மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 47

தீனாக்ரந்தனம்பி.என்.பரசுராமன்

##~##

ந்த இதழ் ஞானப்பொக்கிஷத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக, காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகள் அருளிய 'ஸ்ரீமுகம்’ ஒன்றைப் படிப்பது அவசியம். ''ஸ்ரீலோஷ்டதேவ கவி எழுதிய தீனாக்ரந்தனம் என்னும் இவ்வுத்தம ஸ்தோத்திரத்தின் பெருமையை ஜன்மாந்தரங்களில் செய்த புண்ணிய பலன்களாலும், இந்தப் பிறவியின் நற்செய்கைகளின் பாக்கியவசத்தாலும் புண்ணியாத்மாக்கள் அறியக்கூடும். இதில் கவி கூறும் எல்லா விஷயங்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் உணரப்பட்டுவரக் கூடியவைதான். இந்த ஸ்துதியில் ஸ்ரீலோஷ்டதேவருடைய ஆத்மானுபவம் தெளிவாகக் காணக் கிடைக்கின்றது.

இந்த மஹான் தன் வாழ்நாள் முழுவதும் தான் நேசித்து வந்த கவிதையை விலக்கி, காஷாயம் பூண்டு, ஏகாக்கிர சித்தராய், பாபங்களை எரிக்கும் மகாஸ்மசானமாகிய காசி க்ஷேத்திரத்தில், மோக்ஷ சாம்ராஜ்யத்தை உடனே அளிக்கக்கூடிய விசாலாக்ஷி சமேதரான ஸ்ரீவிச்வேச்வரரின் சந்நிதானத்தில் பக்தி ரஸப் பெருக்குடன் கதறுகிறார்.

ஸ்ரீலோஷ்டதேவர் ஆரம்பத்தில் இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். சுகங்களை அனுபவித்தார். ஆனால், மன அமைதியைப் பெறவில்லை. பிறகு காஷாயம் அணிந்து, உயர்ந்த இன்பத்தைப் பெற்றார். அவரது வாழ்க்கையின் அனுபவத்தையட்டியே அவருடைய ஸ்தோத்திரமும் ஆரம்பத்திலிருந்து மேலே செல்லச் செல்ல பக்தி மேலீட்டையும், கவித்திறமையையும், உணர்ச்சிப் பெருக்கையும், அர்த்த புஷ்டியையும் அதிகமாகக் கொண்டு சோபிக்கின்றது.

ஞானப் பொக்கிஷம்: 47

'பாபத்தைச் செய்து உடலைப் போஷித்தேன். ஏழைகளைக் கருதினேன் இல்லை; ஆசிரியர்களை வணங்கினேன் இல்லை; செல்வத்தில் ஆசை வைத்தேன்; புண்ணியத்தை வெறுத்தேன். ஆதலால், வருந்துகின்றேன். நீரே கதி’ என்கிறார் (சுலோகம் 48). 'நான் காவியம் இயற்றுவதை விட்டேன். ஈசா, உம்முடைய முன்னிலையில் ஏழ்மையுடன் பிதற்றுகின்றேன்’ என்கிறார் (சுலோகம் 50). பிறகு, 'காசி க்ஷேத்திரத்தில் கங்கையின் மணலில் அரசர்களைப் பற்றிய சாடு வார்த்தைகளை இயற்றுவதை விட்டுப் பசுபதியைக் குறித்துக் கதறுவதென்ற கடுமையான விரதத்தை ஏற்றுக்கொண்டேன்'' (சுலோகம் 51) என்று சொல்லி, 'உயர்ந்த வம்சத்தில் பிறந்து, கவிதைக் கடலைக் கடந்து, சக்திக்கேற்ப ஏழைகளுக்குத் தானம் செய்து, சுகங்களையும் அனுபவித்து, உண்மை என்னவென்பதை அறிந்து, ஸந்நியாஸம் ஏற்று, ஸம்ஸாரத்தை வெறுத்து, காசியில் நிம்மதியுடன் இனிது வாழ்கின்றேன்’ (சுலோகம் 52) என்று கூறித் தமது மன அமைதியைக் காண்பிக்கின்றார்.

