
இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்
##~## |
அது பிரும்மலோகம்.
படைப்புகளை நிகழ்த்திக்கொண்டே, தன் இடத்துக்கு வந்த நாரதரை வார்த்தைகளால் உபசரித்து அமரச் சொல்லி, ''நாரதரே, ஏதாவது செய்தி உண்டா? புதிதாக ஏதும் நடந்ததா?'' என்று கேட்டார் பிரம்மா.
''இதுவரை புதிதாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், புதிதாக ஏதும் இனி நடக்குமோ? அது பற்றிப் படைப்புக் கடவுளான நீங்கள் எதுவும் சொல்ல முடியாதோ?'' என்று நாரதர் கேட்டார்.
''ஒரு சண்டை நடக்கும்!'' என்றார் பிரம்மா.
''அதுதானே பார்த்தேன்! உங்களால் சும்மா இருக்க இயலாதே! எதிரும் புதிருமானவற்றைப் படைத்துவிட்டு அவை இரண்டும் மோதிக்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில் உங்களைவிட சாமர்த்தியசாலி யார்?''
''அப்படியில்லை, நாரதரே! நான் படைக்கும்போது ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளவேண்டும் என்று படைப்பதில்லை. எல்லாமும், எல்லோரும் குழந்தைகளே! வளர்ச்சி என்று ஒன்று இருக்கிறது. அது விஷ்ணுவின் செயல். அந்த வளர்ச்சியின்போது, சில விஷயங்கள் நேர் எதிராகப் போய்விடுகின்றன. பிறக்கும்போது புலிக்குட்டி தாய்ப்பால்தான் தேடுகிறது. வளர்ந்த பிறகு, அதுவே மானை வேட்டை ஆடுகிறது. எனவே, என் படைப்பில் குற்றமில்லை. என் படைப்பு வளரும்போது, எல்லாம்வல்ல நாராயணர் ஏதோ குறும்பு செய்துவிடுகிறார். பூமி இயங்குவதற்கு இப்படிச் சில விஷயங்கள் செய்வது அவசியம் என்கிறார்!''
''என்ன விஷயமோ?'' - ஆவலோடு கேட்டார் நாரதர்.
''நான் படைத்த புலஸ்தியர் இப்போது மகானாக இருக்கிறார். இன்று சிவராத்திரி. புலஸ்தியர் சிவபூஜை செய்யப் போகிறார். அதற்காக ஒரு கோயிலைத் தேடிக் கொண்டிருக்கிறார்!''

''மிக நல்ல விஷயம்தானே? இதில் வம்பு எங்கு வந்தது?''
''வம்பு வேறு இடத்தில் இருக்கிறது. சிவராத்திரியின் மகிமை பற்றி முனிவர்கள் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மரங்களின் உச்சியில் இருந்த சில குரங்குகள் கீழே இறங்கி, விலகி நின்று, கை கூப்பி, சிவராத்திரியின் மகிமை பற்றி முனிவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. தங்கள் பேச்சைக் குரங்குகள் கேட்பதை அறிந்து, முனிவர்களும் இன்னும் விஸ்தாரமாகப் பேசுகிறார்கள். சகல உயிர்களும் பயன் பெறட்டுமே, சுகம் பெறட்டுமே என்கிற நல்ல நோக்கத்தில், சிவம் என்பது பற்றி விளக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.''
''அடடா, அற்புதம்! எல்லா உயிரினங்களுக்கும் சிவன் முக்கியம் என்று தெரிந்தால், அதைவிட மிகப்பெரிய பேறு இந்த உலகத்தில் என்ன உண்டு? வாழ்க இவ்வுலகம். அது சரி, இதில் எங்கு வம்பு இருக்கிறது?''
''பாருமே, நீராகவே பாருமே!''
அவர்கள் இருவரும் திரும்பி, பூலோகத்தைப் பார்த்தார்கள்.
புலஸ்தியர் ஒரு சிவன் கோயிலைத் தேர்ந்தெடுத்து, நடுநிசியில் பூஜை செய்ய கதவைச் சாத்திக்கொண்டார். கருவறையை மூடிக்கொண்டார். பூஜையைத் தொடங்கினார்.
குரங்குகளும் கோயில் தேடின. கிடைக்கவில்லை. நேரமோ கடந்து கொண்டிருக்கிறது; வேறு கோயில் தேட நேரம் இல்லை. இந்தக் கோயில் கதவுகளை உடைப்போம் என்கிற முடிவோடு, கதவுகளை ஆட்டிப் பெயர்த்து எடுத்தன. கருவறையைத் திறந்தன.
புலஸ்தியர் கோபம் அடைந்தார். ''என்ன இது... நிம்மதியாக ஒரு பூஜையைச் செய்யவிடாமல், உங்கள் வானர புத்தியைக் காட்டுகிறீர்களே! பூஜைக்கு இடைஞ்சல் செய்த நீங்கள் அனைவரும் அழிந்துபோகக் கடவது!'' என்று சாபமிட்டார்.
குரங்குகள் கோபமுற்றன.
''புலஸ்தியரே! நாங்கள் தின்ப தற்கோ, தூங்குவதற்கோ இங்கு வரவில்லை. உங்களைப் போல சிவபூஜை செய்வதற்குத்தான் இங்கு வந்தோம். நீங்கள் உள்ளே இருப்பது தெரியாமல்தான் கோயில் கதவுகளை உடைத்தோம். அறியாமல் செய்த பிழைக்கு அழிந்துபோங்கள் என்றா சாபம் தருவீர்கள்? கதவைத் திறந்து வைத்திருந்தால், உள்ளே நீங்கள் பூஜை செய்வது அறிந்து விலகி இருப்போமே! இது பிழையானதற்குக் காரணம் நீங்கள்தான்! நாங்கள் சாபம் இடுகிறோம். அடுத்த ஜன்மத்தில் உங்கள் வம்சத்தை குலத்தோடு நாங்கள் அழிப்போம். இது சத்தியம்!'' என்று சீறின.

''அடடே! என்ன இப்படியாகிவிட்டது! இனி என்ன நடக்கப் போகிறது?'' - நாரதர் பதறியபடி கேட்டார்.
''அடுத்த ஜன்மத்தில் புலஸ்தியர் மகனான விஸ்ரவஸ் என்பவருக்கு கைகசி என்பவளிடம் ராவணனும், கும்பகர்ணனும் பிறப்பார்கள். இந்தக் குரங்குகள் சுக்ரீவன், ஹனுமன், அங்கதன் உள்ளிட்ட வானர சேனையாகப் பிறக்கும். புலஸ்தியர் வம்சத்தில் பிறந்த ராவணனை அழிக்க திருமால் அவதாரம் எடுத்து வருவார். அதற்கு ராமாவதாரம் என்று பெயர்!''
''அப்படியா! இதே விதமாகவா நடைபெறப்போகிறது? இதை யாரிடமாவது சொல்ல வேண்டுமே!'' என்று தவித்தார் நாரதர்.
ஒரு மரத்தடியில் பெரிய புற்று இருந்தது. அதில் வாய் வைத்து, ''இந்தப் புற்றில் யாரேனும் தவசி இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள். இப்படியிப்படி நடக்கப் போகிறது...'' என்று உரத்த குரலில் அனைத்தையும் சொல்லி, தன் மன பாரத்தைக் குறைத்துக் கொண்டார்.

பிற்பாடு வெகு காலம் கழித்து, அந்தப் புற்று உதிர்ந்து, ஒரு முனிவர் வெளியே வந்தார். அவரே, வால்மீகி! வால்மீகியால் ராம காவியம் எழுதப்பட்டது.
நாரதர் காலம் கடந்தவர். பல்வேறு அவதாரங்களைத் தரிசித்தவர். பிரபஞ்சம் தோன்றும்போது பிறந்தவர் அவர். பிரபஞ்சத்தின் மாற்றங்களைக் கடந்தவர். இன்னும் பிரபஞ்சத்தில் யாழ் ஒலி மீட்டியபடி, அவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். புவியில் நடக்கிற பல அற்புதங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்.
