Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

முற்பிறவி செயல்பாட்டின் சேமிப்பு, கர்மவினையாக உருவெடுக் கிறது. வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளுக்கு அதுவே ஆதாரம். உடலைத் துறந்து வெளியேறிய ஜீவாத்மாவுடன் ஒருவர் செய்த அறங்கள், அவரைப் பின்தொடரும் என்கிறார்  போஜராஜன் (தர்ம:ஸகாபநமஹோ பரலோகயானே).

ஜீவாத்மா தனியே போகாது; அவர் செய்த தர்மத்துடன் இணைந்து செல்கிறது என்கிறது தர்மசாஸ்திரம் (தர்ம ஸ்தமனுகச்சதி). நாம் சேமித்த புண்ணிய- பாபங்கள், சுவைத்துக் கொண்டிருக்கும் புண்ணிய- பாபங்கள், வருங்காலத்தில் சுவைக்க வேண்டிய புண்ணிய- பாபங்கள் ஆகியவற்றை ஸஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமி என்று பிரித்துச் சொல்கிறது சாஸ்திரம். ஸஞ்சிதம்- சேமிப்பு, ப்ராரப்தம்- அனுபவத்தில் இருப்பது, ஆகாமி- வருங்காலத்தில் அனுபவிக்க வேண்டியது என்று அர்த்தம். 'கர்ம’ என்றால் செயல்பாடு. அதில், நல்லதும் கெட்டதும் கலந்திருக்க அவகாசம் உண்டு. நல்லதை புண்ணியம் என்றும், கெட்டதை பாவம் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அறம் நல்லது; அதற்குப் புறம்பானது கெட்டது. அறம் மகிழ்ச்சியைத் தரும்; அறத்துக்குப் புறம்பானது துயரத்தைத் திணிக்கும். அதை சுபம், அசுபம் என்கிறது ஜோதிடம். உலகவியல் அதை வெட்பம்- தட்பம் என வரையறுக்கிறது. அவற்றை அனுபவத்துக்கு வரவழைக்கும் கிரகங்களை 'க்ரூர ஸெளம்ய க்ரஹங்கள்’ என்கிறது ஜோதிடம். சேமித்த கர்மவினையின் இரு கூறுகளை க்ரூர- ஸெளம்ய (அசுப- சுப) கிரஹங்கள், தக்க தருணத்தில் அனுபவத்தை நடைமுறைப்படுத்துகின்றன. தங்களது இயல்பான வெட்ப தட்பம் மூலமாக ஊடுருவி, சிந்தனையைத் திசை திருப்பி, தன் கர்மவினையை தானே அனுபவிக்க வைக்கிறது. தானே தான் செய்த கர்மவினையை வரவழைத்து அனுபவித்து மகிழ்கிறான்; அல்லது, துயரத்தில் ஆழ்ந்து துவண்டு போகிறான் என்கிறது ஜோதிடம். பிறக்கும் வேளையில் இருந்த கிரக அமைப்புகள் அதற்கு ஒத்துழைக்கின்றன. அதாவது கர்மவினை, காலத்தில் கலந்து, அவன் பிறக்கும் வேளையில் ஜாதகமாக உருவெடுக்கிறது. கண்ணுக்குப் புலப்படும் கர்மவினையாக மாறியது என்று சொல்வதே பொருந்தும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

முற்பிறவியில் இணைந்த காலம், இந்தப் பிறவியில் அடையாளம் கண்டு, கிரகங்கள் வாயிலாக கர்மவினையைத் திணிக்க உதவும். காலம் நிரந்தரமாக இருக்கும். ஜீவன் பிறந்து- இறந்து, மாறிமாறித் தென்படுவான். ஈஸ்வரன் கால வடிவில், ஜீவனின் புண்ணிய- பாபங்களை இணைத்து அனுபவிக்கச் செய்கிறான் என அறிவுறுத்துகிறது ஜோதிடம் (கால: ஸ்ருஜதிபூதானிகால: ஸம்ஹரதேப்ரஜா:). ஈஸ்வர அம்சம், ஒளிவடிவில் கிரகங்களில் தென்படுகிறது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அணு என்றால் மனம் (அணுபரிமாணம்மன:); மனத்தில் ஏற்படும் சிந்தனை அதன் அசைவு. அதற்கு அவன் வேண்டும். ஈசன், கிரகங்களின் ஒளி வாயிலாக புண்ணிய- பாபத்துக்கு ஏற்ப சிந்தனை மாற்றத்தை உருவாக்குகிறார்.

தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஈசன், காலத்திலும் இருப்பான்; கிரகங்களின் ஒளியிலும் இருப்பான். மேகம் மழையைப் பொழிகிறது. நீரைப் பெற்றுப் பயிர்கள் வளர்கின்றன. பயிர்களில் தென்படும் மாறுதலுக்கு நீர் காரணமாகாது. அதன் இயல்புதான் காரணம். ஈஸ்வரன் ஜீவராசிகளை ஒன்றாகப் பார்க்கிறான்; படைக்கிறான், ஜீவனில் தென்படும் இயல்பு, அவனை மாற்றியமைக்கிறது. ஈஸ்வரன் நம்மைத் தண்டிக்கவில்லை. நம் கர்மவினையே நம்மை தண்டிக்கிறது; வாழ்த்துகிறது. தனது கர்மவினையில் இணைந்து மகிழ்கிறான்; வாட்டமுறுகிறான் (ஸ்வகர்மஸ¨த்ரக்ரஹிதோஹிலோக:). கர்மவினை அனுபவிக்காமல் கரையாது என்கிறது சாஸ்திரம் (நாபுக்தம் க்ஷீயதேகர்ம).

அனுபவிக்கவேண்டிய இன்ப துன்பங்களின் வரைபடம் ஜாதகம். ஜாதகத்தில் அமர்ந்த சுப அசுப கிரகங்கள், தங்களது தசா-புக்தி-அந்தரங்களில் தங்களது இயல்புக்கு (வெட்ப- தட்ப) இணங்க, ஜாதகரின் கர்மவினைப் பயனை மாறி மாறி அனுபவிக்க வைக்கிறது. கர்மவினையைக் கரைத்தால், விபரீத பலன்கள் தலை தூக்காது. கரைக்கும் முறையை அதாவது பரிகாரத்தை தர்ம சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. வாழவேண்டியவன் வருத்தத்தில் வாடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தவறான செயல்பாட்டில் உருமாறும் விளைவுகள் (கர்மவிபாகம்) என்ற தலைப்பில் பரிகாரங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறது தர்ம சாஸ்திரம். பரிகாரம் கர்மவினையை அழிக்க வேண்டும். அப்போது நிம்மதி பிறக்கும். அப்படியிருக்க, கருவியாகச் செயல்படும் கிரக வழிபாட்டுடன் திருப்திப்படுவது பலன் தராது.  

