Published:Updated:

சக்தி சங்கமம்

'இசைபட வாழ்வோம்!’கர்னாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலனுடன் வாசகர்கள் கலந்துரையாடல்

##~##

'சிவனிசைச் செல்வர்’ நெய்வேலி சந்தானகோபாலனுடன் வாசகர் சந்திப்பு தொடர்கிறது...  

• ''மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில், குரு பற்றிய உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்களேன்?'' என்று வாசகி நிஷ்களா கேட்டதும், ஆர்வமானார் நெய்வேலி சந்தானகோபாலன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அம்மாவே எனக்குக் குருநாதராகவும் இருந்து, பள்ளியில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி எல்லாவற்றிலும் என்னைக் கலந்துகொள்ளச் சொல்லி உற்சாகப்படுத்தினார். டி.எம்.எஸ். மாதிரி பாடக் கற்றுத் தந்தார். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் அவர் போலவே பாடி, எனக்கு முதல் பரிசு கிடைத்தபோது, அப்படியரு சந்தோஷம் என் அம்மாவுக்கு.

'சீடன் தயாராக இருக்கும் போது, குருவே அவன் முன் தோன்றுவார்’ என்பார்கள். என் முதல் குருவும் அப்படித்தான்... என்னைத் தேடி வந்தார். அப் போது நான் நெய்வேலியில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு 7 வயது. அனந்தமணி பாகவதர்தான் என் முதல் குரு. செம்பை வைத்தியநாத பாகவதரின் தங்கை மகன் அவர். பஞ்சகச்சம் இல்லை; ஜிப்பா அணியவில்லை. ஆனாலும், அவர் ஞானஸ்தர். 'இவன் நல்லாப் பாடுவான். அவன் அம்மாகிட்ட கத்துண்டிருக்கான்’ என்று என்னைப் பற்றி யாரோ சொல்ல, 'நான் கத்துக் கொடுக்கறேன்’ என்று அவரே வந்தார். நன்றாக ஞாபகம் இருக்கிறது... அப்போது நான் நன்றாகத்  தூங்கிக்கொண்டு இருந்தேன். என்னை எழுப்பி, உட்கார வைத்து, சிரத்தையாகக் கற்றுக் கொடுத்தார். எனக்குள் சங்கீதம் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் அவர்தான். ஒரே வருடத்தில் அரங்கேற்றம் செய்ய வைத்து, எனக்காகப் பின்பாட்டும் பாடிய அற்புதமான குருநாதர்!

சேஷகோபாலன் சார் ஒருமுறை, கச்சேரிக்காக நெய் வேலிக்கு வந்திருந்தார். நான் என் குருநாதர் அனந்தமணி பாகவதருடன் சென்றிருந்தேன். 'டேய்... அடுத்தாப்ல நீ இவர்கிட்ட கத்துக்கோ!’ என்று சொல்லி வழிகாட்டினார் அனந்தமணி பாகவதர். ஒரு நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நம்மைச் சரியான வழியில் திசை திருப்புவதும் ஒரு நல்ல குருவின் கடமை என்பதை அவர் மூலம் அறிந்து நெகிழ்ந்து போனேன். ஆனால், ''சங்கீதத்துல உனக்குள்ள ஆர்வம் புரியுது. சங்கீதம் முக்கியம்தான். ஆனால், படிப்பு இன்னும் முக்கியம். நீ ப்ளஸ் டூ முடிச்சுட்டு, வா! கட்டாயம் உன்னை என் சிஷ்யனா சேர்த்துக்கறேன்!'' என்று என்னை அனுப்பி வைத்தார் சேஷகோபாலன் சார்.

