##~##

ம்மைப் புத்துணர்ச்சிப்படுத்துவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் எத்தனையோ விஷயங்கள் காரணமாக இருந்தாலும், அவற்றில் முதலிடத்தில் இருப்பவர்கள் குழந்தைகள்தான்!

ஒருவரின் வாழ்வில் எவ்வளவு மோசமான காயங்களும் வேதனைகளும் இருந்தாலும், அவை அனைத்துக்கும் மருந்து போடுபவை அவரின் அருமையான குழந்தைகள்தான். அவர்களுடன் சிறிது நேரம் பொழுதைக் கழித்தாலே போதும்... மொத்த வேதனைகளும் காணாது போய்விடும். ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், மற்ற செல்வங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக இல்லத்தில் வந்து நிறைந்துவிடும் என்பார்கள் முன்னோர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளே ஒருவரின் பொக்கிஷங்கள். உலகின் மிகப் பெரிய வரம். இன்றைக்கு எல்லாக் கோயில்களிலும், 'காசு பணமா கேக்கறேன். அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாட, ஒரு குழந்தை வேணும்னுதானே கேக்கறேன்’ என்று மனமுருகி, கண்ணீருடன் பிரார்த்திக்கிற பெண்கள் நிறையப் பேரைப் பார்க்கிறோம்.

'ஐயா சாமி! எங்களுக்குப் பொன்னும் வேணாம்; பொருளும் வேணாம். எங்க வம்சத்தை தழைக்கச் செய்யற விதமா, எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடு. குழந்தையின் எடைக்கு எடை, பழங்கள் தர்றேன்; கல்கண்டு தர்றேன்; தேங்காய் தர்றேன். எங்க குலத்தை வாழையடி வாழையா வாழச் செய்யறதுக்கு, ஒரு குழந்தையைக் கொடுப்பா!’ என்று கோயில் கோயிலாகச் சென்று பிரார்த்திக்கிற தம்பதிகள் நிறைந்த உலகம் இது.

குருவருள்... திருவருள்..! - 8

''அப்படி தவமா தவமிருந்து பிறக்கிற குழந்தைகள் ஆரோக்கியத்தோடயும் புத்திசாலித்தனத்தோடயும், சமுதாயத்தில் நல்லவன்னு பேரெடுக்கிற நற்குணங்களோடயும் வளரணுமே! அப்படி வளர்ந்தாத்தானே, அந்தக் குடும்பமும் பரம்பரையும் வாழையடி வாழையா செழிச்சு வளரும்? இங்கே வந்து வேண்டிக்கிட்டாப் போதும்... நமது குடும்பம் முழுமைக்கும் அருள்பாலிச்சு, அரவணைப்பார் ஸ்வாமி!'' என்கிறார், கோயில் திருப்பணிக் கமிட்டியில் உள்ள கிருஷ்ணகுமார்.

''கோயிலுக்குப் பக்கத்துலதான் வீடு. சின்ன வயசுல அப்பா, இந்தக் கோயிலைப் பத்திச் சொல்லும்போதெல்லாம் எனக்கோ என் அண்ணா, தம்பிகளுக்கோ பெருசா எதுவும் தெரியலை; புரியலை. ஆனா, ஒருகட்டத்துக்குப் பிறகு, 'அடடா... அப்பா சொன்ன அழகான இந்தக் கோயில், இப்படி அவல நிலையில இருக்கலாமா’ன்னு ஒரு எண்ணம் வந்து, மனசை வாட்டியெடுத்துச்சு. பிறகு படிப்பு, உத்தியோகம், பிசினஸ், வாழ்க்கைன்னு ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்து நின்ன இடம்... இந்தக் கோயில்தான். சகோதரர்களும் நண்பர்களுமா சேர்ந்து, திருப்பணிக் கமிட்டி ஆரம்பிச்சு, இந்தக் கோயிலைச் சீரமைக்கற வேலைல இறங்கினோம். இன்னிக்கு இந்தக் கோயில் பழையபடி பொலிவோடு சிறப்பா இருக்கிற அதேவேளைல, எங்க குடும்பங்களும் நிம்மதியா, குழந்தைகள் எல்லாரும் நல்லவிதமா வளர்ந்து நிக்கிறாங்க. அதுக்கு ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர்தான் காரணம்!'' என்று உணர்ச்சி ததும்பச் சொல்கிறார் கிருஷ்ணகுமார்.

குருவருள்... திருவருள்..! - 8

சென்னை, தாம்பரத்தில் இருந்து ஒரகடம் வழியே காஞ்சிபுரம் செல்லும் வழியில், ஒரகடத்துக்கு அருகில் உள்ள எழுச்சூர் கிராமத்தை எழிச்சூர் என்றே சிலர் சொல்கிறார்கள். எழுச்சூர்தான் சரி என்று ஒரு சிலரும், எழிச்சூர் என்பதே சரி என்று வேறு சிலரும் சொன்னாலும், நம்மை எழுச்சிப்படுத்தி, நம் அகக்கண்களைத் திறந்து, விழிப்பு உணர்வை நமக்குள் ஏற்படுத்தித் தரும் திருத்தலம் என்பதால், எழுச்சூர் என்பதே சரி என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் பெருவாரியான பக்தர்கள்.