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

உலகமே கோள்களில் இறங்கி, ஆராய்ச்சியில் ஈடுபட்டு மகிழ்கிறது. சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் ஒளி இல்லாதவை. சூரியனிடமிருந்து ஒளி பெற்று மிளிர்கின்றன. கோள்களில் இறங்குவது சிந்தனையின் ஆற்றல். இது, சூரியனில் இறங்க இயலாது. கோள்களின் கிரணங்கள்தான் பாதிப்புக்குக் காரணமாகின்றன. ஆராய்ச்சியில் இறங்கியதால், அதன் இயல்பு மாறாது. சூரியனால் ஏற்படும் வெப்பமும், சந்திரனால் ஏற்படும் தட்பமும், நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை உபகரணங்களையும் அள்ளி அள்ளித் தருகின்றன. வெப்ப மிகுதியில் ஏற்பட்ட மாற்றம் மனித குலத்தை நடுங்கச் செய்கிறது. அதைத் தணிக்கும் முயற்சி இன்று வரை வெற்றி பெறவில்லை. அதன் தாக்கம் பனிப்பொழிவை அதிகமாக்கி, பயிர்களை முளைக்கவிடாமல் தடுக்கிறது. பல மாறுதல்களுக்கும் விபரீதங்களுக்கும் வெட்ப தட்பம் காரணமாக மாறிவிடுகிறது. அகாலத்தில் வருகிற வெப்பத்தையும் தட்பத்தையும் தாங்க முடியவில்லை. வெளியுலகம் வெட்ப தட்பத்தின் தாக்கத்தில் இன்ப துன்பங்களை உணருவதை அறிகிறோம். உடலையும் வெட்ப தட்பங்கள் இயக்குகின்றன; அழிக்கின்றன; இன்ப துன்பங்களை ஏற்கச் செய்கின்றன. கர்மவினை காலத்துடன் இணைந்து, கிரகங்களின் வாயிலாக வெட்ப தட்பத்தைத் தாறுமாறாக்கி, இன்ப துன்பங்களை ஏற்கச் செய்கிறது எனும் ஜோதிட சித்தாந்தம் உலகவியல் நோக்கிலும் பொருத்தமாக இருப்பது அதன் பெருமை!

சட்டியில் இருப்பதை அகப்பை எடுத்துத் தரும். அதுவொரு  கருவி. அகப்பை ஜடம். அதை இயக்க ஒருவன் வேண்டும். சேமித்த கர்மவினையை எடுத்துப் பரிமாறுவது கிரகங்கள். அதை இயக்குபவன் ஈசன். அகப்பையோ ஆண்டவனோ கர்மவினையை மாற்றி அமைக்க இயலாது. அது ஒருவனது செயல்பாட்டில் விளைந்தது. அவனே முயற்சி செய்து அழிக்க வேண்டும். உணர்ந்து தன் செயல்பாட்டில் மறையச் செய்ய வேண்டும். நல்லதைச் செய், கெடுதலைச் செய்யாதே என்று ஓயாமல் வலியுறுத்துகிறார்கள் நம் முன்னோர்கள். 'வருமுன் காப்போம்’ எனும் கோணத்தில் கெட்ட கர்ம வினையை உருவாக்காமல் இருக்கும் நடைமுறையை எடுத்துரைத்தார்கள். காது கொடுக்காதவர்கள் கவலையில் ஆழ்கிறார்கள். மருத்துவர் இருக்கிறார் என்று நினைத்து யாரும் விஷம் அருந்துவதில்லை. எதற்கும் பரிகாரம் உண்டு என்று நினைத்துக் கெடுதலைக் கையாளக் கூடாது. நெருக்கடி நிலையில் பயன்படுத்தும் கோட்பாடுகளை, விலகிய பிறகு பயன்படுத்தக் கூடாது. பலன் தராது என உணரவேண்டும்.

வேத காலத்திலிருந்தே முதல் வழிபாடு நவக்கிரக ஆராதனை என்கிறது தர்ம சாஸ்திரம். ஆராதனையில் ஈடுபாடு இருக்கும் போது, மனம் தெளிவு பெற்று, தவறான சிந்தனை முளைக்காமல், கெட்ட கர்மவினை உருவாகாமல் செய்கிறது. ஆகவே, நவக்கிரக ஆராதனையை குறிக்கோள் இன்றி நித்தியம் செய்கிற கடமையாக மாற்றினார்கள். கிரகங்களின் தாக்கம் உடலையும் உள்ளத்தையும் பாதிப்பது உண்டு. உடலை பாதித்தால் பிணியாகவும், உள்ளத்தை பாதித்தால் தவறான சிந்தனையாகவும் மாறிவிடும். அன்றாடப் பணிகளில் ஈடுபடும்போது, சிந்தனை மாற்றமே வெற்றி தோல்விக்குக் காரணமாகிறது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்த வேளையில் தென்படும் தசா-புத்தி-அந்தரநாதன்களின் வெட்ப தட்பத்தின் ஏற்றக் குறைச்சல் காரணமாகிறது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

வெளியே வெட்ப- தட்பங்களின் அசாதாரண கலவை, புழுக்கத்தை உருவாக்கி அலைக்கழிக்கும். கிரகங்கள் உடலுள் புழுக்கத்தை உருவாக்கி, சிந்தனையைத் திசை திருப்பும். வெட்ப தட்பத்தின் சமநிலை அமைதியை உருவாக்கும். அதுபோல், சுப- அசுப கிரகங்களின் சமநிலை நமக்கு நிம்மதியைத் தரவல்லது.  தசானாதன், புக்தினாதன், அந்தரனாதன்- இவர்களில் வெட்ப தட்ப கிரகங்களின் இணைந்த சேர்க்கை, பிணைந்த சேர்க்கை- இரண்டும் மாறுபட்ட பலனுக்குக் காரணமாவது உண்டு. வெளியுலகில் சூரியனின் தாக்கம் ஆயாசம் அளிப்பதும், இரவில் சந்திரனின் தாக்கம் அமைதியைத் தருவதும் கண்கூடு! வெப்பம் மிகுதியாக இருக்கும் கிரகங்கள், தட்பம் மிகுதியாக இருக்கும் கிரகங்கள் எனும் பாகுபாடுகள் உண்டு. சந்திரனில் நீர் உண்டு; அது தட்ப கிரகம். சூரியனில் நீர் இல்லை; அது வெப்ப கிரகம்.  சூரியனை விட்டு விலகி, வளைய வரும் சந்திரனில் (பௌர்ணமியில்) சூரிய வெப்பத்தின் தாக்கம் நீரில் பட்டு குளிர்ச்சியாக்கி வெளிப்படுகிறது. சூரியனுடன் நெருங்கிய சந்திரன் (அமாவாசை) வெப்பத்தில் நீர் உறிஞ்சப்பட்டு, வெப்ப கிரகமாக மாறுகிறது.

கிரகங்களின் சேர்க்கை- பார்வை ஆகிய  பலன்களில் மாறுபாடு உண்டு. இந்த இரண்டு பேரின் தாக்கத்தில் மற்ற கிரகங்கள் வெட்ப தட்பத்தை ஏற்று, நமக்குப் பல மாறுதல்களைத் தருகின்றன.  சூரியன், சந்திரன் ஆகியோரின் தொடர்பு அத்தனை கிரகங்களுக்கும் உண்டு. அதற்கு ஏற்ப பலனைத் தருவார்கள். கண்ணுக்குப் புலப்படும் ஜோதிஷத்தை பொய் என்று உரைத்தாலும், பொய்யனுக்கும் சுக துக்கங்களை ஏற்கச் செய்துவிடும் (ப்ரத்யக்ஷம் ஜௌதிஷம் சாஸ்த்ரம் சந்தார்க்கை யத்ர ஸாஷிணௌ). ஆகாச பூதத்தின் இணைப்பு இன்றி, ஆரவாரம் இருக்காது. வானொலி, தொலைக்காட்சி, சின்னத் திரை, பெரிய திரை போன்றவை ஆகாச பூதத்தின் ஆரவாரங்கள். நம் செயல்பாடுகள் அனைத்தும் ஆகாசத்தில் (இடைவெளி) நிகழ்கின்றன.

நாம் வளைய வர, ஆகாசம் வேண்டும். அந்த ஆகாசத்தில் வளைய வருவது நவக்கிரகங்கள். உலக வாழ்வில், விரும்பிய- விரும்பத்தகாத மாற்றங்களுக்கு கிரகங்களின் பங்கு உண்டு. ஆகாசம் உடலிலும் ஊடுருவியிருப்பதால், அந்த கிரகங்களிலும் இணைந்திருக்கும். அதன் தாக்கம் முழுமையாக நம்மை பாதிக்கும். பாதிப்பை அகற்றி மகிழ்ச்சியைத் தக்கவைக்க, ஜோதிடம் வழிகாட்டுகிறது!

- சிந்திப்போம்...