சக்தி சங்கமம்

அவர் சொன்னபடியே செய்தேன். பின்பு, சென்னை வைஷ்ணவா கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள், சென்னை தி.நகரில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது, யதேச்சையாக ஒரு வீட்டு வாசலில் 'மகாராஜபுரம் சந்தானம்’ என்று பெயர்ப் பலகையைப் பார்த்தேன். உடனே அவரிடம் ஆசி பெறவேண்டும் என்று ஆசை எழ, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக உள்ளே சென்றேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரும், 'ஒரு பாட்டுப் பாடேன், கேட்போம்!’ என்றார். பாடி முடித்ததும், 'அம்பி, அடுத்த வாரம் கிருஷ்ண கான சபால ஒரு கச்சேரி. நான் பாடறேன். நீதான் பின்பாட்டு’ என்று அவர் அப்போதே சொல்ல, நடப்பது கனவா, நிஜமா என ஒரு கணம் திக்குமுக்காடிப் போனேன். இப்படி இசைமேதைகளின் அண்மையும் அறிமுகமும் ரொம்ப சுலபமாக எனக்குக் கிடைத்தது என் பாக்கியம். அவரிடம் ஒரு வருடம் சங்கீதம் கற்றுக்கொண்டேன். பின்னர், சேஷகோபாலன் சாரிடமும் கற்றுக்கொண்டேன்'' என்று ஒரு பவ்வியமான சீடனுக்கே உரிய நெகிழ்வோடு குரு தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் நெய்வேலி சந்தானகோபாலன்.

• ''ஸ்கைப் மென்பொருள் வழியாக, உலகின் பல நாடுகளிலும் இருக்கும் மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுத் தருகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம். அது எப்படி சாத்தியமாகிறது?'' என்று கேட்டார் வாசகர் கிருஷ்ணசாமி.

"Sky is the limit என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தக் காலத்தில் Skype is the limit now என்று சொல்லலாம். புராண காலத்தில் 'அசரீரி’ வழியாக உத்தரவு கிடைத்தது என்று படித்துள்ளோம். சரீரம் இல்லாதது அசரீரி! அதுபோல், கணினி வழியாக, அதாவது எலெக்ட்ரானிக் வழியாகச் சொல்லிக் கொடுப்பதால், இதை 'ஈசரீரி’ என்றும் சொல்லலாம். ஆர்வமும் உற்சாகமும் முயற்சியும் இருந்தால் 'ஸ்கைப்’ வழியாகவும் சங்கீதம் கற்கமுடியும். அப்படிக் கற்று, மேடைக் கச்சேரிகள் செய்து, இன்றைக்குப் பலர் இசைப் பள்ளி நடத்தி வரும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.''

• ''இருந்தாலும், நேரில் கற்றுத் தருவதற்கு இணையாக இதனைச் சொல்ல முடியுமா?'' - வாசகி கௌரி சர்மாவின் கேள்வி இது.

''ஃபாஸ்ட்புட் உலகம் இது! அதுவும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் இங்கே வந்த பிறகு, அமெரிக்காவுக்கு எப்போது பகலோ அப்போது நாமும் விழித்திருக்கவேண்டும். குருகுல வாசம் மாதிரி அழைத்தால், யாரும் வரமாட்டேன் என்கிறார்கள். அவர்களையும் தப்பு சொல்லக்கூடாது. ஆர்வம் இருக்கிறது; நேரம்தான் இல்லை. இன்றைய குழந்தைகள் பிறக்கும்போதே செல்போனும் கையுமாகத்தான் பிறக்கிறார்கள். நல்ல சங்கதி கிடைத்தால், 'கொஞ்சம் இருங்கள் சார், ரிக்கார்ட் பண்ணிக் கிறேன்’ என்கிறார்கள். ஆக, விஞ்ஞான சாதனங்கள் இருக்கின்றன. அவை சாதகம் செய்வதற்கும் துணை புரிகின்றன.

சக்தி சங்கமம்

இங்கே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உண்மையில் குரு என்பவர் வெளியே இல்லை; நமக்குள்ளேயே இருக்கிறார்.  'தொட் டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு’. நமக்குள் இருக்கும் அறிவைத் தொட்டு எழுப்புபவரே குரு! 'ஈகுரு, குரு, யூ குரு’ என்று ஒரு கட்டுரைகூட எழுதியிருக்கிறேன். 'யூ ட்யூபி’லும் நிறையப் பேர் சங்கீத சங்கதிகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில், குருவின் கதை ஒன்றைச் சொல்வார்கள். அப்போதெல்லாம் குருவின் முன்னே சிஷ்யர் உட்காரமாட்டார். ரயிலில் ஒரு குருவும் சிஷ்யனும் மதுரைக்குச் செல்கிறார்கள். குரு அமர்ந்திருக்கிறார்; சீடர் நின்றுகொண்டிருக்கிறார். ஏதாவது பேசவேண்டுமே என்று, 'குருவே, ஆரபிக்கும் தர்பாருக்கும் என்ன வித்தியாசம்?’ என்று தயங்கியபடியே கேட்டாராம் சீடர். உடனே குருவுக்குக் கோபம் வந்துவிட்டது. அப்போது வண்டி மானாமதுரையில் நின்றது. 'சந்தேகமா கேட்கறே? ரயிலை விட்டு இறங்கு. முதல்ல போய் மானாமதுரைக்கும் மதுரைக்கும் என்ன வித்தியாசம்னு கத்துக்கிட்டு, வா!’ என்று சொன்னாராம் (எல்லோரும் சிரிக்கிறார்கள்).

இது ஒரு வேடிக்கைக் கதைதான்! என்றாலும், இப்படியெல்லாம் இன்று இருக்கமுடியுமா? சந்தேகம் கேட்டுக் கற்றுக்கொள்ளக்கூடியது அல்ல சங்கீதம்! குரு பாடுவார்; உடனிருந்து நாம் அதைக் காதால் உள்வாங்கிக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், இன்றைய நிலை வேறு! என் சிஷ்யன், 'எனக்கு ஒரு சந்தேகம், சார்!’ என்று கேட்டால், 'இப்ப முடியாதுப்பா! எனக்கு வேலை இருக்கு. இன்னொரு நாள், வா!’ என்றால், 'சரி சார்...’ என்று போயே போய்விடுவான். ஆனால், இன்டர்நெட்டைத் தட்டினால், நானே வேறு எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கான பதிலைச் சொல்லியிருப்பேன். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்வான். அதைவிட, நானே பொறுமையாக அவனுக்குச் சொல்லித் தரலாம் இல்லையா? அல்லது, 'இந்த வெப்சைட்டில் பார்’ என்று வழிகாட்டலாம். இதையே ஸ்கைப்  வழியாகச் செய்ய முடிகிறது.

ஸ்கிரீனில் இருக்கும் பிம்பத்துக்கு நமஸ் காரமும் செய்யலாம்; குரு ஆசிர்வாதமும் செய்யலாம். இன்றைய இளைஞர்களுக்கு இசை கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசை இருப்பதே பெரிய விஷயம். கடவுள், இசை என்ற ஒரு பெரிய சொத்தை எனக்கு அளித்திருக்கிறார். அதை அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது என் கடமை இல்லியா? அதற்கு, 'ஸ்கைப்’ எனும் நவீனம் பேருதவியாக இருக்கிறது.''

• ''உங்கள் மகள் ஸ்ரீரஞ்சனியும் இசைக் கச்சேரிகள் செய்கிறாரே, அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்!'' என்று கேட்டார் அனுராதா.

''என் மனைவி நெய்வேலியைச் சேர்ந்தவர். கச்சேரி தொடர்பாக சென்னையில் நான் இருந்தேன். வீட்டில் தந்திகளை மீட்டி வீணை வாசித்துக்கொண்டு இருந்தபோது, எனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கும் சேதி தந்தி மூலம் வந்தது. அப்போது நான் வாசித்துக்கொண்டிருந்த ராகம் ஸ்ரீரஞ்சனி! அதனால், குழந்தைக்கும் அதே பெயரையே வைத்துவிட்டேன். இது மிகவும் மங்களகரமான ராகம். அவளும் பாட்டு கற்றுக்கொண்டு கச்சேரிகள் செய்கிறாள். சென்ற ஆண்டு அவளுக்கு நிறைய பரிசுகளும், விருதுகளும் கிடைத்தன. எல்லாம் கடவுள் கடாட்சம்!''

• ''கீர்த்தனைகளின் பொருள் புரியாதவர்களும் புரிந்து ரசிக்கும்படியாக உங்கள் கச்சேரி அமையத் திட்டமிடுவது உண்டா?'' - வாசகர் சேஷாத்ரியின் கேள்வி இது.

''முன்னெல்லாம் சங்கீதம் தெரிந்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால், கச்சேரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி வருபவர்களும், 'நான் எத்தனையோ தோடி கேட்டிருக்கிறேன். பார்க்கலாம், இவர் எப்படிப் பாடுகிறார் என்று’ என்கிற விமர்சன பாவனையோடு உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், இப்போது வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் இசையை ரசிப்பதற்குத்தான் வருகிறார்கள். ஒரு கீர்த்தனையைப் பாடுவதற்கு முன், அதை எழுதியவர் யார், அது என்ன ராகத்தில் அமைந்துள்ளது என எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் பாடினால், ரசிகர்களால் இன்னமும் ஆழமாக ரசிக்க முடிகிறது.

