Published:Updated:

வெண் பூசணி வழிபாடு!

சின்னாளப்பட்டி - ஸ்ரீஅண்ணாமலையார் கோயில்பித்ரு வழிபாடு!

##~##

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. இங்கே அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீஉண்ணாமலை அம்பாள் சமேத ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோயில். இங்கே, ஸ்ரீபிரத்தியங்கிராதேவியின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அமாவாசையிலும் தேவிக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

தை அமாவாசை வழிபாடு:

தை மாதம் அமாவாசை நன்னாளில், ஸ்ரீஅண்ணா மலையாரையும் ஸ்ரீஉண்ணாமுலை அம்பாளையும் தரிசித்து வணங்கினால், முன்னோர்களின் ஆசிர்வாதமும் சிவனாரின் பேரருளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். எனவே, இந்த நாளில் இங்கு வந்து, ஸ்ரீஅண்ணா மலையாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுகின்றனர், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பக்தர்கள்.

மிளகாய் யாக வழிபாடு:

ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை நாள் உகந்தது என்றாலும், தை அமாவாசை நாளில் தேவியை வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். இங்கே நடைபெறும் நிகும்பலா யாகத்தில் வரமிளகாயை ஹோமத்தில் இட்டு, பூஜை செய்வது வழக்கம். இந்த பூஜையில் கலந்துகொண்டு, வெண் பூசணி வைத்துப் பிரார்த்தனை செய்தால், தோஷங்கள் நீங்கி எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

வெண் பூசணி வழிபாடு!
வெண் பூசணி வழிபாடு!

அதேபோல், தை அமாவாசை நாளில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் யாகத்தில் கலந்து கொண்டு, மாதுளம்பழம் வைத்து வேண்டிக் கொண்டு, அந்தப் பழத்தைச் சாப்பிட்டால், பித்ரு சாபம் நீங்கி, பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவார்கள் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.  

வெற்றிலை வழிபாடு:

திருமணம் ஆகாதவர்கள், அமாவாசை நாளில் வெற்றிலை பாக்கு மஞ்சள் வைத்து வழிபட்டால், கல்யாண வரம் கைகூடும். முழுத் தேங்காயை ஹோமத்தில் வைத்து வழிபட, எதிரிகள் தொல்லை ஒழியும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். தீராத நோயும் தீரும்.

மாங்கல்ய பாக்கியம்!

ஸ்ரீஉண்ணாமுலை அம்பாளுக்கு தாழம்பூ சார்த்தி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம். மனோரஞ்சிதப் பூ சார்த்தி அம்பாளை வணங்கினால், மனதில் நினைத்தபடி திருமணம் ஈடேறும்.  

ஸ்ரீகனக துர்கை

இந்தக் கோயிலின் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீகனக துர்கை சந்நிதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், ராகு கால வேளையில், எலுமிச்சை தீபமேற்றி, 11 நாட்கள் வேண்டிக்கொண்டால், வீட்டில் சுபிட்சம் நிலவும்.

ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு:

இந்தக் கோயிலில், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் சந்நிதி உள்ளது. புதன்கிழமைகளில் இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட்டால், குழந் தைகள் கல்வியில் சிறந்து தேர்வில் அதிக மதிப் பெண் எடுப்பார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்

பின் செல்ல