Published:Updated:

சித்தம் சிவம் சாகசம்!- 34

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

சித்தம் சிவம் சாகசம்!- 34

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

Published:Updated:
##~##

'விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தேயுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலையுண்ணே
அக்கினியாங் கம்பமடா சுழுமுனையாச்சு
கலைநாலு நோகிறதை எட்டிற்சேர்
கபடமற்ற தேகமடா கண்டு பாரே!’

- காகபுஜண்டர்

காகபுஜண்டர் தன் நெடிய விளக்கத்தில் அஷ்டமாஸித்தியைத் தொட்டு நின்றார். தன்மார்த்தனும் பிரம்மார்த்தனும் அவர் கூறப்போகும் அந்த ஸித்தி பற்றி அறிய ஆவலாக அவரை நோக்கினர்.

இந்த அஷ்டமாஸித்தி எனப்படும் எட்டு வித வல்லமைகள் சாதாரணமானவை அல்ல. இதை ஒரு மனிதன் அடைந்துவிட்டால் கிட்டத்தட்ட அவன் கடவுளாகவே ஆகிவிட முடியும். அதேநேரம், அவன் துளி பிரண்டாலும், பெரும் அசுரனாகி, பெரும்பாவியாகி கொடும் நரகில் விழுந்துவிடவும் கூடும்.

சித்தம் சிவம் சாகசம்!- 34

இதன் பின்னால் இருக்கும் இந்த ஆபத்தை அறியாமலோ, அல்லது உணரமாட்டாமலோ இந்த அஷ்டமாஸித்திகளை மட்டும் மனதில் கொண்டு சித்தர்களாக மாறிவிட எண்ணியவர்கள் பலர் உண்டு. இவர்கள் சில காலம் சித்தர்களாகவும் இருந்தது உண்டு. ஆனால், இந்த சில ஸித்திகள் வசப்பட்ட உடனேயே, அவர்கள் இவற்றில் மயங்கித் திசைமாறிப் போய் ஒன்றுமே இல்லாமல் போனதும் உண்டு. எனவே, காகபுஜண்டர் அஷ்டமாஸித்திகள் பற்றிக் கூறுவதற்கு முன், அதை எந்த அளவுக்குத் தன் சீடர் களாய்த் தங்களை ஆக்கிக்கொண்டிருக்கும் இவர்களுக்குச் சொல்வது என்றும் சற்று யோசிக்கத் தொடங்கினார். அது பிரம்மார்த்தனுக்கும் புரிந்தது.

''குருவே, என்ன யோசனை! அஷ்டமாஸித்தி பற்றித் தாங்கள் கூறப் போவதைக் கேட்க ஆவலாக இருக்கிறோம். தாங்களோ இவ்வேளையில் சற்று யோசிப்பது போல் தெரிகிறதே...?'' என்றான்.

''உண்மைதான் பிள்ளைகளே! மூச்சு தொடர்பான ஞானக் கருத்துக் களை உங்களுக்குச் சொல்லும் சாக்கில் உலகுக்கும் கூறிவிட்டேன். உடம்பு தொடர்பாகவும் காயகல்பங்கள் வரையிலும் கூறிவிட்டேன். இதனால் கல்பயோகியாகிவிடும் ஒருவன், கிட்டத்தட்ட மரணத்தையே வென்றவனாகிறான். யமனை அவன் ஆதிக்கம் செலுத்தமுடியும். இப்படிப்பட்ட கல்பயோகியிடம் யமனும் வர மாட்டான்; வந்தால் வணங்குவான். காரணம் தேகம்தான்!