சக்தி சங்கமம்

கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர் ஆகியோர் தமிழிசையின் மும்மூர்த்திகள் எனலாம். கோபாலகிருஷ்ண பாரதியார் திருவையாறு சென்று தியாகராஜ சுவாமிகளைப் பார்த்த போது, 'மாயவரத்திலிருந்து வந்திருக்கிறேன் என்கிறீர்களே... அங்கே கோபாலகிருஷ்ண பாரதி என்று ஒருவர் இருக்கிறாரே, தெரியுமா?’ என்று சுவாமிகள் கேட்டாராம். இவர் 'அடியேன்தான்’ என்று சொல்ல, சுவாமிகள் மகிழ்ந்து கேட்டுக்கொண்டதன் பேரில், கோபாலகிருஷ்ண பாரதியார் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் ஒரு கீர்த்தனையை இயற்றிப் பாடியதாக சரித்திரம் இருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லி, கீர்த்தனையின் பொருளையும் விளக்கிப் பாடும்போது, கச்சேரி அனைவராலும் ரசிக்கப்படுவதாக அமையும்.''

• ''உங்களின் தினசரி பூஜை முறைகள் பற்றிச் சொல்லுங்களேன்..?'' என்று ஆர்வத்தோடு கேட்டார் ராஜலக்ஷ்மி.

''முன்னே மாதிரி விஸ்தாரமாக பூஜை யெல்லாம் செய்ய முடிவதில்லை. சுவாமி முன் அமர்ந்து கீர்த்தனைகளைப் பாடுவேன். இதுவும் பூஜையில் ஒரு விதம்தான்! எம்.எஸ், சுப்புலட்சுமி அம்மாவின் விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்கச் செய்துவிடுவேன். குளித்து விட்டு வந்து சாப்பிடுவதற்கு முன்னால், எத்தனை தடவை முடிகிறதோ, அத்தனை தடவை சுவாமிக்கு  நமஸ்காரம் செய்வேன். அவ்வளவுதான்!''

• ''சில வருடங்களுக்கு முன்பு, உங்களுக்குத் தொண்டையில் பிரச்னை ஏற்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள் என்றும், சில காலம் கச்சேரியே செய்யாமல் ஒதுங்கியிருந்தீர்கள் என்றும் கேள்விப்பட்டோம். அது குறித்து அறிய விரும்புகிறோம்!'' என்றார் பாலகிருஷ்ணன்.

''சில தடங்கல்கள் ஏற்பட்டது உண்மைதான்! அந்தத் தருணத்தில், எனக்கு மௌனம் தேவைப்பட்டது. அப்போது என்னைப் பற்றி நானே உள்ளாழ்ந்து கேள்விகள் கேட்கச் சந்தர்ப்பம் அமைந்தது.

குரல் அல்லது தொண்டை என்பது ஆண்டவன் கொடுத்த ஒரு கருவி. அதனைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும். அதிகப்படி யாகத் தேய்மானம் ஏற்படும்படியாக எந்தக் கருவியையும் பயன்படுத்தக்கூடாது அல்லவா? எனினும், அப்போதும் என்னால் இயன்ற அளவில் கச்சேரிகள் செய்துகொண்டுதான் இருந்தேன். ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள். கடவுளின் கருணையும், பெரியவாளின் அருளும் பரிபூரணமாக இருந்ததால், பூரண குணமானேன்!''

• ''காஞ்சிப் பெரியவரைத் தவிர, உங்களுக்குக் கிடைத்த வேறு மகான்களின் தரிசன அனுபவங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?' - வாசகி அனுராதா கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, ''சிவன் சார்...'' என்று பதிலைத் தொடங்கிவிட்டார் நெய்வேலி சந்தானகோபாலன்.

''சிவன் சார் வேறு யாருமல்ல; மகா பெரியவாளின் தம்பிதான். அவர் என்னை கோபாலகிருஷ்ண பாகவதரின் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பார். தவிர, கடலூர் சுவாமிகள் என்று ஒரு பெரிய உபாசகர்  இருந் தார். என் மனைவி வீட்டாருக்கு அவர்தான் குரு. அவரது இல்லத்தில் ஒரு வீணை இருக்கும். நான் அங்கே போகும்போதெல்லாம், அந்த வீணையை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். ஒருமுறை, அவரும் எனது குடும்பமுமாகச் சிதம்பரம் சென்றிருந்தபோது, 'மேதா தட்சிணா மூர்த்தி வாக்வாதினி’ என்ற மந்திரத்தை எனக்கு உபதேசித்து அருளினார் அவர். மேதா தட்சிணாமூர்த்தி, வீணை வாசித்தபடி காட்சி தருவார். வாக்வாதினி என்றால், சரஸ்வதி தேவியைக் குறிக்கும். மாயவரத்தில் மேதா தட்சிணாமூர்த்திக்குக் கோயில் இருக்கிறது.

இப்போது எங்களுக்குக் குருவாக இருப்பவர் முரளீதர ஸ்வாமிகள்! சிறு வயதில் அவரை அடிக்கடி சென்று பார்ப்பேன். ஏதாவது ஒரு கீர்த்தனையைச் சொல்லிப் பாடு என்பார். தெரிந்தால் பாடுவேன். தெரியவில்லையென்றால், எனது தயக்கத்தைப் புரிந்துகொண்டு, வேறு ஒரு கீர்த்தனையைப் பாடச்சொல்வார். தெரியாத கீர்த்தனைகளை வீட்டுக்கு வந்து பாடிப் பயிற்சி செய்வேன். அடுத்த முறை அவரிடம் செல்லும்போது பாடிக் காண்பிப்பேன். இது ஒருவித அனுக்கிரகம்.

சக்தி சங்கமம்

தஞ்சாவூரில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு தம்புரா இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், கேட்பதற்குக் கூச்சம். எப்படி அதைக் கேட்பது என்று தயங்கினேன். 'இந்தத் தம்புரா யார் போடுகிறார்கள்?’ என்று கேட்டேன். 'முரளீதர சுவாமிகள் தொட்டு ஆசிர்வாதம் செய்த தம்புரா இது. அவரிடம் இதைச் சேர்ப்பிக்கவேண்டும். உங்களால் எடுத்துக்கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டார் அவர். 'ஆகா! பேஷாகச் செய்கிறேன்’ என்று அதை எடுத்துக்கொண்டு சென்னை வந்து, அதைச் சேர்ப்பிப்பதற்காக சுவாமிகளைப் பார்க்கச் சென்றபோது, 'வா வா, உனக்காகத்தான் காத்துண்டிருக்கேன்’ என்றார். அவருக்கு நான் வரப் போவது எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டேன்! அவரிடம் தம்புராவைக் கொடுத்து, விஷயத்தைச் சொன்னதும், 'எனக்கெதுக்கு இது? நீயே வெச்சுக்கோ!’ என்று சொல்லிவிட்டார். அப்போது என் மனது அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

அடுத்து, திருப்புகழ் சாதுராம் சுவாமிகள். அவர் வள்ளிமலை சுவாமிகளின் சிஷ்யர். ஆசுகவி. 'குரு புகழ்’ என்று எழுதியிருக்கிறார்.நாலரை வயதிலேயே என்னை அடையாளம் கண்டு வாழ்த்தியவர் அவர். அவருடைய சிஷ்யர்கள் குழுவிலிருந்தே எனக்கு வாழ்க்கைத் துணை அமைந்தது சந்தோஷம்.

அடுத்து, கிருபானந்தவாரியார் சுவாமிகள். இசைஞானம் மிக்கவர். ஓர் அபூர்வமான ராகத்தைப் பாடி, 'இது என்ன ராகம்?’ என்று கேட்பார். நான் சரியான விடை சொன்னால், 'இந்தா, உனக்குப் பரிசு’ என்று ஒரு மாம்பழத்தைப் போட்டு 'கேட்ச்’ பிடிக்கச் சொல்வார். 'ரொம்ப நல்லா வருவே’ என மனப்பூர்வமாக வாழ்த்துவார்.

எம்பார் விஜய ராகவாச்சாரியார் என்று ஒரு பெரிய உபன்யாசகர். அவருக்கு என் இசை ரொம்பவும் பிடித்துப் போனதால், 'நான் எங்கே உபன்யாசம் செய்தாலும், அதற்கு முன்னால் இந்தப் பையன் ஒரு மணி நேரம் பாடவேண்டும்’ என்று சொல்லி, என்னைப் பாட வைத்தவர் அவர். எல்லாமே இறையருள்!''  

