சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

மாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம்!

மங்கலம் அருளும் மாசி! கண்ணாபட்டி ஸ்ரீவிஸ்வநாதர் கோயில்!

##~##

சிவனடியாராக வந்த சிவனார்!

தினேழாம் நூற்றாண்டில், நிலக்கோட்டை பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர், சிவ பக்தியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். சிவனடியாருக்கு உணவு வழங்கிய பிறகே, தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை, குளித்து முடித்து சிவ பூஜை செய்துவிட்டு, சிவனடியாருக்காகக் காத்திருந்தார் மன்னர். ஆனால், சிவனடியார் ஒருவரையும் காணோம். அப்போது, ஆற்றங்கரையில் சிவனடியார் ஒருவர் இருக்கிறார் என அறிந்த மன்னர், நேரில் சென்று அவரைச் சந்தித்து வணங்கினார். 'என் இல்லத்துக்கு வந்து உணவு உண்ண வேண்டும்’ என வேண்டினார். ''முதலில் சிவ தரிசனம் செய்யவேண்டும். எனவே, சிவாலயத்துக்குச் செல்வோம்'' என்றார் அந்தச் சிவனடியார்.

அந்த ஊரில் சிவாலயம் இல்லாததால், அவரைப் பக்கத்து ஊருக்கு அழைத்துச் சென்றார் மன்னர். அங்கே ஸ்வாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சிவனடியார், 'சிவாலயம் இல்லாத ஊரில் சாப்பிட மாட்டேன்’ என்று சொல்லி, மறைந்தாராம். அதிர்ந்து போன மன்னர், ஊரில் உடனே சிவாலயம் எழுப்ப உத்தரவிட்டார். சிவனடியார் வடிவில் சிவபெருமானே வந்து அருளியிருக்கிறார் என்பதை உணர்ந்து, பூரித்துப் போனார்.

காசியில் இருந்து மண்ணை எடுத்து வந்து (சிவலிங்கத்தை எடுத்து வந்ததாகவும் சொல்வர்) இங்கே கோயில் எழுப்பினார் மன்னர். வேக நதி எனப்படும் வைகை நதியும், ஹரித்ரா எனப்படும் மஞ்சளாறும் இணையும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது இந்த அற்புதமான ஆலயம். இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவிஸ்வநாதர். அம்பாள்- ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்.

மாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம்!

எங்கே இருக்கிறது?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது கண்ணாபட்டி. இங்குதான் ஸ்ரீவிசாலாட்சி சமேதராக அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவிஸ்வநாதர்.

காசிக்கு நிகரான தலம்!

ஸ்ரீவிஸ்வநாதர் குடிகொண்டிருக்கும் இந்தத் தலம் காசியம்பதிக்கு நிகரானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். அதேபோல், தெற்கு நோக்கியபடி ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் காட்சி தருவதும் விசேஷம் என்கின்றனர். இங்கு வந்து அம்பாளையும் சிவனாரையும் தரிசித்தால் எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

மாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம்!

தவிர, காசியில் கங்கையைப் போல, இங்கு வைகை நதியும் வடக்கு நோக்கிப் பாய்கிறது. எனவே, இங்கு அமாவாசையில் வந்து முன்னோர் ஆராதனை செய்தால், பித்ருக்களின் ஆசிர்வாதமும் சிவனாரின் பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

நதிகள் சங்கமிக்கும் இந்தத் தலத்துக்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை முதலான நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து, முன்னோர் ஆராதனை செய்து, சிவ வழிபாடு செய்கின்றனர்.

பால் பாயச வழிபாடு:

சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், சிவனாருக்கு பால் பாயச நைவேத்தியம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும்; அதேபோல், மாசி மக நன்னாளிலும் இங்கு வந்து நெய் விளக்கேற்றி வழிபட்டால், வீட்டில் மங்கலம் தங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

நெய் தீப பிரார்த்தனை:

ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வழிபட்டால், திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம். மாசி மக நன்னாளில் இங்கு வந்து ஸ்ரீவிஸ்வநாதருக்கு வில்வ அர்ச்சனை செய்து, ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்கு அரளிப் பூமாலை சார்த்தி, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாணத் தடை அகலும்; வீட்டில் சுபிட்சம் நிலவும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். அந்த நாளில், அம்பாளுக்குச் சிவப்புப் பட்டு சார்த்தி, பால் பாயச நைவேத்தியம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

இங்கு ஸ்ரீபைரவர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இவர்களுக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்.  

  - உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்