அந்த கல்பயோகியின் தேகம் வியர்க்காது. துர்வாடை வீசாது. எச்சில்கூட மருந்தைப்போல விளங்கும். அந்தக் கல்பயோகி தன் தலைமுடியால் ஒரு மலைப் பாறையையும் கட்டி இழுக்க முடியும். இவையெல்லாம் ஐம்புலன் சுருக்கி, உள்ளளியை அவன் பெருக்கிக் கொண்டதற்கான பரிசுதான். ஆனால், பரிசுக்கெல்லாம் பரிசைப் போன்றது அஷ்டமாஸித்தி. அதாவது, எண்பேராற்றல்! எட்டு விதமான இந்த ஆற்றல், அந்தக் கல்பயோகியை கடவுளாகவும் ஆக்கிவிடும்; அரக்கனாகவும் ஆக்கிவிடும். எனவே, எண்பேராற்றல் குறித்து விளக்குவதற்கு முன், அது கேட்பவர்களை எந்த அளவு பாதிப்புக்குள்ளாக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியம். அதனால்தான் யோசிக்கிறேன்.''

''அதாவது, இந்த எண்பேராற்றல் பற்றி அறிந்தால் எங்களுக்குள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதுகிறீர்களா?''

''ஆம். நீங்கள் லௌகீக வாழ்வில் இருந்து வந்தவர்கள். காமம் காரணமாக வந்து பிறந்தவர்கள். கர்மம் உங்கள் தலையில் தலைவிதியாக எழுதப்பட்டுள்ளது. அதை ஒட்டியே உங்கள் வாழ்வு செல்ல முடியும். அந்த விதிப்பாடுதான் நீங்கள் என் உபதேசம் கேட்கவும் காரணம். இந்த உபதேசம் உங்களைக் கடைத்தேற்றி உங்கள் பிறப்புக்கு ஒரு முடிவையும் ஏற்படுத்தலாம். மாறாகப் பல பிறவிகளுக்குக் காரணமாகவும் ஆகிவிடலாம்!''

சித்தம் சிவம் சாகசம்!- 34

''எப்படி என்று விளக்கமாய்க் கூறமுடியுமா?''

''எண்பேராற்றல் மீது நீங்கள் மோகம் கொண்டு, அதை அடைய நீங்கள் முயல்வதைப் பொறுத்தது அது!''

''முதலில், அந்த எண்பேராற்றல் எனும் அஷ்டமாஸித்தி எவை என்று கூறிவிடுங்களேன்...''

''கூறுகிறேன். அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, வசித்வம், பிராகாமியம், பிராப்தி, ஈசத்வம் எனும் எட்டு ஆற்றல்களே அஷ்டமா ஸித்திகள் ஆகும். அணிமா என்றால், அணுவாய் மாறுவது. அதாவது, ஆறு அடி உயரம் கொண்ட நீயோ இல்லை நானோ ஒரு தூசு போல மாறிப்போவதுதான் அணிமா ஸித்தி!''

''என்ன ஆச்சரியம்! இத்தனைப் பெரிய தேகம் எப்படி அணு போல் சிறுத்துப் போகமுடியும்?''

''கேள்வியைச் சற்று மாற்றிச் சிந்தித்துப் பார். ஒரு துளியில் இருந்துதான் நாம் இத்தனை பெரிதாக வளர்ந்து ஆளாகியுள்ளோம். துளி இத்தனை பெரிதாகும்போது, இத்தனை பெரியது திரும்பத் துளியாக ஆகமுடியாதா என்ன?'' - காகபுஜண்டரின் கேள்வி அவர்களைப் பிரமிக்கவைத்தது.

''அணு போலச் சிறுக்க முடிவதற்கு நேர் எதிரானது மகிமா. அதாவது, விஸ்வரூபமெடுப்பது. மலைபோல உயர்ந்தும் வளர்ந்தும் நிற்பது மகிமா!'' என்று தொடர்ந்தார் காகபுஜண்டர்.

''குருவே, அது எப்படிப் பெரிதினும் பெரி தாக முடியும்? இதை நம்புவதற்கே இயல வில்லையே..?'' என்றான் தன்மார்த்தன்.

''ராமாயணத்தில் அனுமனுக்குச் சாத்திய மாகி உள்ளதே? அணு போல் சிறுத்து ஒரு வண்டுபோலாகி, கடல் நடுவே எழும்பி நின்ற அரக்கியின் வாய்க்குள்ளேயே புகுந்தவன், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து நின்றபோது, சமுத்திரம் அவன் முழங்காலளவுதான் இருந்தது.''

''ஓ.... இந்த ஸித்திகள் எல்லாம் உடையவர் தானா அனுமார்?''

''ஆமாம். ஆனால், ஓரிடத்தில்கூட இந்த ஸித்திகளைத் தன் பொருட்டு சுயநலமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை அனுமன் என்பதை இந்த வேளையில் மனதில் கொள்ள வேண்டும் நீங்கள்.''

''ஸித்தியை அடைவது பின் எதற்காக...?''

''அவசியத்தின்பொருட்டு, அது உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும். ஸித்திகள் வரையில் சுயநலம் துளியும் கூடாது.''

''குருவே... மீதமுள்ள ஆறு ஸித்திகள் பற்றியும் கூறுங்களேன்...''

''நிச்சயமாக. அணிமா, மகிமாவைத் தொடர்ந்து வருவது கரிமா. அதாவது, கல்போல் கனப்பது. இதற்கும் அனுமனையே உதாரணம் கூறலாம். அனுமன் வனத்தில் ராம நாமம் ஜெபித்தபடி இருக்கையில், பீமன் அந்தப் பக்கமாய் வருகிறான். இது மகாபாரத காலத்துச் சம்பவம். அப்போது அனுமன் வால், பாதையில் நீண்டு கிடக்கிறது. அது பீமனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. பீமனுக்கு அனுமனைத் தெரிந்திராத நிலையில், ஒரு கிழட்டு வானரம் என்று எண்ணிக்கொண்டு, 'ஏ வானரனே! வாலைச் சுருட்டிக் கொள். நான் தெரியாமல் மிதித்திருந்தால், உன் உயிரே போயிருக்கும்!’ என்கிறான் சற்றுத் திமிராக.

சித்தம் சிவம் சாகசம்!- 34

பதிலுக்குத் தனக்குள் சிரித்துக்கொள்ளும் அனுமன், 'நான் கிழட்டு வானரன்தான். வாலைத் தூக்கக்கூடச் சக்தியில்லை. முடிந்தால், நீ என் வாலைத் தூக்கி ஓரமாகப் போட்டு விட்டுப் போ, அப்பனே!’ என்கிறான். பீமனும் வாலைத் தூக்க முயல்கிறான். ஆனால், அசைக்கக்கூட முடியவில்லை. அனுமன் இங்கே வாலை மலைபோல் கனக்கச் செய்ததால், புஜ பலத்தில் பேர்போன பீமனால்கூட அதை இம்மியும் அசைக்க முடியவில்லை. பிறகு, அந்தக் கிழட்டு வானரம்தான் அனுமன் என்று அறிந்து வணங்கி ஆசியையும் பெற்றான் பீமன். அனுமன் அப்போது பீமனிடம் காட்டியதுதான் கரிமா சித்தி.''

''அற்புதம்! லஹிமா என்றால் என்ன?''

''கரிமாவுக்கு நேர் எதிரானது. அதாவது, பஞ்சுபோல லேசாகி மிதப்பதுதான் லஹிமா. இந்த ஸித்திக்குப் பிரகலாதப் பிரபுவை உதாரணமாகச் சொல்லலாம். அவரின் தந்தையான இரண்யன், அவரைக் கடலில் தூக்கிப் போடச்சொல்ல, அப்படியே செய்தனர். ஆனால், கடலில் பிரகலாதன் மூழ்கிவிடவில்லை. மாறாக, தெப்பம் போல மிதந்தார்.''

''அருமை, அருமை! சிறுப்பது, பெருப்பது, கனப்பது, லேசாவது என்று நான்கு ஸித்தி களையும் உதாரணங்களுடன் அறிந்து கொண்டோம். அடுத்து..?''

''அதுதான் வசித்வம். அதாவது, பிறரைத் தன் வயப்படுத்துவது; தம் விருப்பப்படி எல்லாம் நடக்கச் செய்வது.''

''இதற்கு உதாரணம்?''

''கிருஷ்ணலீலை என்று ஒரு வார்த்தையில் கூறிவிடலாம். பால கிருஷ்ணனின் குறும்புகள் சொல்லி மாளாதவை. குறும்பாலே பாதிக்கப் பட்டவர்கள் அடிப்பதற்காக வருவார்கள். ஆனால், கிருஷ்ணனைப் பார்த்த மாத்திரத்தில் தடியைக் கீழே போட்டுவிட்டு அவன் சிரிப்பில் மயங்கித் தாங்களும் சிரிப்பர். ஆற்றங்கரையில் பெண்களோ, 'கிருஷ்ணா’, 'கிருஷ்ணா’ என்று அவன் பின்னேயே சுற்றித் திரிவர். மனிதர்கள் மட்டும்தானா..? அந்தக் கண்ணன் பின்னால் ஆடு- மாடுகள்கூட சுற்றித் திரிந்தன. இதற்குப் பெயர்தான் வசித்வம்.''

''வசியம் என்று கூறலாமல்லவா?''

''வசியம் என்பது தற்காலிகமானது. வசித்வம் நிரந்தரமான தன்மை படைத்தது.''

''அடுத்து..?''

''பிராகாமியம். கூடுவிட்டுக் கூடு புகுதல். அதாவது, ஓர் உடம்பில் இருந்து இன்னொரு உடம்புக்குள் நுழைவது என்று அர்த்தம்.''

''இதற்குச் சான்று உண்டா?''

''சித்தர்கள் வாழ்வில் மிகச் சாதாரணமான ஒரு விஷயம் இது. கயிலாய சுந்தரன், மூலன் எனும் இடையன் உடலில் புகப் போய்தான், அந்த இடையன் திருமூலர் எனப் போற்றப் பட்டார். இது சற்று ஆபத்தான சித்து விளையாட்டு. உட்புகுதல் என்பதைப் போலவே உடம்பினின்றும் விடுபடத் தெரிதல் என்பதும் இதில் முக்கியம். இதில் சிக்கிக்கொண்டவர்கள் பலர். இந்த வனத்திலேயே பல சித்தர்கள் விலங்குகளுக்குள் புகுந்துவிட்டு, வெளிவரத் தெரியாமல் இன்னமும் விலங்குகளாகவே திரிந்துகொண்டிருப்பதும் இதற்கு உதாரணம்.'' - காகபுஜண்டர் இவ்வாறு கூறவும், அவர்கள் ஐந்து பேருமே விக்கித்துப் போயினர்.

''பிராகாமியம் எனும் கூடுவிட்டுக் கூடு பாய்வதை அடுத்து வருவதுதான் பிராப்தி எனும் பிராப்தம்.''

''அது என்ன?''

''நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதை அடைவதற்குப் பெயர்தான் பிராப்தி.''

''உண்மையில், சகல ஸித்திகளிலும் அற்புதமான ஸித்தி இதுதான். மற்ற ஸித்திகள் வசப்படக்கூட பிராப்தம் இருந்தால்தானே ஈடேறும்?''

''பிராப்தத்தைக் கர்ம பலத்தால் அடைவது ஒரு விதம்; எண்ணத்தின் சக்தியால் அடைவது இன்னொரு விதம். இங்கே அஷ்டமா ஸித்திகளில் ஒன்றான பிராப்தி, கர்மத்தால் மட்டுமே வருவதல்ல; எண்ணங்களின் சக்தியாலும் வருவதாகும்.''

''இதற்கு ஓர் உதாரணம் கூற முடியுமா?''

சித்தம் சிவம் சாகசம்!- 34

''இதற்கு மிகச் சிறந்த உதாரணம் விசுவாமித்திரர். அவரின் தொடக்கம் ஒரு க்ஷத்திரியப் பிறப்பால் ஆனது. க்ஷத்திரிய குலத்தில் வந்த கௌசிகன் எனும் அரசன்தான் பின்னாளில் விசுவாமித்திரன் என்கிற பிரம்மரிஷியாக உயரப் பெற்றான். இதற்குக் காரணம் வசிஷ்டர் எனும் பிரம்மரிஷிதான். அந்த ரிஷிக்கு இந்தச் சதுரகிரி தலத்திலும் ஆஸ்ரமம் உண்டு. வசிஷ்டர், கௌசிக மன்னனைப் பார்த்து, 'மனத்தை அடக்கிப் புலன்களை வென்று, எங்களைப் போல முனிவராவது மிகக் கடினம்’ என்று கூறவும், 'நான் புலன்களையும் மனத்தையும் வென்று முனிவனாகிக் காட்டுகிறேன்’ என்று கூறி, அரசாட்சியைத் துறந்து, தவத்தில் ஈடுபட்டு, பின்பு வசிஷ்டராலேயே 'பிரம்மரிஷி’ என்று அழைக்கப்பட்டவர்தான் விசுவாமித்திரர். அது மட்டுமல்ல, திரிசங்கு எனும் அரசனுக்கு சொர்க்கத்தில் இடமில்லாது போனபோது, தன் மனோபலம் மற்றும் தவசக்தியால் புதியதாக ஒரு சொர்க்கத்தையே நிர்மாணித்து, அதற்கு 'திரிசங்கு சொர்க்கம்’ என்று பெயரிட்டவர் விசுவாமித்திரர். பிராப்தியை இவர் மனோபலத்தால் அடக்கி, அதைத் தவத்தில் ஆழ்த்திப் பெற்றார். நாம் எண்ணியதை அடைய மன ஒடுக்கம் ஒன்றே போதும். அதுவே பிராப்தியை வழங்கிவிடும். தீவிரமாக ஒன்றை விரும்புவதும் பிராப்தியை அடைய வழி வகுக்கும்.''

- காகபுஜண்டர் இப்படி ஏழு ஸித்திகளுக்கும் விளக்கமளித்து விட்டு, எட்டாவதாக ஈசத்வம் எனும் ஸித்தியிடம் வந்தார்.

''எட்டு ஸித்திகளில் உன்னத ஸித்தி இதுதான். முன்புபெற்ற ஏழு ஸித்திகளைப் பெரிதாகக் கருதாமல், அந்த ஆற்றலைப் பயன்படுத்தி மனம்- வாக்கு- காயத்துக்கு இன்பம் சேர்க்காமல், அதை எல்லாம் துச்சமாகத் தூக்கி எறிந்து, இத்தகைய ஸித்திகளைத் தனக்குத் தர முடிந்த இறை சக்தி எத்தனைப் பெரிதாக இருக்கவேண்டும் என்று எண்ணி, அந்தச் சக்தியை அடைய முயற்சிப்பதும், முயன்று அடைவதுமே வாழ்வின் நோக்கம் என்றும், இந்த ஸித்திகள் எல்லாம் சிறு குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைப் போன்றவை என்றும் எவரொருவர் உளமார எண்ணுகிறாரோ, அவரே ஈசத்வத்தை அடைந்தவராவார்.

ஈசத்வத்தை அடைந்துவிட்டால், அதைவிடப் பெரிது எதுவுமில்லை. இந்த ஈசத்வத்தை இந்த அஷ்டமாஸித்திகளில் அடங்கியுள்ள ஏழு ஸித்திகள் வழியாக அடைவது ஒரு விதம் என்றால், இந்த வழிமுறைகளே வேண்டாம் என்று இறைவனை எடுத்த எடுப்பில் சரண் புகுந்துவிடுவது மற்றொரு விதம். சரண் புகுவதுதான் சாலச் சிறந்த வழிமுறையும்கூட!''

- காகபுஜண்டர் அஷ்டமாஸித்திகளுக்கு விளக்கம் கூறி, நெடிய ஞான விளக்கத்தை அவர்களுக்கு அளிக்கும் சாக்கில், பூ உலகத்தோர்க்கும் அளித்தார். இன்னும் அவர் இறவாப் பெருவாழ்வை வாழ்ந்து வருகிறார் என்பதே அவரைத் தியானிப்பவர்களின் அசைக்கமுடியாத கருத்து.

காகபுஜண்டரைத் தொடர்ந்து அடுத்து நாம் சிந்திக்கப் போவது பதஞ்சலி எனும் சித்த புருஷரை!

- சிலிர்ப்போம்...