Published:Updated:

'பாண்டுரங்கன்தான் எல்லாமே எனக்கு!’

நாதம்... சங்கீர்த்தனம்! இ.லோகேஸ்வரி

'பாண்டுரங்கன்தான் எல்லாமே எனக்கு!’

நாதம்... சங்கீர்த்தனம்! இ.லோகேஸ்வரி

Published:Updated:
##~##

 நாமசங்கீர்த்தனம் பாடி அசத்தும் 14 வயது சிறுமி

னிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைந்து வாழச் செய்கிற அற்புதமான சாதனம்... இசை. அதனால்தான் மகுடிக்குக் கட்டுண்ட பாம்பென இசையில் மயங்கிப் போகிறோம். அவ்வளவு ஏன்... நம்மையெல்லாம் படைத்த கடவுளே, இசையில் கட்டுண்டு போகிறாரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தனையோ திருத்தொண்டர்கள் இறைவனைப் பாடி, துதித்து, இறையருளைப் பெற்றிருக்கிறார்கள். நாம்தேவ், துளசிதாஸ், துக்காராம், மீராபாய் எனப் பலரும் இறைவனின் திவ்விய நாமங்களைச் சொல்லி, அதையும் வெறுமே வார்த்தைகளாகச் சொல்லாமல், பாட்டாகவே பாடிப் பரவசமூட்டியிருக்கிறார்கள், நம்மையும் இறைவனையும்!

அப்படியொரு திவ்விய நாம சங்கீர்த்தனத்தை ஒரு சிறுமி பாடி அசத்துகிறாள் என அறிந்து, அவரைச் சந்தித்தோம்.

'ராஜ கணபதி ராயாஹோ மஹ ராஜ கணபதி ராயாஹோ
ராஜ கணபதி ராயாஹோ மஹ ராஜ கணபதி ராயாஹோ
விட்டல கணபதி விட்டல கணபதி  
விட்டல கணபதி விட்டல கணபதி
விட்டல் விட்டல் விட்டல் விட்டல்
விட்டலாஆஆஆஆ...’

- என்று கொஞ்சும் குரலுடன், அதேநேரம் கணீரென்று பாடிக் கொண்டிருந்தார் ஸ்ரீமாத்மிகா. பதினான்கே வயதுதான். ஆனாலும், குரலிலும் குழைவிலும் தெரிகிறது அனுபவம்.  

'பாண்டுரங்கன்தான் எல்லாமே எனக்கு!’

''இதுவரைக்கும் நூறு மேடைகள்ல பாடியிருக்கேன். ஒவ்வொரு முறை மேடையேறும்போதும், 'கடவுளே... நீதான் துணையா இருக்கணும்’னு வேண்டிக்கிட்டுதான் பாட ஆரம்பிப்பேன். கடவுள் அருள் இருந்துட்டா யார் வேணா, எதை வேணா, எப்ப வேணா செய்யமுடியும்னு என் அப்பா சொல்லுவார்'' என்று பெரிய மனுஷிபோல் பேசுகிற ஸ்ரீமாத்மிகாவின் குடும்பம், ஸ்ரீசத்ய சாயிபாபாவைக் கடவுளாகவும் குருவாகவும் கொண்டு வாழ்ந்து வருகிறது.

''எனக்கு இந்தப் பெயரை வைச்சதே ஸ்ரீசத்ய சாயிபாபாதான்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஸ்ரீமாத்மிகா. (மாத்மிகா என்றால் உலக மாதா என்று பொருள்).

''என் அப்பா சாய்வரதன்தான் எனக்கு குருநாதர். அவர்தான் எனக்கு சின்ன வயசுலேருந்தே பாட்டெல்லாம் கத்துக் கொடுத்தார். எனக்கு நாலு வயசு இருக்கும்போதே, நாம சங்கீர்த்தனத்தையும் பாசுரங் களையும்தான் கத்துக் கொடுத்து, பாடச் சொன்னார் அப்பா.

