சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 8

திப்புவும்... திருப்பமும்... சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: அரஸ்

##~##

னித வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் பிரச்னைகளுக்கும் இன்னல்களுக்கும் மூன்று முக்கிய காரணங்களை நம் முன்னோர் கூறியுள்ளனர். அவை மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை!

மண், பொன் ஆசையால் ஏற்பட்ட கொடிய விளைவுகளையும், அதர்ம சூதாட்டத்தையும், அதனால் விளைந்த குருக்ஷேத்திரப் போரையும் மகாபாரதத்தில் காண்கிறோம். பெண் ஆசையால் பிறன் மனைவியை இச்சித்து, அதனால் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து, போரில் தோற்று மரணமடைந்த ராவணன் கதையை ராமாயண காவியத்தில் அறியலாம்.

கொள்ளை, கொலை போன்றவற்றுக்குக் காரணமாகத் திகழ்வது பொன்தான். ஒரு சவரன் தங்கம் 22,000 ரூபாய்க்கு விற்றாலும், மக்களுக்குப் பொன் மீதுள்ள பற்று போவதே இல்லை. பெரும்பாலும் திருமணங்கள் நிகழத் தடையாகவும், பிரச்னையாகவும் இருப்பது, பெண்ணுக்குப் போடவேண்டிய பொன் நகைகளால்தான்.

பெண் ஆசையால் ஏற்படும் குற்றங்கள் பற்றி அன்றாடம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். காவல் நிலையத்தில் பதியப்படும் குற்றங்களில் பெரும்பான்மையானவை பெண்ணை இம்சிக்கிற குற்றங்களாகவே இருக்கின்றன.

விதைக்குள் விருட்சம் - 8

தேசத்தைக் காப்பாற்றுகிறோம், மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் சில அரசியல்வாதிகள் செய்யும் அராஜகம், அதிகார வெறி ஆகியவற்றால், சாமான்ய மக்களுக்குத்தான் எவ்வளவு பிரச்னைகள்!

நிர்மலமான ஒரு குளத்தில் கல்லை எறிந்தால், அதன் அதிர்வால் நீர் மட்டத்தில் ஏற்படும் அலைகள் வட்டவடிவில் விரிந்து, குளத்தின் எல்லைவரை போய்தான் நிற்கும். பிரச்னைகளும் அது போலத்தான்! இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் அல்லது குடும்பங்களை அவதிக்குள்ளாக்கும் பிரச்னைகளில் முக்கியமா னவை - போதிய வருமானம் இல்லாமை, கடன் சுமை; தவிர, குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசலும் விரிசலும், உணவு, உடை, இருப்பிடம் என வாழ்வாதாரத்தைக்கூட அடையமுடியாத அவலம் என்பவையும் அடங்கும். இவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல்தான் கவலையில் மூழ்கித் தவிக்கிறோம்.

கடந்த தலைமுறையினர் வசதி குறைவாக இருந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்ந் தார்கள். இன்றைய தலைமுறையினர் சகல வசதிகளைக் கொண்டிருந்தாலும், எப்போதும் ஒருவித பயத்தில், நிம்மதியின்றித் தவித்து மருகி வாழ்கிறார்கள். இதை மாற்றுவது எவ்விதம்? தனி மனிதனின் மகத்தான சக்தியை வெளிக்கொணர்ந்து, பிரச்னைகளை முறையே அணுகித் தீர்வு கண்டு ஜெயிப்பதே சிறந்த வழி!

பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் இருக்கவும், அதற்கான காரண காரியங்களை ஆய்ந்தறிந்து, அணுகுமுறைகளை நிர்ணயம் செய்யவும், நமது அறிவாற்றலும் வாழ்க்கை அனுபவமும் மட்டும் போதாது. நமக்கு முன் வாழ்ந்து, பிரச்னைகளை எதிர்த்துத் தீர்வு கண்டு ஜெயித்தவர்களின் வரலாறும், அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் நமக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன.

விதைக்குள் விருட்சம் - 8

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட தேச பக்தர்கள் வரிசையில் முதன்மையானவர் மைசூரை ஆண்ட திப்புசுல்தான். மைசூரின் ஸ்ரீரங்கப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு இந்து- முஸ்லிம் பாகுபாடின்றி சீரிய முறையில் நாட்டை ஆண்ட திப்பு, 'மைசூரின் புலி’ என்று சிறப்பிக்கப்பட்டவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தவர்.

முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தங்களில் மைசூரைக் கைப்பற்ற முடியாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், காரன்வாலிஸ் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்தபோது, 18-ம் நூற்றாண்டின் இறுதியில், மூன்றாம் மைசூர் யுத்தத்தைத் தொடங்கியது. ஸ்ரீரங்கப்பட்டினம் மண் மீண்டும் ரத்தக்காடாகியது. இரு தரப்பிலும் கடும் சேதம் விளைந்தது. மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறைக்க எண்ணி, போரைத் தொடரமுடியாத நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள  விரும்பினார் திப்பு. தங்கள் தரப்பிலும் மேற்கொண்டு சேதத்தைத் தவிர்க்க பிரிட்டிஷாரும் திப்புவுடன் சமாதான உடன்படிக்கைக்குத் தயாராயினர். ஆனால், சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் விதமாக, உடன்படிக்கைக்கான ஷரத்துக்களை வெளியிட்டான் காரன்வாலிஸ் பிரபு.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டு, தன்னை அதன் கீழ் ஓர் அடிமைச் சிற்றரசனாக ஒப்புக்கொண்டு, அதற்கான கப்பத்தை திப்பு செலுத்த வேண்டும்; அல்லது, சுதந்திரத்தை விரும்பினால், போரினால் ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்ட ஈடாக மூன்றரைக் கோடி ரூபாய் தரவேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள்.

இரண்டு யுத்தங்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவால் பாதிக்கப் பட்ட மைசூர் ராஜ்ஜியத்தில், மூன்றரைக் கோடி ரூபாய் அரசாங்க கஜானாவில் இல்லை என்பது பிரிட்டிஷாருக்கு நன்கு தெரியும். அந்த அளவு கப்பத் தொகைக்கு ஈடு கொடுக்கும் சொத்துக்களும் திப்புவிடம் கிடையாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்த நிலையில், நாட்டை அடிமைப்படுத்தி, தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, உல்லாசமான வாழ்க்கையை அனுபவிப்பதைத் தவிர சுல்தானுக்கு வேறு வழி கிடையாது என்பது பிரிட்டிஷாரின் கணக்கு.

ஆக, திப்புவுக்கு அது மானப் பிரச்னை. நாட்டைப் பொருத்தவரை, அது பொருளாதாரப் பிரச்னை; சுதந்திரப் பிரச்னை. திப்பு எடுக்கப்போகும் முடிவுதான் அவரது எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும்.

'நானா? நாடா?’ இரண்டில் ஒன்றையே அவர் தனது பதிலாக பிரிட்டிஷாருக்குத் தந்தாகவேண்டும். ஆனால், பிரச்னையைப் புதிய கோணத்தில் அணுகி, 'மூன்றாவது’ என்று பதிலளித்துப் புதிய சரித்திரம் படைத்தார் திப்பு. ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்தனையைச் சுழலவிட்டுக் குழம்பாமல், பரந்து விரியும் வட்ட வடிவ நீர் அலைகளைப்போல தன் எண்ணங்களை விரிவாக்கிக் கொண்டார்.

'காலம் என்பது இரண்டு சம்பவங்களுக்கு இடையேயுள்ள இடைவெளி’ என்று சாக்ரடீஸ் குறிப்பிட்டார். 14 மொழிகளில் தேர்ச்சியும், பல்வேறு நூல்களில் பயிற்சியும் உள்ள திப்பு காலத்தை ஒரு கருவியாக்கி, அதனையே காரணமாக்கி, நஷ்ட ஈடு தருவதற்காக கால தவணை கேட்பது என முடிவு செய்தார். ஆனால், அந்த கால தவணை வரையிலும் எதிரி நம்பிக்கையோடு பொறுத்திருக்க, தக்கதொரு அடமானம் தர முன்வந்தால், நிச்சயம் தவணை கிடைக்கும் என்று கணக்கிட்டார்.

தனது நாட்டை அடமானமாக வைக்க அவர் விரும்பவில்லை. மிகுந்த மனத் துணிவோடு, தன் பிள்ளைகள் இருவரை அடமானமாக பிரிட்டிஷாரிடம்  ஒப்படைக்கத் தீர்மானித்தார்.

