Published:Updated:

கேள்வி - பதில்

பொது அறம் வேறு... பரிகாரம் வேறு! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

பொது அறம் வேறு... பரிகாரம் வேறு! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

? தோஷங்களைச் சுட்டிக்காட்டும் ஜோதிட நூல்கள், அவற்றுக்கான பரிகாரங்களையும் பரிந்துரைக்கின்றன என்கிறார்கள். ஆனால், வழக்கமாக ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்கவேண்டிய வழிபாடுகளையும், கடமைகளையும் பரிகாரம் என்று சொல்லமுடியாது என்கிறார் என் நண்பர்.

அப்படியெனில்... அன்னதானம் கொடுப்பது, திருத்தல தரிசனங்கள், ஏழைக்கு உதவுவது போன்றன எல்லாம் பரிகார வகையில் சேராதா? பரிகாரங்கள் குறித்து தர்மசாஸ்திரம் சொல்வதென்ன? விளக்குங்களேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கே. அரவிந்த், சென்னை-24

ரு மாணவர்கள் மோதிக்கொண்டார்கள். இருவருக்கும் அடி விழுந்தது. ஆசிரியர் முன் நிறுத்தப்பட்டார்கள். ''எல்லோர் முன்னிலையிலும் பன்னிரண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். இனி கைகலப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார் ஆசிரியர். தண்டனையை நிறைவேற்றி, பிரிந்து சென்றார்கள். இருவரின் பகையும் மறைந்தது.

தேர்வுக்குப் பணம் கட்டவேண்டிய காலத்தையும் நேரத்தையும் மறந்துவிட்டான் மாணவன். தவறு மனத்தை வருத்தியது. அலுவலக அதிகாரியைச் சந்தித்து வேண்டினான். 500 ரூபாய் அபராதமாகக் கட்ட வைத்து, மாணவனை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி - பதில்

தொடர்வண்டி நிலையத்தை அணுகும் வேளையில் வண்டி கிளம்பி விட்டது. ஓடும் வண்டியில் பயணச்சீட்டு இல்லாமலே ஏறிவிட்டான். அவன் ஏறியது முதல் வகுப்பு. பயணச்சீட்டுப் பரிசோதகரிடம் மாட்டிக் கொண்டான். அபராதத்தோடு பயணத் தொகையைப் பெற்று, பயணம் செய்ய அனுமதித்தார்.

இவை எல்லாம் தவற்றைத் திருத்தும் பரிகாரமாக ஏற்கப்படும்.

தேர்தல் முடிந்தது. வென்றவர்களில் ஒருவர்கூடத் தலைவராக இருக்கத் தகுதியில்லை. நெருக்கடிநிலை தோன்றியது. தேர்தலில் பங்கு பெறாத ஒருவர் தலைவரானார். ஆறு மாதத்துக்குள் அவர் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றார். அவசர காலத்தில் சட்டத்தை அறிமுகம் செய்து, பிற்பாடு சட்டசபையில் நிறைவேற்றுவது உண்டு. இது தவறு செய்து திருத்திக்கொள்வது. இதுவும் பரிகாரம் எனலாம்.

ஆகாய விமானத்தில் வந்து இறங்கினவனிடம் அளவுக்கு அதிகமான 'சுமை’ இருந்தது. அதிகாரிகள் அதிகச் சுமைக்கு அபராதம் விதித்தார்கள். அதை ஏற்று, சுமையைப் பெற்றார். இதுவும் பரிகாரத்தில் அடங்கும்.

வெளிநாட்டிலிருந்து வேலைக்கு ஆர்டர் வந்தது. உடனே அதை ஏற்கவேண்டும். இருக்கும் வேலையிலிருந்து விடுபட வேண்டும். விடுபட மூன்று மாதம் முன்பு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதிகாரியை அணுகி வேண்டினான். மூன்று மாத சம்பளத்தைக் கட்டவைத்து, அதிகாரி அவனை விடுவித்தார். இதுவும்கூட ஒரு வகையில் பரிகாரம்தான்.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, விதவைக்கு வாழ்வு அளிப்பது, ரத்த தானம் செய்வது, ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பது, நோய்வாய்ப்பட்டவர்களைப் பராமரிப்பது, மாணவர்களுக்குக் கல்வி உதவியளிப்பது, கோயில் குளத்தில் தீர்த்தாடனம் மேற்கொள்வது, கோயில் உற்சவ காலங்களில் அன்னதானம் அளிப்பது, முதியோர்களுக்கு உதவுவது, கோயில் களில் விசேஷ வழிபாடு செய்வது, அனாதை இல்லங்களுக்குப் பொருளுதவி அளிப்பது, உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பது... இவை பரிகாரத்தில் வராது.

? எனில், இதுபோன்ற விஷயங்களை எந்த வகையில் சேர்ப்பது?

இவை எல்லாம் பொது அறத்தில் அடங்கும். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி நிவேதனம் செய்யக்கூடாது. பொது அறத்தைப் பரிகாரத்தோடு இணைக்க இயலாது. தவறு செய்யாதவர்களும் பொது அறத்தை ஏற்பார்கள். ஏற்க வேண்டும். மற்றபடி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் பொது அறத்தில் பரிகாரமும் கிடைத்துவிடும் என்று எண்ணக்கூடாது. பரிகாரத்தின் பலன் கிடைக்காது.

கேள்வி - பதில்

? எனில் பரிகாரம் என்று எவற்றையெல்லாம் அடையாளப்படுத்துவீர்கள்?

ஜோதிடம் சொல்லும் பரிகாரத்தின் பொருள் வேறுபடும். நாம் சேமித்த கர்மவினை இரண்டு வகைப்படும். நல்ல கர்மவினை மகிழ்ச்சியைத் தரும். தவறான கர்மவினை துயரத்தைத் திணிக்கும். அதிலிருந்து விடுபட, ஜோதிடம் பரிகாரம் சொல்லும். முன்ஜன்மத்தில் நாம் தவறு செய்துவிட்டோம்; அது துயரத்தை அளிக்கிறது. அதைத் திருத்தப் பரிகாரம் பயன்பட வேண்டும். பரிகாரத்தை அறிமுகம் செய்தது தர்ம சாஸ்திரம். ஜோதிடத்துக்குப் பங்கு இல்லை. 'கர்மவிபாக உச்யதே’ என்கிற தலைப்பில் பரிகாரப் பகுதியைத் தனது நூலில் இணைத்திருக்கிறார் வராஹமிஹிரர். தர்ம சாஸ்திரத்தின் பகுதியான கர்மவிபாகத்தை ஏற்று, நமக்கு வழிகாட்டுகிறார் அவர். சாஸ்திரம் சொல்லும் பரிகாரத்தைச் சுட்டிக்காட்டி, அதை நடைமுறைப்படுத்தச் செய்தால், அவர்கள் துயரத்தில் இருந்து விடுபடுவார்கள். அந்தச் சேவையை ஏற்றால், மக்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துவார்கள்.

ங்களது விளக்கம் இன்றைய சூழலுக்கு உகந்ததல்ல. தர்ம சாஸ்திரப் பரிகாரங்களை ஏற்கும் தகுதி இன்றைய சமுதாயத்தில் இல்லை. நம்மால் எது இயலுமோ, அதுதான் பரிகாரமாக மாறவேண்டும்.

?அப்படியென்றால், தர்மசாஸ்திரம் கடினமான பரிகாரங்களைப் பரிந்துரைக்கிறது என்கிறீர்களா?

பார்வை இல்லாதவன் திருட்டு முழி முழிக்க இயலாது. அன்றாட வாழ்க்கையில் முடிந்த அளவில் உடலுழைப்பைக் குறைத்துக் கொள்ளும் எண்ணம் உடையவர்களிடம் உடலுழைப்போடு இணைந்த பரிகாரம் விலை போகாது.

பணத்தை ஈட்டவும், சேமிக்கவும் ஆர்வம் வளந்திருக்கிறது. வங்கிகள், பங்குச் சந்தைகள், சீட்டுக் கம்பெனிகள், கம்பெனி ஷேர்கள் போன்றவற்றில் முதலீடு செய்து, பணத்தைப் பெருக்கும் தகுதி வளர்ந்திருக்கிறது. நிறைந்து வழியும் பணத்தை வைத்து பரிகாரத்தை நடைமுறைப்படுத்துவது எளிது. அதுதான் முடியும். மக்கள் விருப்பத்துக்கு ஏற்ற பரிகாரம் இருக்கவேண்டும். ஒழுக்கமும், பொறுமையும், தொலைநோக்குப்பார்வையும், சகிப்புத்தன்மையும், ஈவு இரக்கமும் இருப்பவர்களுக்குக் கடுமையான கர்மசாஸ்திரப் பரிகாரங்கள் எளிதாக இருக்கும். ஆனால், நல்லெண்ணம் உடையவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். அதனால், அவர்களுக்குப் பரிகாரமும் தேவைப்படாது.

கேள்வி - பதில்

? பரிகாரத்தில் சிரத்தை இருந்தால்தானே, அதற்குத் தகுந்த பலன் கிடைக்கும்?

தவறு செய்தவர்களிடம் இன்றைய சமுதாயம் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. சிறைவாசம் துயரத்தை அளிப்பதில்லை. வயிறு காயவிடமாட்டார்கள். வெளியே இருப்பவர்கள் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். தவறு செய்தாலும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரலாம். தோற்றாலும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அதற்குள் நமது வாழ்க்கைப் பயணம் எல்லையை எட்டிவிடும். நமது தேவைகள் அத்தனையும் ஜாமீனில் இருக்கும் வேளையில் நிறைவேறிவிடும். முதுமையில் தண்டனை கிடைத்தாலும், உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு இடம் மாறலாம். அரசாங்க பராமரிப்பில் உடம்பை கவனித்துக் கொள்ளலாம். இப்படி மனிதாபிமானத்தோடு, மென்மையான நடைமுறையைப் பின்பற்றும் போது, துயரத்தில் இருப்பவனை விடுவிக் கும் பரிகாரமும் மென்மையானதாக இருக்க வேண்டும். வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அவ்வப்போது வந்துபோக சிறைவாசிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. கல்யாணம், கல்லெடுப்பு எல்லாவற்றிலும் கலந்துகொள்ள, மனிதாபிமான சிந்தனையில் சிறைவாசிக்கு அனுமதி கிடைக்கிறது. சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். முதியோர் களுக்கு தண்டனை தளர்த்தப்படுகிறது. எனவே, பொது அறத்தைப் பரிகாரமாக மாற்றுவதுதான் இன்றைய சமுதாயத்துக்கு மென்மையான நடைமுறையாக இருக்கும். கசப்பை ஊட்டுகிற தர்மசாஸ்திரப் பரிகாரத்துக்கு மாற்றாக பொது அறத்தை ஏற்கலாம்.

ருதலைப்பட்சமான முடிவை லோகாயத வாழ்க்கையில் திணிக்கலாம். தர்ம சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. 'எக்ஸ்பார்ட்டே தீர்ப்பு’ (ex-parte) நாம் ஏற்படுத்திய நீதிமன்றத்துக்குப் பொருந்தும். அறநூல்கள் அதை ஏற்காது.

கேள்வி - பதில்

? ஆக, மனிதர்கள் பரிந்துரைப்பது எல்லாம் பரிகாரங்கள் இல்லையெனில், அதுகுறித்து சாமானியர்கள் என்ன நிலை எடுப்பது?

பழைய மருத்துவம், புது மருத்துவம் போன்ற வற்றில் உள்ளே நுழைந்து, வெளிவந்து துயரம் தாங்காமல் அல்லல்படுகிறான். எல்லாம் சரி யாகத்தான் இருக்கிறது; பிணிக்குக் காரணம் தெரியவில்லை என்று கைமலர்த்துகிறார் மருத்துவர். வேலை பளு, கடன் தொல்லை, வீட்டில் சச்சரவு, வெளியே தலைகாட்ட முடியவில்லை; சிந்தனை முட்டுச்சந்தில் முடங்கிவிட்டது. டென்ஷனில் செயலற்று விடுகிறான். தேற்றுவார் இல்லை. இன்னும் கொஞ்சம் டென்ஷன் வளர்ந்தால் தற்கொலைக்கும் முனைந்துவிடுவான். காப்பாற்ற யாரும் இல்லை.

விரும்பிய பெண் கிடைத்தாள். திருமணம் செய்துகொண்டான். அவனது அணுகுமுறை கசந்தது. விவாகரத்தில் வெளியேறினாள். துயரம் அவனது வாழ்க்கையை முடக்கிவிட்டது. குழந்தைச் செல்வத்துக்கு வாய்ப்பு இல்லை. பிந்து வங்கியை அணுகி, செயற்கையில் குழந்தைச் செல்வம் பெற்றான். மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் குழந்தை பிறந்தது. அதை வளர்க்கும் பாரத்தைச் சுமக்கவேண்டி வந்தது. இன்னொரு தடவை பிந்து வங்கியை அணுக மனமில்லை. தத்தளிக்கிறான்.

வியாபாரத்தில் சரிவு. சரிசெய்ய இயலவில்லை. எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை செய் வதறியாது குடும்பத்தைவிட்டு வெளியேறினான். கடனாளிகளிடமிருந்து மறைந்து வாழ நேரிட்டது. எல்லாம் இருக்கு; ஆனால், மாறாப்பிணியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். தீர்வு இல்லை.