ஒருகட்டத்துல, கடவுள் பாடல்களை எப்பவும் முணுமுணுத்துக்கிட்டே இருக்க ஆரம்பிச்சேன். அப்படியான தருணத்துலதான், ஸ்ரீபாண்டுரங்கன் என் இஷ்டதெய்வமாவே ஆயிட்டார். எப்பப் பார்த்தாலும் பாண்டுரங்கனைப் பத்தியே பாடிக்கிட்டு இருந்தேன். 'பரவாயில்லியே... உங்க பொண்ணு நல்லாப் பாடுறா. மேடையேத்திடுங்க’ன்னு அப்பாவோட நண்பர்கள், தெரிஞ்சவங்க எல்லாருமே சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சு, இதோ இப்ப வரைக்கும் நூறு மேடைகளைக் கடந்துட்டேன்கறதை நினைச்சா, என்னாலேயே நம்ப முடியலை'' என்று விழிகள் விரியச் சொல்லும் ஸ்ரீமாத்மிகா, இப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.  

''பாட்டுக்கும் நாமசங்கீர்த்தனத் துக்கு அப்பா குருநாதர்னா, படிப்புக்கு அம்மாதான் குரு. ஒரு பக்கம் பாட்டு, இன்னொரு பக்கம் படிப்பு. இந்த ரெண்டுலயும் தொடர்ந்து நல்ல மார்க் எடுக்கறேன்னா, அதுக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் தேங்க்ஸ் சொல்லணும்! அதேபோல, என் அண்ணா சாய்ராம் எனக்கு எப்பவும் பக்கபலமா இருக்கான்.

கச்சேரிக்காக தமிழ்நாடு மட்டுமில்லாம, டெல்லி, பஞ்சாப்னு பல ஊர்களுக்குப் போயிருக்கேன். இதுல, பஞ்சாப் கச்சேரியை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன். பஞ்சாப்ல கச்சேரி செய்ய ஆரம்பிச்சு, ஆறேழு பாட்டுகளைப் பாடி முடிச்சுட்டு, அடுத்ததா ஒரு பாடலைப் பாடத் தொடங்கும்போது மொத்தக் கூட்டமும் எழுந்து நின்னு ஆட ஆரம்பிச்சுது! ரசிகர்களோட உற்சாகம் தான் இப்படி வெளிப்படுதுன்னு புரியாம, முதல்ல மிரண்டு போய்ப் பார்த்தேன். அப்புறம், சுதாரிச்சு உற்சாகமா தொடர்ந்து பாடினேன். அப்பாவும் அம்மாவும் ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டாங்க!'' என்று பரவசம் மாறாமல் சொல்லும் ஸ்ரீமாத்மிகாவுக்குப் பிடித்த பாடல் என்ன என்று கேட்டோம்.

'பாண்டுரங்கன்தான் எல்லாமே எனக்கு!’

ரங்கம்மா மாகி ரங்கம்மா
ரங்கம்மா மாகி ரங்கம்மா
அதிதே ரங்கம் மாகி அதிதே கிருஷ்ணம் மாகி
ரங்கம்மாஆஆஆஆஆஆ...

- என்று அவர் பாடத் தொடங்கியதும், சுற்றியிருந்த எல்லோரும் மெய்ம்மறந்து கேட்டனர்.

''நாம சங்கீர்த்தனத்தை என் பெண்ணுக்குக் கத்துக் கொடுக்கணும்னு ஒருநாள் விளையாட்டா தான் ஆரம்பிச்சேன். அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டா ஸ்ரீமாத்மிகா. அவளோட குரல் நாம சங்கீர்த்தனம் பாடுறதுக்கு ஏத்ததாகவும், கேட்போரின் மனசை உருக்கற மாதிரியும் அமைஞ்சிருக்கறது எந்த ஜென்மத்துப் புண்ணியமோ? கடவுளுக்கும் சாயிபாபாவுக்கும் நன்றி!

இன்னொரு விஷயம்... என் பெண்ணைப் போலவே இதுவரைக்கும் 60 மாணவர் களுக்குமேல நாம சங்கீர்த்தனம் கத்துக் கொடுத்திருக்கேன் நான்'' என்கிறார் ஸ்ரீமாத்மிகாவின் அப்பா சாய்வரதன்.
ஸ்ரீமாத்மிகாவின் அண்ணா சாய்ராம், 9-ம் வகுப்பு படிக்கிறார். தபேலா, மிருதங்கம் இரண்டையும் வாசிப்பதில் படு கில்லாடியாம்! சகோதரனும் சகோதரியும் இணைந்தே பல கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்கள். இசை, கலாசாரம், பக்தி ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களே இப்படி பக்தியிலும், சொற்பொழிவிலும், பாட்டிலும், இசையிலும் பிரகாசிப்பது... எதிர்கால இந்தியா, இன்னும் பிரகாசமாக இருக்கும் என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது.

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism