மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம் சிவம் சாகசம்! - 35

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம் சிவம் சாகசம்! - 35

சித்த புருஷர்களிலேயே, வடிவத்தாலும் தன்மைகளாலும் மானுட நிலையில் இருந்து மிக வேறுபட்டவர் பதஞ்சலி. மனித உடல், பஞ்ச சிரம் கொண்ட பஞ்ச நாகத் தலை என இரண்டும் கலந்த வடிவம். எதனால் இப்படி ஒரு வடிவம் என்கிற கேள்வி எழலாம். அத்திரி எனும் முனிவருக்கும், கோணிகா எனும் தாய்க்கும் பிறந்தவர் இவர். இவரை ஆதிசேஷனின் அம்சமாய்ச் சொல்வார்கள். பாற்கடலில் விஷ்ணுவுக்குத் தன்னைப் படுக்கையாக்கிக்கொண்டவன் ஆதிசேஷன். விஷ்ணுவுக்கு அணுக்கத் தொண்டனாய், அங்கே படுக்கையாய்க் கிடக்கும் இவர் பதஞ்சலியாக ஜென்மம் கண்ட நிலையில், இவர் இருந்த இடம் கயிலாயம்!

##~##

இது ஆச்சரியம் தரும் ஒன்றாக நமக்குத் தோன்றலாம். ஆனால், சிவ- விஷ்ணு பேதங்கள் சித்த புருஷர்களுக்கு இல்லை என்பதே இதன் அடிப்படையான கருத்து என்பர் சிலர். அதேபோல, பரம சிவபக்தனாக விளங்கிய கருடன்தான், பின்னர் மாலவனின் வாகனமாகி, முதல் மாலடியானாகவும் (பெரிய திருவடி) தன்னை ஆக்கிக் கொள்கிறான். இதை உதாரணமாய்ச் சொல்லி, பதஞ்சலியை உணரத் தலைப்படுவார்கள். வைணவர்கள் ஆதிசேஷனின் அம்சமாய் ராமானுஜரைக் குறிப்பிடுவார்கள். ராமாயணத்து லட்சுமணன்கூட ஆதிசேஷனின் அம்சமே! அந்த வகையில் லட்சுமணன், பதஞ்சலி, ராமானுஜர் என ஆதிசேஷன், மானுட சமூகம் உய்யக் கடமையாற்றியதாகக் கொள்ளலாம்.

ராமாயணத்தில், தர்மத்தின் நாயகனான ஸ்ரீராமனுக்கே உறுதுணை. பின்பு, பதஞ்சலியாக மனிதர்கள் கடைத்தேற நூல்கள் எழுதிய வகையில், சமூகத்துக்கு உறுதுணை. பின்னர் எழுதிய யோக சாஸ்திரக் கருத்துக்களுக்கு ஏற்ப, தானே வாழ்ந்து காட்ட விரும்பியதுபோல் ராமானுஜராக அவதரித்தார் என்று இவர் பிறப்பை வியாக்யானம் செய்பவர்கள் உண்டு. இவர் எழுதிய நூல்களிலேயே பிரதானமானது மற்றும் இன்றளவும் ஞானிகள் பெரிதும் நுகர்ந்துகொண்டிருப்பது 'யோக சாஸ்த்ரம்’ எனும் நூலாகும். அடுத்தது, மஹாபாஷ்யம்; மூன்றாவது, ஆத்ரேய சம்ஹிதை எனும் நூல்.

இவரது நூலுக்கு திருமூலர், போகர், அகத்தியர் ஆகிய மூவருமே விளக்கவுரை எழுதியிருப்பதிலிருந்து, அவர்களும் இந்த நூலை வியந்து ஒப்புக்கொண்டு, வழிமொழிந்ததாக நாம் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட பதஞ்சலியை சைவர்கள் பார்க்கும் பார்வைக்கும் வைணவர்கள் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேற்றுமை உண்டு. பதஞ்சலி தானறிந்த யோக ரகசியத்தைத்தான் உலகுக்கு அளித்தார். அவர் அதை எல்லாம் எப்படி அறிந்திருந்தார் என்று ஒரு கேள்வி உண்டு. ஆதிசேஷனான தன் மேனி மேல் படுத்துக் கிடக்கும் அந்த விஷ்ணுபதியிடமே உயிர்- உடல்- மனம் பற்றியெல்லாம் கேட்டு யோக ரகசியங்களை அறிந்துகொண்டார்; அதுதான் அவர் பதஞ்சலியாக ஜென்மம் எடுத்த நிலையில் வெளிப்பட்டது என்பர் வைணவர்.

சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்ததை அருகிலிருந்து கேட்ட பின்பு, அவர்களின் அருளோடு இந்த யோக சாஸ்திரத்தை பதஞ்சலி எழுதினார் என்போரும் உண்டு. இப்படி, இந்த யோக சாஸ்திரம் எந்த அடித்தளத்தில் இருந்து பிறந்திருந்தாலும் சரி, இன்றளவும் சான்றோர் பெருமக்களுக்கு வற்றாத வியப்பைத் தந்துகொண்டிருப்பதோடு, அவர்கள் வாழ்வை வெற்றி கொள்ளவும் பெரும் துணையாக இருந்து வருகிறது.

இந்த யோக சாஸ்திரத்தில் இருந்துதான் அஷ்டாங்க யோகம் எனும் எட்டு வகை வாழ்வியல் நடைமுறைத் தத்துவங்களும் தோன்றின. ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இந்த யோக சாஸ்திரமும் சரி, இதன் அஷ்டாங்க யோகமும் சரி, மனித குலம் முழுமைக்கும் பொதுவானது. இது 'உடல்- மனம்- ஆன்மா- பிரபஞ்சம்’ என்று உணரக்கூடிய நிதர்சனமானவற்றையும், புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவைக் கடந்து நிற்பவற்றையும் ஞானத்தால் அறிய வழிவகை செய்கிறது.

சித்தம் சிவம் சாகசம்! - 35

முன்னதாக, பதஞ்சலி குறித்த சில ரசமான விஷயங்களைப் பார்ப்போம். பிறகு, இவரது கடினமான தத்துவங்களுக்கு வருவோம்.

பதஞ்சலி விஜயம் என்று ஒரு நூல், ராமபத்ரமுனி என்பவரால் எழுதப்பட்டது. ஏறக்குறைய 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி குறித்து இந்த மனித சமுதாயம் அறிந்துகொள்ளவேண்டி ஏடுகளில் இது எழுதப்பட்டு, பின்பு கோயில் மண்டபத்தில் வாசிக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

சிதம்பரத்தில், சிவராத்திரி அன்றும் மற்ற விசேஷ நாட்களிலும் இந்தப் பதஞ்சலி விஜயத்தை கதையாகச் சொன்னதாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. பதஞ்சலி விஜயம் வாயிலாகத் தெரியவரும் ஒரு சம்பவம், குருபக்தி என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், எப்படிப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதற்குச் சான்றாகும்.

பதஞ்சலி முனி தன் மாணவர்களுக்கு வித்தை கற்பிப்பவராய் இருந்த நேரம் அது. அடிப்படையில் அவர் ஆதிசேஷன் என்பதால், அவர் விடும் பெருமூச்சில் ஆலகாலத்துக்கு இணையான விஷம் உண்டு. இந்த விஷக்காற்று எப்பேர்ப்பட்ட உயிர்களையும் போக்கி, அவர்களைக் கருகச் செய்துவிடும். இதை உணர்ந்த பதஞ்சலி, தன்னை மறைத்துக்கொண்டே பாடம் நடத்துவார். தனது விஷக்காற்று தன் மாணவர்களைத் தீண்டிவிடாமலிருக்க, நடுவில் ஒரு கறுப்பு நிறத்தாலான திரையைக் கட்டி, திரைக்குப் பின்னால் அமர்ந்துதான் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார். அப்போது அவர் ஐந்து சிரம் கொண்ட வடிவத்துக்கு மாறிவிடுவார். (ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக மாறுவதாகவும் உண்டு).

மாணவர்களில் ஒருவனுக்கு, குருநாதரின் இந்தச் செயல் நெடுநாட்களாகவே வியப்பைத் தந்ததோடு, கறுப்புத் திரைக்குப் பின்னால் குருநாதர் மறைவாக அப்படி என்னதான் செய்கிறார் என்று அறிந்துகொள்ளும் ஒரு குறுகுறுப்பான எண்ணத்தையும் உருவாக்கிவிட்டது. இருந்தாலும், பதஞ்சலி பாடத்தைத் தொடங்கும் முன், திரைக்குப் பின்னால் இருந்தபடி, எவரையும் எக்காரணம் கொண்டும் திரையை விலக்கித் தன்னைக் காணக்கூடாது என்று உத்தரவிட்டிருந்ததால், ஒருவரும் திரையை விலக்கத் துணிவில்லாமல், அவர் நடத்தும் பாடத்தை மட்டும் செவி வழி கேட்டவர்களாக இருந்தனர்.

ஒருமுறை, ஒரு மாணவன் இயற்கை உபாதை காரணமாக மெள்ள எழுந்து வெளியேறிவிட, குறுகுறுத்த மாணவன் குருவின் கட்டளையை மீறியவனாக, அந்தக் கறுப்புத் திரையை விலக்கிப் பார்த்தான். அடுத்த நொடியே பதஞ்சலியின் விஷக்காற்று பட்டு அவன் மட்டுமல்ல, பாடம் கேட்டுக்கொண்டு இருந்த மற்ற மாணவர்களும் மாண்டுபோயினர். பதஞ்சலியும் தனது நாக வடிவில் இருந்து மானுட வடிவத்துக்கு உடனே மாறி, மாண்டுபோன மாணவர்களைப் பார்த்து, அவர்களின் விதியை நினைத்து நொந்துகொண்டார்.

இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற மாணவன் திரும்பி வந்ததும், தன் நண்பர்கள் மாண்டு கிடப்பதையும், திரை விலகியிருப்பதையும் கண்டு பதை பதைத்துப் போனான். பதஞ்சலியைக் கண்டு மலங்க மலங்க விழித்தான். பதஞ்சலியும் அவ்வளவு நாட்களாக தான் கற்பித்த வித்தை அவ்வளவும் பாழ்பட்டுவிட்டதே என வருந்தினார். எனினும், நல்லவேளையாக ஒரே ஒரு மாணவர் மிஞ்சியிருப்பதைக் கண்டு, அவனுக்கு மிச்சமுள்ள வித்தைகளை போதித்தாராம். அதேநேரம், பாடம் கற்கும் வேளையில், குருவாகிய தனக்குத் தெரியாமல் வெளியேறிய தவற்றுக்குத்  தண்டனையாக, அவனை பிரம்மராட்சசனாகப் போகும் படி சபித்தாராம். இது பதஞ்சலி விஷயம் சொல்லும் கதை.

சித்தம் சிவம் சாகசம்! - 35

இந்தக் கதை, யோக ரகசியத்தைத் தெரிந்து கொண்டாலும், அதை அனுபவித்துக் கடைத் தேறக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக உணர்த்துவதாக சான்றோர் பெருமக்கள் கூறுவர். உலக மாயை, யோக ரகசியங்களை அறியவிடாமல் தடுத்துவிடும். ஒரே ஒருவர்கூடப் போதும், அனைத்தையும் கெடுப்பதற்கு! ஆனாலும், சிரஞ்ஜீவித்துவத் தோடு அது எப்படியாவது வாழ்ந்திடும். பிரம்ம ராட்சஸனாக சபிக்கப்பட்ட மாணவன் சாப விமோசனம் பெற்ற பிறகு, அவன் மூலமாக அது திரும்ப அனைவரையும் சென்று சேரும் என்பதுதான், அந்தக் கதைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயம்.

இங்கே, பாடம் கற்பிக்கும்போது, பதஞ்சலி முனி திரையைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டது போலவே, ஸ்ரீராமானுஜர் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு முறை, ராமானுஜருக்கும் சமணர்களுக்கும் சண்டபிரசண்டம் எனும் வாதப் பிரதிவாதம் நிகழ்ந்தது. சமணர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை ராமானுஜர் சபையறியக் கூறி, சபையோரும் அதை ஏற்றிடச் செய்ய வேண்டும். அப்படி ஒரு நிகழ்வின்போது, ராமானுஜர் சமணர்களுக்கும் தனக்கும் நடுவில் ஒரு திரையைத் தொங்கவிட்டு, திரைக்குப் பின்னால் ஆதிசேஷனாகி, சமணர்களின் கேள்விகளை எல்லாம் தவிடு பொடியாக்கியதாக, ராமானுஜரின் வாழ்வை உற்று நோக்குகையில் காணமுடிகிறது.

அந்த வகையில் இந்தச் சம்பவமே, பதஞ்சலியும் ராமானுஜரும் வேறு வேறில்லை என்பதற்கான சான்று என்பார்கள்.

பதஞ்சலி, குரு சொல் கேளாத சீடனை பிரம்மராட்சஸனாகச் சபித்துவிடுவதாக ராமபத்ரமுனியின் பதஞ்சலி விஜயம் கூறுவதை,  சைவர்கள் வேறு விதமாகச் சொல்கிறார்கள்.

எல்லா மாணவர்களும் மாண்டுவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு மாணவர் 'கௌடபாதர்’ என்பவர். பதஞ்சலி, கௌடபாதருக்கு யோக சூத்திரங்களை முற்றாகக் கற்பித்தார் எனவும், இவருக்குத் தனது ஆதிசேஷ தோற்றத்தைக் காட்டி அருளியதாகவும் கூறுவர்.

பதஞ்சலி குறித்து இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. காஞ்சி முனிவரான மகா பெரியவா இதை ஒரு வேடிக்கையான கதை போலக் கூறியுள்ளார்.

- சிலிர்ப்போம்...