வீடும் நாடும் கண்ணீர் வடித்தது. பிரிட்டிஷா ரால் மறுத்துச் சொல்ல முடியவில்லை. செலுத்தவேண்டிய நஷ்டப் பணத்தைச் செலுத்தமுடியாமல், பிள்ளைகளையும் பிரிந்திருக்க மனமில்லாமல், விரைவில் தங்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு அடிபணிந்துவிடுவார் திப்பு என்று தவறாக எண்ணினார்கள். ஆனால், அவர்கள் போட்ட கணக்கு தப்பாகியது.

நாட்டைக் காக்கத் தன் பிள்ளைகளையே அடமானம் வைத்த மன்னனிடம், மக்கள் அன்பையும் நன்றி உணர்ச்சியையும் காட்டினர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளே அடமானப் பொருளாகச் சென்றிருப்பதாகக் கருதினர். அவர்களை மீட்க ஒவ்வொருவரும் உழைத்தனர். மூன்றரைக் கோடி ரூபாயை உருவாக்க ஒவ்வொரு பிரஜையும் தன் பங்கைச் செய்தான். உற்பத்தி பெருகியது. மக்கள் வரிகளைத் தாமாகவே கட்டினர். கஜானா பொங்கி வழிந்தது. ஓராண்டுக் காலத்துக்குள் மூன்றரைக் கோடி ரூபாய் பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மன்னனின் அருமைச் செல்வங்கள் மீட்கப்பட்டனர். பிரிந்தவர் கூடினர். நாடும் வளமாகியது. வீடும் மகிழ்ந்தது.

திப்புவின் கணக்கு தப்பவில்லை.

ஒரு பெரிய பிரச்னையைத் தீர்க்கும்போது, சில நேரம் பல புதிய பிரச்னைகள் ஏற்படலாம். அதற்காகத் தியாகம் செய்யவேண்டி வரலாம். ஆனாலும், நம்பிக்கையோடு செயலாற்றும் போது, முதல் பிரச்னையோடு மற்ற பிரச்னைகளும் தீர்ந்துவிட மார்க்கம் உண்டு.

வித்தியாசமான அணுகுமுறையாலும், அசாத்திய தன்னம்பிக்கையாலும் தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதற்கு மற்றொரு சரித்திரச் சான்று இந்த வரலாறு.

- விருட்சம் வளரும்...

விதைக்குள் விருட்சம் - 8

பாமரன்!

ல தருணங்களில், பிரச்னை எதுவானா லும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், அந்தப் பிரச்னைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத சாமான்ய மனிதர்கள்தான்.

நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஓர் ஆசிரியர், ஒரு டாக்டர், வழக்கறிஞர், பாதிரியார் மற்றும் பாமரன் ஒருவன் என ஐந்து பேர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.  

பேச்சினிடையே வக்கீல், ''நான் எல்லோரது வழக்குகளும் ஜெயிக்க வாதாடுகிறேன். நான் இல்லையென்றால் நாட்டில் பிரச்னைகள் அதிகமாகி யிருக்கும்'' என்றார். பாதிரியாரோ, ''நான் எல்லோரும் சுகமாக வாழ, கடவுளை தினமும் வேண்டுகிறேன். அதனால்தான் நாட்டில் அமைதி நிலவுகிறது'' என்று சொன்னார். ''நான் எல்லோரையும் நோயிலிருந்து காப்பாற்றுகிறேன். எனவே, நான் கடவுளுக்குச் சமமானவன்'' என்றார் டாக்டர். ஆசிரியரோ, ''நான் எல்லோருக்கும் கல்வி தந்து அறிவை வளர்க்கிறேன். என் பணியே உயர்ந்தது! மாதா, பிதாவுக்கு அடுத்து குருவைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் தெய்வம் சொல்லப்பட்டுள்ளது!'' என்று பெருமையுடன் சொன்னார்.  

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பாமர மனிதன், ''அது சரி, உங்கள் அனைவருக்கும் நான்தானே பணத்தைக் கொட்டி அழுகிறேன். ஆகவே, உங்களைவிட நானே உயர்ந்தவன்'' என்றானாம் விரக்தியுடன்!