Published:Updated:

சக்தி சங்கமம்

ரசித்தலும் நேசித்தலுமே ஆன்மிகம்!வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.- வாசகர்கள் கலந்துரையாடல்

சக்தி சங்கமம்

ரசித்தலும் நேசித்தலுமே ஆன்மிகம்!வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.- வாசகர்கள் கலந்துரையாடல்

Published:Updated:
##~##

பதவிகளால் பெருமை அடைகிறவர்கள் பலர்; தாம் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்க்கிறவர்கள் சிலர். இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

'சக்தி சங்கமம்’ கலந்துரையாடலுக்காக சக்திவிகடன் வாசகர்கள் அடுத்து சந்திக்கப்போகும் பிரபலம் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். என்ற அறிவிப்பைப் பார்த்ததும், ஏராளமான வாசகர்களிடம் இருந்து கடிதங்கள் வந்து குவிந்தன. ஆன்மிகம், தத்துவம், நிர்வாக மேலாண்மை, ஜென் கதைகள் என வேறுபட்ட கேள்விகளைத் தாங்கி வந்திருந்த கடிதங்களில் இருந்து சிறப்பான கேள்விகளைத் தேர்ந்தெடுத்தோம். அவற்றை எழுதி அனுப்பிய வாசகர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திப்பு நேரம், இடம் முதலான தகவல்களைத் தெரிவித்தோம். நாம் தொடர்புகொண்ட அனைவருமே ஆர்வத்தோடு, குறிப்பிட்ட நாளில் விகடன் அலுவலகத்தில் சங்கமித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை- ராஜா அண்ணாமலைபுரத்தில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என அன்பு அழைப்பு விடுத்தார் இறையன்பு. ஒரு வியாழனன்று மாலைப்பொழுதில் இனிதே துவங்கியது, சக்தி சங்கமம்.

மனித மனங்களை உற்சாகப்படுத்துவதிலும், ஊக்கப்படுத்துவதிலும் இறையன்புவின் படைப்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றால், மிகையல்ல. இங்கேயும் முதல் கேள்வி மனித மனம் தொடர்பானதாகவே இருந்தது மிகப் பொருத்தம்!

சக்தி சங்கமம்
சக்தி சங்கமம்

 ''மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பார்கள். இதற்கான உண்மையான பொருள் என்ன சார்?'' என வி.பி.பலராமன் கேட்க, மெலிதான புன்னகையுடன் ஆரம்பித்தார் இறையன்பு.

''மந்திரங்களின் உபயோகமே மனத்தைச் செம்மைப்படுத்துவதுதான். மனம் செம்மை அடைந்துவிட்டால், அப்புறம் மந்திரங்களுக்கான அவசியமே இல்லை. மனத் தூய்மை என்பதும், மனச் செம்மை என்பதும் ஒன்றுதான்.

சரி! மனத்தை எப்போது தூய்மையாக ஆக்கிக்கொள்ள முடியும்? மனம் என்று உள்ளவரை அது தூய்மையாகாது. மனமே இல்லாதபோதுதான், அது தூய்மையாகும். மனமே இல்லாத நிலை என்பது நிச்சலனமான மனத்தையே குறிக்கும். அப்படியான மனத்தில்தான் சாந்தமும், கருணையும் நிறைந்திருக்கும். அப்படி ஒரு மனநிலையை தியானப் பயிற்சியினால் எல்லோரும் அடையமுடியும். அன்பு, சாந்தம், கருணை நிரம்பப் பெற்று மனம் தூய்மை அடைந்துவிட்ட பிறகு, மந்திரங்கள் எதற்கு? உலகம் முழுவதும் பார்த்தீர்களானால், மிகப் பெரிய மகான்கள் அனைவரும் அன்புமயமாகவும், கருணைமயமாகவும்தான் இருந்திருக்கின்றனர். வழக்கமாகத் தன்னைத் தேடி வரும் பசு ஒருநாள் வரவில்லை என்றதும், தாமே பசுவைத் தேடிச் சென்றார் ஸ்ரீரமண மகரிஷி அதுவே, அவர் இயற்றிய பெரும் தவம். எங்கோ தொலைவில் இருக்கும் யாரோ ஒருவனுக்கு அடிபட்டபோது, தம் முதுகில் காயம்பட்டதுபோல் கதறினார் பாருங்கள் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்... அதுவே, அவருடைய ஆன்மிகம். மண்கட்டி ஒன்று சிதைந்தபோது, 'அது சிதைந்துவிட்டதே’ என்று வருத்தப்பட்டார் வள்ளலார் சுவாமி கள். அதேபோல், தம்மைச் சுமந்துசென்ற எருதுகளிடம் 'வலிக்கிறதா, கண்ணுங்களா?’ என்று பரிவுடன் கேட்டாரே, அதுவே அவருடைய ஆழமான கருணை.

இப்படியான தூய்மையான மனத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்களானால், அதன் பிறகு மந்திரங்களோ கடவுளோ உங்களுக்குத் தேவை இல்லை. ஏனென்றால், உங்களுக்குள் ளேயே கடவுள்தன்மை தோன்றிவிடுகிறது.''

சக்தி சங்கமம்
சக்தி சங்கமம்

  அடுத்த கேள்வி ஹேமா ராமனிடம் இருந்து!

'''கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். நாம் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

தையொட்டி, நான் எழுதிய நான்கு வரி கவிதை இது:

'இந்துக்களின் முழுமுதற் கடவுள்
காவல் தெய்வம்
இன்று காவல் துறையின் கண்காணிப்பில்...
ஓ! இன்று விநாயகர் சதுர்த்தி!’

- இந்த முரண்பாடு மாறுமா?'

''நமது மிகப்பெரிய பிரச்னை என்னவென் றால், நாம் மிகப்பெரிய மயக்கத்தில் இருக்கிறோம். அதாவது, நாம்தான் நமது மதத்தைக் காப்பாற்ற வேண்டும்; நாம்தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டும் எனும்படியான மயக்கம் அது.

உண்மையில், கடவுள்தான் நம்மைக் காப்பாற் றுவதற்கு இருக்கிறாரே தவிர, கடவுளை நாம் காப்பாற்றவேண்டிய அவசியம் இல்லை. நாம், கடவுளைக் காப்பாற்றவில்லை; கடவுளின் விக்கிரகங்களைத்தான் காப்பாற்றுகிறோம். இந்த உருவங்கள் எதற்காக என்று பார்த்தீர் களானால், ஆன்மிகத்தில் நமது வறுமையையே அவை உணர்த்துகின்றன. உருவங்களே இல்லாத வெட்டவெளியில்கூட நாம் கடவுளை நினைக்கமுடியும். ஆனால், நமது சிற்றறிவுக்கு அது சாத்தியமில்லை என்பதால், நமது மனத்தை ஒருமுகப்படுத்த ஓர் உருவம் தேவையாக இருக்கிறது. ஆனால் நாமோ, கடவுளின் விக்கிர கங்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில், வன்முறையில் ஈடுபடுகிறோம். இந்த வன்முறை தேவையே இல்லை. கடவுளே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார்.

அடுத்ததாக... நிறைய வருமானம் இருக்கும் கோயில்தான் சிறந்த கோயில், நிறையபேர் செல்லும் கோயில்தான் சிறந்த கோயில் என்று பலரும் நினைக்கிறார்கள். அதுபோல், திருவிழா மற்றும் விசேஷ தினங்களில்தான் கோயிலுக்குச் செல்கிறார்களே தவிர, மற்ற நாட்களில் பெரும்பாலும் செல்வது கிடையாது. இப்படிப்பட்ட கோயில்களில், இன்னின்ன நாட்களில் வழிபட்டால்தான் கடவுள் நமக்கு அருள்வார் என்று எண்ணுவது எத்தனை அறியாமை! கடவுளை வழிபட எல்லா நாட்களும் சிறந்தவையே! இதைத்தான் ஞானசம்பந்தப் பெருமான் உள்ளிட்ட பல மகான்களும் முன்னோர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

எந்தக் கடவுளும் அல்லது எந்த மதமும் அன்பு செலுத்துவதற்கு எதிரானது அல்ல. எந்த மதமாக இருந்தாலும், எந்த மார்க்கமாக இருந்தாலும், ஏன் கடவுளே இல்லை என்று கூறும் மார்க்கம்கூட மனிதர்களை நேசிக்கத்தான் கற்றுத் தருகின்றன. நாம் மனிதர்களையே நேசிக்கத் தவறும்போது, கடவுளை வழிபட்டு என்ன பயன்? கடவுளே அதை விரும்பமாட்டாரே! அனைத்து மதத்தினரையும் நாம் நேசிக்கக் கற்றுக் கொண் டால், அங்கு வன்முறைக்கு இடமே இல்லை.''

சக்தி சங்கமம்
சக்தி சங்கமம்

'''ஒரு குயவன், ஆடு, பானை’ என்ற கதையில், ஓர் ஆட்டை பலிகொடுப்பதைப் பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள். தற்போது, கடவுளின் பெயரில் ஓர் ஆட்டை பலி கொடுப்பதை பெரிய பிரச்னையாகப் பேசுகிறோம். ஆனால், அன்றாடம் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலருக்கு இரையாவது யாருக்கும் தெரியவில்லையே?'' - அருணா எஸ்.ஷண்முகம் கேட்ட கேள்விக்கு, விளக்கமாகப் பதில் சொன்னார் இறையன்பு.

''அசோகரின் கல்வெட்டுகளில் அவர் பதித்திருப்பது, 'மதத்தின் பெயரால், அதாவது வழிபாட்டின் பெயரால் பலி இடுவதைத் தடுக்கவேண்டும்’ என்பதுதான். உங்கள் உணவுக்காக நீங்கள் சாப்பிடுவது என்பது வேறு விஷயம். ஆனால், அதற்குக் கடவுளைச் சாட்சியாக்காதீர்கள். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒன்றைச் செய்வதற்கு கடவுளை உபயோகப்படுத்திக் கொள்கிறோம் (We are making god as a party for what we are doing). நாம் செய்கிற பாவத்தில் சிறிது எடுத்து, கடவுளுக்குப் பங்கு தருவது போன்றது இது. நாம் தவறான வழியில் சம்பாதிக்கும் பணத்தில் சிறிது எடுத்து, கோயில் உண்டியலில் போடுவதும் இதில் அடங்கும்.

'உணவுக்காக நாம் ஓர் உயிரை அழிக்கக்கூடாது’ என்று புத்தர் கூறுகையில், அவருடைய சீடர் ஒருவர், 'ஏற்கெனவே இறந்த ஜீவன்களை உண்ணலாமா?’ என்று கேட்டார். 'அதில் தவறு இல்லை’ என்றார் புத்தர். இன்று பௌத்த நாடுகள் பலவற்றில் உள்ள கடைகளில், 'இங்கு ஏற்கெனவே இறந்த விலங்குகளின் மாமிசம்தான் கிடைக்கும்’ என்று அறிவிப்பு காணப்படுகிறது. நோய்வாய்ப்பட்டு இறந்த விலங்குகளின் மாமிசம் நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். உணவுமுறை என்பது அவரவர் இருக்கும் இடத்தின் சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். எஸ்கிமோக்களிடம் போய், 'மாமிசம் சாப்பிடக்கூடாது’ என்று கூற முடியாது. அவர்கள் உயிர் வாழ, அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால், நாம் மாமிசம் சாப்பிடாமலே வாழமுடியும். மாமிசம் சாப்பிடுபவர்கள்கூட எல்லா மாமிசத்தையும் சாப்பிடுவது இல்லையே?

காலன் என்பவன் ஆசையாக ஒரு மாட்டை வளர்த்து வந்தான்; அந்த மாடு இறந்துபோனதும், அதன் மாமிசத்தை எல்லோருக்கும் உண்ணக் கொடுத்தான்; ஆனால், தான் உண்ணவில்லை என்றொரு கன்னடக் கதை உண்டு. இன்னொரு கதையில், தாழ்த்தப்பட்டவன் ஒருவன், ஒரு மடாலயத்துக்குச் சொந்தமான கிணற்றில் தண்ணீர் இறைத்து, அருந்து கிறான். அவனை எல்லோரும் அடித்து உதைக்கின்றனர். அடுத்தநாள், அந்தக் கிணற்றில் ஒரு பன்றி விழுந்துவிடுகிறது. அதை யாரும் பெரிய பிரச்னையாகப் பார்க்கவில்லை. எனில், அந்தப் பன்றியைவிட மனிதன் மோசமானவனா? இவை எல்லாமே தொடர்புடையவை. அதாவது truth is not a absolute phenomenon; it is a relative phenomenon.

சக்தி சங்கமம்

 ''ஆன்மிகம் என்பது வயதானவர்களுக்குத்தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆன்மிகச் சொற்பொழிவுகளில் முதியவர்களைத்தான் காணமுடிகிறது. இனி வரும் காலங்களிலாவது இளையதலைமுறையினர் ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்க என்ன செய்யலாம்?''  என்று கேட்டார் வி.பி.பலராமன்.

''ஆன்மிகம் என்பதையே நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆன்மிகம் என்பது நம் வாழ்வை மறுப்பதோ, விட்டு ஒதுங்குவதோ அல்ல; உண்மையில், ஆன்மிகம் என்பது நம் வாழ்வைக் கொண்டாடுவது; வாழ்வை ரசிப்பது; ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக ஆக்குவது.

சக்தி சங்கமம்

வாழ்க்கையை எப்படிப் பயனுள்ளதாக ஆக்கமுடியும்? உங்களுக்காக வாழ்ந்தீர்கள் என்றால், அது பயனுள்ளதாக இராது. விவேகானந்தர் கூறியதுபோல், ஒழுக்கம் என்பது சுயநலம் இல்லாத செயல். எவற்றை யெல்லாம் நீங்கள் சுயநலமாகச் செய்கிறீர்களோ, அவை எல்லாம் ஒழுக்கம் இல்லாதவை. சுயநலம் இல்லாத செயல்களை நீங்கள் செய்கிறபோது, நீங்கள் ஒழுக்கமானவராக ஆகிவிடுகிறீர்கள். இதையெல்லாம், உங்கள் குழந்தைகளுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லிக் கற்றுக்கொடுத்தால், சிறு வயதில் இருந்தே அவர்களிடம் ஆன்மிகம் மிளிரும். பின்னர், நீங்கள் அவர்களுக்குச் சொல்லாமலே, இது தீய பழக்கம், இது சுயநலம் சார்ந்தது என அவர்களே பகுத்து உணர்வார்கள்.

ஆன்மிகம் பற்றிப் பெரியவர்கள்தான் பேசவேண்டும், பெரியவர்கள்தான் கேட்கவேண்டும் என்பதில்லை. 30 வயதில் நான் ஆன்மிகம் பேச ஆரம்பித்தபோது, என்னிடமும் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. 'ஆன்மிகம் என்பது வாழ்க்கையைக் கொண்டாடுவதுதான். இந்த வயதில் கொண்டாடாமல், எந்த வயதில் கொண்டாடுவேன்?’ என்று அதற்குப் பதில் கூறினேன்.''

சக்தி சங்கமம்

 ''ஆன்மிகம் என்பது வாழ்க்கையைக் கொண்டாடுவதுதான் என்கிறீர்கள். வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி? ரசிப்பது எப்படி?'' என்று கேட்டார் ஹேமா ராமன்.  

''கலீல் ஜிப்ரான் சொன்னதுபோல், நீங்கள் ஒரு வீடு கட்டுவதாக இருந்தால், உங்கள் காதலி வந்து வசிப்பதற்காக என்ற எண்ணத்தில் அதைக் கட்டுங்கள். அதுவே, பிரார்த்தனையாக மாறும். ஈடுபாட்டுடன் செய்யும் எந்த ஒரு செயலுமே பிரார்த்தனைதான். வாழ்க்கையை ரசித்தும், நேசித்தும் வாழ்வதுதான் ஆன்மிகத்தின் மைய முடிச்சு. கால்பந்தாட்டப் பயிற்சியாளர் மைதானத்துக்கு வந்தார். அவரிடம் வீரர்கள், 'பந்து இல்லாமல் வந்துவிட்டீர்களே?’ என்று கேட்டார்களாம். அதற்கு அவர், 'பந்து ஒரு நேரத்தில் ஒருவரிடம்தானே இருக்கும்? ஆனால், பந்து இல்லாத மற்ற 21 பேர் என்ன செய்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் ஆட்டத்தின் முடிவு இருக்கும்’ என்றாராம். அதுபோல், ஆன்மிகம் என்பது, நாம் பிரார்த்தனை செய்யும்போது எப்படி இருக்கிறோம் என்பது அல்ல; நாம் பிரார்த்தனையில் ஈடுபடாத போது என்ன செய்கிறோமோ, எப்படி இருக்கிறோமோ அதைப் பொறுத்தே ஆன்மிகம் அமைகிறது.''

இறையன்புவின் ஆன்மிகம் குறித்த இந்த அருமையான பதிலால் கவரப்பட்ட வாசகர்கள் பலமாகக் கரவொலி எழுப்பி, தங்கள் பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து... 'நீங்கள் கோயிலுக்குப் போவது உண்டா? மனிதன் ஒழுக்கமாக வாழ கடவுள் நம்பிக்கை அவசியமா?’ எனப் பலப்பல கேள்விகளை எழுப்பி னார்கள் வாசகர்கள். அவற்றுக்குத் தக்க உதாரணங்களுடன் பதிலளித்து அசத்தினார் இறையன்பு.

அவை அடுத்த இதழில்...

படங்கள்: ரா.மூகாம்பிகை

சக்தி சங்கமம்

தங்களுக்கு இறையன்பு என்று பெயர் வைத்ததன் பின்னணி என்ன?

சக்தி சங்கமம்

தங்களுக்குக் கடவுள் கொடுத்த வரங்களாக எதைக் கருதுகிறீர்கள்?

- சத்தியநாராயணன், அயன்புரம்

! நல்ல சூழல்; நிறைவான மனம்; ஆரோக்கியமான உடல்; பிறருக்குப் பயனுள்ள வழியில் வாழவேண்டும் என்கிற எண்ணம் இவற்றையே இறைவன் எனக்குக் கொடுத்த வரங்களாகக் கருதுகிறேன். அடுத்து... எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தனித்துவமான பெயர்களைத்தான் என் தந்தை வைத்திருக்கிறார். 'நான் உனக்கு இறையன்பு என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏன் தெரியுமா... ராமு என்றோ, சோமு என்றோ பொதுவான ஒரு பெயரை வைத்திருந்தால், பின்னாளில் ஏதேனும் தவறு செய்தாலும், அது வேறு யாரோ என்று தப்பித்துக்கொள்ள முடியும்.

சக்தி சங்கமம்

ஆனால், இறையன்பு என்று தனித்துவமான பெயரை உனக்கு நான் வைத்திருப்பதால், நீ  ஏதேனும் தவறு செய்தால், அப்படி உன்னால் தப்பித்துக் கொள்ள முடியாது. எனவே, ஒழுக்கமாக வாழ்க்கையை நகர்த்திச் செல்ல இந்தப் பெயர் உனக்கு உதவும்’ என்றார். நானும் என் பெயரை, காரணப் பெயராக மாற்ற முயன்று வருகிறேன்.''

அடுத்த சங்கமம்...

வாசகர்களே!

கப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜுடன் கலந்துரையாட விருப்பமா? ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 11.2.14 -க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள். சிறந்த கேள்விகளை எழுதியனுப்பிய வாசகர்களில் சிலர், மருத்துவர் கமலா செல்வராஜுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism