாபாரியும் தன் மகளின் புத்திசாலித்தனத்தை விவரித்தார். அதைக் கேட்டு வியந்த மன்னன், அவளை மணக்க விரும்பினான். வியாபாரி திகைத் தார். உடனே பதில் சொல்ல இயலாமல் வீட்டுக்குத் திரும்பினார். அவருடைய மகளோ மன்னனை மணப்பதற்கு விரும்ப வில்லை. அவளை இழுத்து வரும்படி காவலர்களை ஏவினான் மன்னன். ஆனால், அவள் தீ வளர்த்து, அதில் பாய்ந்து, அருட்சக்தியோடு கலந்தாள்.

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

இந்தச் சம்பவம், காவிரிப்பூம் பட்டினத்தில் வசித்த ஆயிர வைசியர் குடும்பத்தவர் அனைவருக்கும் பெரும் துயரை ஏற்படுத்தியது. உதவி செய்த பெண் உயிர் துறக்கக் காரணமான மன்னனின் நாட்டில் இனி ஒரு நொடிகூட வசிக்கக்கூடாது என முடிவுசெய்தார்கள். எனவே, தீக்குளித்த தெய்வமகளின் சாம்ப லுடன் சோழ தேசத்தை விட்டு வெளியேறினர்.

தென்பாண்டி நாட்டுக்கு வந்து சேர்ந்தவர்கள், வைகை நதியின் தென்கரையில்... பிரம்மபுரி என்று அழைக்கப்பட்டதும், சக்திதேவி சிவலிங்கம் வைத்து வழிபட்ட தலமுமான பரமக்குடி நகரில் குடியேறினர். தாங்கள் கொண்டு வந்த சாம்பலைக் கொண்டு, சக்தியின் அம்சமாகிய ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்பாளை ஸ்தாபித்து ஆலயம் எழுப்பி வழிபடலாயினர்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன்  திருக்கோயில். அழகு மிளிரும் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், வளைவான விதானத்துடன் ஒரு மண்டபம். அதற்கடுத்து ஸ்ரீகருப்பண்ணசாமி சந்நிதி. இதன் தூண் வேலைப்பாடுகள் கலைநுட்பத்துடன் திகழ்கின்றன. இந்த சாமிக்கு விழாக் காலங்களில் பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.

கருப்பண்ணசாமியைத் தரிசித்து நகர்ந்தால் கொடிமர மண்டபம், அலங்கார மண்டபம், ஸ்ரீவிநாயகர் சந்நிதி ஆகிய வற்றைத் தரிசிக்க முடிகிறது. இந்த இடத்தில் இருந்து மேற்கே ஸ்ரீபோத்திராஜாவும், ஸ்ரீமார்த்தாண்டி அம்மனும் வடக்கு நோக்கி அருள்கிறார்கள். அம்மன் உக்கிரமாகக் காட்சி தருகிறாள். ஸ்ரீபோத்திராஜா கிராமக் காவல் தெய்வமாகப் போற்றப் படுகிறார்.

இவர்களைத் தரிசித்து கருவறை நோக்கி சென்றால், அனுக்கை விநாயகர், துவார சக்திகள், திரௌபதி ஆகியோர் காட்சி தருகிறார்கள். அம்பாள் கருவறை அர்த்தமண்டபத்துடன் திகழ்கிறது. இந்த மண்டபத்தில் ஸ்ரீமுத்தாலம்மனின் புதிய, பழைய உற்ஸவ விக்கிரகங்களும், ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீபலிநாயகர் ஆகியோரின் உற்ஸவ விக்கிரகங்களும் உள்ளன.

கருவறையில் ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி, ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலைத் தொங்கவிட்டபடியும் அமர்ந்திருக்கிறாள். அம்பாளின் திருக்கரங்களில் கத்தி, கபாலம், உடுக்கை, சூலம் ஆகியவை திகழ்கின்றன. இந்த அம்பாள் பூணூல் அணிந்திருப்பது விசேஷ அம்சம். அடியார்களுக்கு அருள்மாரி பொழியும் கருணைத் தாயாகவும், துஷ்டர் களுக்கு பயங்கரியாகவும்  திகழும் அம்பாளின் திருமுக தரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கருவறையின் மேற்குப்புறத்தில் ஆதி முத்தாலம்மன் மற்றும் நாகர்கள் சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தின் இறுதியில் மேற்கு நோக்கி பைரவரும், அவருக்குப் பின்புறம் ஸ்ரீஆஞ்சநேயர் தெற்கு நோக்கியும் அருள்கின்றனர்.

ஆலயத்துக்கென சிறந்த வேலைப் பாடுகள் அமைந்த தேரும் உண்டு. திருவிழாக் காலங்களில் மின்சார தீப அலங்காரங் களுடன் இரவில் அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆலயத்தில் வெள்ளி ரதமும் உண்டு. அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், கட்டணம் செலுத்தி வெள்ளிரதப் பவனியில் கலந்துகொள்கிறார்கள்.

'பங்குனி உற்ஸவப் பெருவிழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும்’ என்கிறார் ஆலய நிர்வாக அறங்காவலர் எஸ்.பால சுப்ரமணியன்.

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

''பங்குனி 9-ம் நாள் தேர்ப்பவனி நடக்கும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள். 11-ம் நாள் பாற்குட உற்ஸவம். சுமார் 7000 பேர் பாற்குடமும், அக்னிச் சட்டியும் ஏந்திக்கொண்டு, இந்த உற்ஸவத்தில் கலந்து கொள்வார்கள்.

மாசி சிவராத்திரியும் இங்கே விசேஷம்! அன்றிரவு, கரகம் எடுத்தல் வைபவம் தரிசிக்கவேண்டிய ஒன்று. ஆடியிலும் புரட்டாசியிலும் மழை, விவசாய மேம்பாடு வேண்டி 'முளைக் கொட்டுத் திருவிழா’ சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி 9 நாட்களும் அம்மன் அலங்கார சொரூபியாய் காட்சி தருவாள்!'' என்கிறார் இவர்.

ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மனை நினைத்து எந்தக் காரியத்தை வேண்டிக் கொண்டாலும், அது குறைவின்றி நிறைவேறுமாம். வாரம்தோறும் வெள்ளிக் கிழமை காலை 10:30 மணிக்கு 2,000 லிட்டர் பால் கொண்டு அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பம்சம்!

அம்மை நோய் கண்ட பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதுடன், அபிஷேகப் பால் மற்றும் தீர்த்தம் பெற்றுச் செல்கிறார்கள். இந்தப் பிரசாதங்கள் அம்மை நோய் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேற்று மதத்தவர்களும் இங்கு வந்து அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றுச் செல்வது கூடுதல் சிறப்பு!

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

ஸ்ரீமுத்தாலம்மன் அடியார்களுக்கு அல்லவை நீக்கி, நல்லதை அனுக்கிரகம் செய்கிறாள் என்றால், தீய சக்திகளை துஷ்ட நிக்கிரகம் செய்து அன்பர்களைக் காத்தருளும் உக்கிர சக்தியாகத் திகழ்கிறாள் ஸ்ரீமார்த்தாண்டி அம்மன்.

''தீச்சட்டி ஏந்துதல், வேல் குத்தி வழிபடுதல், குழந்தை பிறந்ததும் கரும்புத் தொட்டில் கட்டி வழிபடுதல் என ஸ்ரீமார்த்தாண்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வரம்பெறுகிறார்கள் பக்தர்கள்'' என்கிறார் பாலசுப்ரமணியன்.

ஆலய அர்ச்சகரான குமார் குருக்களிடம் பேசினோம். ''ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி மிகவும் கருணை வாய்ந்தவள். கஷ்டப்படும் மனிதர்கள் எவராயினும், தம்மிடம் வந்து முறையிடுவோருக்கு அருளை வாரி வழங்கு வதில் அவளுக்கு நிகர் அவளே!

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

குழந்தை வரம், வேலை வேண்டுவோர், திருமண பாக்கியமின்மை என எந்தக் குறையுடன் வந்தாலும் பரிபூரண அனுக்கிரகம் செய்யும் அன்னை இவள். அம்மை நோய் கண்டவர்கள் அம்பாளின் அபிஷேகப் பிரசாதம் அருந்தினால், ஒரே வாரத்தில் குணம் நிச்சயம்.