கம்சனுடனான அந்த யுத்தத்துக்குப் பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவான் களைத்திருந்தார். அவரது சிந்தனைகள் வெகு தொலைவில் இருந்தன. அவரது முகத்தில் மலர்ச்சி குறைவாக இருந்தது.
அவர் சபைக்கு வந்து வணங்கினார் நாரதர். நாராயண கானம் செய்தார். கிருஷ்ணரின் முகம் மலர்ந்தது.
''நாரதரே, இங்கு நடந்ததை அறிவீரோ?''
''நன்கு அறிவேன். உங்கள் பிறப்பிலிருந்தே உங்களை நான் கவனித்து வருகிறேன். எட்டாவதாகப் பிறந்த உங்களை யாதவர்கள் இருக்கும் இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். அங்கே பிறந்த பெண் பிள்ளையைக் கொண்டு வந்து, உங்கள் தாய்- தந்தைக்கு அருகே கிடத்தினார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கொன்ற கம்சன் எட்டாவது பிள்ளையையும் கொல்வதற்காக ஓடி வந்தான். பெண் குழந்தை என்றும் பாராமல் சுவரில் அடித்துக் கொல்லத் துணிந்தான்.

தேவகி கதறினாள். 'அண்ணா..! வேண்டாம். இந்தக் குழந்தையை மட்டுமாவது விட்டுவிடு!’ என்று கதறினாள்.
ஆத்திரத்தின் விளிம்பில் இருந்த கம்சன் மறுத்தான். குழந்தையைச் சுவரில் ஓங்கி அடிக்க, உயரே தூக்கினான். அது அவன் கையிலிருந்து நழுவி, சிறைக்கதவில் இருந்த இடைவெளி வழியாக வெளியே பறந்தது.
'அடேய், கம்சா! என்னை உன்னால் கொல்லமுடியாது. நான் சக்தி!’ என்று தன் சுய உருவம் காட்டியது. எட்டு புஜங்களுடன், நீண்ட நாக்குடன், கோரைப் பற்களுடன், கருமை நிறத்துடன், சிவந்த விழிகளுடன், சூலம் உயர்த்தி, கம்சனை எச்சரித்தாள் சக்தி.
''என்னை மட்டுமல்ல, உன்னைக் கொல்லப் போகும் குழந்தையையும் உன்னால் கொல்ல முடியாது. அந்தக் குழந்தை இந்தப் புவியில் எங்கோ வளர்ந்துகொண்டு இருக்கிறது. உனக்கு அழிவுக்காலம் வந்துவிட்டது. முடிந் தால், தேடிப்பிடித்து அவனோடு சண்டையிடு!’ என்று உரக்கக் கூறிச் சிரித்தாள் சக்தி.
கம்சன் நடுங்கினான். சக்தி மறைந்தாள். தேவகி நிம்மதி அடைந்தாள்.
'எங்கே அந்தக் குழந்தை... எங்கே அந்தக் குழந்தை...’ எனக் கம்சன் வெறி பிடித்தாற்போல் ஊரெல்லாம், உலகெல்லாம் தேடினான். 'யாதவ குலத்தில் ஒரு புதிய குழந்தை பிறந்திருக்கிறது; அது பல அற்புதங்களைச் செய்கிறது’ என்று கேள்விப்பட்டு, தனக்குக் கீழே வேலை செய்யும் அசுரர்களை அங்கு போகும்படி கட்டளை இட்டான். அந்தக் குழந்தையைத் தேடிப் பிடித்து உடனே கொல்லும்படி உத்தரவிட்டான். அசுரர்களும் தாதியாகவும் (பூதகி) சக்கரமாகவும் (சகடாசுரன்) என்று பல உருவங்களில் அந்தக் குழந்தையான தங்களை அழிக்க வந்தனர்.
கிருஷ்ணனான நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோதே அவர்களை உதைத்து, வதைத்து, உறிஞ்சிக் கொன்றீர்கள்! நீங்கள் தான் தனக்கு எதிரி என்று கம்சன் தெரிந்து கொண்டான். உங்கள் இடத்தில் வைத்து உங்களைக் கொல்லமுடியாது எனப் புரிந்ததால், தன் இடத்துக்கு உங்களை வரவழைக்கச் சமரசம் பேசினான். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். அவன் வரவேற்புக்குச் சம்மதம் சொல்லி, அவன் இடம் நோக்கிச் சென்றீர்கள். உங்களுக்குத் துணையாக பலராமரும் வந்தார். யாதவ குலம் கவலைப்பட்டது. கம்சனின் மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.

நீங்கள் அரசவை வாசலில் வைத்திருந்த பெரிய வில்லை வளைத்து, உடைத்துத் தூக்கிப் போட்டீர்கள். கோட்டைக் கதவு களைத் தகர்த்தீர்கள். பெரிய கொம்பு உள்ள யானைகளை அடித்துத் துவைத்தீர்கள். நெஞ்சில் கால் வைத்து அவன் இதயத்தை ஒரே மிதியில் நசுக்கி, ரத்தம் கக்க வைத்தீர்கள். கம்சன் மாண்டு போனான். உலகம் நிம்மதி யுற்றது. உங்கள் தாய்- தகப்பன் சந்தோஷம் அடைந்தார்கள். மக்கள் விடுதலை பெற்றார் கள். அப்படியிருக்க, உள்ளே என்ன கவலை? ஏன் வாடி இருக்கிறீர்கள்? அயர்ச்சியா, அல்லது வேறு ஏதேனுமா?'' - நாரதர் கேட்டார்.
''நாரதரே, பதிலைத் தெரிந்துகொள்ள நீங்கள் வரவில்லை. தெரிந்துகொண்டே வந்திருக்கிறீர்கள். என்னதான் ஆனாலும், அவன் என் மாமன் அல்லவா? தாய்க்கு அண்ணனாக இருப்பவனை வணங்க வேண்டும். அதுதானே முறை? மாமன் என்பது மிக நல்ல உறவு! தாய்- தந்தைக்குப் பிறகு, மாமன்தானே முக்கியம்! அவனுடைய மகள்தானே முறைப்பெண் உறவு என்று வழிமுறை, ஒரு நியமம் இருக்கிறது அல்லவா! அதை நான் கெடுத்துவிட்டேனே! என் மாமனை இழுத்து மிதித்துக் கொன்று விட்டேனே! இது பாவமல்லவா? இதைப் போக்க என்ன செய்வது?'' - கவலையோடு கேட்டார் கிருஷ்ணர்.
நாரதர் வாய்விட்டுச் சிரித்தார்.

''எல்லாம்வல்ல நாராயணரின் அவதாரம் நீங்கள். துஷ்டர்களைச் சம்ஹரிக்கவே நீங்கள் அவதரித்திருக்கிறீர்கள். சாதுக்களைப் பரிணமிக்கச் செய்யவே பிறந்திருக்கிறீர்கள்! சத்தியத்தை நிலைநாட்டவே தோன்றி யிருக்கிறீர்கள்! கிருஷ்ணா, உங்களுக்குக் குறை ஏது? பாவம் ஏது? நீங்கள் சகலமும் கடந்தவர் அல்லவா? இது உங்களுக்கே தெரியும். ஆனாலும், ஊரார் கேள்வி கேட்க, அவர்கள் சமாதானம் கொள்ளுமாறு ஒரு பதில் சொல்ல வேண்டுமே என்று என்னைக் கேட்கிறீர்கள். அதனால் சொல்கிறேன்... சேது என்ற கடல் மிகப் புனிதமானது. ராமருடைய சேது இருந்த இடம், இறந்தவர்கள் கூடும் இடம். பித்ருக்களுடைய இடம். முன்னோர்களுடைய வசிப்பிடம். பூமியை அவர்கள் தீண்டுவதற்கு, அங்கு இறங்குவதற்கு வசதி இருக்கிறது. இது ராமரால் ஏற்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா..! ராம சேதுவுக்குப் போய், அங்கு கடலில் நீராடி, அங்குள்ள தீர்த்தங்களில் மூழ்கி, சிவபூஜை செய்யுங்கள். நிச்சயம் கம்சன் அமைதியாவான். உங்கள் மனக்குறை தீரும். உங்கள் குறை தீர்ந்ததை உங்களால் உணர முடியும். சேது அப்படிப்பட்ட இடம்!'' என்றார் நாரதர்.