திடீர் என்று வேலை போய்விட்டது. வீடு இல்லை. கல்லூரியில் படிக்கும் குழந்தைகள். மனைவிக்கும் வேலையில்லை. தனக்கும் வேலை கிடைக்கவில்லை. மனம் ஒடிந்து போனான். சேமித்த பணத்தை நண்பனுக்குக் கொடுத்து உதவினான். அவன் திருப்பித் தரவில்லை. பொருளாதாரம் சரிந்தது. குடும்பம் தவித்தது. வியாபாரத்தில் பணத்தை அள்ளலாம் என்று எண்ணினான். வங்கியில் கடன் பெற்று ஆரம்பித்தான். வியாபாரத்தில் இருக்கும் போட்டியை எதிர்கொள்ள இயலவில்லை. வங்கி, கடனுக்காக வீட்டை எடுத்துக்கொண்டது. தெருவுக்கு வந்துவிட்டான். மது மோகம் முற்றி, கண் பார்வை போனது; கிட்னியும் செயலிழந்தது. சேமித்த பணம் கரைந்து, துயரம் ஆட்கொண்டது.

கேள்வி - பதில்

புதுப்படைப்பை எட்டிவிடுவோம் என்று சூளுரைத்த மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள், உலகத்துக்கு வழிகாட்டும் மஹான்கள், மந்திரத்தில் மாங்காயை வரவழைக்கும் தந்திர வல்லுநர்கள், கடவுள் அவதாரமாகப் புகழப்படும் தெய்வ சக்தி பெற்றவர்கள்... அத்தனை பேர் இருந்தும் சீரழியும் மக்களை விடுவிக்க இயலவில்லை. இயலாமைக்கு புதுப்புது காரணங்களை உதிர்த்து நழுவிவிடுபவர்கள் ஏராளம். மருத்துவம், உயிர் இருந்தால் உடல் பிணியை அகற்றித் தரும். உயிரளிக்க இயலாது. நல்லுரைகளை ஏற்க மனமிருந்தால், மகான்கள் பெருமை அடைவார்கள். இன்றைய மக்களை எந்த நல்லுரையிலும் திருத்த இயலாது. அவனாகத் திருந்தினால்தான் உண்டு. அவன் திருந்த, அவன் மனத்தில் குடிகொண்டிருக்கும் அவன் சேமித்த தவறான கர்மவினை கரைந்து மறைய வேண்டும்.

? கர்மவினை விலக என்ன செய்யலாம்?

அதற்கு கர்மவிபாகம் சொல்லும் பரிகாரமே மருந்து. துயரத்துக்குக் காரணமான கர்மவினை அழியும்போது துயரம் அகன்றுவிடும். பூத்து, காய்த்துக் குலுங்கிய மரம் மொத்தமாகச் சாய வேண்டுமென்றால், அதன் வேர் அறுபட வேண் டும். துயரத்துக்குக் காரணமான கர்மவினையை அகற்றும் நடைமுறையை கர்மவிபாகம் சொல்லும். அதுதான் உண்மையான பரிகாரம். கர்மவினை மறையும்போது திரும்பவும் துயரம் துளிர்க்காது. கர்மவினை அகன்றால், நல்லெண்ணங்கள் மலரும். திரும்பவும் தவறு செய்ய மனம் துணியாது. பொது அறம் அதற்குப் பயன்படாது. அதில் மென்மையான நடைமுறை பலன் அளிக்காது. கடுமையான நடைமுறையில் சேமித்த கர்மவினையை மென்மையான நடைமுறையில் வெளியேற்ற இயலாது. அறுவைச் சிகிச்சையில் மென்மையான நடைமுறை பயனளிக்காது.

மனமும் உடலும் நொந்து பரிகாரத்தில் ஈடுபட வேண்டும். பச்சாதாபம் பிராயச்சித்தம். 'கர்ம’ என்றால், முன்ஜன்மத்தில் நாம் செய்த செயல்பாடு. 'விபாகம்’ என்றால், பலனளிக்கும் தகுதியை அடைந்தது என்று பொருள். தசைகள் பலனை அனுபவிக்க வைக்கும். தசானாதனின் தரத்தில் கர்மவினையின் உருவம் வெளிப்படும். அதற்குத் தகுந்த பரிகாரத்தை வெளியிடும் நூல் கர்ம விபாகம். துயரத்தின் அளவை வரையறுத்து, கர்மவிபாகம் சொன்னபடி பரிகாரம் செய்தால், துயரத்தில் இருந்து விடுபடலாம். மாறாக, விருப்பப்படி ஒரு பொது அறத்தைச் சொல்லித் திசை திருப்புவது தவறு.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் நாம் சேமித்த கர்ம வினையின் வெளிப்பாடு. அத்துயரத்தை வெளியேற்ற வெளியுலக தகவல்கள் கை கொடுக்காது. நம் முயற்சியில் நாம்தான் அதை ஈட்ட வேண்டும். அதற்குக் கர்ம விபாகம் வரப்பிரசாதம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism