Published:Updated:

கேள்வி - பதில்

பண்பாடும் கலாசாரமும் நவீன வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

பண்பாடும் கலாசாரமும் நவீன வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

செல்ஃபோன், இன்டர்நெட் என்று உலகம் கைக்குள் அடங்கி விட்ட இன்றைய சூழலில் பண்பாடு, பண்டைய கலாசாரம் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பழைய பஞ்சாங்கமாக இவற்றையே பிடித்துக்கொண்டிருந்தால், முன்னேற்றம் கானல் நீராகிவிடும். நிமிஷத்துக்கு நிமிஷம் வேகம் பிடிக்கும் வாழ்க்கைப் பயணத்தில் இதெல்லாம் வேகத்தடைகளாக இருக்குமே தவிர, வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை.

- இதுதான் இன்றைக்குப் பெரும்பாலானோரின் மனப்போக்கு. இது ஏற்கத் தக்கதா? உண்மையிலேயே, நமது பழங்கால பொக்கிஷங்களால் தற்கால தலைமுறைக்கு எந்த பயனும் இல்லையா... விளக்குங்களேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ருத்ரா விஸ்வநாதன், தூத்துக்குடி

வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம், மரபு ஆகிய அத்தனையும், அன்பையும் பண்பையும் சேர்த்து அமைதியான வாழ்க்கை முறையை அறிமுகம் செய்தன. அத்துடன், மனித இனத்தின் இயல்பின் பாகுபாடுக்கு ஏற்ப, மன வளர்ச்சியையும், உயர்வையும் ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்வைச் சுவைக்கவைத்தன. ஆனால் கால மாற்றத்தில் மன மாற்றம் ஏற்பட்டு, அதன் விளைவாக புது வாழ்க்கையில் உருவான ஈர்ப்பு, பழைய பொக்கிஷங்களை மறக்கடித்துவிட்டது.

கேள்வி - பதில்

? நீங்கள் சொல்வது சரியென்றே வைத்துக்கொள்வோம். அதனால் அப்படியென்ன இழப்பு வந்துவிடப்போகிறது?!

பண்பைப் புகட்டும் அந்தப் பொக்கிஷங்களை, வாழ்க்கை முன்னேற்றத் துக்கான முட்டுக்கட்டையாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கம் மெய்ஞ்ஞானத்தை களை இழக்கச் செய்து விட்டது. வேத ஒலியில் தூய்மை பெற்ற சுற்றுச் சூழலானது, விஞ்ஞானப் படைப்புகளின் இரைச்சலால் மாசு படிந்துவிட்டது. உலகளாவிய வெப்ப உயர்வு, பருவ காலங்களைத் தாறுமாறாக்கிவிட்டது. லோகாயதத்தில் ஈர்ப்பு; ஆன்மிகத்தில் அலர்ஜி! பண்டைய கோயில்கள் புது சிந்தனைக்கு இணைந்தவாறு, வியாபார நோக்கில் தனது அலுவல்களைத் திருப்பிவிட்டிருக்கிறது! பாரதத்தின் தனி அடையாளம் மறைந்துவிட்டது. நடை, உடை, பாவனை, வேஷம், மொழி அத்தனையிலும் மாற்றுக் கலாசாரத்தை ஏற்றுப் புதுப்பொலிவில் பெருமைப்பட்டுக் கொள்கிறது. தப்பித் தவறி எங்காவது பண்டைய கலாசார வேஷங்களில் மனிதர்களைப் பார்த்தால், ஏளனமும் நகைச்சுவையும் மேலிட்டு மகிழ்கிறது, புதிய தலைமுறை. இது, பழங்காலத்தில் சிறந்து திகழ்ந்த நமது பெருமைக்கான இழப்பு இல்லையா?!

? அப்படி ஒட்டுமொத்தமாக பண்டைய பொக்கிஷங்களை நாம் புறக்கணித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. இன்றைக்கும்   அறம் சார்ந்த விஷயங்களைச் சிறப்பிக்கும் நடைமுறைகள் இருக்கத்தானே செய்கின்றன?

பண்டைய பொக்கிஷம் வானளாவிய அளவில் வளர்ந்தி ருப்பதாக புள்ளி விவரங்கள் தென்படும். மிகைப்படுத்திச் சொல்லும் பழக்கம் நம்மவர்களில் உண்டு. விளம்பரங்களில் அதைக் காணலாம். ஆனால், பல பொக்கிஷங்கள் மறைந்துவிட்டன. இன்னும் சில பரணில் தூசு படிந்து மறைந்திருக்கின்றன. வேதத்தைக் காப்பாற்ற வேண்டியவன் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துவிட்டான். புதுத் துறவிகளும் வெளிநாட்டு சீடர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

நூலகங்களில், பண்டைய கலாசாரத்தைப் போதிக்கும் நூல்கள் தென்பட்டாலும், மொழி தெரியாததால் படித்துத் தெரிந்து கொள்ள இயலாது. பண்பை போதிக்கும் பண்டைய நூல்களில் தென்படும் மொழி தெரியாததால், மக்களுக்கு அதை அறிந்துணரும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அத்துடன், அந்த மொழியானது வழக்கொழிந்த மொழியாக முத்திரை குத்தப்பட்டு சமுதாயத்தில் இருந்தும் ஒதுக்கப்பட்டு விட்டது. இனப் பகையானது, அவர்கள் கையாளும் மொழியிலும் பரவி, லோகாயத வாழ்வுக்கு அதன் பங்கு தேவையில்லை என்று உணர்த்தப்பட்டிருக்கிறது.

மிக மிகக் குறைந்த அளவில் தென்படும் பண்டைய பொக்கிஷத்தைப் படித்துப் பட்டம் பெற்ற சமூகம், அதை அருங்காட்சியகப் பொருளாகச் சித்திரித்து, அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளா தாரத்தைப் பெறவே பயன்படுத்துகிறது. அவர்களது வாழ்க்கை முறையும் சிந்தனையும்கூட புதுத் தலை முறையி னரின் சிந்தனையோடு இணைந்திருக்கும். சிலரில், உதட்டோடு உறவாடும் நல்லுரைகள் தூள்பறக்கும். ஆனால், அதில் உள்ளத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், பண்பை போதிக்கும் பொக்கிஷங்களானது, சித்திரவதையால் செயலிழந்து மூச்சு இழுக்கும் வேளையிலும், ஈன்ற தாயைப் போல் தனது மழலைகளுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி - பதில்

? எனில், பண்டைய அறநூல்களும் கருத்துக்களும் சுயலாபத் துக்கே பயன்படுவதாகச் சொல்லவருகிறீர்களா?

இன்றைய சூழலில், முன்னேறிய சமுதாயத்துக்கு வேலை வாய்ப்பு குதிரைக் கொம்பு! வேதத்தையும் சாஸ்திரத்தையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, பிறர் தயவை எதிர்பார்க்காமல், புரட்சி கரமான முயற்சியில் வாழ்க்கையில் முன்னேறி விளங்குகிறார்கள். வேதத் தோடும் சாஸ்திரத்தோடும் உறவு வைத்துக் கொள்ளாதவர்களும்கூட, மொழி தெரியாவிட்டாலும் மொழி பெயர்ப்பைக் கையாண்டு முன்னேற்றம் காண்கிறார்கள். இப்படி, சமுதாயத்தில் பின்தங்கியவர்களும் முன்னேறியவர்களுடன் சங்கமித்து மிளிர்கிறார்கள். பரணில் தூசி படிந்து கிடந்த பதஞ்சலி யோக சூத்திரத்தை தூசி தட்டி, அதன் அறிவுரைகளை உள்வாங்கி, நூல் அறிவும் செயல் அறிவும் இணைத்து, மக்களுக்குப் பகிர்ந்தளித்து, தங்களை உயர்த்திக் கொண்டிருக்கும் புது அறிஞர்கள் ஏராளம்.

வியாபார நோக்கில் பழைய பொக்கிஷங்களைப் பயன்படுத்தும் உத்திகள் நாளுக்கு நாள் ஓங்கி வளர்கின்றன. ஆன்மிக இதழ்களுக்கு பழம் பொக்கிஷம் ஆதாரம்.பழைய ஜோதிடம் புது அவதாரம் எடுத்து, அத்தனை நாளேடுகளிலும் விளையாடுகிறது. பத்திரிகைகளுக்கு ஜோதிட இணைப்பு பெருமைக்கு உரியதாகக் கருதப்படுகிறது.ராமாயண, மகாபாரதக் கதைகளும் விளம்பரங்களை மக்களில் திணிக்க வழிவகுத்து, சின்னத்திரைகளுக்கு மகுடம் சூட்டுகின்றன.

ஆக, பழைய பொக்கிஷக் கருத்துக்கள் இப்படி ஏளன வடிவில் கையாளப்பட்டு, நகைச்சுவையாக உருவம் பூண்டு மக்களை மகிழ வைக்கின்றன. அதற்காகவே உருவாகியிருக்கும் சின்னத்திரை சேனல்களும் மழலைகளை மட்டுமில்லாமல், இளைஞர்களையும் முதியோர்களையும் புத்துணர்வு ஊட்டிப் பெருமைப்படுத்துகின்றன.  

? அறம் சார்ந்த விஷயங்கள் வியாபாரமயமாகிவிட்டன என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாவது அது வழக்கொழியாது இருக்கிறது அல்லவா?

வாஸ்தவம்தான்! பழைய பொக்கிஷத்தோடு விஞ்ஞானமும் உறவாடுகிறது. வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம், நடைமுறை, பண்பாடு, நம்பிக்கை, மரபு ஆகிய அத்தனையும் இணையதளம் வாயிலாக உலகளாவிய முறையில் சாதி, இன, மத வேறுபாடின்றி, அத்தனை உலக மக்களுக்கும், தான் இருந்த இடத்தில் இருந்து நகராமல், அந்தப் பொக்கிஷத்தை உள்வாங்கி உயர வழி வகுத்திருக்கிறது.

அதுமட்டுமா? நமது பொக்கிஷம் கணிசமான ஜனத்தொகைக்கு சுய வேலைவாய்ப்பு அளித்து அருள்கிறது. பூஜை, புனஸ்காரங்கள், திருமணம், முன்னோர் ஆராதனை, கோயில்கள், சொற் பொழிவுகள், ஆன்மிக விரிவுரைகள், ஆயுர்வேதம், யோகக் கலை அத்தனையும் பிறநாடுகளில் வளர்ந்தோங்கி விளங்குகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் சாஸ்திரத்தை போதிக்க வழிவகை செய்திருக்கிறது. ஆன்மிகத் துறவிகளின் மடங்களும் அங்கு நிறுவப்பட்டு சேவை செய்கின்றன. வெளிநாட்டுக் கலாசாரம் நம் நாட்டுப் பண்புகளை அழுத்தியபோது, அதில் பிதுங்கி வெளியேறி வெளிநாட்டில் அடைக்கலம் ஆனது என்று சொல்லலாம்.

ஆக, வெற்று வேட்டு என்று தூக்கி எறிந்தாலும், மாறுவேடத்தில் உள் புகுந்து நம்மை உயர்த்திவிடும் பாங்கு நமது பழைய பொக்கிஷங்களுக்கு இருக்கும் தனிச்சிறப்பு. பிறந்த மண்ணின் பண்பைக் காப்பாற்ற இனியும் தவறினால், அடுத்த பரம்பரை விலங்கின இயல்பில் இணைந்து வாழ்க்கையை வீணடிக்கும் அபாயம் உண்டு.

ல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத அறிவுரைகள் என்றே எண்ண வேண்டியுள்ளது. அவற்றைத் திணிப்பது,மக்களுக்கு ஆயாசத்தை உண்டுபண்ணும். சமுதாயத்தில் விலை போகாத அறிவுரைகளைச் சுமந்துகொண்டு காலம் கடத்தினால், வாழ்க்கை சூன்யமாகிவிடும்.

? எந்த அடிப்படையில் இப்படியொரு குறையைச் சொல்கிறீர்கள்?

சந்தர்ப்பம், சூழல், தருணம், தேவை, ஆர்வம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாழ்வதே சிறப்பு. பரந்துவிரிந்திருந்த உலகம் சுருங்கி உள்ளங்கையில் நெருங்கி வரும் அளவுக்கு பெருமை தந்த விஞ்ஞானத்தைப் புறக்கணிக்க இயலாது.

ஆபத்துக்கு இடமுண்டு என்பதால் ஆகாய விமானம், ரயில், கார், பேருந்து போன்றவற்றைப் புறக்கணித்து, ஆபத்து இல்லாத கட்டவண்டி, மேனா பல்லக்கு ஆகியவற்றை இப்போது பயன்படுத்த முடியுமா? 24 மணி நேரமும் உழைத்தாலும் போதுமான பொருளாதாரத்தை எட்ட முடியாத நிலையில், பழைய பொக்கிஷங் களை நினைப்பதற்கே நேரமில்லை. முற்காலத்து முடியரசு, அவை வாழ வழிவகுத்தது. தற்போதைய குடியரசு அதைப்பற்றி கவலைப் படாது. மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றவே திணறும் குடியரசானது, அதன் பக்கம் பார்வை செலுத்தவே நேரம் இருக்காது. வாயு வேகம், மனோ வேகத்தை மிஞ்சிய வேகத்தில் செயல்படத் துடிக்கும் மனங்களுக்கு பழைய பொக்கிஷங்கள் முட்டுக்கட்டை போடும்.

? குறை கொண்டவர்களுக்கு, எல்லாம் குற்றமாகவே தெரியும். உலகளவில் நம் பாரதம் சிறப்பு பெற, நமது இதிகாசங்களும் அற நூல்களும், கலாசாரமும்தான் காரணம் என்பதை அறிவீர்களா?

தங்க ஊசி என்பதால், கண்ணைக் குத்திக் கொள்ள முடியுமா? பாட்டன் தோண்டிய கிணறு என்பதற்காக அதில் இருக்கும் உப்பு நீரைப் பயன் படுத்தி வாழ முடியுமா? மறைந்தபிறகு இணையும் வீடு பேற்றை எண்ணி நடைமுறை வாழ்க்கையை நாசமாக்குவது, எப்படி இயலும்?

பழைய பொக்கிஷம், நாள் பூராவும் அட்டவணை போட்டு தனது உரைகளைச் செயல்படுத்தச் சொல்லும். அதில் மூழ்கினால் எப்போது வேலை செய்வது? எப்போது பணம் ஈட்டுவது? எப்போது குடும்பத்தைக் கவனிப்பது? இருப்பதை விட்டுப் பறப்பதை பிடிக்க முற்படக்கூடாது. ஏட்டிலும் உரையிலும் ஆன்மிகம், அறம், வீடுபேறு விளக்கப்படும். அது நடைமுறையில் பயன்படும் என்பதற்குச் சான்று இல்லாத நிலையில், அதை எப்படி ஏற்பது?

கேள்வி - பதில்

? ஏன் சான்று இல்லை? அறம் சார்ந்து வெற்றிபெற்ற கதைகளை நிறையச் சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள். அவற்றை நீங்கள் படித்ததில்லையா?

வேதம் ஓதினால் அல்லது கேட்டால் புண்ணியம் உண்டு, புராணம் படித்தால் புண்ணியம் உண்டு. அதைப் புறக்கணித்தால் பாபம் உண்டு என்பதற்குச் சான்று தெரியவில்லை. புராணக் கதைகளையே எடுத்துக்காட்டாகக் காட்டி மயங்கவைப்பது திறமைக்குச் சான்றாகுமே தவிர, உண்மையாகாது. மறைந்த பிறகு புண்ணிய-பாவங்கள் பலனளிக்கும் என்பதையெல்லாம் நம்மால் எப்படி உணர இயலும்? அதற்கும் புராணக் கதைகளை மேற்கோள் காட்டுவது நகைப்புக்கு உரியது. நாளை நடக்கும் நாடகத்தில் நாய் வேஷத்தில் அரங்கேறுவதற்கு, இன்றைக்கே குரைத்துப் பழக வேண்டிய கட்டாயம் இல்லை. நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது!

கலியுகம் அறத்தை இழந்திருக்கும் என்று புராணம் சொல்லும்போது, நாம் எப்படி சீர்திருத்த இயலும்? புராணக் கதைகளை கேட்டாலே வீடு பேறு உண்டு. கடவுள் பெயரைச் சொன்னாலே வீடு பேறு உண்டு என்று விரிவுரையாளர்கள் விளக்கும்போது, 'பழைய பொக்கிஷம் தேவையில்லை’ என்று மறைமுக விளக்கம் அளிக்கிறார்கள். அவர்களும் பழைய பொக்கிஷத்தைக் கரைத்துக் குடித்தவர்கள். ஆகையால், தேவையற்ற சுமையைத் திணிக்காமல் மக்களை வாழவிட ஒத்துழைப்பது சிறப்பு.

? இது சுகமான சுமை அல்லவா? தூக்கிச் சுமக்காவிட்டாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே?

'நீரில் தூசி, காற்றிலும் தூசி, பொருளிலும் தூசி, மனத்திலும் தூசி. இந்த நிலையில், தூசி படர்ந்த மனத்தைக் கடவுளிடம் ஒப்படைத்துவிடு. அவர் தூசி தட்டி மனத்தைத் தூய்மையாக்குவார். அவர் தொட்ட மனத்தில் எந்த தூசியும் படியாது. தூசி படர்ந்த உலகில் நீ மட்டும் தூய்மையாக வாழலாம்’ என்று விரிவுரையாளர்கள் விளக்குவார்கள். எளிதாக வீடு பேறை எட்ட இயலும்போது பொக்கிஷச் சுமையை சுமந்துகொண்டு ஏன் திணற வேண்டும்? தூணிலும், துரும்பிலும், இரும்பிலும், காற்றிலும் கடவுள் இருக்கும்போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான் என்று சொல்லும்போது, நாம் பொக்கிஷ காப்பாளராக செயல்படத் தேவையில்லை. பக்தி மார்க்கமானது பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு, பொறுப்பில்லாதவனாக நம்மை இருக்கச் சொல்கிறது. இயற்கைக்குக் கட்டுப்பட்டு விலங்கினங்கள் இயங்குவது போல், கடவுளுக்குக் கட்டுப்பட்டு இயங்குபவனாக மனித இனத்தை அறிவுறுத்துகிறது.

எல்லாம் அவன் செயல் எனும்போது மக்களுக்கு ஏது பொறுப்பு? கோலாகலமான தூசி படிந்த உலகை அவனிடம் ஒப்படைத்தால், தூசி தட்டி தூய்மையாக்கி விடுவான். அவன் தொட்ட உலகில் தூசி படியாது. மக்கள் மனம், அவர்கள் இயல்பு இரண்டையும் அறிந்து, கருணை உள்ளம் படைத்த மகான்கள் பண்டைய பண்பை புகட்டும் பொக்கிஷத்தை ஒதுக்கி, நாம சங்கீர்த்தனத்தை அளித்து பெருமையை எட்ட வைத்திருக்கிறார்கள். ஆகவே, தங்களது அறிவுரை அறிவியல் உலகுக்குப் பொருந்தாது!

னிதன் மனிதனாக வாழவேண்டும்.மாடாக வாழக் கூடாது. ஒழுக்கம் மனிதனின் அடையாளம். பிறக்கும்போது எல்லோரிலும் இருக்காது. அதை ஊட்டுவது நமது பொக்கிஷம். அடுத்த பரம்பரைக்கும் ஊட்டுவதற்கு, அதைக் காப்பாற்ற வேண்டும்.

நாம் விரும்பும் ஒழுக்கத்தை விஞ்ஞானம் அளிக்காது. விஞ்ஞானம் அளிக்கும் மகிழ்ச்சியானது மின்னல் போல் மறைந்து விடும். உடல் உழைப்பையும் சுய சிந்தனையையும் மறக்கடித்து, குதூகலமான வாழ்க்கையைச் சுவைக்கவைத்து, மகிழவைக்கிறது விஞ்ஞானம். ஆனால் நடக்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பிணியில் சிக்கி மனப் பதற்றத்துடன் மருத்துவமனையைச் சரணடையவும் வைக்கிறது. விஞ்ஞானம் பக்க விளைவுகளுடன் மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சி நிரந்தரம் அல்ல.

? எனில், எவரோ எப்போதோ சொல்லிவைத்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதுதான் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்குமா? அப்புறம், சுயமாக சிந்திக்கத் தகுந்த ஆறாம் அறிவு நமக்கெதற்கு?

நமது பொக்கிஷம் நிரந்தர மகிழ்ச்சிக்கு அடித்தளமாகச் செயல்படும். தான் படைத்த உயிரினங்களில் எவரிடமும் எனக்குப் பகையும் இல்லை, பிரியமும் இல்லை என்று சொல்வார் பகவான் (நமேத்வேஷ்யோஸ்திநப்ரிய:). சுய சிந்தனையில் முன்னேற வேண்டும் என்பதால் மனிதனுக்கு ஆறாவது அறிவை இணைத்தி ருக்கிறார். அந்த அறிவைச் சரியான பாதையில் செயல்படுத்த, வேதப் பொக்கிஷத்தையும் தந்தருளி இருக்கிறார். ஆறாவது அறிவைச் செயல்படாமல் செய்து அவரிடம் ஒன்றினால், அவர் கண்டுகொள்ளமாட்டார். பழசு என்பதாலேயே எல்லாம் நல்லவையாகி விடாது. புதுசு என்பதால் எல்லாமே ஏற்கக்கூடியது அல்ல என்றும் ஆகிவிடாது. சிந்தனையில் செயல்பட்டு, உள்ளதை உள்ளபடி தெரிந்துகொண்டு, நல்லதை ஏற்கவேண்டும். பழசு - புதுசு என்ற பாகுபாட்டை நம்பக்கூடாது என்று காளிதாசன் கூறுவான் (புராணமித்யேவ நஸாதுஸர்வம்...). 'பிறர் சொன்னதை ஆராயாமல் பின்பற்றுபவன் அறிவாளியாக மாட்டான்’ என்றும் விளக்குவான்.

கேள்வி - பதில்

ஆராயாமல் எதையும் ஏற்கக் கூடாது. நமது பொக்கிஷம் இதை வலியுறுத்தும். அது, மனிதனை முழு மனிதனாக்கும். சிந்திக்க மனமில்லாமல், பிறர் விளக்கத்தை அப்படியே ஏற்றுச் செயல்படுவது மனிதனுக்கு அழகல்ல. தியானத்தில் ஈடுபட்டுக் கடவுளை அடைந்தார்கள். வேள்வியில் ஈடுபட்டும் அடைந்தவர்கள் உண்டு. நிரந்தர அந்தரங்க சுத்தத்தோடு கடவுள் பணிவிடையில் இணைந்து சிந்தனை வளம் பெற்று, தியானத்தை எட்டி கடவுளை அடைந்தவர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் சிந்தனை செயல்பட்டு, தெளிவு பெற்று உண்மையை எட்டினார்கள் எனலாம்.

? ஆக, ஆறாம் அறிவையும் சரியான பாதையில் திருப்ப அற நூல்களும், பண்டைய பண்பாடும் உதவும் எனச் சொல்ல வருகிறீர்களா?

மிகச் சரியாக புரிந்துகொண்டீர்கள்! உங்கள் எண்ணத்தில்... 'பெயரைச் சொல்லுவதாலேயே உண்மையை எட்டிவிடலாம் எனும்போது, வேறு பிரயத்தனம் எல்லாம் எதற்கு?’ என்றொரு கருத்தை முன்வைத்தீர்கள். அது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று. அப்படி அதை உண்மையாக்கினால், புராண- இதிகாசங்கள் வெளியிடும் முனிவர்கள், ரிஷிகள், பெரியோர்களது நடைமுறைகள் பொய்யாக மாறிவிடும். அவர்கள் ஆறாவது அறிவை அழகான முறையில் பயன்படுத்தியவர்கள். நமது பொக்கிஷங்கள் என்றைக்கும் எல்லோருக்கும் சிந்தனை வளத்தை ஊட்டி கடவுளிடம் சேர்த்து விடும். அந்த வேலையை புது விஞ்ஞானம் செய்யாது.

? தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனம் படைத்தவர்களுக்கு அறமும், ஆன்மிகமும் வேண்டும். அறம் உடல் வளத்தையும்; ஆன்மிகம் மன வளத்தையும் பெருக்கும். விஞ்ஞானம் தரும் லோகாயத வாழ்க்கையில் முழு நிம்மதி கிடைக்காது. சிந்தனை வளம் குன்றியவர்களுக்கு லோகாயத வாழ்வில் ஈர்ப்பு இருக்கும். அவர்களில், கிளிஞ்சலை வெள்ளியாகப் பார்க்கும் பிரமை மறையாது. சிந்தனை வளம் பெருகும்போது, அது மறைந்துவிடும்.

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு, நெய்க்கு அலைவது தவறு. கடவுள் ஆன்ம வடிவில் நம்முள் உறைந்திருக்கும் போது, சரணாகதி தலைதூக்காது. நம்மோடு எப்போதும் கடவுள் இணைந்திருக்கிறார். அதை உணரும் உணர்வை சிந்தனை வளம் ஏற்படுத்தும். பழைய பொக்கிஷங்கள் அதற்கு ஒத்துழைக்கும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.