மேலும், சாதாரணமாகக் கேள்விப்படமுடியாததானதொரு ஆச்சரியமான பிரதிக்ஞையையும் செய்கின்றார். 'எதிரிகள் பொறாமை அடையக் காரணமாகிய கவிதையென்னும் காதலி, நான் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்ட பிறகும் என்னை வந்து அணைக்கின்றாள் என்பதால், பிரம்மசரியத்தை விட்ட தோஷம் சிறிது ஏற்பட்டுத்தான்விடுகின்றது. ஆதலால், விச்வேச்வரா, உம்மெதிரில் ஆணை இடுகிறேன்... இனி, இவளை என்றும் மனத் தினாலும் நினையேன். இதுவரை செய்த குற்றத்தை மன்னித்துவிடும்’ (சுலோகம் 53), என்று பொருள்படும் இந்தச் சுலோகத்தின் பெருமையை ஆதிசேஷனும் கூறமுடியாது. உலக வாழ்க்கையை வெறுத்துக் கவிதா ஸந்யாஸமும் செய்கின்றேன் என்ற பிரதிக்ஞை எவ்வளவு கடினமானது என்பது கவிகளுக்கு மட்டுமே தெரியும்.

ஞானப் பொக்கிஷம்: 47

காவ்ய லக்ஷணங்கள் முற்றிலும் அமைந்துள்ள தமது உயர்ந்த கிரந்தத்தைப் 'பிதற்றல்’ என்று லோஷ்டதேவர் குறிப்பது அவருடைய வைராக்கி யத்தைக் காட்டுகிறது. கவிதையினால் ஏற்படும் புகழையும் அவர் வெறுத்தார் என்பதையும் காட்டுகின்றது.

லோஷ்டதேவரைப் போலவே ஈசுவரனை நோக்கிக் கதறும் இயல்பு ஒவ்வொருவருடைய மனத்திலும் குடிகொண்டிருக்கின்றது. ஆனால், ஸம்ஸார மோஹம் அதை மறைத்திருக்கின்றது. இந்நூலைப் படிக்கும் எல்லோரும் லோஷ்டதேவரின் உண்மை நிலையை உணர்ந்து, தாமும் அந்நிலையைப் பெற்று, விச்வேசுவரரிடம் கதறி, லோஷ்டதேவர் பெற்ற, பெறுவதற்கரியதான அருளைப் பெறுவார்களாக!’

ஆம்! காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகளே போற்றிப் பாராட்டிய 'ஸ்ரீதீனாக்ரந்தனம்’ எனும் நூலைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

முதல்  பாடலிலேயே கவி, அமைதி அளிக்க வேண்டுகிறார்.

'சிவபெருமானே! உங்கள் இரண்டு திருவடி களின் நிழலில் எனக்கு அமைதி தந்து அருளுங் கள். ஏராளமான சுகங்களை அனுபவித்து விட்டேன். இருந்தாலும், அவ்வளவும் பாலை வனத்தின் மத்தியில் இருக்கும் சிறிதளவு நீரைப் போலத்தான் இருக்கின்றன.

(அதாவது) எவ்வளவு அனுபவித்தும், தாகம் அடங்கவில்லை. மறுபடியும் மறுபடியும் அவற்றைத் தேடி, நீண்டகாலமாக அலைந்து திரிந்து களைத்துப் போய்விட்டேன். சிவபெரு மானே, எனக்கு அமைதி தந்து அருளுங்கள்’ என வேண்டுகிறார்.

சுண்டீ ஜலைரிவ ஸுகை: பரிணாம துக்கை:
ஆஸ்வாதிதைரபி மநாக விலுப்த த்ருஷ்ண:
ச்ராந்தோஸ்மி ஹாபவமரௌ ஸுசிரம் சரித்வா
தச்சாயயா சரணயோ: சிவ மாம் பஜேதா:

(ஸ்ரீ தீனா க்ரந்தனம் 1)

இந்தப் பாடலில், 'ஸுகை: பரிணாம துக்கை:’ அதாவது, அனுபவிக்கும் சுகங்கள் எல்லாம், முடிவில் துக்கத்தை விளைவிப்பவையாகவே உள்ளன எனக் கூறியிருப்பது கூர்ந்து உணரத் தக்கது.

அடுத்த பாடலில், 'சிவபெருமானே! பிறவி நோய் என்னை வாட்டுகிறது. திக்பிரமை பிடித்தவனைப்போல இருக்கிறேன். ஏதோ பூர்வ ஜன்மங்களில் செய்த புண்ணியங்களால் உங்கள் திருவடிகளில் விழுந்து, என் நோயைத் தீர்க்கும்படியாக வேண்டுகிறேன். அலட்சியம் செய்யாமல் அடியேனுக்கு அருள் செய்யுங்கள்’ என வேண்டுகிறார்.

இதைத் தொடர்ந்து பல பாடல்களில், கருவில் குழந்தை உருவானதில் தொடங்கி, அது பிறக்கும் வரை உண்டான தகவல்களை, விரிவாகவே கவி பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களுக்கு உண்டான உரையில், கர்போப நிடதம், சூதசம்ஹிதை முதலான நூல்களில் உள்ள பாடல்கள், அற்புதமான முறையில் மேற்கோள்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்பின், குழந்தைப் பருவத்தைச் சொல்லி வெட்கப்படுகிறார் கவி. நம்மையும் வெட்கப்படுத்துகிறார்.

'சிவபெருமானே! நல்லவிதமாக இந்த மனிதப் பிறவியை அடைந்தும், பிறந்து 5- 6 வயது வரை பகுத்ஜலம் விட்டு அதிலேயே கிடந்து... அப்பப்பா! அதைப் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்தால், மந்த புத்தி உள்ளவனுக்குக் கூட உடனே வெட்கம் வருகிறது.

ஞானப் பொக்கிஷம்: 47

தத் - தத் க்ருதம் பததபி ஸ்ம்ருதி - ஸீம்நி யத் - யத்
ஸத்யோ ஹ்ரியம் ஜடதிய (அ)பி ஹ்ருதி ப்ரஸுதே

(ஸ்ரீ தினாக்ரந்தனம் - 9)

சரி! அதுதான் அப்படியென்றால், அடுத்ததான இளமைப் பருவத்தில், பல வழிகளிலும் அவிவேகத்தோடும், அதே நேரம் வேகத்தோடு இளமைக்கே உண்டான தவறான செயல்களைச் செய்தேன். இந்தப் பருவத்தில்தான், இம்மை- மறுமை என்று சொல்லக்கூடியவற்றுக்குத் தேவையான தூய்மையை இழந்தேன்.

நான் செய்த தவறுகளுக்கு நரகத்திலேயே புதுப்புது தண்டனைகள் உருவாகும் போலிருக்கிறது. அதை நினைத்தால் நடுக்கம் வருகிறது. இந்த நிலையில், சிவபெருமானே... என்னைக் காப்பாற்ற உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்!’ என வேண்டுகிறார்.

இந்த நூலில் உள்ள 54 பாடல்களில், 20 பாடல்களைத் தாண்டியதும், சூட்சுமமான பாடல்கள் அப்படியே பொங்கிப் பிரவாகமாக வருகின்றன. அவற்றில் இருந்து ஒரு சில பகுதிகள்...

'சிவபெருமானே! இளம் பருவத்தில் என் பொறி- புலன்கள் சக்தி படைத்ததாக இருந்தபோதே நான் உங்களை நினைக்கவில்லை. வயதானதும் பொறி- புலன்களின் சக்தி குறைந்துபோய்விட்டது. இப்போது, அவை எப்படி உங்களை பூஜிக்கும்? ஐயோ! என் ஜன்மம் வீணாகிவிட்டதே!’  என்று கலங்கும் கவி, 'சிவபெருமானே! உங்களை நினைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யச் சக்தியற்றவனான எனக்கு, உங்களைத் தவிர வேறு என்ன கதி இருக்கிறது?’ என்று உள்ளத்தைத் திறந்து காட்டுகிறார்.

அடுத்த பாடலில்... 'பரமேஸ்வரனே! யமனிடம் இருந்து எனக்குப் பயம் இல்லை. மேலும் தங்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் இல்லை. குழந்தைப் பருவத்தில் பாலைக் குடிக்கவேண்டும் என்ற ஆசையும் எனக்குக் கிடையவே கிடையாது. உங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராசை மட்டும்தான் இருக்கிறது. அதற்கு, நீங்கள் ஒரு சுலபமான வழியைக் காட்டக்கூடாதா?’ எனக் கேட்கிறார். இதைச் சொல்லும் பாடல்:

காலாந்நமே பயமதோ கனகே ந லிப்ஸா
நைவா (அ)ஸ்மி சைசவ வசேந பய: பிபாஸு:
த்வத் - தர்சனாய து சிவ ஸ்ப்ருஹயாமி லோபாத்
தத்ரா (அ)பிகிம் தவ ந வா ஸுகர: ப்ரகார:

(தீனாக்ரந்தனம் 23)

இப்பாடலுக்கு உண்டான அர்த்தத்தைப் பார்த்தோம். மேலோட்டமாகப் பார்த்தால் அதுதான் பொருள். ஆனால், சூட்சுமமான ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பாடல் இது.

ஞானப் பொக்கிஷம்: 47

யமனிடம் இருந்து பயம் இல்லை; தங்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசை இல்லை; பாலைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. இந்த மூன்றுக்கும் மூன்று விதமான தகவல்கள் உண்டு.

ஸ்வேதன் என்ற ராஜரிஷி, யம பயத்திலிருந்து சிவபெருமானால் விடுவிக்கப்பட்டார். மருத்தன் என்ற மன்னன் தவத்தினால் சிவபெருமானைத் திருப்தி செய்து, தன் நகரத்தில் சிவன் அருளால் ஏழு நாட்கள் தங்க மழை பெய்யும்படி செய்துகொண்டான். முனிகுமாரனான உபமன்யு பருகுவதற்குப் பால் வேண்டும் எனக் கேட்க, சிவபெருமான் பாற்கடலையே அருளினார்.

இதையே மற்றொரு விதமாகப் பார்க்கலாம்.

மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்து, அவனுக்கு அபயம் அளித்தது; சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அவர் வேண்டும்போதெல்லாம் சிவபெருமான் தங்கம் அளித்தது; திருஞான சம்பந்தருக்கு சீர்காழியில் அம்பிகை ஞானப் பால் அளித்தது.

இந்தத் தகவல்களே அப்பாடலில் 'யம பயம் இல்லை; தங்கத்தின் மீது ஆசை இல்லை; பால் குடிக்க ஆசைப்படவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது, 'ஸ்வேதன், மார்க்கண்டேயன் ஆகியோரைப்போல, யமனிடமிருந்து காப்பாற்று எனக் கேட்கவில்லை நான்.

மருத்தன், சுந்தரர் ஆகியோரைப்போல எனக்கும் தங்கம் வேண்டும் எனக் கேட்க வில்லை நான்.

உபமன்யு, திருஞானசம்பந்தர் ஆகியோரைப் போல எனக்கும் பால் வேண்டும் எனக் கேட்கவில்லை.

சிவபெருமானே! உங்களைத் தரிசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு அருளக்கூடாதா?’ எனக் கேட்கிறார் கவி.

இந்தப் பாடலுக்கு உரை இல்லாவிட்டால், இதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்கள் புரியாது.

இப்படிப்பட்ட ஆழ்ந்த கருத்துக்கள்கொண்ட பாடல்களால் அமைந்த இந்நூல்- ஸம்ஸ் க்ருத மூலம்- அதன் மொழிமாற்றம் (டிரான்ஸ்லிட்ரேஷன்) பதம் பதமாக அர்த்தம் - பொழிப்புரை - மேற்கோள்கள் - அனைத்துக்கும்  மேலாகத் தங்கக் குடத்துக்குத் திலகம் இட்டது போல ஸ்ரீமகாபெரியவா அருளிய ஸ்ரீமுகம் எனப் பல விதங்களிலும் உயர்ந்த இந்த நூல்...

1943-ல், ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், ஸ்ரீசங்கரமடம், கும்பகோணம் என்ற முகவரியில் இருந்து வெளியாகி உள்ளது.

இந்நூலில் உள்ள தமிழ் பொழிப்புரையை அப்படியே படித்தாலும் மனம் தெளிவடையும்.

- இன்னும் அள்ளுவோம்...