''இங்கே, வந்து ஒருமுறை தரிசனம் பண்ணினாலே போதும், நாமும் நம்ம குடும்பமும் நல்லா இருப்போம். இதுல எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம், குறிப்பிட்ட விசேஷ தினங்கள்ல இங்கே வந்து தரிசனம் பண்ணி, பிரார்த்தனை பண்ணிக்கறது ரொம்பவே சிறப்பைத் தரும்.

குறிப்பா செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல, ஸ்ரீதெய்வநாயகியை நெய் விளக்கேத்தி வழிபட்டால், நம் வாழ்க்கை முழுவதையும் இனிமையாக்கித் தந்துடுவா அம்பாள். அதேபோல, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணி அம்பாளை வழிபடுறது கூடுதல் பலனைத் தரும். முன்னெல்லாம் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகள்ல வந்து தரிசனம் பண்ணிட்டிருந்த நாங்க, இப்பெல்லாம் எந்தவொரு சின்ன குறை இருந்தாலும், உடனே அம்பாள்கிட்ட முறையிட்டுட்டுப் போறதை வழக்கமா வைச்சிருக்கோம்!'' என்கிறார், சென்னை விருகம்பாக்கம் வாசகர் அன்புச்செழியன்.

குருவருள்... திருவருள்..! - 8

''இப்படித்தான் ஒருமுறை, நாங்க போற நேரம், கோயில் நடை சார்த்துற வேளையாயிருச்சு. இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்குங்கற நிலைல, நேரா நல்லிணக்கேஸ்வரர் சந்நிதிக்கு முன்னே போய் நின்னு, கண்களை மூடி வேண்டிக்கிட்டேன். 'கடவுளே... கல்யாணமாகி எட்டு வருஷம் கழிச்சு எங்களுக்குக் குழந்தையைக் கொடுத்த நீ, எங்களை இப்படிச் சோதிக்கலாமா? ஹீமோகுளோபின் குறைபாடு அதுஇதுன்னு எப்பவும் சோர்ந்து போய், துவண்டு கிடக்கிறான் பையன். ஓடியாடி விளையாட வேண்டிய வயசுல மாத்திரையும் மருந்துமா இருக்கிற மகனைப் பார்க்கவே வேதனையா இருக்கு. அவன் வயசுப் பசங்க படிப்பைத் தவிர, எத்தனையோ நல்ல விஷயங்களை, கலைகளை, கைத்தொழில்களைக் கத்துக்கிறாங்க. எங்க பையனும் அப்படிச் சிறப்பான நிலைக்கு வரவேணாமா? அவனுக்கு ஆரோக்கியமான, தெம்பான உடம்பைக் கொடு; தெளிவான, திடமான புத்தியைக் கொடு!''ன்னு மனசார அழுது, வேண்டிக்கிட்டேன்.

குருவருள்... திருவருள்..! - 8

அதுக்கப்புறம் 15 நாள் கழிச்சு செக்கப்புக்குப் போனப்ப, 'என்ன செஞ்சீங்க உங்க பையனுக்கு? என்ன கொடுத்தீங்க? ஹீமோகுளோபின் சதவிகிதம் நல்லா ஏறியிருக்கு. தினமும் பழமும் காய்கறிகளுமா சாப்பிட்டாக்கூட இந்த அளவுக்கு முன்னேற்றம் வந்திருக்காதே?!’னு டாக்டரே ஆச்சரியப்பட்டார். அகில உலகத்துக்கும் மருத்துவரா இருக்கிற நல்லிணக்கேஸ்வரரோட திருவிளையாடல்தான் இது. வேற என்ன சொல்லமுடியும்?'' - காஞ்சிபுரம் வாசகி நிர்மலா கண்ணீரும் புன்னகையுமாகச் சொன்னபோது, சிலிர்ப்பாக இருந்தது.

எழுச்சூர் தலத்துக்கு இன்றைக்கு தினந்தோறும் எங்கிருந்தெல்லாமோ வாசகர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஸ்வாமியையும் அம்பாளையும் ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசித்து, வணங்கிச் சென்றபடி இருக்கிறார்கள்.

'நாங்க வேண்டிக்கிட்டபடியே கேஸ்ல நல்ல தீர்ப்பு கிடைச்சுது. அதுக்காக பிரதோஷத்தன்னிக்கி ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சார்த்தி, நேர்த்திக்கடன் செலுத்தினோம்’ என்றும், 'பொண்ணுக்கு கல்யாணம் தள்ளிப் போயிக்கிட்டே இருந்துச்சு. அவளோட ஜாதகத்தை எடுத்துட்டு வந்து, தெய்வநாயகி அம்பாளோட திருப்பாதத்துல வைச்சு, வேண்டிக்கிட்டோம். அடுத்த ரெண்டே மாசத்துல ஒரு நல்ல வரன் வந்து, கல்யாணமும் சிறப்பா நடந்தது. எங்க பொண்ணு இப்ப வெளிநாட்டுல சௌக்கியமா இருக்கா. அங்கிருந்து அவ போன்ல சொல்லும்போதெல்லாம், இங்கே வந்து சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ நைவேத்தியம் பண்ணி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டுப் போவோம்’ என்கிறார்கள் பக்தர்கள்.

நம்பிக்கையும் பக்தியுமாக எழுச்சூர் வந்து பாருங்கள். உங்கள் வாழ்விலும் நல்ல நல்ல திருப்புமுனைகளை உருவாக்கித் தருவார்கள் ஸ்ரீதெய்வநாயகி அம்பாளும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரும்!

- அருள் சுரக்கும்

படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism