Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள் - 22

ஆலயம் ஆயிரம்! காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள் - 22

ஆலயம் ஆயிரம்! காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

'கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்’ என்று மணிவாசகப் பெருமான் போற்றும் சிறப்புடையது காஞ்சிபுரத்து பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில்.

தேவாரப் பாடல் பெற்ற கோயில்களாக ஸ்ரீஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சிநெறிக் காரைக்காடு, அநேகதங்காவதம் என்னும் ஐந்து திருக்கோயில்களும் காஞ்சி மாநகருக்கு அணியாகத் திகழ்கின்றன. ஏகம்பத்துத் திருக்கோயில் வளாகத்தினுள் 'கச்சி மயானம்’ என்ற சிறப்புடைய பழம்பதியன்றும் உள்ளது. ஏகாம்பரேஸ்வரர் மூலவர் மணல் (பிருத்வி) லிங்கமாகும். பஞ்சபூத தலங்களுள் இது 'நிலம்’ எனும் பூத தத்துவம் காட்டும் ஆலயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மாமரத்தின் கீழ், மணலால் லிங்கம் அமைத்து, தவத்தில் ஈடுபட்டார். அப்போது ஆற்றில் வெள்ளம் பெருகி வர, உமையம்மை லிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்கிறது ஸ்தல புராணம். அம்பிகை தழுவக் குழைந்தானாம் ஈசன். அதனால் 'தழுவக்குழைந்த பிரான்’ எனும் திருநாமம் பெற்றார் சிவனார்.இது நிகழ்ந்த தலமே, தற்போதைய திருவேகம்பம் கோயிலாகும். தல விருட்சம் மாமரம். இங்கே, மாமரத்துக்கு அருகில் புராணத்தைச் சுட்டிக்காட்டும் எழிலார்ந்த சிற்பங்கள் மூன்று உள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 22

முதற்காட்சியில், உமாதேவி (காமாக்ஷி) தீச்சுடரின் நுனியில் தன் ஒற்றைக்காலால் நின்ற வண்ணம், மறு காலைத் தூக்கி மடித்தவாறு, ஒரு கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, மறு கரத்தால் ஈசனைப் போற்றித் தவமிருக்கும் திருக்கோலம் இடம்பெற்றுள்ளது.

அதையடுத்து, ஸ்ரீலிங்கோத்பவர் திருவுருவம். அடிமுடி காணும் போட்டியில், அன்ன வடிவெடுத்த ஸ்ரீபிரம்மனின் திருவுருவம் அந்த லிங்க பாணத்தின் மேற் பகுதியிலும், பன்றி உருவெடுத்த திருமாலின் திருவுருவம் கீழ்ப் பகுதியிலும் உள்ளன. இடையே உள்ள வெட்டுப் பகுதிக்குள் ஈசனார் அடிமுடி காட்டாதபடி, தன் உருவைக் காட்டி ஸ்ரீஅண்ணா மலையாராகக் காட்சி தருகிறார்.

அடுத்து, மாமரத்தின் கீழ் தேவி ஸ்தாபித்த லிங்கத் திருமேனியை, கம்பா நதியின் வெள்ளப்பெருக்குக்குப் பயந்து கட்டித் தழுவுகிறார். தழுவக் குழைந்தானான கச்சி ஏகம்பனின் இந்தத் திருக்கோலக் காட்சி, அழகிய சிற்பமாகத் திகழ்கிறது!

சுற்றுப் பிராகாரத்தில் உள்ள மன்னவன் ஒருவனின் திருவுருவம் குறிப்பிடத்தக்க ஒன்று. தாடி மீசையுடன் நின்ற கோலத்தில் வணங்குகிறவராகக் காணப் படும் சிற்பம், கரிகால் சோழ மன்னன் என்கின்றனர். இது பல்லவ அல்லது சோழ மன்னனின் உருவச் சிலை என்பது மட்டும் உறுதி!

அதேபோல், பிராகாரத்தில் தூண் ஒன்றில் காணப்பெறும் ஸ்ரீநரசிம்மர் உருவம் வெகு அற்புதம்! இரணியனை மடியில் கிடத்தி, அவன் மார்பைப் பிளக்கும் இந்த ரௌத்திரமூர்த்தியின் கோலம் மெய்சிலிர்க்கச் செய்யும். முதல் திருச்சுற்றிலேயே, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நிலாத்துண்டப் பெருமாளின் திருக்கோயிலில் விஷ்ணு மூர்த்தியின் அழகுமிகு சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 22

இந்தக் கோயிலின் ராஜகோபுரம், ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கி.பி. 1509-ம் வருடம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் இந்தக் கோபுரத்தை எடுப்பித்தார். கோபுரத்தின் திருவாயிலில் நுழையும்போது, மேலே உள்ள நிலைக்காலின் அடிப் பகுதியைப் பார்த்தால், அங்கு 'ஸ்வஸ்தி ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பண்ணுவித்த திருக்கோபுரம்’ என்று தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட கல்வெட்டைக் காணலாம்.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 22

இந்தக் கோபுர வாயிலின் இருமருங்கும் காணப்படும் மூன்று சிற்பக் காட்சிகள் தனிச்சிறப்பு கொண்டவை! முதல் இரண்டு சிற்பக் காட்சிகள் ஒன்றன்கீழ் ஒன்றாக உள்ளன. மேலே காணப்படும் பகுதியில், சிவபெருமான் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உரைக்கிறார். பெருமானாரின் இடப்புறம் மழு ஒன்றினைத் தன் தோளில் அணைத்தவண்ணம் சண்டீச பெருமான் நின்று வணங்குகிறார்.

கீழே காணப்படும் காட்சியில், தல வரலாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. அழகான ஸ்ரீவிமானமாகத் திகழும் கோயில் ஒன்று சிற்பமாகவே காட்சி தரும் அழகே அழகு! உள்ளே மூலவராகத் திகழும் லிங்க உருவமும் உள்ளது. இந்தக் கோயில் சிற்பம், திருவோத்தூர் என அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் திருத்தலமான செய்யார் சிவாலயத்தைக் குறிக்கிறது. அந்த ஆலயத்துக்கு முன்னர், குலைகள் தள்ளிய பனைமரமொன்று காணப்பெறுகின்றது. அதன்கீழ் ஒருபுறம் திருஞானசம்பந்தர் நின்றவாறு 'பூத் தேர்ந்து ஆயன கொண்டு...’ எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடியபடி நிற்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் திகம்பரராக சமணர் ஒருவர் நிற்கிறார். அருகே, அவரே தன் சூளுரைக்காகத் தாமே கழுவேறி நிற்கும் காட்சியும் உள்ளது.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 22

திருவோத்தூர் திருத்தலத்தில் அனைத்தும் ஆண் பனைகளாகவே இருப்பது கண்டு சமணர்கள், 'சம்பந்தரால் இவற்றைக் குலைகாய்த்திடச் செய்தல் இயலுமோ?’ என வாது செய்து அழைக்கவே, திருஞானசம்பந்தர் 'குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்’ எனும் சொற்றொடர் கொண்ட பதிகத்தின் கடைப் பாடலைப் பாட... அங்கு திகழ்ந்த ஆண் பனைகள் குலை தள்ளியதாகச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். இந்தச் சரிதம் முழுவதையும் சிற்ப நுட்பமாக இங்கே தரிசித்து மகிழலாம்.

மூன்றாவதாகத் திகழும் சிற்பப் படைப்பில், கச்சி ஏகம்பத்து மாமரம் காணப்படுகிறது. அதன் முன், சிவபெருமானின் ஊர்தியான ரிஷபம் நிற்கிறது.

காஞ்சியம்பதியில், திருக்கச்சி ஏகம்பத்துச் சிற்பக் காட்சியில் காஞ்சி மற்றும் திருவோத்தூர் தல புராணங்களின் சிறப்பைக் கண்ணார ரசித்து, வியக்கலாம்.  

- புரட்டுவோம்