கார்த்திகை மாதம் செவ்வாய் சாட்டு உற்சவம் எட்டு நாட்கள் நடைபெறும்.அப்போது, அனைத்துப் பரிவாரங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்வோம். இரவு 10 மணிக்கு ஊர் எல்லையில் உள்ள குத்துக்கல் முனீஸ்வரருக்கு பெரும்பூஜை எனப்படும் படையல் நடைபெறும். பின்னர், கருப்பண்ண சாமிக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, விளக்குகள் அணைக்கப்பட்டு, மேற்கு மூலையில் பலிப்பொருட்கள் (பூசணி, எலுமிச்சை, குங்குமம்) வானில் தூக்கி வீசப்படும். அவை கீழே விழாமல் ஆகாயத்தில் மறைந்து போவது ஓர் அற்புதம்தான்! இந்த பலி பூஜை ஊர் மக்களுக்கு அம்மை, வெக்கை நோய்கள் வராமலிருக்கவே நடத்தப்படுகிறது!'' என்கிறார் குமார் குருக்கள்.

வாய்ப்புக் கிடைத்தால் பரமக்குடிக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். கருணை தயாபரியாய் வரம்வாரி வழங்கும் ஸ்ரீமுத்தால பரமேஸ்வரியை வழிபட்டு, வாழ்வில் முன்னேற்றமும்  முதல்நிலையும் பெற்றுச் சிறக்கலாம்.

திந்திரிணி விருட்சத்தில் அனுமன்!

ரமக்குடியின் மையத்தில் ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி கோயில் கொண்டிருக்க, வைகை நதிக் கரையில் தெற்கே கோயில் கொண்டிருக்கிறார்கள் ஸ்ரீஅனுமனும் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமியும். இடப்புறம் சீதா, வலப்புறத்தில் இலக்குவன் சகிதம், கையில் கோதண்டத்துடன் ஸ்ரீராமன் சந்நிதி கொண்டிருக்க, அருகிலேயே அனுமன் சந்நிதியுமாகத் திகழ்கிறது ஆலயம்.

ஒரு கையில் சஞ்ஜீவி பர்வதமும், மற்றொரு கையில் கதாயுதமும் தாங்கியருளும் அனுமனுக்கு ஸ்ரீசஞ்ஜீவி அனுமன் என்று திருப்பெயர். மிகச் சிறிய மூர்த்திதான் என்றாலும், கீர்த்தி மிகுந்தவர். இவர், 'திந்திரிணி விருட்சம்’ என்று சொல்லப்படும் புளியமரத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு, கேட்பவருக்கு கேட்ட வரத்தை அருளும் கற்பக விருட்சமாக அருள்புரிகிறார் அனுமன். இவருக்கு 'மரமாகி நின்றருளும் மாருதி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கற்சிலை விக்கிரகம் கிடையாது. சுவரில் அமைந்த வெள்ளிப் பிரதிமைதான்,

இங்குள்ள புளியமரம் 300 வருடங்கள் பழைமையானது. இந்த மரத்தின் கிளைகள் வானோங்கி உயர்ந்து வளர்ந்தாலும், ஆலய வளாகத்தை விட்டு வெளியே செல்லாதாம். அதேபோன்று, இந்த மரம் பூக்கும்; ஆனால், காய்க்காது என்கிறார்கள். ஒருவேளை, அபூர்வமாகக் காய்த்தாலும், அவை கனி ஆகாது. இந்த மரத்தில் எவரும் இதுவரை புளியம்பழத்தையே பார்த்ததில்லையாம்!

அருமருந்தாகும் அபிஷேக தீர்த்தம்!

இந்த விருட்சத்தின் இலைகளுக்கு மருத்துவ குணம் இருப்பதாகவும், பல நோய்களைக் குணப்படுத்த வல்லது என்றும், இது ஊர் மக்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீங்காத செல்வத்தையும் கொடுத்து மக்கள் உள்ளத்தைப் புனிதமாக்குவதாகவும் ஐதீகம். ஸ்ரீராமநவமி, அனுமன் ஜயந்தி ஆகியவை இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

பங்குனி அமாவாசையில் இருந்து 8-ம் நாள் 'பாயஸ கட்டளை’ என்றொரு விழா நடைபெறுகிறது. அன்று புத்திரகாமேஷ்டி யாகம் நடைபெறும். அன்று, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பக்தர்கள் 150 ரூபாய் கட்டணம் செலுத்தி, இந்த யாகத்தில் கலந்துகொள்கிறார்கள். அதேபோன்று, ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது. மேலும், மார்கழி அமாவாசை தினத்தில் 108 முறை அனுமனை வலம் வந்து வழிபடுவதால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.