Published:Updated:

வாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்!

எழுச்சூரில் எழுச்சி தரும் பூஜை! ஹரஹர... சிவசிவ..! வி.ராம்ஜி

##~##

சென்னை ஒரகடத்துக்கு அருகில் உள்ள எழுச்சூர் கிராமத்துக்கு எங்கிருந்தெல்லாமோ வந்து, அங்கே உள்ள ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரை தரிசித்து குடும்பத்திலும், பணியிடத்திலும் அனைவரிடமும் நல்லதொரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவல்ல மகத்துவம் வாய்ந்த சிவனாரின் விபூதிப் பிரசாதத்தை பயபக்தியுடன் வாங்கி, நெற்றியில் இட்டுக்கொண்டு சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

'குருவருள்... திருவருள்..!’ எனும் தொடர் மூலம் எழுச்சூர் ஸ்ரீநல்லிணக் கேஸ்வரர் தலத்துப் பெருமைகளையும், அங்கே வழங்கப்படும் விபூதிப் பிரசாதத்தின் மகிமைகளையும் சக்தி விகடன் மூலம் அறிந்து, ஆர்வம் மிகக் கொண்டும், பல்வேறு காரணங்களால் உடனடியாக எழுச்சூர் வந்து தரிசிக்க இயலாத பக்தர்களும் பயன்பெறும்வண்ணம், சக்தி விகடன் இதழோடு எழுச்சூர் கோயில் விபூதிப் பிரசாதத்தையும் அனுப்பி வைக்கலாமே என எண்ணம் கொண்டோம்.

கடந்த 12.1.14 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 8 மணிக்கு சக்திவிகடன் சார்பில் வாசகர்களின் நலனுக்காகவும், உலக மக்களின் க்ஷேமத்துக்காகவும் சிறப்பு விபூதி அபிஷேகப் பிரசாத ஆராதனை விமரிசையாக நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ஓசூர் எனப் பல ஊர்களில் இருந்தும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தனர்.

சக்திவிகடன் நடத்துகிற எந்தவொரு நல்ல விஷயத்திலும் தானும் ஆர்வத்தோடு முன்வந்து பங்கெடுத்துக்கொள்ளும் ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் ஸ்ரீசண்முக சிவாச்சார்யர் இந்த முறையும் உற்சாகத்துடன் முன்வந்தார். தம் தந்தையார் பெயரில் இயங்கி வரும் ஸ்ரீசாம்பமூர்த்தி சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம், எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரருக்கான விபூதி அபிஷேகத்துக்குத் தேவையான விபூதியை வழங்கி உதவினார்.

வாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்!

முன்னதாக, ஸ்ரீநல்லிணக்கேஸ்வரருக்கு சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர் என அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், சிவலிங்கத் திருமேனி முழுவதும் விபூதியால் அபிஷேகித்து, அலங்கரிக்கப்பட்டது. 'பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்’ என மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அருளியதும், 'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு’ என்று திருஞானசம்பந்தர் பாடியதும் நினைவுக்கு வர... சிலிர்த்துப் போனோம். கூடவே, சென்னை தாம்பரம் பஜனை மண்டலிக் குழுவினர் வாத்தியக் கருவிகளுடன் வந்து சிவனாரைப் போற்றும் பாடல் களைப் பாட, மெய்யுருகிப் போனார்கள் வாசகர்கள்.

அதையடுத்து, காஞ்சி சங்கர மடத்தின் 54-வது பீடாதிபதியான ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அதிஷ்டானத்தின் மேலிருந்த சிவலிங்கத் திருமேனிக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, இனிக்க இனிக்க சர்க்கரைப் பொங்கலும், மணக்க மணக்க வெண் பொங்கலும் பிரசாதமாக வழங்கப்பட்டன.

''சக்திவிகடன்ல வர்ற எல்லாக் கோயில்களுக்கும் போய் தரிசனம் பண்றதை வழக்கமா வைச்சிருக்கோம். இன்னிக்கு எழுச்சூர் கோயில்ல சக்திவிகடன் நடத்துற பூஜைல கலந்துக்கறதுல ரொம்பவே சந்தோஷமும் மனநிறைவும் எங்களுக்கு!'' என்று ஒரு குடும்பமே உற்சாகத்துடன் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது. அந்தக் குடும்பத்தார் வேறு யாருமில்லை... ஆனந்த விகடன் மூலம் 'தில்லானா மோகனாம்பாள்’ எனும் அற்புதமான கதையை தமிழகத்துக்குத் தந்த கொத்த மங்கலம் சுப்பு அவர்களின் மகன், மருமகள், மகள், மருமகன், பேரக் குழந்தைகள் ஆகியோர்தான்!

இதேபோல், இன்னும் பல வாசக அன்பர்கள் தங்கள் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்கள் நம்மிடம்!

வாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்!

இதோ... எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரின் லிங்கத் திருமேனியிலும் ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அதிஷ்டான லிங்கத் திருமேனியிலும் ஆரத் தழுவி, ஆடையெனப் படர்ந்திருந்த விபூதிப் பிரசாதம்... இப்போது உங்கள் கரங்களில்!

'முக்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பக்தி தருவது நீறு பரவ வினியது நீறு
ஸித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே!’

- என உச்சரித்தபடி, கண்கள் மூடி, நெற்றியில் இந்த விபூதியைப் பூசிக் கொள்ளுங்கள்; 'நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்’ என்று சொல்லி, சிவனாரை மனதார வேண்டுங்கள். உங்கள் மனோ பலம் பெருகும்; மனத்தில் அமைதி நிலவும்; தீராத நோயெல்லாம் தீரும்; இனிமையாகவும் நிம்மதியாகவும் இந்த வாழ்க்கை அமையும்!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

அடுத்த கட்டுரைக்கு