• 'குருமார்களைப் பற்றிச் சொன்னீர்கள். உங்களின் சிஷ்யர்கள் பற்றியும் சொல்லுங்களே?'' என்று சேஷாத்ரி கேட்டதும், உற்சாகமானார் சந்தானகோபாலன்.

''ஒரு நல்ல குரு அமைவது எப்படிக் கொடுப்பினையோ, அப்படி நல்ல சிஷ்யர்கள் அமைவதும் கொடுப்பினை! ஸ்ரீராம் பார்த்தசாரதி, என் மகள் ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீவித்யா ராம்நாத், நந்தினி ராமமூர்த்தி, சின்மயா சகோதரிகள், அஜய் நம்பூத்ரி எனப் பலரும் என் சிஷ்யர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன்.''

• ''நிறைவாக ஒரு கேள்வி. 'தெய்வத்தின் குரல்’ புத்தகம் முழுவதையும் படித்துள்ளதாகத் தெரிவித்தீர்கள். அதில் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த ஒரு பகுதியைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?'' என்றார் வாசகி நிஷ்களா.

''காஞ்சிப் பெரியவாளைப் பற்றி நான் படித்த ஒரு தகவலைச் சொல்கிறேன். மடாதி பதியாகப் பதவியேற்ற பின்பு, பெரியவா காசிக்குச் சென்றார். அங்கு குழுமியிருந்த வேத பண்டிதர்களெல்லாம், 'இந்தச் சிறுவனை இத்தனை பெரிய பதவியில் அமர்த்தியிருக் கிறார்களே!’ என்று ஆச்சரியப்பட்டு, 'ஜகத்குரு என்கிறார்களே, எப்படி?’ என்று அவரிடம் கேட்டார்களாம். 'ஆமாம்! இந்த ஜகமே எனக்கு குரு!’ என்று பதில் சொல்லி, 'பறவைகள் கூடு கட்டுகின்றன. அதைப் பார்த்து நான் கற்றுக் கொள்கிறேன்’ என்றாராம் பெரியவா.

பெரியவா ஒருமுறை அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம், 'இசைக்கலைஞர்களெல்லாம் வாழ்நாள் பிரதிக்ஞையாக ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டும். 'இந்தச் சங்கீதத்தின் பாவ பக்தி விசேஷத்தைக் காத்துக் கொடுப்பேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அதன் புனிதத்தைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்’ என அருளினார். அதை ஒரு சத்தியப்பிரமாணமாக எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

சக்தி சங்கமம்

தன்னிறைவு காண்பதே உண்மையான ஆன்மிகம். ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. பால் வேண்டும்; ஆனால் பசு வேண்டாம். வேதத்தின் மூலமாக நோய்கள் தீரும் வகையைக் கண்டுபிடிக்கவேண்டும்; ஆனால், வேத பண்டிதர்களைக் கவனிக்க மாட்டேன்... இப்படி ஒரு மனோபாவம் வளர்ந்து வருகிறது. இது தவறு. கடமைகளாக நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் தவறாது செய்தால், உலகமே க்ஷேமமாக இருக்கும். இதைத்தான் பெரியவா 'மைத்ரீம் பஜதே’ என்று பாடலாக எழுத, அதை ஐ.நா. சபையில் பாடினார் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா. எல்லோரிடமும் அன்பு பாராட்டி, பரஸ்பரம் உதவி செய்வதே இறைவனுக்குச் செய்யும் சேவை! ஆகவே, இசைபட வாழ் வோம்!'' என்று சொல்லி உரையாடலை நிறைவு செய்த சந்தானகோபாலன், வாசகர் கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சில பாடல்களைப் பாடி நெகிழ்த்தினார்.

வாசகர்களின் முகத்தில் பூரித்துக் கிடந்தது சந்தோஷம். அது அவர்களின் மனநிறைவைப் பறைசாற்றிற்று!

தொகுப்பு: பாரதிமித்ரன்

படங்கள்: 'கிளிக்’ ரவி, ப.சரவணகுமார்

அடுத்த இதழில்... சக்தி விகடன் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்..