Published:Updated:

யாதவகுலத்தையும் கண்ணனையும் காப்பாற்றிய முசுகுந்த சக்ரவர்த்தி!

யாதவகுலத்தையும் கண்ணனையும் காப்பாற்றிய முசுகுந்த சக்ரவர்த்தி!
யாதவகுலத்தையும் கண்ணனையும் காப்பாற்றிய முசுகுந்த சக்ரவர்த்தி!

யாதவகுலத்தையும் கண்ணனையும் காப்பாற்றிய முசுகுந்த சக்ரவர்த்தி!

தமிழ்நாட்டோடு தொடர்புடைய முசுகுந்த சக்ரவர்த்தியை பற்றி மஹாபாரதம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில் பல கதைகள் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், திருவாலங்காடு செப்பேடு போன்றவைகளாலும் முசுகுந்த சக்ரவர்த்தி சோழகுலத்தின் முன்னோடி என அறியப்படுகிறார். இந்திரனிடம் இருந்து பெற்று வந்த தியாகேசப்பெருமானை திருவாரூரில் வைத்து வழிபட்டவர் முசுகுந்த சக்ரவர்த்தியே என்றும் திருவாரூர் நான்மணி மாலை  தெரிவிக்கிறது. 

விதூமன் என்ற கந்தர்வன், பிரம்மாவை கேலி பேசியதால் குரங்காக வடிவெடுத்தான். ஒருமுறை சிவபெருமான் ஒரு வில்வ மரத்தின் கீழ் தேவியுடன் அமர்ந்திருந்தார். அப்போது அந்த மரத்தின் மீது அமர்ந்து இருந்த அந்த குரங்கு வில்வ இலைகளைப் பறித்து சிவனின் மீது எறிந்து கொண்டிருந்தது. குரங்கின் அந்தச் செயல் தனக்கு அர்ச்சனை செய்வதுபோல் உணர்ந்த ஈசன், அந்த குரங்குக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டார். அவர் குரங்கைப் பார்த்து, ''தெரிந்தோ தெரியாமலோ நீ என் மீது வில்வதளங்களைப் பறித்துப் போட்டது என்னை அர்ச்சித்து வழிபடுவதுபோல் உணர்ந்தோம். நீ அடுத்த பிறவியில் சோழர் குலத்தில் மாந்தாதாவின் மகனாகப் பிறந்து சக்கரவர்த்தியாகத் திகழ்வாய்'' என்று ஆசிர்வதித்தார். தனக்கு சிவபக்தி என்றும் நிலைத்திருப்பதற்கு தன்னுடைய முகம் மட்டும் குரங்கின் முகமாகவே இருக்கவேண்டும் என்று அந்தக் குரங்கு கேட்டுக்கொள்ளவே, சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார்.

அந்தக் குரங்கு சோழகுலத்தில் பிறந்து முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் பெயருடன் திருவாரூரை ஆட்சி செய்தார் என்று மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த முசுகுந்த சக்ரவர்த்திதான் பரந்தாமனின் அம்சமான கண்ணபெருமானைக் காப்பாற்றினார் என்பது ஆச்சரியமான தகவல் இல்லையா? விஷ்ணு புராணம் தெரிவிக்கும் அந்த கதையைப் பார்ப்போம்.

ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மிகப்பெரிய போர் நடந்து வந்தது. அளவில் மிகப்பெரிய சேனையை கொண்டிருந்த அசுரர்கள் தேவர்களை வென்று விடுவார்கள் என்ற நிலையில் முசுகுந்த மன்னர் தேவர்களுக்கு ஆதரவாக போரிட வந்தார். இந்த தேவ, அசுரப்போர் பல ஆண்டுகள் நீடித்தது. கடுமையாக போரிட்டு இறுதியாக தேவர்களுக்கு வெற்றியை பெற்று தந்தார், முசுகுந்த மன்னர். உணவு, தூக்கம் இன்றி நீண்ட காலம் போரிட்டதால் முசுகுந்தர் பெரும் களைப்பில் ஆழ்ந்தார். தேவலோகத்தில் உறங்கவும் வசதிப்படவில்லை. வெற்றி மிதப்பில் தேவர்கள் மகிழ்ச்சியில் இருந்ததே காரணம். அப்போது நன்றி தெரிவிக்க வந்த இந்திரன் முசுகுந்தருக்கு வரம் தர விரும்பினார். முசுகுந்தரும் தான் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்றும், தன்னை யாராவது எழுப்பினால், அது யாராக இருந்தாலும் அவர் என் பார்வை பட்டதும் எரிந்து சாம்பலாக வேண்டும் என்றும் வரம் கேட்டார். இந்திரனும் சிரித்தவாறே அப்படியே வரம் அளித்தார்.

