Published:Updated:

இஸ்லாம் அறிவோம்! - ரம்ஜான் நோன்பு சிறப்பு கட்டுரை

இஸ்லாம் அறிவோம்! - ரம்ஜான் நோன்பு சிறப்பு கட்டுரை
இஸ்லாம் அறிவோம்! - ரம்ஜான் நோன்பு சிறப்பு கட்டுரை

இஸ்லாம் அறிவோம்! - ரம்ஜான் நோன்பு சிறப்பு கட்டுரை

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் இயற்கையான மற்றும் முழுமையான வாழ்க்கைநெறி. அது மனிதன் தன்னைப் படைத்த இறைவனுடனும் அவனுடைய படைப்புகளுடனும் இருக்கவேண்டிய உறவைப் பற்றி விளக்குகிறது. மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சியும் மனநிம்மதியும், இறைவன் வகுத்துக் கொடுத்துள்ள நற்செயல்களைச் செய்வதால் மட்டுமே கிடைக்கும்.

இஸ்லாத்தின் செய்தி எளிமையானது. ஓர் இறைவனை ஏற்றுக் கொண்டு அவனையே வழிபடவேண்டும். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைவனின் இறுதி தூதராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘இஸ்லாம்’ என்ற சொல்லுக்கு இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது என்று பொருளாகும். அதை யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் முஸ்லிம்களாவர். அவர்கள் எந்த இனத்தையும்

இடத்தையும் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

தான்தோன்றித்தனமாக நோக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்காக இறைவன் மனிதர்களைப் படைக்கவில்லை. வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த நோக்கம் உண்டு. இறைவனை அறிந்து அவனையே வழிபட வேண்டும். இதனால் நம்மைப் படைத்தவனின் வழிகாட்டுதலின்படி நாம் வாழலாம். இந்த வழிகாட்டுதல் நமக்கு எல்லா விதத்திலும் வாழ்க்கையும் அருள் நிறைந்த வாழ்க்கையும் வாழ வழி வகுக்கிறது. மேலும் சுவனத்தில் (சொர்க்கம்) நுழையச்செய்யும். நரகத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

மனிதனுடைய நம்பிக்கை, சோதனை அவனிடம் இருக்கும். அறிவும் சிந்தனையும் கொண்டு இறைவனின் அத்தாட்சிகளின் மீது சிந்தித்து இறைவனின் வழிகாட்டுதலுக்கேற்ப வாழ்க்கையை அமைத்திட வேண்டும்.

இறைவன் மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறான். யார் அவனுடைய பாதையை தானாகவே முன்வந்து பின்பற்றுகிறார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக.

அல்லாஹ் என்பது யார்?

'அல்லாஹ்' என்ற சொல் அரபு மொழியில் இறைவனைக் குறிக்கும் சொல். இறைவன், கடவுள், ஆண்டவன் என எப்பெயர் கொண்டும் அழைக்கலாம். அல்லாஹ் என்ற அரபுச் சொல்லுக்கு பாலும் இல்லை, பன்மையும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணையோ, துணையோ, பெற்றோர்களோ குழந்தைகளோ கிடையாது. அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளும் பரிபூரணமானவை. படைத்தவன், கருணை மிக்கவன், வல்லமை, நீதிமிக்கவன், ஞானமுடையவன் மற்றும் அனைத்தையும் அறிந்தவன் போன்ற பண்புகள் உள்ளவன். அவன் யாவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவன். மனிதர்களை மரணிக்கச்செய்து, மறுமை நாளில் நியாயத் தீர்ப்பு வழங்குபவனும் அவனே. இறைவன் நித்திய ஜீவன்.

முஹம்மத் (ஸல்) என்பவர் யார்?

மனித குலம் ஓர் இறைவனை ஏற்றுக்கொண்டு அவனையே வழிபட வேண்டும் என்று மனிதர்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரிசையில் கடைசியாக அனுப்பப்பட்டவர்தான் முஹம்மத் (ஸல்). அவர் ஒரு சிறந்த முன்மாதிரித் தந்தையாகவும், கணவராகவும் ஆசிரியராகவும், தலைவராகவும், நீதிபதியாகவும், மேலும் நேர்மையான நீதமான நியாயமான கருணைமிக்க, வீரமிக்க மனிதராக திகழ்ந்தார்.அவர் முஸ்லிம்களால் பெரும் அளவில் மதிக்கப்பட்டாலும் மற்ற இறைத்தூதர்கள் போன்று அவரை முஸ்லிம்கள் வணங்குவதில்லை.

இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எவை?

குர்ஆன் இஸ்லாமிய அறிவின் அடிப்படை மூலாதாரம் ஆகும். அது அடிப்படைக் கொள்கைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. நபிவழி இரண்டாவது மூலாதாரமாகும். முஹம்மத் (ஸல்)அவர்களுடைய ஆயிரக்கணக்கான பொன்மொழிகளும் அவர்களுடைய செயல்களும் அவர்களுடைய தோழர்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் (குர்ஆன் - நபிவழி)உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளதால், முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கான சரியான பாதையை காட்டக் கூடியதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. எல்லா இஸ்லாமிய போதனைகளும் இவ்விரு மூலாதாரங்களின் ஒளியில் அமைந்துள்ளது.

குர்ஆன் என்றால் என்ன?

குர்ஆன் மனித குலத்துக்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி வேதமாகும். இது ஒரு வழிகாட்டியாகவும் மேலும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கிறது. இது இறைவனின் சொல்லாகும். வானவர் 'ஜிப்ரீல்' மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டது.

குர்ஆன் பல்வேறு விஷயங்களை விளக்குகிறது. மேலும் தெளிவுபடுத்துகிறது. உதாரணத்துக்கு வாழ்க்கையின் நோக்கம், இறைவனைப் பற்றிய சரியான கண்ணோட்டம். இறைவனால் விரும்பக் கூடிய செயல்களும் வெறுக்கத்தக்க செயல்களும், இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறும் அதன் படிப்பினைகளும், சொர்க்கம், நரகம் இறுதித் தீர்ப்பு நாள் ஆகியவை பற்றிய செய்திகள் இதில் அடங்கும்.

குர்ஆனின் மிகப் பெரிய அதிசயமும் அற்புதமும் என்னவென்றால் 1,400 ஆண்டுகளாக அதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் நிறைய அறிவியல், வரலாற்று உண்மைகள் உள்ளன.

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?

இஸ்லாத்தில் உள்ள முக்கியமான செயல்பாடுகளை ஐந்து தூண்களாக எடுத்துக் கொள்ளலாம்.

1. முதல் தூண் - நம்பிக்கைச் சான்று பகருதல் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சான்று பகர வேண்டும்.

2. இரண்டாவது தூண் - தினமும் ஐந்து வேளை தொழவேண்டும்.

3. மூன்றாவது தூண் - ஜகாத் எனும் தர்மம் வழங்கவேண்டும். இந்த தொகை ஆண்டுக்கு ஒரு முறை செல்வ வசதி உள்ளவர்கள், தங்களுடைய தேவைகளுக்குப் போக மீதமுள்ள செல்வத்திலிருந்து 2.5 சதவிகித ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

4. நான்காவது தூண் - ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். வைகறை முதல் சூரிய மறைவு வரை நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளாமலும், தண்ணீர் பருகாமலும், (தங்களுடைய) மனைவியரோடு உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் எல்லா விதமான தீய செயல்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

5. ஐந்தாவது தூண் - ஹஜ் எனும் புனித யாத்திரை செய்யவேண்டும். இந்த யாத்திரை வசதி படைத்த முஸ்லிம்கள் மீது இது கடமை. அவர்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா சென்று ஹஜ் செய்யவேண்டும். இதில் தொழுகை, பிரார்த்தனை புரிதல், தர்மம் செய்தல், பயணித்தல் போன்றவைகள் அடங்கும். இது மிகப் பெரிய ஆன்ம அனுபவமாகும். உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இது இணைக்கிறது.

தொகுப்பு: அமீன்

அடுத்த கட்டுரைக்கு