நாரதரின் வாக்கு சத்தியமானது. அன்று ஸ்ரீகிருஷ்ணரால் கம்சனுக்கு மனக்கேதம் தீர்க்கப்பட்டதுபோல, இங்கு நல்லவரோ கெட்டவரோ, பிடித்தவரோ பிடிக்காதவரோ, உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ... அவர்களின் மனக்கேதம் தீர்ப்பதற்கு ராமசேது ஒரு சரியான இடமாக இருக்கிறது. அங்கு நீத்தார் கடன் செய்தவர்கள் நலம் பெறுவார்கள். இது நாரதரின் சத்திய வாக்கு!

தெய்வங்களுக்கு மட்டுமல்ல; பூமியில் வாழும் மனிதர்களுக்கும் நாரதர் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
நாராயண... நாராயண..!
சிறிதும் பெரிதுமாக இன்னும் சில நாரதர் கதைகள் இருக்கின்றன.முற்றி முதிர்ந்ததைக் கவர்ந்து கொண்டு வந்து விவரித்திருக்கிறேன். கதையைத் தாண்டி பேசியிருக்கிறேன்.
மேடை நாடகத்தில் காணப்படும் கோமாளி அல்ல நாரதர். சௌலப்யர். அதாவது, எளிதாக பழகக்கூடியவர். பக்தி மார்க்கத்தின் எடுத்துக்காட்டு. நாம ஜபத்தின் உதாரண புருஷர்.
சனாதன தர்மத்தில் ஏன் இத்தனைக் கடவுள்கள். ஏன் இத்தனை மகான்கள். கேள்வி மேல் கேள்வி வருகிறது. அத்தனை பேர் இருப்பினும் ஜனங்களை முற்றிலும் மாற்றமுடியவில்லையே. சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டு மனிதக் கூட்டம் தன் வழியேதானே போகிறது.
சனாதன தர்மம் நேற்று முளைத்த குத்துச் செடி அல்ல. அதன் தொன்மை கண்டறிய முடியாதது. அதன் தொன்மையே அதைப் பற்றிய கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது. இந்து மதத்துக்கு வெகு நீண்ட சரித்திரம் இருப்பதால், கடவுளுக்கு நிகர்த்த மகான்கள் தோன்றி, மக்களை உயர்த்தியிருக்கிறார்கள். நல்ல மரம், விதைகளை விட்டுக்கொண்டேதான் இருக்கும். விழுதுகள் மரமாகும்.
'எதற்கு இத்தனை மகான்கள்.’ என்று கேட்டால், என்ன பதில் சொல்ல. ஆலமரத்துக்கு ஏன் இத்தனை விழுதுகள் என்று கேட்பவரை என்ன சொல்ல. அது இயல்பல்லவா.
நாரதர் கதைகள் ஒரு மகானின் அனுபவம். புலி புலிக்குட்டியை நக்கி நக்கித்தான் புலியாக்கும். நீங்கள் புலிக்குட்டியாக இருந்தால், புலியின் அரவணைப்பு உங்களுக்குப் புரியும். புலியின் அரவணைப்புக்கு ஏங்குங்கள். கிடைக்கும்.
இந்தப் புலி, குரு, கடவுள், ஞானி எல்லாம் ஒன்றே.
(நிறைவுற்றது)