முசுகுந்தர் துவாரகை அருகே இருந்த ஒரு குகையில் சென்று படுத்து உறங்கினார். காலம் உருண்டோடியது. பரந்தாமன் கண்ணபிரான் அவதாரம் எடுத்தார்.  கண்ணன் தனது குடிமக்களாகிய மதுராவாசிகளை சமுத்திர அரசனிடம் கேட்டு வாங்கிய பன்னிரண்டு யோசனை பரப்பளவு உள்ள  இடத்தில் துவாரகையை உருவாக்கி குடியேற்றினார். யாதவர்கள் ஒருமுறை  கார்க்கியர் என்னும் யோகியை அவமதித்து விட்டனர். இதனால் கோபம் கொண்ட அவர், யாதவர்களை ஒழிக்க காலயவனன் என்ற மகனைப் பெற்றார். காலயவனன் எந்த ஆயுதத்தாலும், இந்த யுகத்தில் பிறந்த யாராலும் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தோடு பிறந்தான். பெரும் அசுரன் போன்று வளர்ந்த காலயவனன் அதர்மமே வடிவாக இருந்தான். சொல்லொணாத கொடுமைகளை எல்லாருக்கும் செய்து வந்தான். தனக்கு யாருமே எதிரிகள் இல்லை என்று எண்ணி இருந்த காலயவனனை ஒழிக்க நினைத்த நாரதர் காலயவனனிடம் சென்று கண்ணனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, கண்ணனை எதிர்க்கும்படி தூண்டி விட்டார். விதி வலிய வந்து அழைக்கும்போது சும்மா இருப்பானா காலயவனன்? 

கண்ணனை எதிர்க்க பெரும்படை கொண்டு சென்றான் காலயவனன். அவனைக் கண்டதும் கால் தெறிக்க ஓடினார் கண்ண பரமாத்மா. அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் பரம்பொருள் இப்படி ஓடியது யாதவ படையினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. வேகமாக ஓடிய கண்ணபெருமான், முசுகுந்தர் படுத்து இருந்த குகைக்குள் ஓடி ஒளிந்தார். பின்னாலேயே தொடர்ந்து வந்து நுழைந்த காலயவனன், அங்கே இருட்டில் படுத்து இருந்த உருவத்தை எட்டி உதைத்து எழுப்பினான். கிருஷ்ணர்தான் படுத்து இருக்கிறார் என்று எண்ணியவனுக்கு ஆச்சரியம், எழுந்தவர் ஒரு யோகியைப் போல இருந்தார். எழுந்த வேகத்தில் கோபத்தில் கண்ணைத் திறந்த முசுகுந்த சக்ரவர்த்தியின் பார்வை பட்டதுமே காலயவனன் எரிந்து சாம்பலானான். என்ன நடந்தது என்று புரியாமல் முசுகுந்தர் விழிக்க, ஸ்ரீ கிருஷ்ணர் எதிரே வந்தார். சிரித்தபடியே நடந்தைக் கூறி, அவன் பெற்ற வரத்தின் படி  தான் அவனைக் கொல்லமுடியாது என்றும், சென்ற யுகம் முதலே உறக்கத்தில் இருக்கும் நீங்களே அவனைக் கொல்ல முடியும் என்பதால்தான்  இந்த நாடகம் என்று கூறிச் சிரித்தார். 

கிருஷ்ணபரமாத்மாவை மனம் குளிர தரிசித்த முசுகுந்த சக்கரவர்த்தி அளவற்ற ஆனந்தம் கொண்டார். ''கண்ணா, தங்களை தரிசித்த இந்த எளியோன் இனி இந்த புவியில் இருக்க ஆசைப்படவில்லை. தங்களோடு இனி என்றென்றும் இருக்க வேண்டும், அதுவும் தாங்களே என்னை எப்போதும் தாங்கி இருக்க வேண்டும் என்றும் வரம் கேட்டார். கேட்டவருக்கு இல்லை என்று கூறாமல் வரங்களை அளிக்கும் வரதனான கண்ணன் அப்படியே கொடுத்தார். ஆம், முசுகுந்த சக்ரவர்த்தி ஓர் அழகிய தாமரை மலராக வடிவெடுத்தார். கண்ணன் அவரை தமது திருக்கரத்தில் தாங்கிக் கொண்டார். கண்ணனின் திருக்கரத்தில் இருக்கும் தாமரை மலரைக் காணும்போதெல்லாம் இனி முசுகுந்த சக்ரவர்த்தியின் பக்தியை நாம் நினைத்துக்கொள்ளலாம். உண்மையான பக்திக்கு உயரிய மதிப்பு உண்டு என்பதைத் தான் முசுகுந்த சக்ரவர்த்தியின் கதை நமக்கு உணர்த்துகிறது இல்லையா?! 

- மு. ஹரி காமராஜ்

அடுத்த கட்டுரைக்கு